
Post No. 11,245
Date uploaded in London – 7 SEPTEMBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
நேற்றைய கட்டுரையின் தொடர்ச்சி
காய்ச்சலும் நன்மை செய்தது !
ஒருவனுக்கு கடும் நோய். அந்த நோயாளியைப் பார்த்து ‘குசலம் விசாரிப்பதற்காக’/ சுகம்தானா என்று கேட்பதற்காக தொலை தூரத்திலிருந்து உற்றார், உறவினர் வருகின்றனர். அதில் ஒரு அழகியும் இருந்திருப்பாள் போலும். இதோ அவரது வாய் மொழியாக வந்த ‘காதா சப்த சதி’ கவிதை :
“ஓ காய்ச்சலே ! நீயும் நன்மைதான் செய்திருக்கிறாய். எளிதில் சந்திக்க இயலாத அன்பிற்கினியோரைத் தொலைவிலிருந்து கொண்டுவந்து விட்டாய் அவர்கள் என் உடல் நலத்தை விசாரிக்கிறார்கள்.இனி நீ என் உயிரையே எடுத்துச் சென்றாலும் உன்னைக் குற்றம்சாட்டமாட்டேன்.”
பிராக்ருதக் கவிதையின் சம்ஸ்க்ருத வடிவம் :
முகம் ப்ருச்சகம் ஜனம் துர்லபம் அபி தூராத் அஸ்மாகம் ஆனயன்
உபகாரக ஜ்வர ஜீவம் அபி நயன ந க்ருதாபராதகஹ அஸி
— கவி ஸ்வர்கவர்மண 1-50, காதா சப்த சதி
இந்தப் பாட்டிலுள்ள ஜுரம், ஜனம், துர்லபம், தூரம், உபகாரம், அபராதம் என்பன எளிய ஸம்ஸ்க்ருதச் சொற்கள் ஆகும் . அந்தக் காலத்தில் ஒருவர் நோய்வாய்ப்பட்டால் தொலைவிலிருந்துகூட உற்றார், உறவினர், சுற்றத்தார் நலம் விசாரிக்க வந்தனர் என்பது முக்கியமான செய்தி. இப்போது போல போக்குவரத்து வசதிகள், செய்தித் தொடர்பு வசதிகள் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இல்லை என்பதை நினைவில் வைத்துக்கொண்டு, கவிதையை வாசித்தால் அதன் ஆழம் புரியும்.
XXX
அடுத்த பாடலையும் காண்போம் 1-51
“என் நலத்தை விசாரிக்க வந்த , நல் மணம் வீசும் அன்பிற்குரியவரே !என்னுடைய வயிற்றுப் போக்குடன் கூடிய காய்சசல் கூடியதா, குறைந்ததா என்று விசாரிக்கத் தேவையே இல்லை. நோயினால் துர்மணம் வீசும் என்னைத் தொடாமல் இருந்தால் போதும்.”
ஆம ஜ்வரஹ மே மந்தஹ அதவா ந மந்தஹ ஜனஸ்ய கா சிந்தா
ஸுக ப்ருச்சக ஸுபக ஸுகந்த -கந்த மா கந்திதாம் ஸ்ப்ருச
–கவிஞர் காலன், 1-51, காதா சப்த சதி
இந்தச் செய்யுளில் உள்ள ஜ்வர, மந்தம், ஜன, சிந்தனை , ஸுகம் சுகந்தம் , கந்தம் ஸ்பரிசம்/தொடுதல் என்பன எல்லோரும் அறிந்த எளிய ஸம்ஸ்க்ருதச் சொற்கள் ஆகும்.
XXX
கள்ளக் காதலியின் தேள் கடி நாடகம்
ஒரு பெண்ணுக்கு, அந்த ஊர் டாக்டர் மேல் கள்ளக்காதல் ; அவள் தன் னைத் தேள் கடித்துவிட்டதாகவும் வலியால் துடி துடிப்பதாகவும் கைகளைச் சுற்றிச்சுற்றி நாடகம் ஆடுகிறாள் . அவளுடைய தோழிகளுக்கு முன்னரே காதல் விஷயம் தெரியும். அவர்களும் அந்த அழகிக்கு உதவுகின்றனர்
“ஒரு தேள் கடித்துவிட்டதாகச் சாக்குச் சொல்லி, அவளுடைய கணவன் கண் முன்னாலேயே , அந்தப் பெண்ணை மருத்துவனாகிய கள்ளக் காதலனின் வீட்டுக்கு அவளுக்கு நெருக்கமானவர்கள் அழைத்துச் செல்ல, அவளோ தன் கைகளை வலியால் துடிப்பது போலச் சுழற்றினாள்.” 3-36 , கவிஞன் மல்ல சேன
பதி புரதஹ ஏவ வ்ருச்சிக தஷ்டா இதி ஜார வைத்ய க்ருஹம்
நிபுண ஸகீ த்ருதா புஜ யுகலாந்தோ லினீ பாலா –
—மல்லசேன 3-36, காதா சப்த சதி
இந்தக் கவிதையில் உள்ள பதி /கணவன் , விருச்சிகம்/தேள் , வைத்ய, க்ருஹம், புஜம் ஸகீ /தோழி, கரம் /கை என்பன எல்லோரும் அறிந்த ஸம்ஸ்க்ருத பதங்கள் ஆகும்.
