

Post No. 11,205
Date uploaded in London – – 19 AUGUST 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய திரைப்படங்கள்! – 6
ச.நாகராஜன்
விண்வெளி பற்றி வெளிவந்துள்ள மேலும் சில திரைப்படங்களைப் பார்ப்போம்:
டீப் இம்பாக்ட் (Deep Impact):- 1998ஆம் ஆண்டு வெளி வந்த படம் இது. விண்வெளி பற்றிய திரைப்படங்களில் சிறந்த படங்களில் ஒன்றாக இன்று வரை போற்றப்பட்டு வரும் படம் இது. ஒரு பெரும் பாறை பூமியை நோக்கி மோதும் வகையில் வருகிறது. அதை விண்கலம் இடைமறித்துத் தடுக்கிறது.
இன் தி டெட் ஆஃப் ஸ்பேஸ் (In the Dead of Space):- 1999 ஆம் ஆண்டு வெளி வந்த இந்தப் படம் ரஷிய ஸ்பேஸ் ஸ்டேஷன் ஒன்று தீவிரவாதிகளின் தாக்குதல் முயற்சிக்கு இலக்காவதைச் சித்தரிக்கிறது.
ஆஸ்டின் பவர்ஸ்: தி ஸ்பை ஹூ ஷேக்ட் மி (Austin Powers: The Spy Who Shagged Me):- 1999 ஆம் ஆண்டு வெளி வந்த படம் இது ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் வெளியான ஸ்பை திரைப்படங்களை கௌரவிக்கும் விதமாக எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் டாக்டர் ஈவில் (கயவன் ஒருவன்) விண்வெளி சுற்றுப்பாதையிலிருந்து சில சக்திகளைத் திருட வருகிறான். ஆனால் அறுபதுகளில் வெளியான ஸ்பை படங்களைப் போல இது அமையவில்லை.
ஃபோர்ட்ரெஸ் 2: ரீ-எண்ட்ரி (Fortress 2: Re-Entry) :- 2000ஆம் ஆண்டில் வெளியான படம் இது. 1992ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஃபோர்ட்ரெஸ் படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டது. பூமியைச் சுற்றும் ஒரு விண்கலம் சிறையாகப் பயன்படுத்தப்பட்டு அங்கு கிரிமினல்கள் அடைத்து வைக்கப்படுகின்றனர். அந்த விண்கலச் சிறை பூமிக்கு மேலே 22300 மைல்கள் மேலே சுற்றுவதால் பூமிக்கு இணையாக அதே 24 மணி நேர சுழற்சியைக் கொண்டிருக்கிறது. அதனால் எப்போதும் பூமிக்கு மேலே ஒரே இடத்தில் நிலையாக இருப்பது போலச் சுழலும். (இதை ஜியோசிங்க்ரனஸ் கலம் என அறிவியல் கூறும்) இதிலிருந்து தப்புவது என்பது முடியவே முடியாது. ஆனால் கதாநாயகன் ஜான் விண்கலம் ஒன்றின் மூலமாகத் தப்பி பூமியை அடைகிறான்.இது தான் கதை.
ஸ்பேஸ் கௌபாய்ஸ் (Space Cowboys):- 2000ஆம் ஆண்டு வெளியான படம் இது.நான்கு விண்வெளிவீர்ர்கள் சோவியத் யூனியனின் கலத்தில் உள்ள அபாய ஆயுதங்களை செயலிழக்கச் செய்வதைச் சித்தரிக்கிறது.
சோலார் ஃபோர்ஸ் (Solar Force) :- 1995 ஆம் ஆண்டு வெளியான படம் இது. பூமியின் ஓஜோன் படலம் சீரழிந்து விடுகிறது ஸ்பேஸ் ஸ்டேஷனில் வசிக்கும் பூமி வாசிகள் சிலர் பூமியின் பசுமையைக் காக்க முயல்கின்றனர். இதைத் தடுக்க சுயநலமிகள் முயல அவர்களை வெற்றி கொண்டு பூமியைக் காப்பது தான் கதை.
2001: எ ஸ்பேஸ் ட்ராவெஸ்டி (A Space Travesty) :- 2000ஆம் ஆண்டு வெளியான படம் இது.அமெரிக்க ஜனாதிபதி வேகன் என்ற சந்திரனில் உள்ள தளத்திற்கு விஜயம் செய்ய தீயவர்கள் அவரைக் கடத்தி விடுகிறார்கள்.அவரைப் போலவே உள்ள க்ளோனை ஜனாதிபதியாக இருக்க வைக்கிறார்கள். மார்ஷல் டிக் டிக்ஸன் என்ற ஒரே ஒருவர் தான் அவரைக் காப்பாற்ற முடியும். அவரின் சாகஸம் மூலம் எல்லாம் சுபமாக முடிகிறது!
ப்ளாக் ஹொரைஸன் (Black Horizen):- ரஷிய விண்வெளி நிலையம் ஒன்றை மீட்கச் செல்லும் மீட்புக் குழு எதிர்கொள்ளும் சிக்கல்களைச் சித்தரிக்கும் இப்படம் 2001ஆம் ஆண்டு வெளி வந்தது.
