
Post No. 11,215
Date uploaded in London – – 23 AUGUST 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அதிசய ஒற்றுமைகள்! – 1
ச.நாகராஜன்
உலகில் நடைபெறும் நிகழ்வுகளில் பல நம்மை பிரமிக்க வைக்கும்.
இந்த பிரமிக்க வைக்கும் நிகழ்வுகளில் ஒன்று கோஇன்சிடென்ஸ் எனப்படும் தற்செயல் ஒற்றுமை.
ஆனால் இவை தற்செயலாக ஏற்பட்டவையா அல்லது இறைவனின் ஒரு திருவிளையாடலா?
இதோ சிலவற்றைப் படித்துப் பாருங்கள்; பின்னர் உங்கள் முடிவுக்கு வாருங்கள்!
அமெரிக்க ஆச்சரியம்!
அமெரிக்காவை நிறுவிய ஸ்தாபகர்களான தாமஸ் ஜெஃபர்ஸனும் ஜான் ஆடம்ஸும் (Thoman Jefferson and John Adams) சுதந்திர பிரகடனத்தைத் (Declaration of Independence) தயாரிக்க ஆரம்பித்தனர். ஜெஃபர்ஸன் பிரகடனத்தைத் தயார் செய்து ஆடம்ஸிடம் காண்பித்தார். பெஞ்சமின் ஃப்ராங்க்ளினுடன் சேர்ந்து ஜான் ஆடம்ஸ் அதை சீராக்கி மெருகூட்டித் தந்தார். 1776ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி காண்டினெண்டல் காங்கிரஸ் (Continental Congress) அதை அங்கீகரித்தது. இது நடந்த 50 ஆண்டுகளுக்குப் பின்னர் 1826, ஜூலை 4ஆம் தேதி ஜெஃபர்ஸனும் ஆடம்ஸும் – இருவரும் – ஒரே தேதியில் இறந்தனர். அது அமெரிக்க சுதந்திர தினமாக அமைந்தது குறிப்பிடத் தகுந்தது!
ஹோட்டலில் ஆச்சரியம்!
1953ஆம் ஆண்டு. தொலைக்காட்சி ரிபோர்ட்டரான இர்வ் குப்சினெட் (Irv Kupcinet)இரண்டாம் எலிஸபத்தின் முடிசூட்டு விழாவை நேரில் பார்த்து நிகழ்ச்சியைத் தயாரிக்க லண்டன் சென்றார். சவாய் ஹோட்டலில் அவர் தங்கி இருந்த அறையில் ஒரு டிராயரில் அவர் சில பொருள்களைப் பார்த்தார். அவையெல்லாம் ஹாரி ஹானின் (Harry Hannin) என்பவருடையது என்பதை அதிலிருந்த அடையாளங்கள் மூலம் அவர் கண்டுபிடித்தார். ஹாரி ஹானின் பிரபலமான ஒரு பேஸ்கட் பால் விளையாட்டு வீரர். அவர் ஹார்லெம் க்ளோபெட்ராட்டர்ஸின் நண்பர். ஹார்லெம் குப்சினெட்டுக்கு நண்பர். இதை நினைத்து ஆச்சரியப்பட்டார் குப்சினெட். இரண்டு நாட்கள் கழித்து ஒரு கடிதம் ஹானினிடமிருந்து அவருக்கு வந்தது. அதில் அவர் தான் பாரிஸில் ஹோட்டல் மெரிஸில் தங்கியிருந்த போது குப்செனெட்டின் ஒரு ‘டை’யைக் கண்டதாகத் தெரிவித்திருந்தார்!
டாக்ஸி ஆச்சரியம்!
1975ஆம் ஆண்டு. பெர்முடா மொபெடை ஒரு மனிதர் ஓட்டிச் சென்று கொண்டிருந்த போது அவர் மீது ஒரு டாக்ஸி மோத அந்த விபத்தில் அவர் உயிரிழந்தார். ஒரு வருடம் கழித்து அவரது சகோதரரும் அதே போலவே உயிர் இழந்தார். அவர் ஓட்டியது அதே பெர்முடா மொபெட் தான்! இன்னும் ஆச்சரியம் என்னவெனில் அவர் மீது மோதியது அதே டாக்ஸி தான், அதை ஓட்டியவரும் அதே டிரைவர் தான், அவர் ஏற்றி வந்த பயணியும் முன்பு ஏற்றி வந்த அதே பயணிதான்!
மர ஆச்சரியம்!
1883ஆம் ஆண்டு. ஹென்றி ஜைக்லேண்ட் என்பவர் தனது காதலியுடன் நட்பை முறித்துக் கொண்டார். மனமுடைந்த காதலி மனம் வெதும்பி தற்கொலை செய்து கொண்டார். இதனால் கோபமடைந்த அந்தப் பெண்ணின் சகோதரர் ஜைக்லேண்டைத் தேடிக் கண்டுபிடித்து அவரைச் சுட்டார். தான் சுட்டதில் ஜைக்லேண்ட் இறந்து விட்டார் என்று நினைத்துக் கொண்ட அவர் தன்னையும் சுட்டுக் கொண்டார். ஆனால் ஜைக்லேண்ட் சாகவில்லை. குண்டு அவர் முகத்தை உராய்ந்து கொண்டு மட்டுமே சென்று ஒரு மரத்தைத் துளைத்தது. க்ஷண நேரத்தில் அவர் பிழைத்தார். சில வருடங்கள் கழித்த பின்னர் ஜைக்லேண்ட் அந்த மரத்தை வெட்ட ஆரம்பித்தார். அந்த குண்டு அதனுள்ளேயே இருந்தது. மரம் பிரம்மாண்டமானதாக இருந்ததால் வெட்டி முறிப்பது என்பது சாத்தியப்படாது என உணர்ந்த ஜைக்லேண்ட் அதை டைனமைட் வைத்து தகர்க்க முயன்றார். டைனமைட் வெடித்தது.
அது வெடித்து மரம் சிதற அதன் உள்ளிருந்த குண்டு சீறிப் பாய்ந்து ஜைக்லேண்டின் மண்டையைத் துளைத்து அவரைக் கொன்றது!
ராஜ ஆச்சரியம்!
இத்தாலியில் மொன்ஸா என்ற இடத்தில் மன்னர் அம்பர்டோ I (Kinf Umberto I) தனது தளகர்த்தரான ஜெனரல் எமிலியோ போஞ்சியா வாடியா (General Emilio Ponzia- Vadia) என்பவருடன் ஒரு சிறிய உணவு விடுதியில் உணவருந்தச் சென்றார்.
அவரது ஆர்டரை எடுக்க வந்தவர் உணவு விடுதியின் உரிமையாளர்.
அவரைப் பார்த்த மன்னர் அசந்து போனார். ஏனெனில் அவர் அச்சு அசலாகத் தன்னைப் போல இருந்தது தான் அவரை அப்படி பிரமிக்க வைத்தது!
இருவரும் இந்த உருவ ஒற்றுமை பற்றிப் பேச ஆரம்பித்தனர்.
பேச்சில் அவர்கள் கண்டு பிடித்த சுவையான ஒற்றுமைகள் இவை:
இருவரும் ஒரே வருடம் ஒரே மாதம் ஒரே தேதியில் பிறந்தவர்கள்!
(மார்ச் 14, 1844)
இருவரும் பிறந்த இடம் ஒரே நகரம் தான்!
இருவரும் மணந்த பெண்ணின் பெயர் ஒன்றே தான். மார்கெரிடா (Margherita) என்பது தான் அந்தப் பெயர்.
இத்தாலியின் மன்னராக அம்பர்டோ என்று முடி சூட்டப்பட்டாரோ அதே தேதியில் தான் உணவு விடுதியை அதன் உரிமையாளர் திறந்திருந்தார்.
