பிராகிருத நூலில் மருத்துவச் செய்திகள் – Part 1 (Post No.11,242)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,242

Date uploaded in London – 6 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

காதா சப்த சதி  (GATHA SAPTA SATI ) என்னும் நூல் பிராகிருத கவிதைத் தொகுப்பு நூல். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சாதவாகன மன்னன் ஹாலன் (HALAN) மஹாராஷ்ட்ரி பிராகிருத மொழியில் உள்ள கவிதைகளைத் தொகுத்தான். அவன் எழுதிய நாற்பதுக்கும் மேலான கவிதைகளுடன் மேலும் 260 கவிஞர்களின்  செய்யுட்களும் இதில் அடக்கம்; ஏழு பெண் கவிஞர்களும் இருக்கின்றனர்.

காதா கவிதைகள் விரசம் மிகுந்தவை. சங்கத் தமிழ் நூல்களான  அக நானுறு , குறுந்தொகை, நற்றிணைப் பாட்லகள் போன்ற அகத்திணைப் பாடல்கள் ஆகும்.

காதா சப்த சதி என்றால் 700 காதா செய்யுட்கள் என்று பொருள்.இதில் சில சுவையான மருத்துவச் செய்திகளைக் காண்போம்.

(நான் கடந்த பத்து ஆண்டுகளில் எட்டு கட்டுரைகளில் இதன் சிறப்பு அம்சங்களைத் தொட்டுக்காட்டினேன் . இதோ இன்னும் ஒரு கட்டுரை)

XXX

காயங்கள், புண்கள் மீது மருந்து தடவிய  துணியயைக் கட்டுவது (Bandages) இன்று உலகெங்கிலும் உள்ளது. இதோ அந்த வழக்கத்தைக் காட்டும் ஒரு கவிதை :

“அந்த இளம்  பெண் , ஒரு காயம் அடைந்தவர் மெழுகு தடவிய ஒரு துணியைக்  கடிபட்ட உதட்டில் கட்டுவது போல , அதை ஒரு நொண்டிச் சாக்காக வைத்து, தன்னுடைய  பிஞ்சு விரல்களால் , கட்டினாள்” 5-58

இதை பிராகிருத மொழியில் படிப்பதைவிட சம்ஸ்க்ருதத்தில் படித்தால் புரிந்து கொள்ளுவது எளிதாக இருக்கும். இதோ பிராக்ருதக் கவிதையின் சம்ஸ்க்ருத மொழி வடிவம் :

சநகைஹி சநகைஹி லலிதாங்குல்யா மதன பட லாபன மிஷேண

பத்னாதி தவள வ்ரண  பட்டகம் இவ வ்ரணிதாதரே தருணீ

இந்தச் செய்யுளில்  வரும் லலித , அங்குலி /விரல் , தவள, பட்டகம் , தருணீ , மதன, அதரம் , பந்தம்/கட்டுதல்/BOND முதலிய சொற்கள் மிகவும் எளிய ஸம்ஸ்க்ருதச் சொற்கள் ஆகும் .

XXX

விவசாயம் செய்யும் ஒரு நோயாளிக்கு ஒரு அழகி சூடான கஷாயத்தை சூடு தணிவதற்காக  தனது வாயால் ஊதி , ஊதி கொடுக்கிறாள். அதுவோ கசப்பான மருந்து. ஆயினும் தாமரை இதழ்களால் வாசனையுடன் வந்த காற்று பட்டவுடன் அந்த நோயாளி கொஞ்சமும்  முணு முணுக்காமல் அப்படியே வாங்கிக் குடிக்கிறான். அவள், அவனுடைய உடல் நலத்தை விசாரிக்க வந்த பெண்தான் கோப்பையில் கொஞ்சம் கூட மிச்சமில்லை!4-17

இதோ சம்ஸ்க்ருத வடிவில் ப்ராக்ருதக் கவிதை :

ஸுக ப்ருச்சிகாயாஹா  ஹலிகஹ முக பங்கஜ சுரபி பவன நிர்வாபிதம்

ததா பிபதி ப்ரக்ருதி கடுகம் அபி ஒளஷதம் யதா ந நிதிஷ்டதி 4-17

4-17 கவிஞன் த்ரிலோசனன்

இந்தச் செய்யுளில் சுக, கடுக்காய் (கசப்பான), ஒளஷதம்/மருந்து, முக பங்கஜ / தாமரை வாய், பவன/காற்று , சுரபி / வாசனை அல்லது காமதேனு , ஹலிக /கலப்பை ஏந்தியவன்  என்ற சொற்கள் எளிய ஸம்ஸ்க்ருத சொற்கள் .

