
Post No. 11,209
Date uploaded in London – 20 AUGUST 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
முதலில் லண்டனில் பிரிட்டிஷ் மியூசியத்தில் உள்ள கல்வெட்டில் கிடைக்கும் செய்தியைக் காண்போம். இது கி.பி. 725-ல் செதுக்கப்பட்டது. இதில் 5 ஸம்ஸ்க்ருதச் செய்யுட்கள் இருக்கின்றன. தேவானந்த என்ற புலவர் கவிதைகளை யாத்துள்ளார். வகுலஜா என்ற சந்நியாசியைப் பற்றியும் இறைவன் சித்தேஸ்வரா பற்றியும் பாடும் கல்வெட்டு இது.
சிவன் கோவில் கட்டப்பட்ட செய்தியைக் கொடுக்கும் மற்றொரு கல்வெட்டும் இருக்கிறது. ராஸ்தானிலுள்ள ஒரே ஊரிலிருந்து இரண்டு கல்வெட்டுகளையும் பிரிட்டிஷார் கொண்டுவந்துள்ளனர்.
XXX
தரணீதர இயற்றிய 112 செய்யுட்கள்
குஜராத்தில் வெராவல் பகுதியில் தரணீதர என்னும் ஸம்ஸ்க்ருதப் புலவர் இயற்றிய 76 செய்யுட்கள் அடங்கிய கல்வெட்டும் 46 செய்யுட்கள் அடங்கிய இன்னும் ஒரு கல்வெட்டும் இருக்கின்றன. குஜராத் சாளுக்கிய அரசன் சாரங்க தேவனின் — கி.பி. 1287— காலத்தியவை இவை.
தொந்த என்பவரின் மகன் தரணீதர. அவர் லகுலீச பாசுபத சந்நியாசி கண்டபர பிருஹஸ்பதியின் மற்றும் த்ரிபுராந்தகரின் திருப்பணிகளைப் புகழ்ந்து எழுதியுள்ளார். அந்த சைவ சந்நியாசி 5 லிங்கங்களையும் கோவிலகளையும் சோமநாத பாடனவில் ஸ்தாபித்தார். காவிய பாணியில் எழுத தரணீதர முயற்சித்த போதிலும் அதன் தரம் அவ்வளவுக்கு உயர்ச்சியாக இல்லை என்றும், இடையிடையே குஜராத்திச் சொற்கள் வருவதாகவும் அறிஞர்கள் செப்புவர்.
46 செய்யுட்கள் அடங்கிய இன்னும் ஒரு கல்வெட்டில் மேலும் சில சைவ அடியார்களின் பெயர்கள் கிடைக்கின்றன – த்ரைலோக்ய ராசி, தர்ம ராசி, கண்டபர ப்ருஹஸ்பதி.
துண்டு துண்டுகளாக இருக்கும் சோமநாத பட்டண கல்வெட்டுகள் ‘தாராத்வம்ஸ’ என்னும் நூல் பற்றியும் குறிப்பிடுகிறது. கல்வெட்டுகள் குறிப்பிடும் ஏராளமான நூல்களும் ,கோவில்களும், இரத்தின, தங்க நகைகளும் இப்போது இல்லை என்பது ஆராயப்படவேண்டிய விஷயங்கள் ஆகும் .
xxxx
“சதி” (Sati) அல்லது உடன்கட்டை ஏறுதல் என்னும் வழக்கம் கல்வெட்டில் முதல் முதலில் கிடைப்பது நேபாள நாட்டில்தான். தமிழ் இலக்கியத்தில் பெருங் கோப்பெண்டு (மஹாதேவி) , அவருடைய கணவன் சிதைத்தீயில் பாய்ந்து எரிந்தது புறநானுற்றின் 246, 247 பாடல்களில் இருப்பதை அனைவரும் அறிவர். மேலும் பல பாடல்களில் கரிகாற் சோழன் மனைவிமார்கள், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மனைவியர், ஆய் அண்டிரன் மனைவியர் தீப்பாய்ந்து கருகி எரிந்ததையும் , அவர்களில் இருவர் அதை ‘குளிர்ந்த தாமரைக்குளம்’ என்று வருணித்ததையும் தமிழ் கூறு நல்லுகம் அறியும் . ஆயினும் இதற்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் நேபாளத்தில் இவ்வழக்கம் கல்வெட்டில் பதிந்து இருப்பது முக்கியத் தகவலை அளிக்கிறது. இது க்ஷத்ரியர்கள் இடையே இமயம் முதல் குமரி வரை இருந்த வழக்கம் என்பதும் 2000 ஆண்டுக்குப் பின்பற்றப்பட்ட வழக்கம் என்பதும் தெரிகிறது.
