பாரதம் பற்றிய மஹாகவி பாரதியாரின் 4 பாடல்கள் : ஒரு பார்வை! (Post No.11,252)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,252

Date uploaded in London – –    10 SEPTEMBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

செப்டம்பர் 11 பாரதியார் நினைவு நாள். சிறப்புக் கட்டுரை!

பாரதம் பற்றிய மஹாகவி பாரதியாரின் 4 பாடல்கள் : ஒரு பார்வை!

ச.நாகராஜன்

புண்ணிய தேசமான பாரதத்தைப் பற்றி இனி சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்ற அளவிற்கு அனைத்தையும் 19 பாடல்களில் கூறி முடித்து விட்ட மஹாகவி பாரதியாரின் பெருமையை என்னென்று சொல்வது?

எளிய, கூரிய, ஆழ்ந்த, வீரிய, அர்த்தமுடைய, இனிய சொற்கள்.

அவை தருகின்ற சிந்தனையைத் தூண்டும் கருத்துக்களோ பல்லாயிரம்!

ஆம் இந்த சொற்களின் விளக்கத்தைப் பார்க்க புராண, இதிஹாஸம் தரும் விளக்கக் கருத்துக்கள் பல்லாயிரம்.

பாரதம் பற்றிய அவரது திரண்ட ஞானத்தை சுருக்கமாக இங்கு அவரது நான்கு பாடல்களில் பார்ப்போம்.

**

வந்தே மாதரம் பாடல்!

1) வந்தே மாதரம் என்று சொல்லி வணங்குவோம். வந்தே மாதரம் என்றால் எங்கள் மாநிலத் தாயை வணங்குவோம் என்பது பொருள்.

2) இந்த தேசத்தில் ஜென்மம் எய்துவது உயர்வு.

3) இங்கு ஜென்மம் எய்திய எவருடைய ஜாதியையும், மதத்தையும் பார்க்க மாட்டோம். வேதியரோ, ஈனப் பறையரோ, வேறு ஒருவரோ யாரானாலும் சரி, அனைவரும் சமமே.

4) இங்கு பிறந்தவர் அனைவரும் இந்தியரே. சீனத்தவரோ அல்லது தீங்கிழைக்கும் பிற தேசத்தவராகவோ மாட்டார்கள்.

5) ஒன்று பட்டு வாழ்வோம். இதை நன்கு தேர்வோம். இதுவே ஞானம். இது வந்து விட்டால் வேறெதுவும் வேண்டாம்.

6)  வாழ்வோ, தாழ்வோ தேசத்தில் உள்ள அனைவருக்கும் அது பொது. வீழ்ந்தால் அனைவரும் வீழ்வோம்; வாழ்ந்தால் அனைவரும் வாழ்வோம்.

7) அடிமைத் தொழில் செய்த, அந்த வெட்கப்படும் நாள்கள் கழிந்தன. அந்த அடிமைத் தோழிலை ‘தூ’ என்று தள்ளுவோம்.

ஜய வந்தே மாதரம் பாடல்

8) பாரதத்திற்கு வெற்றி! வெற்றி!. பத்து முறை வெற்றியைக் கூறுவோம் இப்படி:

ஜயஜய பாரத!

9) இது ஆரிய பூமி. நாரியர், நர சூரியர் இங்கு வாழ்கின்றனர். அவர் சொல்லும் வீரிய வாசகம் வந்தே மாதரம்.

10) நொந்தாலும் சரி, வெந்தாலும் சரி உவந்து நம் தேசத்தவர் சொல்வது வந்தே மாதரம்.

11) உயிரே போகட்டும் அல்லது வெற்றி உண்டாகட்டும். ஒன்றாகவே நிற்போம். வலி குன்றாமல் ஓதுவது வந்தே மாதரம் தான்!

நாட்டு வணக்கம் பாடல்

12) இந்த நாட்டிலே தான் எம் தந்தையரும் தாயரும் மகிழ்ந்து குலாவினர்.