கலப்பையை தோளில் சுமந்து இந்தியா முழுதும் விவசாயத்தைப் பரப்பிய கண்ணன் சகோதரன் ஹலாயுதனை (பலராமன் ) எல்லோரும் அறிவர் . பவன குமாரன் /காற்றின் மைந்தனையும் எல்லோரும் அறிவர்.

தமிழுக்கு முகம் இல்லை; ஸம்ஸ்க்ருதத்துக்கு வாய் இல்லை என்று பாடசாலைகளில் கிண்டல் செய்வார்கள். முகம் என்றால் தமிழில் மூஞ்சி; ஸம்ஸ்ருதத்தில் வாய்.

லண்டனில் ஒரு சுவையான சம்பவம்

நான் லண்டன் நகரத்தில் பார்த்த பகுதி நேர வே லைகளில் ஒன்று மருத்துவ மனையில் தமிழ் பேசாத நோயாளிகளுக்கு மொழி பெயர்ப்பு உதவி செய்வதாகும். கிழக்கு லண்டனில் சில இலங்கைத் தமிழ் அகதிகள் சட்ட விரோதமாக வாழ்ந்து வந்தனர். அதாவது அகதி என்று முத்திரை குத்தப்படாமல் நாடற்றவர்களாக வாழ்ந்தனர். போலீசுக்குத் தெரியாதபடி நண்பர்கள் வீட்டில் உறங்குவதும், அதிகமாகக் குடிபோதை ஏற்பட்டால் பூங்காக்களில் (In Public Parks) உறங்குவதும் அவர்களுடைய வாடிக்கை . ஒரு அகதி / குடிகாரன் அடிக்கடி ஆஸ்பத்திரியில் மிக மோசமான நிலை யில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய கல்லீரல் (liver) மிகவும் சேதமடைந்துவிட்டது. டாக்டர்கள் கேட்டார்கள்: எத்தனை முறை உன்னை எச்சரி த்தும் ஏன் இப்படிக் குடித்துக் குடித்து செத்துக் கொண்டு இருக்கிறாய்? என்று.

அவர் பதில் சொல்லவில்லை

டாக்டர்கள் போனவுடன் நான்பேசிக் கொண்டு இருந்தேன். அப்போது உன்னுடைய உடல் நலனுக்காகத்தானே டாக்டர்கள் குடிக்காதே என்கின்றனர். உன்னை ஆஸ்பத்திரி கம்ப்யூட்டர்கள் சிவப்புப் பட்டியலிட்டுக் (Red listed) காட்டுகிறது. நீ அடிக்கடி ஆஸ்பித்திரியில் அனுமதிக்கப்படுவதை யும் கம்பியூட்டர் ரிகார்டுகளே காட்டிவிடும். ஏன் இப்படிச் செய்கிறாய்? என்று கேட்டேன்.

அவர் மனம் திறந்து சொன்ன பதில்:

அழகான நர்ஸுகள் கைகளில் எனக்கு உணவு கிடைக்கிறதே !!!!

மேலேயுள்ள ப்ராக்ருதக் கவிதையின் பொருள் இப்போது நன்கு விளங்கும் .

XXX

உயிர் காக்கும் மருந்து 4-36

ஒரு மருமகள் நோய்வாய்ப்பட்டு விடுகிறாள் .மாமியார் எல்லா வேலைகளையும் ஒதுக்கிவிட்டு மருமகளைக் காப்பற்ற வருகிறாள் .அவளுடைய உயிர்  பிரியும் நேரம்; தன்னுடைய மகனுக்காக, உயிர் காக்கும் மருந்தினைப் போல மாமியார் உதவுகிறாள் . இந்த உதவி வறண்ட நாவுக்குக்  கிடைத்த தண்ணீர் போல அல்லது வறண்ட இடத்தில் காணப்பட்ட புதிய மேகம் போல என்று  ஒப்பிடப்படுகிறது.