XXX
டாக்டர் இல்லாத ஊரில் வாழ்ந்த காதலி பற்றி கவலையுற்ற ஒருவர் பாடிய பாட்டு;
” நான் யாரிடம் போய்ச் சொல்லி அழுவது? மருத்துவரே இல்லாத இந்த பாழாய்ப்போன ஊரில் அந்த வீ ட்டுப் பெண்ணுக்கு எந்த ஆபத்தும் வரக்கூடும் என்பது விவசாயியின் மகனுக்கு கொஞ்சமேனும் தெரியவில்லையே !”
மந்தம் அபி ந ஜானாதி ஹலிக-நந்தனஹ இஹ ஹி தக்த க்ராமே
க்ருஹ பதி ஸுதா விபத்யதே அவைத்யகே கஸ்ய சாஸ்மஹ/ கதயாமஹ
– கவிஞர் பெயர் இல்லை; 6-100; காதா சப்த சதி
டாக்டர் இல்லாத கிராமங்கள் இப்போதும் உண்டு. அங்குள்ள மக்களின் ஆரோக்கிய கவலைகளை எதிரொலிக்கும் பாட்டு இது
இதிலுள்ள கிராம , வைத்ய ( அ +வைத்ய = மருத்துவர் இல்லாத), ஹலிக (கலப்பைக்காரன்=விவசாயி), க்ருஹ பதி =வீட்டுக்காரன், நந்தன /மகன் என்பன எளிய ஸம்ஸ்க்ருதச் சொற்கள்
XXX
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம்; ஒரு சொற் கேளீர் !
சேமமுறவேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்
என்று பாரதி பாடினார் ; இதே போல ஒரு பிராக்ருத மொழிப் புலவரும் பாடுகிறார். ஆனால் பாரதி பாடியது தமிழுக்காக ; காதா சப்த சதிப் புலவர் பாடுவதோ காதல் நோய்க்காக.
“இந்தப் பூவுலகில் செவிடர்களும் குருடர்களும்தான் அதிர்ஷ்டசாலிகள். ஏனெனில் குருடானால் மோசடிப் பேர்வழிகளின் செல்வச் செழிப்பினைக் காணும் தீமை இல்லை; செவிடானால் துரோகிகளின்/ தீயோரின் வார்த்தைகளைக் கேட்கும் கொடுமை இராது”
-7-95, பாடிய கவிஞர் பெயர் கிடைக்கவில்லை காதா சப்த சதி;
தன்யாஹா வதிராஹா அந்தாஹா தே ஏவ ஜீவந்தி மானுஷே லோகே
ந ச்ருண்வந்தி பிசுன வசனம் கலானாம் க்ருத்திம் ந ப்ரேக்ஷந்தே -7-95
இந்தப் பாட்டில் மானுஷ லோகம் /மானிடர் உலகம், ஜீவந்தி /வசிக்கின்றனர், அந்தகர்கள் , பிசுன /பிசினாரிப் பயல்கள் என்பன எளிதில் விளங்கும் சொற்களே
XXX
“எல்லோரும் அப்போது ஊமையராய் ஆகிவிட்டனர். காதல் நோய் விஷம் போல உடல் முழுதும் பரவிய பின்னர் இப்போது தடைபோடுகின்றனர்” – 7-96 பாடிய கவியின் பெயர் கிடைக்கவில்லை
இதானிம் வாரயதி ஜனஹ ததா மூகஹ இவ கதஹ
யதா விஷம் இவ ஜாதம் ஸர்வாங்க ப்ரபவத் ப்ரேம
7-96 , கவிஞர் ஸ்ரீ சுந்தர
இதில் ஜனங்கள், மூக /ஊமை, விஷம் , ஸர்வ அங்கம்/ உடல் முழுதும் பிரேம /காதல் என்பன எல்லோரும் அறிந்த சொற்கள்தான் . பிராகிருத வடிவக் கவிதைகளை ஸம்ஸ்க்ருதம் ஆக்கிப் படிக்கையில் எளிதாக இருக்கும்.
–சுபம்—
tags- பிராகிருத நூல் ,மருத்துவச் செய்திகள், காதா சப்த சதி