13) அவர்களுக்கும் முந்தையராக இருந்த எம் முன்னோர் பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்த பழம் பெரும் நாடும் இதுவே தான்.

14) அவர்களது சிந்தையில் சிறப்பான பல்லாயிரம் எண்ணங்கள் தோன்றி வளர்ந்து சிறந்ததும் இந்த நாட்டிலே தான். இதை வணக்கம் செய்து கூறுவேன் வந்தே மாதரம் என்று!

15) அவர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து எங்களை வளர்த்து அருள் புரிந்தது இந்த நாடே.

16) எங்களைப் பெற்ற அன்னையர் தமது மழலைச் சொற்களால் மகிழ்வித்ததும் இந்த நாட்டிலே தான்!

17) அவர்கள் கன்னிப் பருவம் எய்தி நிலவினில் ஆடிக் களித்ததும் இந்த நாட்டிலே தான்!

18) பொன் போன்று மின்னும் அவர் உடல்கள். அந்த உடல் இன்புற விளையாடி நீரில் ஆடி, பின்னர் மகிழ்ச்சியுடன் இல்லம் ஏகுவது அவர் தம் வழக்கம். அது வழக்கமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது இந்த நாட்டிலே தான்!

19) மங்கையராய் அவர் மணம் முடித்து இல்லறத்தை நல்லறமாக வளர்த்ததும் இந்த நாட்டிலே தான்!

20) அவர் பெற்ற தங்கக் குழந்தைகளுக்கு இன்னமுதை ஊட்டி அவர்களைத் தழுவி அவர்கள் கொஞ்சியதும் இந்த நாட்டிலே தான்!

21) மக்கள் புகழ் ஓங்கி வளர, அது வளர்வதற்குக் காரணமாக இருந்த கோவில்கள் தேசமெங்கும் சூழ்ந்து இருந்தது இந்த நாட்டிலே தான்.

22) பின்னர் காலம் செல்லச் செல்ல அவர்கள் தம் உயிர் துறக்க அவரது உடல்களின் பூந்துகள் ஆர்ந்ததும் இந்த நாட்டிலே தான். இப்படிப்பட்ட அரும் நாட்டை வந்தே மாதரம் என்று சொல்லி வணங்க மாட்டேனா, என்ன?!

பாரத நாடு பாடல்

23) உலகில் ஏராளமான தேசங்கள் உண்டு. ஆனால் பாருக்குள்ளே நல்ல நாடு எது என்று கேட்டால் அது எங்கள் பாரத நாடு தான்!

24) ஞானத்திலே உயர் நாடு.

25) பர மோனத்திலே உயர் நாடு.

26) உயர் மானத்திலே உயர் நாடு.

27) அன்னதானத்திலே உயர் நாடு.

28) கானத்திலே உயர் நாடு,

29) அமுதாக நிறைந்த கவிதையிலே உயர் நாடு.

30) தீரத்திலே உயர் நாடு.

31) படை வீரத்திலே உயர் நாடு.

32) நெஞ்சில் ஈரத்திலும் உபகாரத்திலும் உயர் நாடு.

33) சாரத்திலே மிகு சாத்திரம் கண்டு தருவதிலே உயர் நாடு.

34) நன்மை செய்வதில் உயர் நாடு

35) உடல் வன்மையிலே உயர் நாடு

36) செல்வப் பன்மையிலே உயர் நாடு.

37) மறத் தன்மையிலே உயர் நாடு.

38) பொன் மயிலாகத் திகழ்பவர்கள் இந்த தேசத்தின் அழகிய மகளிர். அவர்களது கற்பு உயர்ந்தது. அந்தப் புகழினில் உயர் நாடு இது.

39) ஆக்கம் அதாவது செல்வத்திலே உயர் நாடு.

40) தொழில் ஊக்கம் அதிகம் கொண்டதில் உயர் நாடு.

41) புய வீக்கம் – தோள் வலிமையில் உயர் நாடு.

