
Post No. 11,264
Date uploaded in London – – 14 SEPTEMBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அறிவியல் அறிஞர் வாழ்வில் … 6
ச.நாகராஜன்
9
பெரு வெடிப்பும் கிரேக்க எழுத்துக்களும்!
ஜார்ஜ் காமோவ் (George Gamov – பிறப்பு 4-3-1904 மறைவு 19-8-1968) ஒரு ரஷிய விஞ்ஞானி. இயற்பியலிலும் பிரபஞ்ச இயலிலும் வல்லுநர். பின்னால் அவர் அமெரிக்காவில் சென்று வசித்தார். அவருடைய மனைவியை ரோ (Rho) என்ற செல்லப் பெயரிட்டு அவர் அழைத்தார். மனைவியின் பெயர் லியுபாவ் வோக்மின்ட்ஸெவா (Lyubov Vokhmintseva). ரோ என்பது கிரேக்க அகர வரிசையில் 17வது எழுத்து.
அவர் பிக்-பேங் தியரியில் பெரிதும் ஆர்வமுள்ளவர்.
அவரது மாணவரின் பெயர் ரால்ப் ஆல்பெர் (Ralph Alpher).
தனது மாணவருடன் சேர்ந்து அவர் பிக் பேங் என்னும் பெருவெடிப்பின் போது அதன் தோற்றம் பற்றிய ஒரு ஆய்வுப் பேப்பரைத் தயாரித்தார்.
தனது ஆய்வுப் பேப்பரில் இயற்பியல் விஞ்ஞானியான ஹான்ஸ் பெதே (Hans Bethe)யின் பெயரையும் அவர் சேர்த்தார்.
தனக்கு எப்போதுமே உள்ள நகைச்சுவை உணர்விற்கேற்ப ஆய்வுப் பேப்பரை தயார் செய்தவர்களின் பெயர்களாக ஆல்பா, பீடா, காமா (Alpha, Beta and Gamma) என்ற கிரேக்க எழுத்துக்களை நினைவு படுத்தும் விதமாக ஆல்பர், பெதே, காமா (Alper, Bethe, Gamow) என்று குறிப்பிட்டார்.
பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்பதை விளக்கும் ஆய்வுப் பேப்பரில் கிரேக்க முதல் எழுத்துக்களான மூன்றைக் குறிப்பிட்டு ஒரு சொல் விளையாட்டையும் செய்து மகிழ்ந்தார்.
10
ஓவியராக விரும்பிய மூளை இயல் விஞ்ஞானி!
{(சாண்டியாகோ ரொமன் இ கஜல் (1852-1934)}
ஸ்பெயினைச் சேர்ந்த விஞ்ஞானியான சாண்டியாகோ ரொமன் இ கஜல் (1852-1934) நவீன நியூரோ ஸயின்ஸ் எனப்படும் மூளை இயலின் தந்தை என்று கூறப்படுபவர். 1906ஆம் ஆண்டு அவர் நோபல் பரிசை நரம்பு மண்டல அமைப்பு ஆராய்ச்சிக்காகப் பெற்றார். மூளையானது தனி செல் அமைப்புகளைக் கொண்டதாக உள்ளது என்பதை அவர் தான் முதன்முதலாகக் கண்டுபிடித்தார். அவரது கண்டுபிடிப்புகளே மூளை எப்படி இயங்குகிறது என்பதை அறிந்து கொள்ள உதவியது.
அவருக்கு அறிவியலை விட கலையில் தான் மோகம் இருந்தது. அவரது தந்தையார் அவரை மருத்துவம் படிக்க ஊக்குவித்தார். ஆனால் அவருக்கோ ஓவியம் வரைவதில் தான் ஆர்வம் அதிகமாக இருந்தது. என்றாலும் மருத்துவத்தில் சேர்ந்தார். அறிவியல் அறிஞர் ஆனார். என்றாலும் கூட தனது ஓவிய ஆர்வத்தை அவர் விட்டு விடவில்லை. தனது பணிக்காலம் முழுவதும் ஆயிரக்கணக்கான மூளை பற்றிய படங்களை நுண்ணிய விவரத்துடன் தான் மைக்ரோஸ்கோப்பில் பார்த்த வண்ணம் வரைந்து தள்ளினார். இன்று மூளை இயலில் மூளை பற்றி அறிந்து கொள்ள அவை மிகவும் உதவுகின்றன. நரம்பு மண்டலம் மற்றும் நியூரான் பற்றிய அவரது படங்கள் பெரிய வியன்னா செஷஸன் என்ற கலை இயக்கம் சித்தரிக்கும் மரம் போல பரந்து விரிந்து பல்வேறு கிளைகளுடன் கூடி வரையப்பட்டிருக்கிறது.
***
புத்தக அறிமுகம் – 57
அறிவியல் துளிகள் – பாகம் – 17

பொருளடக்கம்
417. 2018ஆம் ஆண்டின் சில விநோதமான கண்டுபிடிப்புகள்! – 1
418. 2018ஆம் ஆண்டின் சில விநோதமான கண்டுபிடிப்புகள்! – 2
419. கனவு ஆராய்ச்சி பற்றிய விஞ்ஞானிகளின் கனவியல் பட்டறை!
421. அதி நவீன F 16 விமானத்தை எதிர்கொண்ட இந்திய விமானப் படை!
423. உலகின் அதி வித்தியாசமான வல்லுநர்கள்! – 1
424. உலகின் அதி வித்தியாசமான வல்லுநர்கள்! – 2
425. உலகின் அதி வித்தியாசமான வல்லுநர்கள்! – 3
426. உலகின் அதி வித்தியாசமான வல்லுநர்கள்! – 4
427. உலகின் அதி வித்தியாசமான வல்லுநர்கள்! – 5
428. உலகின் அதி வித்தியாசமான வல்லுநர்கள்! – 6
429. நீங்கள் பேசினால் போதும், உங்கள் முகத்தை வரைந்து விடலாம்!
430. உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி பெருக கான் மாரி வழிமுறை!
431. சந்தோஷம் தரும் வாழ்க்கை அமைப்போம், வாரீர்!
434. வேண்டியதைத் திறம்படச் செய்து முடிக்க கெய்ஸன் மற்றும் ஜிடிடி வழிமுறை!
435. நோபல் பரிசை வென்றார் இந்தியர் அபிஜித் விநாயக் பானர்ஜி!
436. விண்வெளியில் நடை பயிலும் வீராங்கனைகள்!
437. செஸ் விளையாட்டு உடலின் ஆற்றலை உறிஞ்சுகிறதா? பரபரப்பு ஆய்வு!
438. உலக மக்களின் வாழ்க்கையையே மாற்றப் போகும் ஹோலோ லென்ஸ்!
439. 2019ஆம் ஆண்டின் அதிசய புதிய கண்டுபிடிப்புகள்!
440. மூட நம்பிக்கையை ஒழிக்க வழி வகுத்த கெப்ளர்!
441.ஐஸக் நியூட்டன் பற்றிய புதிய செய்திகள்!
442. கடந்த பத்தாண்டுகளின் ‘டாப் டென்’ கண்டுபிடிப்புகள்!
*
நூலில் நான் வழங்கிய என்னுரை இது :
என்னுரை
இன்றைய நவீன உலகில் அறிவியலின் பங்கை அனைவரும் அறிவோம்; உணர்வோம்.
ஆகவே அறிவியலில் எதையெல்லாம் முக்கியமாக உணர்கிறோமோ அதையெல்லாம் முடிந்த அளவு அறிந்து கொள்ள வேண்டியது சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரது கடமையும் ஆகும்
இந்த வகையில் பாக்யா வார இதழில் அறிவியல் சம்பந்தமான நூற்றுக் கணக்கான கட்டுரைகளை எழுதி வரலானேன்.
எனது இனிய நண்பரும், மிகச் சிறந்த திரைப்பட கதாசிரியரும், நடிகரும், பாக்யா இதழின் ஆசியருமான திரு கே. பாக்யராஜ் அவர்களுக்கு அறிமுகமே தேவை இல்லை. அனைவர் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட பண்பாளர் அவர்.
அவர் தந்த ஊக்கத்தினால் பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் என்ற தொடரை ஆரம்பித்தேன்.
4-3-2011இல் ஆரம்பித்து 16-2-2020 முடிய ஒன்பது ஆண்டுகள் இந்தத் தொடர் வெளி வந்தது. துரதிர்ஷ்டவசமாக கோவிட் பெருந்தொற்று நோய் உலகெங்கும் பரவவே பாக்யா இதழ் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. இடையில் வார இதழாக மலர்ந்து வந்த பாக்யா இதழ் 2019, ஏப்ரல் முதல் மாதம் இருமுறை மலர ஆரம்பித்தது.
வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க அறிவியல் துளிகளின் அனைத்து அத்தியாயங்களையும் பதினேழு பாகங்களில் வெளியிட முடிந்தது.
இந்த நூல் – பதினேழாம் பாகம் – ஒன்பதாம் ஆண்டில் வெளியான – 417 முதல் 442 முடிய உள்ள – 26 அத்தியாயங்களின் தொகுப்பாகும்.
ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனியே வெவ்வேறு அறிவியல் அம்சத்தை விளக்குவதால் இதை எந்தப் பகுதியிலிருந்தும் படிக்கலாம் என்பதே இந்த நூலின் தனிச் சிறப்பு.
இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.
தொடராக வந்த போது என்னை ஊக்குவித்த பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு எனது அன்பு கலந்த நன்றி.
அறிவியல் கற்போம்; அறிவியலைப் பரப்புவோம்!
நன்றி
பங்களூர் ச.நாகராஜன்
18-5-2022