அறிவியல் அறிஞர் வாழ்வில்…4 (Post No.11,249)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,249

Date uploaded in London – –    9  SEPTEMBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அறிவியல் அறிஞர் வாழ்வில் …   4

ச.நாகராஜன்

4

தொண்டையில் தவளை!

பிரபல விஞ்ஞானி சர் ஐஸக் நியூட்டன் எழுதிய ‘தியானம்’ பற்றிய அவரது கைபிரதியை ஒருவர் ஏலத்தில் எடுத்தார். நியூட்டனின் இந்த கைபிரதியானது 1,08,083 டாலர்களுக்கு வாங்கப்பட்டது. ப்ளேக்கிற்கு பயந்து சுமார் இரண்டு வருடங்கள் அவர் தனிமையில் இருந்து   பின்னர் கேம்பிரிட்ஜுக்கு அவர் திரும்பி வந்தவுடன் எழுதியது இந்த நூல். 2020இல், கொரானா வந்தது அல்லவா, அது போன்ற காலத்தில் இது அவ்வளவாக உபயோகப்படக் கூடிய நூல் என்றாலும் கூட இதில் தொண்டை கரகரப்பையும் அதனால் ஏற்படும் தொற்று வியாதியையும் போக்க வல்ல ஒரு மருந்து பற்றி அவர் குறிப்பிட்டிருக்கிறார். தவளையையும் தவளையைப் பொடியாக்கிய தவளை பவுடரையும் கலந்த ஒரு கலவை மருந்து அது.

5

பயிற்சியாளர் கண்டுபிடித்த புதிய கிரகம்!

உல்ஃப் குக்கியர் (Wolf Cukier) என்ற 17 வயது இளைஞன் நியூயார்க் நகரைச் சேர்ந்தவன். அவன் மேரிலாண்டில் உள்ள நாஸாவில் காடார்ட் ஸ்பேஸ் ஃப்ளைட் சென்டரில் (Goddard Space Flight Center) கோடைகாலத்தில் கிடைக்கும் வேலை மூலம் பயிற்சியாளராகச் சேர்ந்தான்.

என்ன நடந்தது தெரியுமா? அவன் ஒரு புதிய கிரகத்தையே கண்டுபிடித்து விட்டான். அவன் வேலையில் சேர்ந்த சில நாட்களுக்குள் இதை அவன் சாதித்தது இன்னும் பெரிய் ஆச்சரியம். நாஸாவின் தரவுகளிலிருந்து நீண்ட நெடுந்தொலைவில் உள்ள சூரியன்களிடமிருந்து ஒரு ஒளி வருவதை அவன் பார்த்தான். இந்த ஒளி வரும் ஒரு ஒழுங்கு முறை (pattern) அவற்றிற்கு முன்னால் ஏதோ ஒன்று நகர்ந்து வருவதாக அவனுக்குத் தோன்றியது. அந்தப் பொருளை ஆராய்ந்து அவன் கண்டு பிடித்தது டிஓஐ 1338 பி (TOI 1338b) என்ற கிரகம் ஆகும். இது சனி கிரகத்தை விட  மிகப் பெரியது.

இது இருக்கும் இடம் பூமியிலிருந்து 13000 ஒளிவருட தூரம் ஆகும்.

ஒரு ஒளி வருடம் என்பது 5.88 ட்ரில்லியன் மைல்  (5.88×1012 mi). அல்லது 9.46 ட்ரில்லியன் கிலோ மீட்டர்  (9.46×1012 km)

ஆகும்.

 6

விண்வெளி வீரர் ஜான் யங் விண்வெளிக்குக் கொண்டு சென்ற சேண்ட்விச்!

அமெரிக்காவின் ஜெமினி திட்டம் உலகறிந்த ஒன்றாகும், சந்திரனை நோக்கி மனிதனின் பயணம் அமைய அந்தத் திட்டம் சாதித்த சாதனைகள் பல.