42) எந்த நோக்கத்தை எடுத்துக் கொண்டாலும் உயர்ந்த நோக்கம் மட்டுமே உண்டு இங்கு. அந்த உயர் நோக்கத்தில் உயர் நாடு.

43) இங்குள்ள மல்லர்கள் அனைவரும் தேசத்தைக் காக்க திறமும் ஆர்வமும் கொண்டவர்கள்.

அவர்கள் கடல் போல இங்கு உள்ளனர். அந்த சேனைக் கடலில் உயர் நாடு.

44) வண்மையிலே உயர் நாடு.

45) உளத் திண்மையிலே உயர் நாடு.

46) மனத் தண்மையிலே குளிர்ந்த உள்ளத்திலே உயர் நாடு.

47) நுட்பமான மதி கொண்டவர்கள் இங்குள்ளோர். அந்த மதி நுண்மையிலே உயர் நாடு.

48) ஸத்தியமே இந்த நாட்டோருக்கு உயிர். அந்த உண்மையிலே தவறாத புலவர் உணர்வினிலே உயர் நாடு.

49) யாகத்திலே உயர் நாடு

50) தவத்தோர் உள்ள நாடு. ஆக தவ வேகத்திலே உயர் நாடு.

51) தனி யோகத்திலே உயர் நாடு.

52) போகங்களைக் கொண்டு சிறக்க வாழ்பவர்கள் பாரத மக்கள். பல போகத்திலே உயர் நாடு.

53) ஆகத்திலே உயர் நாடு

54) தெய்வ பக்தியே இங்குள்ளோரின் உயிர் மூச்சு. தெய்வ பக்தி கொண்டார் தம் அருளினிலே உயர் நாடு.

55) இயற்கை வளம் அற்புதமாகக் கொண்ட நாடு இது. ஆற்றினிலே,

சுனை ஊற்றினிலே, தென்றல் காற்றினிலே, மலைப் பேற்றினிலே, ஏற்றினிலே, பயன் தந்திடும் காலி இனத்தினிலே உயர் நாடு.

56) இங்குள்ள இயற்கை வளத்தின் சிறப்பே சிறப்பு.

தோட்டத்திலே, மரக் கூட்டத்திலே, கனி ஈட்டத்திலே, பயிர் ஊட்டத்திலே, தேட்டத்திலே அடங்காத நதியின் சிறப்பினிலே உயர் நாடு.

***

19 பாடல்களில் நான்கு பாடல்களின் கருத்துக்கள் இவை.

தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்ற நான்கு பேறுகளையும் தரும் உயர் நாடு என்பதை எப்படிப்பட்ட சொற்களால் விவரித்து விட்டார் மஹாகவி!

அற்புதம், அற்புதமே! இன்னும் இருக்கின்றன 15 பாடல்கள்! அவற்றையும் படித்தால் மெய் சிலிர்ப்போம். உத்வேகம் பெறுவோம்.

அன்னையை எந்த நாளும் போற்றுவோம்.

வாழிய பாரதம்! வாழ்க மஹாகவி பாரதியாரின் திரு நாமம்!

**

புத்தக அறிமுகம் – 52

அறிவியல் துளிகள் – பாகம் – 12

பொருளடக்கம்

என்னுரை

அத்தியாயங்கள்

287. எவரெஸ்ட் வெற்றியும் உயிர் தியாகங்களும்!

288. விண்வெளியில் ஒரு சிறைச்சாலை?!

289. விண்வெளியிலிருந்து விழுந்த வீரர்கள்!

290. அற்புத அறிவியல் எழுத்தாளர் ஐஸக் அஸிமாவ்! – 1

291. அற்புத அறிவியல் எழுத்தாளர் ஐஸக் அஸிமாவ்! – 2

292. ப்ளாக் ஹோல் மர்மம்!

293.உயிரின் மர்மம் துலங்க ஒரு விண்வெளிப் பயணம்!

294. விண்வெளி பேனா பற்றிய ஜோக்கும் உண்மையும்!

