Post No. 11,203
Date uploaded in London – – 18 AUGUST 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய திரைப்படங்கள்! – 5
ச.நாகராஜன்
சோலார் க்ரைஸிஸ் (Solar Crisis):- 1992ஆம் ஆண்டு வெளி வந்த படம் இது. பிரபல நடிகர்கள் நடித்த இந்தப் படத்தில் ஸ்பெஷல் எபெக்டுகளும் ஏராளம் உண்டு.விண்வெளி பற்றிய விநோதமான கதையைக் கொண்டது இந்தப் படம். அதிக சூரிய ஒளியால் பூமி தகிக்கிறது. இதற்காக சூரியனில் ஒரு குண்டை போட ஒரு விண்கலம் பறக்கிறது.ஒரே குழப்பமான கதை என்றாலும் அதிலும் ஒரு சுவை இருக்கத்தான் இருக்கிறது.
ராக்கெட் கேர்ள்ஸ் (Rocket Girls) :- 1993ஆம் ஆண்டு வெளியான படம் இது. விண்வெளியில் ஓஜோன் படலத்தை சீராக்க ஒரு விண்கலம் அனுப்பப்படுகிறது. இதில் கிளுகிளுப்பூட்டும் பெண்கள் இடம் பெறுவதால் சற்று ஆபாசமான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. சாப்ட் போர்ன் படம் என்று சொல்லக்கூடிய படம்.
பவுண்டி டாக் (Bounty Dog):- 1994 ஆம் ஆண்டு வெளியான படம் இது பணத்திற்காக எதையும் செய்யும் அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட ஒரு கூலிப்படை சந்திரனுக்குச் செல்கிறது. அசுர சக்திகளுடன் மோதுகிறது. சந்திரனைப் பற்றி ஆர்வமூட்டும் தகவல்களை அழகிய காட்சிகள் மூலமாகச் சித்தரிக்கும் சுவாரசியமான படம் இது.
மைட்டி ஸ்பேஸ் மைனர்ஸ் (Mighty Space Miners):- 1994ஆம் ஆண்டு வெளியான படம் இது.விண்வெளியில் நிலையாக ஒரு இடத்தில் நின்று ஆய்வுகளை நடத்த ஏதுவாக இருக்கும் புள்ளிகளை லாக்ரேஞ்ஜ் புள்ளிகள் அல்லது எல் பாயிண்ட்ஸ் என்று சொல்வது வழக்கம். பிரபல இத்தாலிய வானியல் விஞ்ஞானியான ஜோஸப் லூயிஸ் லாக்ரேஞ்ஜ் பெயரால் இந்தப் புள்ளிகள் அழைக்கப்படுகிறது. இந்த புள்ளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஒரு விண்கல்லைப் பற்றிய கதை இது.
ஸ்பேஸ் ஐலேண்ட் ஒன் (Space Island One) :- 1996ஆம் ஆண்டு வெளியான பிரிட்டிஷ்-ஜெர்மானிய தொலைக்காட்சித் தொடர் இது. விஞ்ஞான ஆய்வுக்காக விண்வெளியில் தொலை தூரத்தில் நிறுவப்படும் ஸ்பேஸ் ஸ்டேஷன் ஒன்றைப் பற்றிய கதை இது. அங்கு ஏற்படும் சிக்கல்களையும் பிரச்சினைகளையும் நகைச்சுவையுடன் சொல்லும் தொடரில் ஆர்வமூட்டும் ஆய்வுப் பயணங்களும் உண்டு.
எல்5:ஃபர்ஸ்ட் சிடி இன் ஸ்பேஸ் (L5:First City in Space):- 1996ஆம் ஆண்டு வெளியான படம் இது. பூமி-சந்திரனுக்கு இடையே உள்ள லாக்ரேஞ்ஜ் 5 என்ற புள்ளியில் இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் இறுதியில் நடக்கும் நிகழ்வுகள் பற்றிய கதை இது. சிக்கோ என்ற பெண்மணியும் அவளது குடும்பமும் நிகழ்த்தும் சாகஸச் செயல்கள் முதலாவதாக அமைக்கப்பட்டுள்ள விண்வெளிக் குடியிருப்பில் நிகழ்கின்றன. ஒரு வால்நட்சத்திரத்தில் நீர் மிகுதியாகக் கிடைக்கிறது. அதைத் திரும்பப் பெற முயல்கையில் குடியிருப்பிற்கே பெரும் ஆபத்து நிகழ இருக்கிறது. இள வயதினருக்கான படம் இது.
டெட் ஃபயர் (Dead Fire):- 1996ஆம் ஆண்டு வெளிவந்த படம் இது. பூமியில் நாளுக்கு நாள் சுற்றுப்புறச் சூழ்நிலை சீர் கெட்டு காற்று மாசுபடுகிறது. ஆகவே பூமி வாழ் மக்கள் விசேஷமாக அமைக்கப்பட்ட க்ரையோஜெனிக் கலங்களில் வசிக்கும் படி செய்யப்பட்டு பூமியைச் சுற்றி உள்ள விண்வெளிச்சாலையில் சுழன்று கொண்டே இருக்கும்படி செய்யப்படுகிறார்கள். யுஎஸ்எஸ் லெகஸி நிலையம் என்ற ஒரு இடத்திலிருந்து சூரிய ஒளியின் மூலமாக காற்றைச் சுத்தப்படுத்த முயல்கின்றனர். ஆனால் ஒரு பைத்தியக்கார வில்லனோ இந்த சூழ்நிலையைச் சாதகமாக்கிக் கொண்டு புதிதாகப் பிறந்த பூமியைத் தன் கைவசம் கொண்டு வரப் பார்க்கிறான். ஆனால் அவன் முயற்சி தோல்வி அடைகிறது இது தான் கதை.
ஹெல்ரைசர்: ப்ளட்லைன் (Hellraiser: Bloodline):- 1996ஆம் ஆண்டு வெளியான படம் இது. “உங்கள் காதலியுடன் எந்த இடத்துக்கும் போக முடியவில்லை எனில் விண்வெளிக்குச் செல்லுங்கள்” என்ற கோஷத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட படம் இது. விண்வெளி நிலையம் ஒன்றில் நிகழும் சதியும் அதை முறியடிக்கும் விதமும் இதில் கதையாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது
ப்ரிஸியஸ் ஃபைண்ட் (Precious Find):- 1996இல் வெளியான படம் இது. 2049ஆம் ஆண்டில் நிகழ்வதாக அமைந்துள்ள கதை இது. சந்திரனில் உள்ள தளமொன்றில் இருக்கும் சிலர் விண்கல்லுக்குச் சென்று பணக்காரராக ஆக முயற்சிக்கின்றனர். ஒரு புதையல் வரைபடம் வேறு அவர்களுக்குக் கிடைக்கிறது.கேட்க வேண்டுமா என்ன, சாகஸ செயல்களுக்கு!
ஸ்கார்பியோ ஒன் (Scorpio One):- 1997ஆம் ஆண்டு வெளியான படம் இது. ஸ்பேஸ் ஸ்டேஷனில் உள்ளோரை மீட்கச் செல்லும் ஒரு மீட்புப் பணியில் சென்றோர் அங்கு திடுக்கிடும் கண்டுபிடிப்பைக் கண்டுபிடிக்கின்றனர். மீட்புப் பணியில் சென்றவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இலட்சியம் இருக்கிறது. ரகசியமாகச் செல்லும் வில்லனின் படைகளுக்கோ பேராசையின் அடிப்படையிலான மோசமான லட்சியங்கள் உள்ளன. அவர்கள் முயற்சி வெற்றி பெறுகிறதா என்பதைச் சித்தரிக்கும் படம் இது.
ஸ்பேஸ்ஜாக்ட் (Spacejacked):- 1997ஆம் ஆண்டு வெளியான படம் இது. சந்திரனுக்குச் செல்லும் பணக்காரர்களின் சொகுசு விண்கலம் ஒன்று கடத்தப்படுகிறது. பணக்காரப் பயணிகளின் சொத்துக்களை கபளீகரம் செய்வதே கடத்தல்காரர்களின் நோக்கம். மாயாஜாலக் காட்சிகள் ஏராளம் உண்டு என்பதால் மாயாஜாலம் விரும்புவோருக்கான படம் இது.
மூன்பேஸ் (Moonbase) :-1998ஆம் ஆண்டு வெளியான படம் இது. சந்திரனில் கழிவுகளை அகற்றும் தொழிலகத்திற்கு சிறையிலிருந்து தப்பிச் சென்ற கைதிகள் செல்கின்றனர்.எப்படியேனும் பூமிக்குத் திரும்பி வந்து தங்கள் கிரிமினல் தொழிலை ஆரம்பிப்பதே அவர்களின் நோக்கம். ஆனால் அவர்களின் முயற்சிகள் தவிடுபொடியாகின்றன. இதைச் சுவைபடக் காட்டுகிறது இந்தப் படம்.
ஆர்மகெடான் (Armageddon) :-1998 ஆம் ஆண்டில் வெளியான படம் இது. இந்தப் படமும் டீப் இம்பாக்ட் என்ற படமும் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றன. விண்கல் பூமியை நோக்கி மோத வருவது தான் கதையின் பின்னணி. இந்தப் பேரழிவை எப்படித் தடுத்து நிறுத்துவது? பெரும் குழப்பம் ஏற்படுகிறது. ஆழ்கடல் துளை இயந்திரங்கள் மூலம் விண்கல்லில் அணுகுண்டுகள் வைக்கப்பட்டு விண்கல் துண்டு துண்டாக்கப் படுகின்றது.. விண்கல்லின் துண்டுப் பகுதிகள் பூமிக்குச் சேதமின்றி பூமியின் பக்கவாட்டில் பறந்து செல்ல, அவை அழிக்கப்படுகின்றன. விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பக் கருத்துகள் இதில் கொஞ்சம் கூட சரியான படி இல்லை என்றாலும் கூட பிரம்மாண்டமான திரைப்படத்திற்கே உரித்தான மசாலா காட்சிகள் நிறைந்திருந்ததால் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை இந்தப் படம் பெற்றது! ****************** (தொடரும்
புத்தக அறிமுகம் – 32
புத்தரின் போதனைகளும் ஜென் குட்டிக் கதைகளும்

பொருளடக்கம்
2. பிக்ஷுவே, அப்போது என்ன செய்வாய்?