முதல் விண்வெளி நடையை அமெரிக்கர் செய்து காட்டியது அதில் தான். இரண்டு விண்கலங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்ததும் அதில் தான்! முதன் முதலாக கார்ன் பீஃப் சேண்ட்விச் (corned beef sandwich) விண்வெளிக்கு அனுப்பப்பட்டதும் அதில் தான்.

ஜெமினி-3இல் பயணப்பட்டார் விண்வெளி வீரர் ஜான் யங். ஒரு சின்ன சேண்ட்விச் துண்டை தனது பையில் போட்டுக் கொண்டார் – விண்ணில் செல்லும் போது கொறித்துப் பார்க்கலாமே என்று!

விண்கலம் சுற்றத் தொடங்கியது. ஜான் யங் ரொட்டித் துண்டை எடுத்தார். தனது பக்கத்தில் அமர்ந்திருந்த வீரரான கஸ் கிரிஸாமுக்கும் (Gus Grissom) ஒரு துண்டைக் கொடுத்தார். இலவசம், இலவசம் தானே! ஆவலுடன் அதை வாங்கிக் கொண்டார் கிரிஸாம். அதை தனது பையில் வைக்கப் போகும் போது விண்கலம் முழுவதும் ரொட்டித் துகள்கள் பறக்க ஆரம்பித்தன. எங்கு பார்த்தாலும் ரொட்டித் துகள்கள்!

விண்வெளி வீரர்களுக்கு நாஸா அளிக்கும் உணவு ஒரு விசேஷ வகையிலானது. அதில் மேலே ஒரு பூச்சு தடவப்பட்டிருக்கும். அந்த உணவு வகையிலிருந்து எந்த ஒரு துகளும் வெளியே வர முடியாது.

ஆனால் ரொட்டித் துகள்கள் வெளியில் வந்து விண்கலத்தில் சுற்ற ஆரம்பித்தால் அதில் உள்ள எலக்ட்ரிக் பேனல் எனப்படும் மின் தகடுகளின் பின்னால் படிந்து அவற்றைச் செயல் இழக்கச் செய்யும். விண்கலம் இனி பறந்த மாதிரி தான்! பெரும் விபத்து நேரும்; வீரர்கள் உயிரிழக்க நேரிடும்!

நாஸா இது போன்ற ‘விளையாட்டுக்களை’ எல்லாம் இனி விண்வெளி வீரர்கள் செய்யக் கூடாது என்று கடுமையான எச்சரிக்கையை விடுத்தது.

அமெரிக்க காங்கிரஸும் சும்மா இல்லை. பல லட்சம் டாலர்களை செலவழித்து விண்கலம் அமைத்து, பயிற்சி தந்து விண்வெளிக்கு வீரர்கள் அனுப்பப்படுகிறார்கள். இந்தப் பணம் அமெரிக்கர்கள் தரும் வரியின் மூலமாக வந்தது. ஆகவே இது போல் இனி நேரக் கூடாது என்று எச்சரிக்கையை விடுத்தது.

உடனே நாஸா அதிகாரிகள், “இது போல இனி மேல் ஒரு போதும் நடக்காது. உரிய நடவடிக்கைகளை எடுத்து விட்டோம். ரொட்டித் துகள்கள் இனி விண்கலத்தினுள் பறக்காது” என்று அறிக்கை விட்டனர்.

அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்!

xxx

புத்தக அறிமுகம் – 51

அறிவியல் துளிகள் – பாகம் – 11

பொருளடக்கம்

என்னுரை 

அத்தியாயங்கள்

261) பேய்களை ஆராய்ந்த விஞ்ஞானி ஹான்ஸ் பெண்டர்!

262) செவ்வாய் குடியிருப்பு வேண்டாம்! கிண்டலான பரபரப்புக் 

    கட்டுரை!

263) உருகும் பனிப்பாறைகள், உயரும் உஷ்ணநிலை – எச்சரிக்கும்

    விஞ்ஞானிகள்!

264) நாம் இனி ஒரே சமயத்தில் இரு இடங்களில் இருக்கலாம்!