295. 2016இல் இக்நோபல் பரிசு பெற்ற மேதைகள்! – 1

296. 2016இல் இக்நோபல் பரிசு பெற்ற மேதைகள்! – 2

297. 2016இல் இக்நோபல் பரிசு பெற்ற மேதைகள்! – 3

298. அறிவியலின் ‘ஹார்ட் ப்ராப்ளம்’!

299. சிறந்த படைப்பாளியாக ஒரு அருமையான கண்டுபிடிப்பு!

300. அற்ப சண்டைகளை விட ஆகாயத்தைப் பாருங்கள்!

301. ஒவ்வொரு மனிதனின் கடைசி விநாடி!

302. கடைசியில் என்ன சொன்னார்கள்?!

303.விண்வெளியில் ‘மூழ்க’ இருந்த வீரர்!

304. 5000 வருடங்களுக்கு முந்தைய எகிப்திய நகரத்தின் கண்டுபிடிப்பு!

305. மொழியின் வலிமை தாழ்த்தப்பட்டவரை உயர்த்துவதற்கே! நோபல் பரிசு உரை!

306. புத்துலகம் காண விழையும் வித்தகர்கள் – 1

307.புத்துலகம் காண விழையும் வித்தகர்கள் – 2

308. புத்துலகம் காண விழையும் வித்தகர்கள் – 3

309. மர்மக் கதை எழுத்தாளர்கள் நன்றி சொல்ல வேண்டிய விஞ்ஞானி!

310 சாஸ்தா மலையின் அடியில் மர்ம சித்தர்கள் வசிக்கிறார்களா?

311. ஜப்பானில் கற்கலாம்! வா!

312. கடவுள் நம்பிக்கை வளர்கிறதா, தேய்கிறதா?

முடிவுரை

*

நூலில் நான் வழங்கிய என்னுரை இது :

என்னுரை

இன்றைய நவீன உலகில் அறிவியல் பங்கை அனைவரும் அறிவோம்; உணர்வோம்

ஆகவே அறிவியலில் எதையெல்லாம் முக்கியமாக உணர்கிறோமோ அதையெல்லாம் முடிந்த அளவு அறிந்து கொள்ள வேண்டியது சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரது கடமையும் ஆகும்.

இந்த வகையில் பாக்யா வார இதழில் அறிவியல் சம்பந்தமான நூற்றுக் கணக்கான கட்டுரைகளை எழுதி வரலானேன்.

எனது இனிய நண்பரும், மிகச் சிறந்த திரைப்பட கதாசிரியரும், நடிகரும், பாக்யா இதழின் ஆசியருமான திரு கே. பாக்யராஜ் அவர்களுக்கு அறிமுகமே தேவை இல்லை. அனைவர் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட பண்பாளர் அவர்.

அவர் தந்த ஊக்கத்தினால் பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் என்ற தொடரை ஆரம்பித்தேன்.

4-3-2011இல் ஆரம்பித்து எட்டு வருடங்களுக்கும் மேலாக வெற்றி நடை போடும் அறிவியல் துளிகளை வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாகம் பாகமாக வெளியிட முடிந்தது.

இந்த நூல் – பனிரெண்டாம் பாகம் – 287 முதல் 312 முடிய உள்ள 26 அத்தியாயங்களின் தொகுப்பாகும். இந்தக் கட்டுரைகள் அனைத்தும் 

19/8/2016 முதல் 10/2/2017 முடிய வாரா வாரம் வெளியானவை.

ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனியே வெவ்வேறு அறிவியல் அம்சத்தை விளக்குவதால் இதை எந்தப் பகுதியிலிருந்தும் படிக்கலாம் என்பதே இந்த நூலின் தனிச் சிறப்பு.

இந்தப் புத்தகத்தை வெளியிட முன்வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

தொடராக வந்தபோது என்னை ஊக்குவித்த பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு எனது அன்பு கலந்த நன்றி.

அறிவியல் கற்போம்; அறிவியலைப் பரப்புவோம்!

நன்றி

பங்களூர்                                           ச.நாகராஜன்

31-3-2022

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: