

Post No. 11,208
Date uploaded in London – – 20 AUGUST 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய திரைப்படங்கள்! – 7
ச.நாகராஜன்
விண்வெளி பற்றிய படங்களின் தொகுப்பு தொடர்கிறது. மேலும் சில படங்களைப் பற்றிய விவரங்களைப் பார்ப்போம்:
ஃப்ரீடம் (Freedom) : 2006 ஆம் ஆண்டு வெளியான அனிமேஷன் படம் இது. பூமியின் சுற்றுப்புறச் சூழ்நிலை மோசமாகவே மனித குலத்தின் எஞ்சிய பகுதி சந்திரனுக்குக் குடி பெயர்கிறது.பூமியைப் பற்றிய புது செய்தி ஒன்றை ஒரு இளைஞன் கண்டு பிடிக்கிறான். சந்திரனிலிருந்து தப்பி விடுதலை அடைய நினைக்கிறான். அவன் நினைத்ததை சாதித்தானா என்பதை படம் சித்தரிக்கிறது.
எர்த்ஸ்டார்ம் (Earthstorm): 2006ஆம் ஆண்டு வெளியானது இந்தப் படம். ஒரு பெரிய விண்பொருள் சந்திரனைத் தாக்கி அதை இரண்டாகப் பிளக்கப் பார்க்கிறது. இதனால் வெடித்துச் சிதறும் விண்வெளிக் குப்பை பூமியின் மீது குப்பை மழையாகப் பொழிந்து பூமியும் அழியும். சந்திரனைக் காக்க ஒரு பெரும் நிபுணரால் மட்டுமே முடியும். அவரது சாகஸ செயலால் சந்திரன் அழிவு தடுக்கப்படுகிறது.
அஸ்ட்ரானட் ஃபார்மர் (Astronaut Farmer) :-2006ஆம் ஆண்டு வெளியானது இந்தப் படம் இதில் டெக்ஸாஸை சேர்ந்த மிருகப் பண்ணை ஒன்றின் உரிமையாளர் ராக்கெட் ஒன்றைத் தன் பண்ணையில் அமைத்து தானே விண்வெளியில் ஏவி விண்வெளிச்சாலையில் சுழல விடும் தனது கனவை நிறைவேற்ற நினைக்கிறார். வேடிக்கையும், குடும்பப் பின்னணியும் இணைந்த விண்வெளிக் கதை இது.
போஸ்ட்கார்ட்ஸ் ஃப்ரம் தி ஃப்யூச்சர் (Postcards from the Future) :- 2007ஆம் ஆண்டு வெளியான படம் இது. சந்திரனிலிருந்து சனி கிரகத்திற்கு முதலாவது பயணம் மேற்கொள்ளப்படும் நாட்களில் நிகழும் கதை இது. சீன் ஈவர் என்பவர் ஒரு எலக்ட்ரிகல் எஞ்சினியர்.அவருக்கு எதிர்காலம் பற்றிய அனைத்தும் வீடியோ “போஸ்ட்கார்ட்” காட்சிகளாகத் தெரிகிறது. சுவாரசியமான இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஒவ்வொரு வருடமும் மூன் டே (MOON DAY) எனப்படும் சந்திர தினக் கொண்டாட்டத்தில் டல்லாஸில் (ஓவ்வொரு ஆண்டும் ஜூலை 20 ஆம் தேதி சந்திர தினமாக டல்லாஸில் கொண்டாடப் படுகிறது) இந்தப் படம் காண்பிக்கப்படுகிறது.2007ஆம் ஆண்டு பன்னாட்டு விண்வெளி மேம்பாட்டு மாநாட்டிலும் இந்தப் படம் திரையிடப்படும் பெருமையைப் பெற்றது!
ராக்கெட் கேர்ள்ஸ் (Rocekt Girls) :- 2007-2008ஆம் ஆண்டில் ஒளிபரப்பப்பட்ட 12 எபிசோடு அனிமேஷன் தொலைக்காட்சித் தொடர் இது. ஒரு விண்வெளி ஏஜன்ஸி, சாடலைட் ரிப்பேர் கம்பெனி ஒன்றைத் தொடங்குகிறது. அவர்களுக்குத் தேவையோ குட்டி விண்வெளி வீர்ர்கள் தான். பள்ளியில் படிக்கும் மூன்று மாணவிகள் இதற்குப் பொருத்தமானவர்களாக ஆகின்றனர் அவர்களை சித்தரித்து எடுக்கப்பட்ட தொடர் இது.
மூன்லைட் மைல் (Moonlight Mile):- 2008ஆம் ஆண்டு வெளியான இன்னொரு அனிமேஷன் படம் இது. இரண்டு நண்பர்கள் பூமியின் மிக உயரமான மலை சிகரத்தில் ஏறி வெற்றி பெறுகின்றனர். அங்கிருந்து ஆகாயத்தைப் பார்த்தால் தெரிவது சந்திரன். அதையும் வென்று விட எண்ணம் கொள்கின்றனர். அதைத் தொடர்ந்து ஏற்படும் சாகஸ செயல்களை இந்தத் தொடர் சித்தரிக்கிறது.
ஃப்ளை மீ டு தி மூன் (Fly Me to the Moon) :- 2008ஆம் ஆண்டு வெளியான படம் இது. சிறுவர்களுக்கான படம். அபல்லோ 11 விண்கலம் சந்திரனை அடைந்ததைப் பின்னணியாகக் கொண்ட படம். குட்டிகளுக்கான சுட்டிக் கதை!
ஸ்பேஸ் பட்டீஸ் (Space Buddies) :- 2009ஆம் ஆண்டு வெளியான படம் இது. ஐந்து நாய்க் குட்டிகள் விண்வெளிப் பயணத்தை மேற்கொள்கின்றன. ஒரு விண்வெளி கம்பெனி ராக்கெட் டெஸ்டை நடத்தும் போது இந்த நாய்க்குட்டிகள் அங்கு சென்று சேர்கின்றன. சுட்டிகள் இதைப் பார்த்தால் கும்மாளம் போடுவார்கள். ஒரே வேடிக்கை தான்!
ல்யூனாபோலிஸ் (Lunapolis) :- காலப் பயணம் மேற்கொள்ளும் ஒரு ரகசிய மார்க்கத்தினரைப் பற்றிய கதை இது. சந்திரன், காலப் பயணம் போன்ற அனைத்தையும் இணைத்த அறிவியல் புனைகதை படம் இது.
இம்பாக்ட் (Impact):- 2009ஆம் ஆண்டு வெளியானது இந்தப் படம். ஒரு பெரும் விண் பொருள் சந்திரனைத் தாக்குகிறது. அதனால் சந்திரனின் ஓடு பாதை இன்னும் விரிவடைகிறது. இந்த மாற்றத்தால் சந்திரன் பூமியுடன் மோதும் அபாயம் உருவாகிறது.இதைத் தடுக்க பெரும் சாகஸப் பணி ஆற்றப்பட வேண்டும். சந்திரனை இழுத்து அதன் சரியான ஓடுபாதையில் செல்ல வைத்து பூமி ஒருவழியாகக் காக்கப்படுகிறது.
மூன் (Moon) :- 2009ஆம் ஆண்டு வெளியான படம் இது. மனிதன் என்பதன் அர்த்தம் என்ன என்பதை தத்துவ ரீதியாகப் பார்க்கும் கதை இது. சந்திரனில் தனி மனிதன் ஒருவன் ஹீலியம்-3 ஐ வெட்டி எடுக்கிறான். அதைப் பூமிக்கு அனுப்பத் தயார். மூன்று வருடப் பயணத்திற்குப் பின் அவன் மீண்டும் பூமியை அடைகிறானா? விடை படத்தில்!
ஸ்பேஸ் டாக்ஸ் (Space Dogs):- 2010 ஆம் ஆண்டு வெளியான ஒரு அனிமேஷன் படம் இது. ரஷியாவிலிருந்து வெளியானது. ஸ்ட்ரெல்கா மற்றும் பெல்கா ஆகிய இரு நாய்களைப் பற்றிய கதை இது.குழந்தைகள் ரசிக்கும் வேடிக்கைச் சித்திரம்!
மிக நீண்ட சந்திர பயணத்தை விண்வெளிச்சாலையில் மேற்கொண்டு விட்டோம். இன்னும் மீதமிருக்கும் சில படங்களையும் பார்த்து விடலாமே!
-அடுத்த இதழில் இந்தத் தொடர் முடிகிறது
********************
புத்தக அறிமுகம் – 35
வெற்றிக் கலை உத்திகள்!

பொருளடக்கம்
அத்தியாயங்கள்
1. ஓஷோவின் அறிவுரை : புத்தகம் படியுங்கள்!
2. படேரெவ்ஸ்கியின் அறிவுரை: பயிற்சி செய்யுங்கள்!
3. லிங்கனின் அறிவுரை: மன்னித்து விடுங்கள்!
4. மஹாத்மா காந்திஜியின் அறிவுரை: நேரத்தைக் கடைப்பிடியுங்கள்!
5. ஆதிசங்கரரின் அருளுரை: நல்லோரைச் சேருங்கள்!
6. ஜீன் ராபர்ட்ஸனின் அறிவுரை: சிரித்து மகிழுங்கள்!
7. புத்தரின் அருளுரை: நிகழ்காலத்தில் வாழுங்கள்!
8. ஸ்வாமி விவேகானந்தரின் அருளுரை : சேவை புரியுங்கள்!
9. எட்வர்ட் டீ போனோவின் அறிவுரை: மாற்றி யோசியுங்கள்!