தண்டர்பேண்ட்ஸ் (Thunderpants):- 2002ஆம் ஆண்டு வெளியான படம் இது. சின்னக் குழந்தைகள் விரும்பும் படம்.இளைஞன் ஒருவன் அளிக்கும் பரிசுகள் விண்வெளியில் ஒரு மீட்புப் பணியையே செய்ய வைப்பதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் இது.
தி அட்வெஞ்சர்ஸ் ஆஃப் ப்ளூடோ நாஷ் (The Adventures of Pluto Nash):- 2002ஆம் ஆண்டு வெளியான படம் இது. பூமியில் உள்ள மதவாதிகளின் பிடியிலிருந்து தப்பி வெளியேறும் சிலர், சந்திரனை அடைந்து அங்கு குடி, கும்மாளம், சூதாட்டம், இதர “கெட்ட” காரியங்கள் அனைத்தையும் செய்வதைக் கருவாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் பட்ம் கடுமையான விமரிசனத்திற்கு உள்ளானது. பார்த்து ரசித்த ரசிகர்களும் ஏராளம் தான்!
தற்போதைய படங்கள்
விண்வெளியில் ஏராளமான விண்கலங்கள் இன்று செலுத்தப்படுகின்றன. அறிவியல் வெகுவாக முன்னேறி விட்டது. திரைப்படத் தொழில்நுட்பமோ மிகுந்த முன்னேற்றத்தை அடைந்து விட்டது. தற்போது வெளி வரும் படங்கள் காலத்திற்கு ஏற்றபடி அற்புத திரை ஓவியங்களாக வெளி வருகின்றன. மேலும் சில படங்கள் இதோ!
ப்ளானெடஸ் (Planetes) :- 2003ஆம் ஆண்டு அக்டோபரில் ஆரம்பித்து 26 எபிசோடுகளைக் கொண்ட ஜப்பானிய தொலைக்காட்சித் தொடர் இது. விண்வெளியில் ஏராளமான விண்கலக் குப்பைகள் சுழன்று கொண்டே இருக்கின்றன. இவற்றை விண்வெளியிலிருந்து நிபுணர் குழு ஒன்று அகற்றுகிறது. அவர்களது நிறுவனத்திற்கு போதுமான நிதி இல்லை என்பதால் எல்லாமே அரைகுறையாகவே அவர்களுக்குக் கிடைத்து வருகிறது. பாதி அளவே பணியாளர்கள், பாதி சாதனங்கள் எல்லாமே பாதி பாதி தான். ஆகவே இந்த டீமே அரைகுறை டீம் என்று அழைக்கப்படுகிறது அவர்கள் விண்வெளிச் சுற்றுப்பாதையிலும் சந்திரனிலும் செய்யும் சாகஸங்கள் இந்தத் தொடரில் சித்தரிக்கப்பட்டன. விண்வெளிக் குப்பையை அகற்றும் விதங்களைச் சுவைபடச் சொல்வதால் அனைவராலும் பாராட்டப்பட்டது.
ரேஸ் டு ஸ்பேஸ் (Race to Space) :- 2004ஆம் ஆண்டு வெளிவந்த படம் இது. குடும்பத்துடன் சென்று பார்க்கும் வகையில் நல்ல பண்புகளை வலியுறுத்திய படம். ஒரு ராக்கெட் விஞ்ஞானியின் மகன் ஒரு சிம்பன்ஸியுடன் நட்பு கொள்கிறான். இருவரும் விண்வெளிப் பயணத்திற்குத் தயாராகின்றனர். ஆனால் அவன் திடீரென்று சதி ஒன்றைக் கண்டுபிடிக்கிறான். தந்தையுடன் இணைந்து அபாயத்திலிருந்து மீள்வது தான் கதை.
டிசாஸ்டர்! (Disaster!) :- 2005ஆம் ஆண்டு வெளியான படம் இது. பேரிடர்களை வைத்து ஏராளமான ஹாலிவுட் படங்கள் வெளி வந்து விட்டன. இந்தப் படம் ஆர்மெகடானைப் பார்த்து எடுக்கப்பட்ட படம். எல்லா பேரிடர் படங்களில் உள்ள நல்ல காட்சிகளையும் அம்சங்களையும் துணுக்குகளாக்க் கோர்த்து எடுக்கப்பட்ட படம் என்றே சொல்லலாம். விண்ணில் உள்ள கிரகம் போன்ற பெரிய பொருள் ஒன்று பூமியை நோக்கி வருகிறது. அது மோதினால் நிச்சயம் மனித குலமே அழிந்து விடும். ஸ்பேஸ் நிறுவனம் ஒன்றுடன் அரசு ஒப்பந்தம் செய்து அதில் பணிபுரியும் எரிமலை பற்றிய நிபுணரான ஹாரி பாட்டம்ஸ் என்பவரை இந்த அபாயத்தை நீக்க அமர்த்துகிறது. அவர் தலைமையில் ஒரு குழு விண்வெளி சென்று விண்வெளிப் பொருள் மோதுவதைத் தடுத்து நிறுத்துகிறது.
******************** (தொடரும்)
புத்தக அறிமுகம் – 34
மாறி வரும் பெண்கள் உலகம்

பொருளடக்கம்
1. மாறி வரும் டீன் ஏஜ் பெண்கள்!
2. ஏ டு இஸட் – உங்கள் கணவரை அலசுங்கள்!
4. அலங்காரம் செய்து கொண்டு அழகுக்கு மெருகூட்டலாமா?
5. என்ன விலை அழகே? சொன்ன விலைக்கு வாங்க வருவேன்!!
6. என்றும் இளமையோடு இருக்கலாமே!
7. பெண் சக்தி பெரும் சக்தியாக மாற புது வழி!
8. ஐந்து தளைகளை உடைத்தால் பெண்களும் சி.இ.ஓ. தான்!
9. பாரதி பாடிய மூன்று காதல் பாடல்!
10. ஆயிரம் மலர்களே மலருங்கள்! அன்னை கீதம் பாடுங்கள்!
11. ஸ – கோத்ர திருமணம் சரிதானா?
13. சிரித்து மகிழுங்கள்! சிறப்புடன் வாழுங்கள்!
16. நினைவாற்றலைக் கூட்டுவது எப்படி?
17. IQ வை அதிகப்படுத்துவது எப்படி?
18. குழந்தைகளின் அறிவுத்திறனைக் கூட்டுவது எப்படி?
19. சிறந்த மூளைத் திறனுக்கான பத்து பழக்க வழக்கங்கள்!
20. சண்டையைத் தீர்க்கும் திருப்பு வார்த்தைகள்!
22. அதிர்ஷ்டத்தை அழைப்பது எப்படி?
23. மேனகா காந்தி கூறும் அதிர்ச்சி தரும் உண்மைகள்!
24. பேசுவது மானம் இடை பேணுவது காமம்! விழித்தெழுவோம்!
25. ஏமாற்றுவதற்கென்றே அலைகிறார்கள், ஜாக்கிரதை!
27. ஒரு அம்மாவும் மூன்று பெண்களும்!
*
நூலில் என்னுரையில் ஒரு பகுதி இது:
என்னுரை
“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காண் என்று கும்மியடி”
என்ற மஹாகவி பாரதியாரின் புதுமைக் கும்மியைப் படித்த போது இப்படி ஒரு பொற்காலம் விரைவில் வந்து விடுமா என்ற எண்ணம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் அனைவருக்கும் இருந்தது. ஆனால் வியக்கத்தக்க விதத்தில் மஹாகவியின் தீர்க்க தரிசனம் இன்று உண்மையாகி இருப்பதைப் பார்க்கிறோம்.
எங்கும் பெண்கள்; எல்லாத் துறைகளிலும் பெண்கள்!, ஜனாதிபதியாக, பிரதம மந்திரியாக, முதன் மந்திரியாக, பாராளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினராக, விண்வெளியில் விண்கலத்தில் செல்லும் வீராங்கனையாக, பைலட்டாக, பேராசிரியையாக, விஞ்ஞானியாக, பத்திரிகை ஆசிரியராக, வக்கீலாக, நீதிபதியாக, விளையாட்டு வீராங்கனையாக, முதன்மை அதிகாரியாக எதிலும் எங்கும் பெண்கள் என்ற நிலையைப் பார்த்து இன்று பிரமிக்கிறோம்.
பெண் சக்தி பெரும் சக்தியாக ஆகி உலகை எப்படியெல்லாம் முன்னேற்றம் அடையச் செய்து வருகிறது என்பதையும் ஆச்சரியத்துடன் பார்க்கிறோம்.
பெண்ணுலக முன்னேற்றம் பற்றியும் பெண்கள் முன்னேற்றம் சார்ந்த கட்டுரைகளையும் மங்கையர் மலர், கோகுலம் கதிர், சினேகிதி ஆகிய பத்திரிக்கைகளில் எழுதி வந்தேன்.
இந்தப் பத்திரிக்கைகளில் ஆசிரியர்களாக இருப்பவர்கள் அனைவருமே மங்கையரே! கோகுலம் கதிரில் திருமதி கமலி ஸ்ரீ பால், சினேகிதியில் திருமதி மஞ்சுளா ரமேஷ் ஆகியோர் அளவற்ற ஊக்கத்துடன் மங்கையர் முன்னேற்றத்தில் அக்கறை செலுத்துவதோடு எனது கட்டுரைகளையும் தொடர்ந்து பிரசுரித்து வந்தனர்.
அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.
வழக்கம் போல இந்த நூலையும் வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் என் நன்றி உரித்தாகுக!
இந்த நூல் தரும் நல்ல கருத்துக்களினால் பெண்கள் அனைவரும் உத்வேகம் பெற்று பாரதத்தைப் பொன்னொளிர் பாரதமாக உயர்த்த இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
நன்றி!
பங்களூர் ச. நாகராஜன்
13-1-2022
மின்னஞ்சல்: snagarajans@yahoo.com
*
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்
தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852
**