பிராக்ருத மொழியின் ஐம்பெரும் காப்பியங்கள் (Post No.11,265)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,265

Date uploaded in London – 14 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

தமிழிலும் ஸம்ஸ்க்ருதத்திலும் உள்ளது போல பிராக்ருத மொழியிலும் 5 பெரிய காவியங்கள் உண்டு.

தமிழ் மொழியில் உள்ள 5 பெரிய காப்பியங்கள்

1.ஐம்பெரும் காப்பியங்கள்

சிலப்பதிகாரம் (எழுதியவர் – இளங்கோ அடிகள்)

மணிமேகலை – சீத்தலைச் சாத்தனார்

சீவக சிந்தாமணி – திருத்தக்க தேவர்

குண்டலகேசி – நாகுதத்தனார்

வளையாபதி – பெயர் கிடைக்கவில்லை

(கடைசி இரண்டு நூல்களும் முழுமையாகக் கிடைக்கவில்லை.)

2.ஐஞ்சிறு காப்பியங்கள்

சூளாமணி –

நீலகேசி – தோலாமொழித் தேவர்

உதயணகுமார காவியம்

நாககுமார காவியம்

யசோதா காவியம்

(நான்கு நூல்களை யாத்தவர்களின் பெயர்களை தமிழ்கூறு நல்லுலகம் மறந்துவிட்டது)

ஸம்ஸ்க்ருத மொழியில் உள்ள  ஐம்பெரும் காப்பியங்கள்

3.பஞ்ச மஹா காவியங்கள் (சம்ஸ்கிருதம்)

குமார சம்பவம்– காளிதாசன்

ரகுவம்சம் – காளிதாசன்

கிராதார்ஜுனீயம் – பாரவி

சிசுபாலவதம் – மாக

நைஷதசரிதம் – ஸ்ரீஹர்ச

xxx

4.பிராக்ருத மொழியின் ஐம்பெரும் காப்பியங்கள்

சேதுபந்த – புலவர் ப்ரவரசேன

ராவண விஜய –  நமக்குக் கிடைக்கவில்லை

ஹரி விஜய – நமக்குக் கிடைக்கவில்லை ; புலவர் சர்வசேன

கெளட வஹோ – புலவர் வாக்பதி

மதுமத விஜய -நமக்குக் கிடைக்கவில்லை

கிடைக்காத நூல்களிலிருந்து நமக்குப்  பல மேற்கோள்கள் மட்டும் கிடைத்துள்ளன.

ஹரி விஜய

நூல்கள் கிடைக்காவிடினும் பிற்கால உரைகார்கள், நூலாசிரியர்கள் வாயிலாக நமக்குப் பல விஷயங்கள் தெரிகின்றன. ஹரி விஜய என்னும் காவியம் ஸ்கந்தக என்னும் யாப்பில் அமைந்தது. சர்க்கங்களாகப் பிரிக்காமல் ஆசுவாசகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது விஷ்ணு புராணத்திலும் பாகவத புராணத்திலும் காணப்படும் பாரிஜாதக் கதையை கையாளும் நூல் இது.

சுவர்க்கத்திலிருந்து பாரிஜாத மரத்தைக் கிருஷ்ணன் கொண்டுவந்ததையும் ருக்மணி- ஸத்ய பாமாவிடம் நிலவிய பொறாமை, பூசல் பற்றியும் விவரிக்கும் நூல் இது .

சேது பந்தம் என்பது ராமாயணத்தில் வரும் சேது அணை / பாலம் கட்டப்பட்டதை விவரிக்கும் நூல்.

xxx

கெளடவஹ

வாக்பதி ராஜ எழுதிய கெளடவஹ , பலரும் அறியாத சரித்திர சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

கண்ணோசியை ஆண்ட யசோவர்மனைப் புகழும் கதை இது. கெளட தேச இளவரசனைத் தோற்கடித்த கதை . ஆனால் இலவசனின் பெயர் கூட இல்லை. பிற்காலத்தில் யசோ வர்மனே காஷ்மீர் அரசன் லலிதாதித் யனால் கொல்லப்பட்டான்( பொது ஆண்டு 740) .