இதைத் தொடர்ந்து 1900ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் தேதி மன்னருக்கு ஒரு செய்தி வந்தது. அந்த உணவு விடுதி உரிமையாளர் மர்மமான முறையில் ஒரு துப்பாக்கிச் சூடில் இறந்து விட்டார் என்பது தான் அந்தச் செய்தி. உடனே மன்னர் தனது துக்கச் செய்தியை அனுப்பினார். அங்கு கூட்டத்தில் இருந்த ஒருவன் அவரைக் கொலை செய்தான். மன்னரும் அதே தேதி மாண்டு போனார்!
இவையெல்லாம் விளக்கம் சொல்ல முடியாத தற்செயல் ஒற்றுமைகளா, அல்லது இறைவனின் திருவிளையாடலா?!
***

புத்தக அறிமுகம் – 37
கொங்கு மண்டல சித்தர்கள், புலவர்கள்,
தலங்கள்! – பாகம் 2
பொருளடக்கம்
முதல் பகுதி – கொங்குமண்டல சதகம் தரும் சித்தர்கள், திருத்தலங்கள் வரலாறுகள்!
1. தலையில் குட்டிக் கொண்டு விநாயகரை வணங்குவது ஏன்?
2. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்!
3.மன்மதைனையும் மயங்க வைக்கும் கொல்லிப்பாவை!
4. கல் ரிஷபம் எழுந்து கடலையை உண்ண வைத்த சிவப்பிரகாசர்!
5. பயறு மிளகானது: சிவபிரான் திருவிளையாடல்!
6. முட்டை என்று தன் பெயரைச் சொன்ன முருகனின் அருள் விளையாடல்!
இரண்டாம் பகுதி – கொங்குமண்டல சதகம் தரும் அரசர்கள், வள்ளல்கள், புலவர்கள்
7. செங்குன்றூர் கிழார் பாடிய திருவள்ளுவ மாலை வெண்பா!
8. வில்லிபுத்தூராரை பாரதம் பாடச் செய்த ஆட்கொண்டான்!
9. யானை அரியணையில் அமர்த்திய கரிகாலன்!
10. பெரும் புகழ் படைத்த முத்தரையர் ஆண்ட இடம் எது?
11. கோசர்கள் ஆண்ட கொங்கு மண்டலம்!
12. தம்பிக்குத் தலை கொடுக்க முன் வந்த அண்ணன்!
13. சடையப்ப முதலியாரின் விருந்தோம்பும் பண்பும் திருவாவடுதுறை மட வரலாறும்!
14. ராஜ ராஜ சோழன் ஆதரித்த வீர சைவர்கள்!
16. சுரிகை ஆயுதப்போரில் வல்ல தித்தன் என்னும் அகளங்க சோழன்!
17. ஆணுக்கு அறிவு அதிகமா, பெண்ணுக்கு அதிகமா?
18. தமிழுக்காகத் தாலியை ஈந்த கொங்கு நாட்டுத் தமிழன்!
20. மும்முடிப் பல்லவராயன் என்ற விருதைப் பெற்ற லிங்கயன்!
21. புலவருக்குக் குழந்தை அளித்த பொன் வண்டி!
22. வெண்மைப் பெண்மணி தமிழ்ச் சங்கம் அமைத்தது!
23. பாண்டியனின் சேனைக்கு அன்னம் தந்து உதவிய அன்னத்தியாகி!
24. காவிரியைக் கொங்கு நாட்டிற்குக் கொண்டு வந்த அல்லாளன் இளையான்!
25. புலவரின் பல்லக்கைச் சுமந்த உலகுடையான்!
26. பெற்ற மகளைப் பலி கொடுத்து அணையை நிலைத்திருக்கச் செய்த இம்முடிச் சோழியாண்டான்!
27. கொங்கக் குயவன் ராஜகுமாரியின் வலிப்பு நோய் தீர்த்த வரலாறு!