எகிப்து நாட்டில் மன்னர் இறந்தவுடன் அவருடைய மனைவியர், மந்திரிகள், ஊழியர்கள் முதலிய அனைவரும் உயிருடன் புதைக்கப்பட்டதையும் உலகம் அறியும். புற நானூற்றில் ஒரு பெண்மணி “ஏ , குயவா என்னையும் சேர்த்துப் புதைக்கும் அளவுக்கு பெரிய தாழி (பானை) செய்துகொடு” என்று வேண்டும் பாடல் இருப்பதைப்பார்க்கும்போது உயிருடன் எரிப்பது மட்டுமின்றி உயிருடன் புதைக்கும் வழக்கமும் தமிழர்களிடையே இருந்ததை அறிய முடிகிறது . இது எகிப்து அல்லது கிரேக்கத்தில் இருந்து பரவி இருக்கலாம் என்பது ஒரு சிலர் கருத்து .
1991ம் ஆண்டில் கே.வி.ராமகிருஷ்ணராவ் எழுதிய ஆங்கிலக் கட்டுரையில் தமிழர்களின் “சதி” மரணங்கள் குறித்து முழு விவரங்களும் உள்ளன.
இப்பொழுது கல்வெட்டு விஷயங்களை ஆராய்வோம்
நேபாளத்தின் காத்மாண்டு பள்ளத்தாக்கில் புகழ்பெற்ற சங்கு நாராயணர் கோவில் உள்ளது. அங்கிருந்த கல்வெட்டு பாதி மணலில் புதைந்து கிடந்தது. வெள்ளைக்காரர் ஆட்சிக்காலத்தில் எல்லா கல்வெட்டுகளையும் படி எடுத்தபோது அதையும் படி எடுக்க அனுமதி கோரினர். கோவிலுக்குள் வெள்ளைக்காரர்கள் நுழையக்கூடாது என்று பூஜாரிகள் தடுத்தனர். பின்னர் வரலாற்று ஆராய்ச்சிக்காக என்று மன்றாடியவுடன் அர்ச்சகர்களின் அனுமதி கிடைத்தது. அது கி.பி. அல்லது பொது ஆண்டு 464 ஆண்டு செதுக்கப்பட்ட கல்வெட்டு. அதில் ராஜ்யதேவி என்பவர் சதி முறையில் இறக்க விரும்பியபோது அனைவரும் அவரைத் தடுக்கவே அவர் விதவைகளுக்கான விரத வாழ்க்கையைக் கடைப்பிடித்தார் என்ற செய்திகள் உள்ளன. அருந்ததிக்கு நிகரான கற்புக்கரசியான அவர் கோவில் ,குளம் வெட்டி, புனித வாழ்க்கை நடத்தியத்தைக் கல்வெட்டு காட்டுகிறது.
‘மனு ஸ்ம்ருதி’ முதலான தர்ம சாஸ்திரங்களோ, ரிக் வேதமோ இதை ஆதரிக்கவில்லை.ராமாயணத்தில் தசரதன் இறந்தபோது அவரது மனைவியர் சதி செய்துகொள்ளவில்லை. மஹாபாரதத்தில் குந்தியும் சதி மரணத்தைக் கடைப்பிடிக்கவில்லை. பாண்டுவின் மனைவி மாத்ரி மட்டும் அப்படி இறந்தாள் ராமாயணத்தில் ராவணன் மனைவி மண்டோதரியும் அப்படி இறந்தாள் . நேபாள கல்வெட்டும் சங்கத் தமிழ் இலக்கியமும் நமக்குச் சொல்லும் செய்தி- இமயம் முதல் குமரி வரை இந்த வழக்கம் இருந்தது என்பதாகும். ஆனால் இது மனைவியரின் விருப்பத்தின் பேரிலேயே நடந்தது . பிற்காலத்தில் சில இடங்களில் பெண்களைக் கட்டாயப்படுத்திய செய்தியும் உள்ளன. குறிப்பாக வங்காளத்தில் அப்படி நடந்தது . அதை எதிர்த்து ராஜாராம் மோஹன்ராய் முதலியோர் போர்க்கொடி தூக்கினர்.
xxx
1160-ம் ஆண்டு கல்வெட்டு ஹிமாச்சல பிரதேச சம்பா பகுதியை ஆண்ட நாக பால என்ற சிற்றரசரைப் பற்றியதாகும் . அவர் இறந்தபோது அவருடைய மனைவி பலஹா, ‘சதி’ முறையில் இறக்க விரும்பினார்.அவரையும் பலரும் தடுக்கவே அவர் விரத வாழ்க்கை மேற்கொண்டு புனிதப் பணிகள் செய்ததை கமல லாஞ்சன என்ற புலவர் அழகிய கவிதை வடிவில் கல்வெட்டில் எழுதி வைத்துள்ளார்.
–SUBHAM–
tags-கல்வெட்டு, சங்கு நாராயணர் கோவில் , தரணீதர, “சதி” , ராஜ்யதேவி, நேபாளத்தில்,