இந்த நூல் காண்டங்களாகப் பிரிக்கப்படவில்லை. குலகங்காளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது . காதா என்னும் ஒரே ஒரு சந்தத்தில் அமைந்துள்ளது. இதை நாரிகேல பாக என்பர் . அதாவது தேங்காய் ஓடு போல கடினமான பகுதியை உடைத்து உள்ளே சென்றால் தேங்காய் கிடைக்கும். உள்ளேயுள்ள  இனிப்பான இளநீரையும் அருந்தலாம். இந்த நூலில் உவமைகளோடு உத்ப்ரேக்ஷங்களும் அதிகம் காணப்படும். உத்ப்ரேக்ஷ என்பது கற்பனை உவமைகள். இது அதுவேதான்; அது இதுவேதான் என்று கற்பிக்கப்படும்.

கவிஞர் வாக்பதி , இந்த நூலில் மங்களா சரணத்துக்கு 61 காதாக்களையும் / செய்யுட்களையும் , கவி ப்ரஸம்ஸா / கவிஞர்கள் புகழ்ச்சிக்கு  37 காதாக்களையும் , உலக நடைமுறைகளை வருணிக்க 150 காதாக்களையும் பயன்படுத்துகிறார்.

தாழ்ந்த நிலையில் உள்ள கவிஞர்கள் ஏதாவது எழுதக் கிடைக்காதா என்று அலைந்து திரிவர். உயர்ந்த கவிஞர்களுக்கோவெனில் தாமாகவே விஷயங்கள் வந்து சேரும் . அவர்கள் முயற்சி செய்யவேண்டிய தேவையே இல்லை.

xxx

சேதுபந்த காவியம்

1600 ஆண்டுகளுக்கு முன்னர் ப்ரவரசேனனால் எழுதப்பட்ட சேதுபந்த காவியம் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட காவியங்களில் தலை சிறந்தது ஆகும். ராமாயணத்திலுள்ள சேது அணை /பாலம் கட்டப்பட்ட பகுதியை மட்டும் எடுத்தாளும் கவிதை இது. தண்டி (Dandin)  பாண (Bhana) போன்ற கவிஞர்கள் இதை உச்சிமேல் வைத்துப் புகழ்கின்றனர் .

காளிதாசனின் ரகு வம்சம் , வால்மீகியின் ராமாயணம் ஆகியவற்றின் தாக்கத்தை இங்கே காணலாம்; ஆயினும் புதுமைகள் இல்லாமல் இல்லை; மாலை நேர வருணனை, காதல் காட்சிகள் நிலவொளிக் காட்சிகள் மிகவும் விரிவாகப் பேசப்படுகின்றன தோழிகள்  மூலம் காதல் ஓலைகள் அனுப்பும் செய்தியும் உண்டு.

இதற்குப் பின்னர் வந்த சம்ஸ்க்ருத காவியங்களான கிராதார்ஜுனியம், சிசுபாலவதம் ஆகியன சில விஷயங்களை அப்படியே எடுத்தாண்டுள்ளன. நீதி போதனைப் பாடல்கள் இருந்தாலும் சம்ஸ்க்ருதம் போல பழமொழிகள் இல்லை. தத்துவ விஷயங்களும் இல்லை.

காளிதாசனுடைய காவியங்களை ஒப்பிடுகையில் இவைகள் குறை உடைத்தே .

xxx

ஸம்ஸ்க்ருதம் என்பது இலக்கிய நடை; பிராகிருதம் என்பது பேச்சு நடை; நாம் வீட்டில் பேசும்போது கம்பன் போலவோ இளங்கோவைப் போலவோ அல்லது பாடப் புத்தகத்தில் உள்ள உரைநடை போலவோ பேசுவதில்லை.இதுதான் பிராகிருதம்; அதாவது கொச்சை நடை. இன்று தமிழ் நாவல்களில் காணும் நடை.

எப்படித் தமிழில் நெல்லைத்தமிழ், கோவைத்தமிழ் ,மதுரைத் தமிழ், இலங்கைத் தமிழ் உண்டோ அது போல பிராக்ருதத்திலும் பல வகை உண்டு. தொல்காப்பியரும் கூட பல நாட்டுத் தமிழ் பற்றிப் பாடியுள்ளார்.

பிராகிருத வகைகளில் சிறந்தது மஹாராஷ்டிர பிரதேசத்தில் பேசப்பட்ட மஹாராஷ்ட்ரி ஆகும். அதுதான் சிறந்து என்று தண்டின் முதலிய புலவர்கள் , விமர்சகர்கள் செப்பியுள்ளனர் .

xxx

காவியம் என்றால் என்ன ?

காவியம் என்று எந்த நூலைக் கூறலாம் என்று தண்டின் என்ற ஸம்ஸ்க்ருதப் புலவர் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே வரையறை செய்துள்ளார்-

1.இதிஹாச கதோத்பூதம்

கற்பனையில் உதித்த கதை அல்லாமல் பரம்பரையாக வந்த கதை யாகவோ இதிஹாச கதையாகவோ இருக்கவேண்டும் . அதில் வரும் கதாநாயகன் வீரனாகவோ, குணங்களின் சிகரமாகவோ ( சதுரோதாத்த நாயகம்)  இருக்க வேண்டும்.

2.நாடு , நகர, காடு, மலை, கடல் வருணனைகளும் சந்திர சூரிய உதயக் காட்சிகளும் , பூங்காக்களில் உல்லாசம் செய்யும் காட்சிகளும், காதல் காட்சிகளும், மதுபான கேளிக்கைகளும் இடம்பெறவேண்டும்

3.கல்யாணம், பிரிவு, குழந்தை பிறத்தல் , போர்கள், தூதர்கள், கதாநாயகனின் வெற்றி, மந்திராலோசனைக் கூட்டங்கள் இடம்பெறுவதோடு எதிரிகளின் சிறப்புகளையும் எடுத்து இயம்பலாம்

4.மிகவும் சுருக்கி வரைதல் (அசம் க்ஷிப்த கூடாது; நவரச உணர்ச்சிகள் (ரஸ பாவ நிரந்தரம் ததும்ப வேண்டும்.

5. யாப்பு அணிகளும், சந்திகளும் — புணர்ச்சி விதிகள் — நிறைந்து இருத்தல் அவசியம்

6.வெவ்வேறு அணிகளில் எழுதும்போது அவை கவர்ச்சிமிக்கதாக – (ஸ்ரவ்ய  விருத்தைஹி உபேதம் இருப்பதோடு காண்டங்களாகப் பிரிக்கையில் சின்னதாகவும் மிகப் பெரியதாகவும் இருத்தல் கூடாது

7. (ஸர்வத்ர பின்ன வ்ருத்தாந்தைஹி உபேதம்) – யாப்பு அணிகள், சந்தங்கள் மாறி மாறி வருதல் சிறப்பு ஆகும்

8.பிரார்த்தனையுடன் துவங்க வேண்டும்; எல்லோரையும் வாழ்த்தி ஆசி கேட்கலாம் அல்லது எதைப் பற்றி பேசப்போகிறோம் என்று பகரலாம்

9.அறம் , பொருள், இன்பம், வீடு என்ற இந்துமதக் கோட்பாடுகளை – தர்ம, அர்த்த, காம, மோக்ஷ — விதந்து ஓதுவதே காவியத்தின் நோக்கம்

காளிதாசன் எழுதிய காவியங்களில் இவை அனைத்தும் இருக்கின்றன. தமிழில் சிலப்பதிகாரத்தில் பெரும்பாலான அம்சங்களைக் காணலாம்.

–சுபம்–

Tags- காவியம், என்ன, ஐம்பெரும் காப்பியங்கள், சேதுபந்த, பிரவரசேன , வாக்பதி , கெளடவஹோ , ஹரிவிஜய , ருக்மிணி- சத்தியபாமா

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: