
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,261
Date uploaded in London – – 13 SEPTEMBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அறிவியல் அறிஞர் வாழ்வில் … 5
ச.நாகராஜன்
7
பிரபல விஞ்ஞானியான ஜான் வான் நியூமேன் பற்றிய பிரபலமான துணுக்கு இது.
நியூமேனிடம் வந்த ஒருவர் ஒரு கணிதப் புதிரைக் கூறி அதற்கு உரிய விடையைத் தருமாறு வேண்டினார். தான் கூறுவது மிகவும் கடினமான புதிர் என்று நினைத்த அவர் நியூமேன் சற்றுத் திணறிப் போவார் என்று நினைத்தார்.
சிக்கலான கணிதப் புதிர் இது தான்.
தெற்கு திசையிலிருந்தும் வடக்கு திசையிலிருந்தும் இரு சைக்கிள் ஓட்டும் வீரர்கள் தங்கள் சைக்கிளை எதிரெதிராக ஓட்ட ஆரம்பித்தனர். அவர்களுக்கு இடைப்பட்டிருந்த தூரம் இருபது மைல்கள். அவர்களது வேகம் மணிக்கு10 மைலாக இருந்தது. அதே சமயம் ஒரு ஈ மணிக்கு 15 மைல் வேகத்தில் தெற்கு நோக்கிக் கிளம்பிய சைக்கிளின் முன் சக்கரத்திலிருந்து வடக்கு நோக்கி பறக்க ஆரம்பித்தது. பின்னர் அது வடக்கு நோக்கி வந்த சைக்கிளுக்குத் திரும்பியது. இப்படி மாற்றி மாற்றி அது பறந்து கொண்டே இருந்தது – இரண்டு சைக்கிள் வீரர்களும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் வரை.
ஈ பறந்த மொத்த தூரம் எவ்வளவு?
இது தான் கேள்வி.
சாதாரணமாக இதை எப்படி கணக்கிட முடியும். முதலில் ஈ வடக்கு நோக்கி பறந்த தூரம், பின்னர் தெற்கு நோக்கி பறந்த தூரம் பின்னர் மூன்றாவதாக அது பறந்த தூரம் என்று இப்படி மாறி மாறி, இந்த இன்ஃபைனைட் சீரீஸைப் போட்டு கணக்கைச் செய்து முடிவைக் கண்டுபிடிக்க வேண்டும்.
இன்னும் ஒரு சுலபமான வழியிலும் இந்தக் கணக்கைப் போட்டு முடித்து விடலாம். இரண்டு சைக்கிள் வீரர்களும் சரியாகக் கிளம்பிய ஒரு மணி நேரத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்து விடுவார்கள். ஆகவே ஈக்கு ஒரு மணி நேரம் மட்டுமே பறக்க முடியும். ஆகவே விடை 15 மைல்.
நியூமேனிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்ட போது சற்றும் தயங்காமல் ஒரு வினாடியில் 15 மைல் என்று பதில் கூறி விட்டார்.
கேள்வி கேட்டவருக்கு மிகவும் ஏமாற்றமாகப் போய் விட்டது. பேந்தப் பேந்த முழித்த அவர், அசடு வழிந்தவாறே, “இது உங்களுக்கு முன்னமேயே தெரிந்த கணக்குப் புதிர் தானே! அது தான் உடனே விடை கூறி விட்டீர்கள்” என்றார்.
ஆனால் உடனேயே நியூமேன், “அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. இதை இப்போது தான் கேட்கிறேன். இன்ஃபைனட் சீரீஸின் கூட்டுத்தொகையைப் போட்டுத் தான் சொன்னேன்” என்றார். (Von Neumann tolda : “all I did was sum the infinite series”).*
8

பிரபல விஞ்ஞானியும் அறிவியல் புனைகதை எழுத்தாளருமான ஐஸக் அஸிமாவ் (Isaac Asimov) 1947ஆம் ஆண்டு பிஹெச் டி பெற பயோகெமிஸ்ட்ரியில் ஆய்வை மேற்கொண்டிருந்தார். அப்போது அவரை அஸ்டவுண்டிங் ஸயின்ஸ் ஃபிக்ஷன் பத்திரிகைக்கு ஒரு கதையைத் தருமாறு ஜான் கேம்ப்பெல் கேட்டார். (John Campbell at Astounding Scicence Fiction Magazine).
அதற்கு ஒத்துக் கொண்ட அஸிமாவ் ஒரு சிறுகதையை எழுதினார். அந்தக் கதைக்குப் பெயர் ‘தி எண்டாக்ரானிக் ப்ராபர்டீஸ் ஆஃப் ரீசப்லிமேடட் தியோடிமோலின்”. (“The Endochronic Properties of Resublimated Thiotimoline”).
கற்பனையாக ஒரு கூட்டுப்பொருளை (fictitious compound) கதைக்காக உருவாக்கிய அஸிமாவ், அதில் நீரைச் சேர்க்கும் முன்னரே அது கரைந்து விடுவதாக கதைக்காக “அள்ளி” விட்டிருந்தார். கதையில் அந்தக் கூட்டுப்பொருளுக்கான வரைபடங்கள், கிராப், பொய்யான புள்ளி விவரங்கள், அந்தப் புள்ளி விவரங்களை அதிகாரபூர்வமாக தருவதாக பொய்யான பல விஞ்ஞான பத்திரிகைகளின் பெயர்கள் ஆகியவற்றை எல்லாம் குறிப்பிட்டிருந்தார்.
அவர் கேம்ப்பெல்லிடம்,” கதையைக் கொடுத்து விட்டேன். ஆனால் இதில் என் பெயரைப் போட வேண்டாம்” என்று கண்டிப்பாகக் கூறி இருந்தார்.
ஏனெனில் அவரது தொழிலை அவரே கிண்டல் செய்வது போல உள்ள ஒரு கதையை அவர் எழுதியதாகத் தெரிந்தால் அது அவரது ஆய்வுக்கு பெரிய முட்டுக்கட்டையாக இருக்கும் என்பதோடு பிஹெச்டி கிடைப்பதும் கஷ்டமாகி விடும் என்பது அவரது எண்ணம்.
கேம்ப்பெல் அதற்கு ஒத்துக் கொண்டார். சில மாதங்கள் கழித்து பத்திரிகையில் அவரது கதை வெளியானது. ஆனால் அதில் அவர் பெயரும் வெளியாகிவிட்டது.
கேம்ப்பெல் அவரது பெயரைப் போடக்கூடாது என்பதை மறந்தே விட்டார்.
அஸிமாவ் தன் ஆய்வைச் சமர்ப்பிக்க வேண்டிய நாளும் வந்தது. அதை பரிசோதிக்கும் ஆய்வாளர்கள் முன் அவர் வந்து உட்கார்ந்தார்.
பல கேள்விகள் அவர் ஆய்வு சம்பந்தமாகக் கேட்கப்பட்டன. அப்படி கேள்வி கேட்ட பரிசோதகர்களில் ஒருவர் புன்சிரிப்புடன் தியோடிமோலின் பற்றிய ஒரு கேள்வியைக் கேட்டார்.
அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
நல்ல வேளையாக அவருக்கு பிஹெச்டி பட்டம் கிடைத்து விட்டது. அவரது கதையை நகைச்சுவையாக மட்டுமே பரிசோதகர்கள் எடுத்துக் கொண்டதால் அவர் பிழைத்தார்.
*
tags- ஐஸக் அஸிமாவ், ஜான் வான் நியூமேன்
புத்தக அறிமுகம் – 55
அறிவியல் துளிகள் – பாகம் – 15

பொருளடக்கம்
366. அரை நூற்றாண்டு விண்வெளிச் சாதனைகள் -ஒரு அரிய தொகுப்பு! – 1
367. அரை நூற்றாண்டு விண்வெளிச் சாதனைகள் -ஒரு அரிய தொகுப்பு! – 2
368. அரை நூற்றாண்டு விண்வெளிச் சாதனைகள் -ஒரு அரிய தொகுப்பு! – 3
369. அட்லாண்டிஸ் மகா மர்மம் – அதிசயத் தகவல்கள்! – 1
370. அட்லாண்டிஸ் மகா மர்மம் – அதிசயத் தகவல்கள்! – 2
371. அட்லாண்டிஸ் மகா மர்மம் – அதிசயத் தகவல்கள்! – 3
372. விண்வெளி டிராமா – சீனாவின் ஸ்கை லேப் பூமியில் விழப் போகிறது!
373.மௌன நீரூற்றால் புரட்சி செய்த பெண்மணி!– 1
374.மௌன நீரூற்றால் புரட்சி செய்த பெண்மணி – 2
375. இந்தியாவில் அமைக்கப்படும் உலகின் உயரமான சிலை!
376. கண் திருஷ்டியும் அறிவியலும்! – 1
377. கண் திருஷ்டியும் அறிவியலும்! – 2
378. கண் திருஷ்டியும் அறிவியலும்! – 3
379. காலத்தை உறைய வைக்கும் அதிசய அறிவியல் புகைப்பட நிபுணர்! – 1
380. காலத்தை உறைய வைக்கும் அதிசய அறிவியல் புகைப்பட நிபுணர்! – 2
381.காலத்தை உறைய வைக்கும் அதிசய அறிவியல் புகைப்பட நிபுணர்! – 3
382. இகிகை – நீண்ட நாள் வாழ ஜப்பானிய ரகசியம்! – 1
383. இகிகை – நீண்ட நாள் வாழ ஜப்பானிய ரகசியம்! – 2
384. செயற்கை அறிவுடன் கூடிய நவீன சாதனங்கள் மனித குல எதிரிகளா? – 1
385. செயற்கை அறிவுடன் கூடிய நவீன சாதனங்கள் மனித குல எதிரிகளா? – 2
386. வாழ்வில் முன்னேற ஒரு முதலைக் கதை – 1
387. வாழ்வில் முன்னேற ஒரு முதலைக் கதை – 2
388. விஞ்ஞான உலகின் அபாயகரமான ஆயுதங்கள் – 1
389.விஞ்ஞான உலகின் அபாயகரமான ஆயுதங்கள் – 2
390. எழுதினால் மனோவியாதி போகும்!
391. ஆச்சரியம் ஆனால் உண்மை; நீங்கள் நினைப்பதைக் “கேட்கலாம்”!
*
நூலில் நான் வழங்கிய என்னுரை இது :
என்னுரை
இன்றைய நவீன உலகில் அறிவியலின் பங்கை அனைவரும் அறிவோம்; உணர்வோம்.
ஆகவே அறிவியலில் எதையெல்லாம் முக்கியமாக உணர்கிறோமோ அதையெல்லாம் முடிந்த அளவு அறிந்து கொள்ள வேண்டியது சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரது கடமையும் ஆகும்
இந்த வகையில் பாக்யா வார இதழில் அறிவியல் சம்பந்தமான நூற்றுக் கணக்கான கட்டுரைகளை எழுதி வரலானேன்.
எனது இனிய நண்பரும், மிகச் சிறந்த திரைப்பட கதாசிரியரும், நடிகரும், பாக்யா இதழின் ஆசியருமான திரு கே. பாக்யராஜ் அவர்களுக்கு அறிமுகமே தேவை இல்லை. அனைவர் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட பண்பாளர் அவர்.
அவர் தந்த ஊக்கத்தினால் பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் என்ற தொடரை ஆரம்பித்தேன்.
4-3-2011இல் ஆரம்பித்து எட்டு வருடங்களுக்கும் மேலாக வெற்றி நடை போடும் அறிவியல் துளிகளை வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாகம் பாகமாக வெளியிட முடிந்தது.
இந்த நூல் – பதினைந்தாம் பாகம் – எட்டாம் ஆண்டில் முதல் 26 வாரங்கள் வெளியான 366 முதல் 391 முடிய உள்ள 26 அத்தியாயங்களின் தொகுப்பாகும்..
ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனியே வெவ்வேறு அறிவியல் அம்சத்தை விளக்குவதால் இதை எந்தப் பகுதியிலிருந்தும் படிக்கலாம் என்பதே இந்த நூலின் தனிச் சிறப்பு.
இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.
தொடராக வந்த போது என்னை ஊக்குவித்த பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு எனது அன்பு கலந்த நன்றி.
அறிவியல் கற்போம்; அறிவியலைப் பரப்புவோம்!
நன்றி
பங்களூர் ச.நாகராஜன்
14-5-2022
*
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்
தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852
**