10. வெப்ஸ்டரின் அறிவுரை: மொழிப்புலமை பெறுங்கள்
11. ஸ்டீவ் ஜாப்ஸின் அறிவுரை: தொழில்நுட்பம் பழகுங்கள்!
12. ஷேக்ஸ்பியரின் அறிவுரை: இசை மூலம் இன்புறுங்கள்!
13. பகவான் ரமணரின் அருளுரை: மௌனம் பழகுங்கள்!
14.பதஞ்சலி முனிவரின் அருளுரை: யோகம் புரியுங்கள்!
15. எமர்ஸனின் அறிவுரை: இயற்கையை நேசியுங்கள்!
16. கோப்மேயரின் அறிவுரை: கேளுங்கள்!
17. அருளாளர்களின் அருளுரை: கீதை படியுங்கள்!
18. கபீரின் அருளுரை: குறை காணாதீர்கள்!
19. டேல் கார்னீகியின் அறிவுரை: பாராட்டத் தவறாதீர்கள்!
20. பெஞ்ஜமின் ஃபிராங்க்ளினின் அறிவுரை: குறிப்புப் புத்தகம் எழுதுங்கள்!
21. மஸாகி இமாயின் அறிவுரை: படிப்படியாகத் தொடர்ந்து முன்னேறுங்கள்!
22. அம்பலவாணர் அறிவுரை : இரகசியம் காத்துக் கொள்ளுங்கள்!
23. மஹரிஷி வசிஷ்டரின் அருளுரை:சமநிலையுடன் இருங்கள்!
24. வள்ளுவரின் அருளுரை : குடும்பத்துடன் குலவுங்கள்!
25. ஹெட்விக் லூயிஸின் அறிவுரை : ஆளுமை கவர்ச்சியை அதிகரியுங்கள்!
26. ஜீன் கால்மெண்டின் அறிவுரை: அதிக வயது ஒரு தடையில்லை என்பதை உணருங்கள்!
27. அற்புதங்கள் புரியுங்கள்; ஆனால் அவற்றை விளக்காதீர்கள்!
*
நூலில் நான் வழங்கிய என்னுரை இது :
என்னுரை
வெற்றிக் கலை என்ற எனது புத்தகத்திற்குக் கிடைத்த ஆதரவு என்னை இன்னும் அதிகமதிகம் வெற்றிக் கலை பற்றி எழுத உந்தியது.
முதல் பாகத்திற்கு எனது இனிய நண்பரும் பிரபல டைரக்டரும் பாக்யா இதழ் ஆசிரியருமான திரு கே. பாக்யராஜ் அவர்கள் முன்னுரை தந்து கௌரவித்தார்.
இன்றைய போட்டி மிகுந்த உலகில் நாளுக்கு நாள் தொழில் நுட்ப வளர்ச்சி பெருகிக் கொண்டே போகிறது.
பழைய கால உத்திகளுடன் நவீன உத்திகளும் வாழ்க்கையில் வெற்றி பெற இன்றியமையாத ஒன்றாக அமைகிறது.
ஏராளமான பெரியோர்களும், வெற்றியாளர்களும் எப்படி வாழ வேண்டும் என்பதைப் பல்வேறு விதமாக எடுத்துக் கூறியுள்ளனர். தாங்கள் வெற்றி பெற்ற வழியைக் காண்பித்துள்ளனர்.
இவற்றையெல்லாம் சிறிய கட்டுரைகளாக இணைய தள இதழான நிலாச்சாரல் இதழில் 2015ஆம் ஆண்டு எழுதி வந்தேன்.
வாசகர்களின் பேராதரவு கிடைத்தது.
வெற்றிக் கலையின் இரண்டாம் பாகமாக மிளிர்ந்த அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இப்போது வெற்றிக்கலை உத்திகள் என்ற நூலாக உங்கள் முன் மலர்கிறது.
இதை நிலாச்சாரல் இதழில் வெளியிட்ட திருமதி நிர்மலா ராஜு அவர்களுக்கு எனது நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.
இந்த நூலின் முடிவுரையில் வெற்றிகரமான வாழ்க்கைக்கான வரையறை தரப்பட்டுள்ளது. அதை அடைவதே ஒவ்வொரு மனிதனின் இலட்சியமாக காலம் காலமாக இருந்து வந்துள்ளது. அதை அடைய இந்த உத்திகள் வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு என் நன்றி உரித்தாகுக!
இதைத் தொடராக வந்த போது இதைப் படித்து ஆதரவு தந்த பல்லாயிரக் கணக்கான வாசகர்களுக்கும் எனது நன்றி உரித்தாகுக!
வெற்றி பெற விழையும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்.
இந்த வெற்றிக்கலை உத்திகளைப் பயன்படுத்தி வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
நன்றி
பெங்களூர் ச.நாகராஜன்
5-3-2022
*
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்
தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852
**