265) வியாதிகளுக்கு எப்படி பெயர் சூட்டப்படுகிறது?

266) சந்திரனில் கடைசியாக நடந்த மனிதன்!

267) சூரிய கிரகணம் தந்த அறிவியல் வெற்றிகள்!

268) சூரிய கிரகணமும் மன்னர்கள் மரணமும்!

269) இரத்த சந்திரன் உலகை அழிப்பானா?

270) 2900 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய மருத்துவர் செய்த

     மூளை அறுவை சிகிச்சை!

271) 103வது இந்திய அறிவிய மாநாட்டில் சிவபெருமான்!

272) மன்னிக்க வேண்டுகிறேன்!

273) சந்திரனில் ஒரு கிராமம்!

274) அதிசய யோகி குர்ட்ஜியெஃப்! – 1

275) அதிசய யோகி குர்ட்ஜியெஃப்! – 2

276) அதிசய பாட்ச் மலர் மருந்துகள்

277) விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் செவ்வாய் சிறுவன்!

278) விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் அதிசய மனிதர்கள்!

279) உலகின் புரட்சிகரமான மாத்திரை!

280) சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்க இக்நோபல் பரிசு!

281) ஆட்டம் போடும் சீனாவின் விண்கலம் விழப்போகும்

    விபரீதம்!

282) குழந்தைகள் விளையாடும் வீடியோ மூளை விளையாட்டு

    ஆபத்தானதா?

283) உப்பு நீரால் ஓடும் கார்!

284) உங்கள் எண்ணங்களைத் திரையில் பார்க்கலாம்!

285) டர்பாவின் அதிசய ஆய்வுகள்!

286) டர்பா காண்பிக்கும் அடுத்த தலைமுறை!

முடிவுரை

*

நூலில் நான் வழங்கிய என்னுரை இது :

என்னுரை

இன்றைய நவீன உலகில் அறிவியல் பங்கை அனைவரும் அறிவோம்; உணர்வோம்

ஆகவே அறிவியலில் எதையெல்லாம் முக்கியமாக உணர்கிறோமோ அதையெல்லாம் முடிந்த அளவு அறிந்து கொள்ள வேண்டியது சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரது கடமையும் ஆகும்

இந்த வகையில் பாக்யா வார இதழில் அறிவியல் சம்பந்தமான நூற்றுக் கணக்கான கட்டுரைகளை எழுதி வரலானேன்.
எனது இனிய நண்பரும், மிகச் சிறந்த திரைப்பட கதாசிரியரும், நடிகரும், பாக்யா இதழின் ஆசியருமான திரு கே. பாக்யராஜ் அவர்களுக்கு அறிமுகமே தேவை இல்லை. அனைவர் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட பண்பாளர் அவர்.

அவர் தந்த ஊக்கத்தினால் பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் என்ற தொடரை ஆரம்பித்தேன்.

4-3-2011இல் ஆரம்பித்து எட்டு வருடங்களுக்கும் மேலாக வெற்றி நடை போடும் அறிவியல் துளிகளை வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாகம் பாகமாக வெளியிட முடிந்தது.

இந்த நூல் –  பதினொன்றாம் பாகம் – 261 முதல் 286 முடிய உள்ள 26 அத்தியாயங்களின் தொகுப்பாகும். இந்தக் கட்டுரைகள் அனைத்தும் 19/2/2016 முதல் 12/8/2016 முடிய வாரா வாரம் வெளியானவை.

ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனியே வெவ்வேறு அறிவியல் அம்சத்தை விளக்குவதால் இதை எந்தப் பகுதியிலிருந்தும் படிக்கலாம் என்பதே இந்த நூலின் தனிச் சிறப்பு.

இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

தொடராக வந்த போது என்னை ஊக்குவித்த பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு எனது அன்பு கலந்த நன்றி.

அறிவியல் கற்போம்; அறிவியலைப் பரப்புவோம்!

நன்றி

பங்களூர்                                          ச.நாகராஜன்

23-3-2022

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: