


Post No. 11,200
Date uploaded in London – 16 AUGUST 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
பிரபஞ்சம் என்னும் கட்டிடத்தைக் கட்டுவதற்கு 118 வகையான செங்கற்கள் இருக்கின்றன. இவற்றை தனிமம் அல்லது மூலகம் (element) என்போம். இரும்பு, தங்கம், வெள்ளி, தகரம் (tin), ஈயம் (lead) என்பன போல கடோலினியம் (Gadolinium) என்ற உலோக தனிமம் இருக்கிறது. புற்றுநோய் அல்லது வேறு வகைக் கட்டிகள் உடலில் இருக்கிறதா என்பதைக் காண்பதற்காகச் செய்யும் எம்.ஆர். ஐ ஸ்கேன் ( MRI – Magnetic Resonance Imaging) சோதனையில் இதைப் பயன்படுத்துவர்.
எல்லா எம் ஆர்.ஐ. சோதனைகளிலும் இல்லாவிடினும் மூன்றில் ஒரு சோதனையில் கடோலினியம் பயன்படுத்தப்படுகிறது. கர்ப்பிணிகள், மற்றும் சிறுநீரக நோயுள்ளவர்களிடத்தில் பொதுவாக இதைப் பயன்படுத்துவதில்லை. தேவையானால் நோயாளியின் அனுமதியுடன் பயன்படுத்துவர். நியூட்ரான்களை உறிஞ்சும் (absorbing Neutrons) அபூர்வ குணம் இதற்கு இருக்கிறது.
முதலில் கடோலினியம் வரலாற்றைக் காண்போம்
தற்போது பின்லாந்து நாட்டிலுள்ள அபோ என்னும் ஊரில் பிறந்த ஜொஹான் (யுவான்) கடோலின் (Johan Gadolin) இந்த மூலகம் அமைந்த தாதுவை முதலில் கண்டுபிடித்ததால் இதன் பெயர் கடோலினியம் எனப்படுகிறது . அவர் கண்டுபிடித்த காலத்தில் அவருடைய ஊர் சுவீடன் நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது.
15 மூலகங்களை அபூர்வ மூலகம் அல்லது லாந்தனைட் என்பர். அவற்றில் ஒன்று கடோலினியம். இது மனித உடலிலோ வேறு உயிரினங்களிலோ அதிகம் காணப்படுவதில்லை. இதன் உப்புக்கள் கொஞ்சம் விஷ சத்துள்ளவை.
இதற்குள்ள சிறப்பான குணம் நியூட்ரான் அணுக்களை கிரகிப்பதாகும். இதனால்தான் இதை எக்ஸ் ரே, ஸ்கேன் கருவிகளில் பயன்படுத்துகின்றனர். இதற்கு ஓரளவு காந்த சக்தியும் உண்டு. உடலுக்குள் ஊசி மூலம் இதைச் செலுத்திய பின்னர் காந்தப்புலன் படம்காட்டும்/எடுக்கும்( MRI – Magnetic Resonance Imaging) இயந்திரத்துக்குள் நம்மை படுக்கை நிலையில் வைத்து படம் எடுப்பார்கள் . அப்போது உடல் உறுப்புகளின் தெளிவான படம் கிடைக்கிறது. அதை பார்க்கும் மருத்துவ நிபுணர்களுக்கு நம் உடலில் கட்டிகள் புற்றுகள் இருக்கிறதா என்பது தெரியும் மேலும் இதை உடலில் செலுத்தும்போது அதற்கு ஒரு கேடயம் போட்டு (Chelation ) போட்டு அனுப்புவர் ; இதனால் நோயாளிகளுக்கு கடோலினியம் வாயிலாக எந்தத் தீங்கும் வராமல் தடுக்கிறார்கள் .
கடோலின் என்பவரின் பெயர் சூட்டப்பட்டாலும் இதை ‘மூலகம்’ என்று கண்டுபிடித்து அறிவித்தவர் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த சார்லஸ் கலிஸார்ட் (CHARLES GALISSARD DE MARIGNAC )ஆவார்.
எங்கே கிடைக்கிறது?
பொதுவாக இந்த மூலகம், ஏனைய அபூர்வ உலோக தாதுக்களுடனேயே கிடைக்கிறது. அவ்வகையில் சீனா , அமெரிக்கா , ஆஸ்திரேலியா , இந்தியா , இலங்கை, பிரேசிலில் இது கிடைக்கிறது. இதன் தோற்றம் வெள்ளி போல இருக்கும். காற்று படும் படி வைத்தால் கறுத்துவிடும்
இதன் ரசாயன குணங்கள்
குறியீடு Gd ஜிடி
அணு எண் -64
உருகு நிலை – 1313 டிகிரி C
கொதிநிலை – 3270 டிகிரி C
ஐசடோப்புகள் – 7 வகைகள்
பொருளாதாரப் பயன்கள்
மருத்துவ சோதனைகளில் பயன்படுவதோடு மின் அணு சாதனங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு இரும்பு போல காந்த சக்தி இருந்தாலும் 20 டிகிரி சி – யில் காந்த சக்தியை இழந்துவிடும். இதனால் இதை உலோகமாக தனியே பயன்படுத்தாவிடினும் கலப்பு (alloys) உலோகமாகப் பயன்படுத்துவர். வீடியோ ரிக்கார்ட் கருவிகளில் பதிவு செய்யும் பகுதிகளில் ( Recording Heads ரெகார்டிங் ஹெட்ஸ்) இதைப் பயன்படுத்துவர். தகவல்களை பதிவு செய்து காப்பாற்றும் தகடுகளில் ( Magnetic Data Storage Discs மேக்னெட்டிக் டாட்டா ஸ்டோரேஜ் டிஸ்க்ஸ்) இது முக்கியப்பங்கு வகிக்கிறது
அணுசக்தி உலைகளில் (Nuclear Reactors) தீங்கு விளைவிக்கும் நியூட்ரான்களை விழுங்குவதற்கு இது மிகவும் உதவுகிறது ; இதனுடைய இரண்டு ஐசடோப்புகள், முன்னர் பயன்படுத்தப்பட்ட போரான் (Boron)களைவிட 300 மடங்கு அதிகமாக நியூட்ரான்களை கிரஹித்து விடுகிறது . தற்காலத்தில் அணுமின்சார உலைகளில் வைக்கப்படும் யுரேனியம்-235 தண்டுகளுடன் 5 சதவிகித கடோலினியம் ஆக்ஸைடையும் கலந்துவிடுகின்றனர் .
உடலுக்குள் சென்று சத்து ஊட்டாவிடினும் , வெளியேயிருந்து வந்து உ டலுக்கு ஆபத்து விளைவிக்கும் அணுக்கதிர்களைத் தடுப்பதால் கடோலினியத்தின் பெருமையை விஞ்ஞானிகள் போற்றுகின்றார்கள்.
–சுபம் –tags-கடோலினியம், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் , நியூட்ரான்