3. கர்ம பலன்: அந்த மாங்காய் இது அல்லவே!
4. மன்னனின் பிரச்சனையும் ஆனந்தரின் தீர்வும்!
6. ஜென் குருமார்களும் சீடர்களும் – சுவையான சம்பவங்கள்!
7. ஜென் மாஸ்டர் ஹோஷினின் கடைசிக் கவிதை!
8. இதோ, இதோ இங்கேயே இருக்கிறது ஜென்!
9. ப்ரக்ருதியின் ஆசையும், புத்தரின் கேள்விகளும்!
10. மஹராஜா புக்குசாதியின் ஆசை!
13. எல்லையற்ற கருணை வெள்ளம் புத்தர்
15. புத்தரின் எல்லையற்ற தேஜஸுடன் கூடிய அழகு!
16. நான் கொன்று விடுவேன்! – புத்தரின் பதில்!!
17. ஷாலின் ஆலயமும் போதி தர்மர் மர்மமும்!
19. மனதிற்கு மனம் மூலமாக அனுப்பப்பட்ட புத்தரின் முதல் உபதேசம்!
20. புத்தரின் போதனை: சேற்றில் மலரும் செந்தாமரை மலர் போல இரு!
22. காட்டு வாத்துக்கள் பறக்கின்றன, குருவே!
23. அமர்ந்தவாறே தியானம் செய்தால் புத்தராகி விட முடியுமா?
25. போதிசத்வர்! – நாணயத்திற்குக் கிடைத்த பரிசு!
26. கர்மா என்றால் என்ன? புத்தரின் விளக்கம்!
27. புத்தபிரானே! எனக்கு அந்த லட்டைக் கொடுங்கள்!: கர்ம சதகம்!
29. இந்தப் பழம் பழுத்து விட்டது!
30. ஞானம் பெற்று விட்டேனா, குருவே!
31. வாழ்க்கைக்கு வழிகாட்டும் அறிவுரைகள்!
32. ஜென் வாழ்க்கை முறை சுலபம் தான்!
*
நூலில் உள்ள எனது என்னுரை இது:
என்னுரை
எனது ‘ஜென் காட்டும் வாழ்க்கை நெறி’ என்ற புத்தகத்தைப் படித்தவர்கள் ஜென் பிரிவின் பால் ஒரு ஈர்ப்பைக் கொண்டிருப்பார்கள் என்றே நம்புகிறேன்.
ஜென் பிரிவில் உள்ள குருமார்கள் ஏராளமான பேர்கள்! அவர்களது உபதேச உரைகளும், ஜென் பிரிவில் உள்ள குட்டிக் கதைகளும் இன்னும் ஏராளம் உள்ளன.
வாழ்க்கையில் மாபெரும் வெற்றிக்கு வழி காட்டும் இந்த போதனைகளும் குட்டிக் கதைகளும் மேலை நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளிலும் முனைப்புடன் படிக்கப்படுகின்றன. ஜென் தியான முறையைப் பயிற்றுவிக்கும் பல மையங்கள் உலகெங்கும் பரவி உள்ளன.
இந்த சூழ்நிலையில் தமிழ் மக்களுக்கு புத்தரின் போதனைகளையும் ஜென் பிரிவு தரும் குட்டிக் கதைகள் பலவற்றையும் அறிமுகப்படுத்தும் ஒரு முயற்சியாகவே இந்த நூல் மலர்கிறது.
தைவானில் உள்ள ‘The Corporate Body of the Buddha Educational Foundation’ நிறுவனம் விலை மதிக்கவே முடியாத புத்தரைப் பற்றிய ஏராளமான புத்தகங்களை எனக்கு இலவசமாக அனுப்பி உதவியது. அருமையான இந்தப் புத்தகங்கள் கிடைக்கப் பெற்றவுடன் மேலும் பல கட்டுரைகளை எழுதலானேன்.
அவ்வப்பொழுது பல்வேறு இதழ்களிலும், இணையதள ப்ளாக்கிலும் வெளி வந்த கட்டுரைகளின் தொகுப்பே இது. இந்தக் கட்டுரைகளை வெளியிட்ட அனைத்து தமிழ் பத்திரிகைகளுக்கும் எனது நன்றி. குறிப்பாக லண்டன் திரு. சுவாமிநாதன் அவர்களுக்கு எனது உளம் கனிந்த நன்றி.
இந்த நூலை டிஜிடல் வடிவமாக வெளியிட முன் வந்த பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அறிவு பூர்வமான வெற்றிக்கான உத்திகளை ஜென் பிரிவு தருகிறது! அவற்றைக் கடைப்பிடித்தால் வாழ்வில் வெற்றி உறுதி! இதைப் படிக்கும் அனைவருக்கும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
பங்களூர் ச. நாகராஜன்
13-1-2022