28. விசுவகன்மியருக்கான ஒரு சாசனம்!
29. வயிற்றைப் பீறி, குழந்தையை எடுத்த மருத்துவி!
30. பல்லவராயன் பட்டம் பெற்ற செய்யான்!
31. தேர் ஓடத் தன் தலைமகனைப் பலி கொடுத்த வேணாடன்!
32. வீட்டின் முகப்பில் பனையேடும் எழுத்தாணியும் மாட்டிய பண்பாளன்!
33. புலவனுக்குப் பரிசு கொடுக்க முடியவில்லை எனில் புலிக்கு இரையாவதே சிறந்தது!
34. கொங்கு வேளிர் இயற்றிய பெருங்கதை!
பாடல் முதல் குறிப்பும், பாடல் எண்ணும், வரலாறும்
*
நூலில் நான் வழங்கிய என்னுரை இது :
என்னுரை
தமிழகத்தின் தலை சிறந்த மண்டலங்களுள் ஒன்று கொங்கு மண்டலம்.
தங்கம் நிகர் கொங்குமண்டலத்தின் புகழ் வாய்ந்த சரித்திரம், பல நூறு வரலாறுகளைக் கொண்டது. இதை இயற்றியவர் கார்மேகக் கவிஞர் என்பவர்.
கொங்குமண்டலத்தில் குறும்பு நாட்டில் விஜயமங்கலம் என்னும் ஊரில் ஸ்ரீ வத்ஸ கோத்திரத்தில் ஔபாக்கிய சூத்திரம் விருத்தானிய யோகசாகை காசிபப் பிரவரணம் ஜைன பிராமண குலத்தில் பத்மநாப ஐயர் என்பாருக்கு இவர் மகனாகப் பிறந்தார். மேகம் பொழிவது போல் கவிதை மழை பொழிவதால் இவர் கார்மேகக் கவிஞர் என்று அழைக்கப்பட்டார். இவரது வரலாறு சிறப்பான ஒன்று. இவர் இயற்றிய அரும் நூலே கொங்குமண்டல சதகம்.
கொங்குமண்டல சதகம் என்னும் நூறு பாக்கள் அடங்கிய நூலில் கொங்குமண்டலத்தின் பெருமை அனைத்தும் அடக்கிய இவரது புலமை வியக்க வைக்கும் ஒன்று. கொங்குமண்டலம் பற்றி அறிய விரும்புவோரும் தமிழகத்தின் தலையாய வளர்ச்சியையும் பண்பாட்டையும் அறிய விரும்புவோரும் தமிழ்ச் சுவையைச் சுவைக்க விரும்புவோரும் படிக்க வேண்டிய அரிய நூல் இது.
இதில் கூறும் வரலாறுகளைக் கட்டுரைகளாகத் தொகுத்தேன்.
இந்தக் கட்டுரைகள் www.tamilandvedas.com ல் அவ்வப்பொழுது வெளியிடப்பட்டு வந்தன.
இந்த வரலாறுகளில் 32 வரலாறுகள் முதல் பாகமாக வெளியிடப் பட்டது. அதைத் தொடர்ந்து இன்னும் 34 வரலாறுகள் இப்போது இரண்டாவது பாகமாக வெளியிடப்படுகிறது.
இதைத் தொடராக வெளியிட்ட லண்டன் திரு ச. சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி.
இந்த நூலை டிஜிடல் வடிவமாக வெளியிட முன் வந்த பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் மீது ஆர்வம் கொண்ட அனைத்து மக்களும் இதைப் படித்து உத்வேகம் பெற்றுத் தமிழைப் போற்றி வளர்ப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இதைத் தமிழ் அன்பர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன். அனைவருக்கும் எனது நன்றி.
சான்பிரான்ஸிஸ்கோ ச.நாகராஜன்
3-8-2022
*
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்
தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852
**