சஞ்சீவனவ்ஷதம் இவ ஸு தஸ்ய  ரக்ஷதி அனன்ய வ்யாபாரா

ஸு வஷ்னு ஹு நவாப்ர தர்சன கண்டாகத ஜீவிதாம் ஷ்ணுஷாம்

-4-36 (கவிஞன் விஹ்வலன்)

இந்தக் கவிதையில் சஞ்சீவி/உயிர் காக்கும் , ஒளஷதம்/மருந்து , சுத /மகன் , ஸ்நுஷ/ மருமகள்  , ரக்ஷதி/காப்பாற்றுகிறாள், அனன்ய வியாபாரா /பிற வேலைகளை விட்டு –முதலிய சொற்கள் எளிய ஸம்ஸ்க்ருதச் சொற்கள்.

XXX

சிகிச்சை அளிக்கப்படாத நோய்

தமிழில் ஒரு பழமொழி உண்டு: பாடப் பாட ராகம்மூட மூட ரோகம் ; அதாவது பாடகர்கள் எவ்வளவு பயிற்சி செய்கிறார்களோ அவ்வளவுக்கு அவர்கள் பெயர் பெறுவார்கள்; பிரபல பாடகரானாலும்  தினமும் பயிற்சி செய்வார்கள்; அதைப்போல ரோகத்துக்கு / நோய்க்கு உடனேயும் , தொடர்ந்தும் சிகிச்சை தரவேண்டும். மூடி மூடி வைத்தாலோ / சிகிச்சை தராமல் இருந்தாலோ ஆபத்து. இந்த உவமை ஒரு பிராக்ருதக் கவியில் வருவதிலிருந்து அக்கால மக்களின் மருத்துவ அக்கறையை அறிய முடிகிறது .

“உன்னைப் பிரிந்திருப்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை மருத்துவனால் சிகிச்சை தரப்படாத நோய் போல, உறவினர் நடுவில் செல்வம் இல்லாதவன் போல, எதிரிகளிடம் மட்டும் செல்வச் செழிப்பைக் காண்பவன் போல தவிக்கிறேன் “-4-63 கவி வாமதேவ

வ்யாதிஹி இவ வைத்ய ரஹிதஹ தன ரஹிதஹ ஸ்வஜன மத்ய வாஸஹ இவ

ரிபுர் க்ருதி  தர்சனம் இவ துஸ்ஸஹனீயக தவ வியோகக –4-63 கவி வாமதேவ

இதில் உள்ள வியாதி, வைத்தியர் , தன, ஸ்வ ஜனம் , மத்ய , வாச, தரிசனம் என்பன எளிய சம்ஸ்க்ருத சொற்கள் ஆகும்

xxx

பிராகிருதம் என்றால் சம்ஸ்க்ருதத்தின் கொச்சை  வடிவம் ; ஆர்ய என்பதை அஜ்ஜ என்பர்; அது தமிழில் ஐயர் ஆனது.

தமிழிலும் பிராகிருதம் உண்டு. இன்றைய தமிழ் நாவல்கள் எல்லாம் தமிழ் ப்ராக்ருதம் ; நான் போய்விட்டு வருகிறேன் என்ற இலக்கிய நடையை நான் போய்ட்டு வாரேன் என்று சொல்லுவது தமிழ் பிராகிருதம் . பிராக்ருதத்தில் பலவகை உண்டு. இந்த நூல் மஹாராஷ்ட்ரா பகுதியில் பேசப்பட்ட கிளை மொழி.

TO BE CONTINUED…………………………………..

Tags- காதா சப்த சதி, பிராகிருத நூல் மருத்துவ, செய்திகள், சுவையான, சம்பவம் , சிகிச்சை ,நோய் , உயிர் காக்கும், மருந்து, 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: