கண்ணாடி பிரதிபலிப்பு யுக்தியைக் கையாண்டு எதிரியை செயலிழக்கச் செய் (Post No.11271)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,271

Date uploaded in London – –    17 SEPTEMBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மானேஜ்மெண்ட் வழிகள்!

கண்ணாடி பிரதிபலிப்பு யுக்தியைக் கையாண்டு எதிரியை செயலிழக்கச் செய்!

ச.நாகராஜன்

நவீன மேலாண்மை நிர்வாகம் பல யுக்திகளைக் கொண்டது.

அதில் ஒன்று : கண்ணாடி பிரதிபலிப்பு யுக்தியைக் கையாண்டு எதிரியை செயலிழக்கச் செய்! என்பதாகும்.

இதை விளக்க ஒரு குட்டிக் கதை உண்டு.

அது இதோ:

ஒரு ஊரில் வணிகன் ஒருவன் வாழ்ந்து வந்தான். செல்வத்தை இன்னும் மிகுதியாகச் சேர்க்க வேண்டும் என்ற ஆசை அவனுக்கு வந்தது. ஆகவே வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து வணிகம் செய்து பணத்தைச் சம்பாதிக்கலாம் என்று அவன் நினைத்தான்.

கூடவே சூக்ஷ்மமான அவன் எச்சரிக்கை புத்தி அவனை ஒரு கேள்வி கேட்டது.

“ஒரு வேளை வணிகமே செய்யமுடியாமல் போய் பணம் சம்பாதிக்க முடியாமல் நஷ்டம் அடைந்து விட்டால்? வெளி நாட்டில் என்ன நடக்கும் என்பது யாருக்குத் தெரியும்?” அவன் யோசித்தான்.

“ஒரு வேளை வெளிநாட்டு வணிகத்தில் நஷ்டம் அடைந்து விட்டால் இங்கு திரும்பி வந்து விடலாம். திருப்பி இங்கேயே வணிகத்தைச் செழிக்கச் செய்யலாம். அதற்கு  முதலீடாக ஒரு பெருமளவு பணத்திற்கு இங்கேயே இப்போதே வழி செய்து விட்டுப் புறப்படலாம்.”

இந்த எண்ணம் அவனுக்கு உற்சாகத்தைத் தந்தது.

அவன் ஒரு இரும்பு வியாபாரி.

நல்ல உயர்தர இரும்புத் தண்டுகளில் 100 டன் இரும்பை எடுத்தான்.

அவற்றைத் தனது நண்பனிடம் சென்று கொடுத்து, “நண்பா! நான் வெளிநாடு செல்கிறேன். வரும் வரை இதை பத்திரமாக வைத்திரு” என்றான்.

அந்த நண்பன் ஆவலுடன் அவற்றை வாங்கிக் கொண்டு, “சரி” என்றான்.

மாதங்கள் சில கழிந்தன. வெளிநாட்டு வர்த்தகத்தில் லாபம் வரவில்லை.

உள்ள பண்டமும் போய் நஷ்டத்தில் முடிந்தது.

வருத்தத்துடன் தன் சொந்த நாடு திரும்பினான் வணிகன்.

ஆனால் அவனுக்கு ஒரு ஆறுதல், ‘100 டன் விலை உயர்ந்த இரும்புத் தண்டுகள் உள்ளனவே, அவற்றை வைத்து நல்ல நிலையை அடைந்து விடலாம்’ என்று அவன் எண்ணினான்.

நேராக நண்பனிடம் சென்று தனது வணிகம் நினைத்தபடி நன்றாக நடக்கவில்லை என்று கூறி, “உன்னிடம் கொடுத்தேனே, இரும்புத் தண்டுகள் அவற்றைக் கொடு” என்றான்.

பேராசைக்காரனான அவனது நண்பன் திடுக்கிட்டான்.

“ஐயோ! அந்தக் கதையை ஏன் கேட்கிறாய்! அவை அனைத்தையும் பத்திரமாக என் ஷெட்டில் வைத்திருந்தேன். ஆனால் எலி வந்து அவற்றைத் தின்று விட்டது. நான் என்ன செய்வேன்?” என்றான் நண்பன்.

நண்பனின் மோசடி வணிகனுக்குப் புரிந்தது.

சற்று யோசித்து விட்டு சொன்னான்; “ஆமாம், ஆமாம், பொல்லாத எலி பற்றி எனக்குத் தெரியாதா என்ன?”

நண்பனுக்கு ஒரே குஷி. அப்படியே தான் சொல்வதை அவன் நம்பி விட்டான், சண்டையும் போடவில்லை!

இருந்தாலும் தான் மிகவும் நல்லவன் என்று அவன் நம்பவேண்டும் என்று நினைத்த நண்பன் வணிகனிடம் மறுநாள் அவனுக்கு விசேஷ விருந்து ஒன்று தரப்போவதாகச் சொல்லி அவனை அழைத்தான்.

“சரி, நாளை வருகிறேன்” என்று சொல்லி விட்டு வணிகன் கிளம்பினான்.

செல்லும் வழியில் மார்கெட்டில் நண்பனின் குழந்தைகளில் ஒன்றைக் கண்டான். அந்தக் குழந்தையை தன்னுடன் அழைத்துச் சென்று தன் வீட்டு அறை ஒன்றில் பத்திரமாகப் பூட்டினான்.

மறுநாள் குறித்த நேரத்தில் நண்பனின் வீட்டுக்கு வந்தான். அங்கே நண்பன் மிக்க வருத்தத்துடன் சோகமாக இருந்தான்.

“என்ன விஷயம்?” என்று கேட்டான் வணிகன்.

“மார்கெட்டிற்கு போன என் மகனை நேற்றிலிருந்து காணோம்!” என்று புலம்பினான்  நண்பன்.

“ஓ! அது உன் மகனா? நேற்று திரும்பும் போது மார்கெட் வழியாகத் தான் சென்றேன். அங்கு குருவி ஒன்று ஒரு பையனை தூக்கிக் கொண்டு பறந்தது. என் கண்ணால் அதை நான் பார்த்தேன்? என்றான் வணிகன்.

நண்பன், “ என்ன உளறுகிறாய். குட்டிப் பறவை குருவி! அது என் மகனை – வளர்ந்தவனை- தூக்கிக் கொண்டு போனதாகச் சொல்கிறாய்! உன் மூளை கெட்டு விட்டதா, என்ன?” என்றான்.

“நண்பா! காலம் மாறி விட்டது இப்போது, உனக்கே தெரியும்! எலியானது நூறு டன் இரும்பைத் தின்னுகின்ற காலம் இது! ஒரு சிட்டுக்குருவி குழந்தையைத் தூக்கிக் கொண்டு பறந்து போகாதா, என்ன?” என்றான்.

நண்பனுக்கு இப்போது புரிந்து விட்டது, என்ன நடந்தது என்று.

உண்மையை வணிகனிடம் ஒப்புக் கொண்டான். 100 டன் இரும்பையும் திருப்பித் தந்தான்.

வணிகனும் அவனது மகனை பத்திரமாக அவனிடம் ஒப்படைத்தான்.

சரி, கதையின் நீதி என்ன?

கண்ணாடி பிரதிபலிப்பு யுக்தியைக் கையாண்டு எதிரியை செயலிழக்கச் செய்!

இது தான் இன்றைய மானேஜ்மெண்ட் யுக்தி!

உனது எதிரிகள் உனக்கு என்ன செய்கிறார்களோ அதை அப்படியே கண்ணாடி பிரதிபலிப்பது போல அவர்களுச் செய்து விடு! அவர்களுக்குப் புரிந்த பாஷையில் நீ சொல்ல வேண்டியதைச் சொன்னால் அவர்கள் புரிந்து கொள்வார்கள்! அவர்கள் உனக்குக் கையாண்ட அதே முறையை திருப்பி விடு – கண்ணாடி பிரதிபலிப்பது போல!

உனக்கு வெற்றி நிச்சயம்

இது இந்தியாவின் நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த நீதிக் கதைகளுள் (Indian Fables) ஒன்று.

‘THE 48 LAWS OF POWER’ என்ற தனது புத்தகத்தில் Robert Greene இதை ஒரு உதாரணமாக எடுத்துக் காட்டுகிறார்! (464 பக்கங்கள்)

Disarm and infuriate with the Mirror Effect! இது தான் அவர் கூறும் நாற்பத்தி நான்காவது விதி!

**

புத்தக அறிமுகம் – 59

இது தான் இந்தியா!

பொருளடக்கம்

என்னுரை

1. இது தான் இந்தியா! – ஜிம் கார்பெட்டின் அனுபவம் – 1

2. இது தான் இந்தியா! – ஜிம் கார்பெட்டின் அனுபவம் – 2

3. இது தான் இந்தியா – ஜெஃப்ரி ஃபர்னாலின் அனுபவக் கூற்று!

4. இது தான் இந்தியா – ஹூவான் சு வாங்!

5. இந்திய ஜீவனைத் துடிக்க வைக்கும் ஏழை – ஹிந்துப் படகோட்டி!

6. துக்ளக் விரும்பிய கங்கை நீர்!

7. அக்பர் விரும்பிய அமரத்தன்மை அளிக்கும் கங்கை நீர்!

8. ஔரங்கசீப் பயன்படுத்திய கங்கை நீர்!

9. கங்கையின் புனிதம்!

10.ஹிந்து மதம் பற்றி டேவிட் ஃப்ராலி (வாமதேவ சாஸ்திரி)

11. பந்தரைத் தந்த மஹாராஜா!

12. ஹிந்துக்களின் உயரிய குணங்கள்-சில உண்மைச் சம்பவங்கள் – 1

13. ஹிந்துக்களின் உயரிய குணங்கள்-சில உண்மைச் சம்பவங்கள் – 2

14. ஹிந்துக்களின் தர்ம சிந்தனை!

15. ஹிந்து பரம்பரையின் நற்பண்புகள் எந்நாளும் தொடரும்!

16. வேதம் விளக்கும் சந்தோஷம்!

17. ஹிந்துக்களுக்கு தர்ம வாழ்வே வாழ்வு!

18. பாம்புகள் காத்த பைரவர் ஆலயம்!

19. கொள்ளைக்காரனைக் காப்பாற்றியவரைக் கண்டித்த மாமனாரும், மகனுக்கு நல்வழி காட்டிய தாயாரும்!

20. அக்பரும் சூரிய நமஸ்காரமும்!

21. பாரில் உள்ள தேசங்களில் எங்கள் தேசம் உயர் தேசம்!

22. பூர்வ குடியினரின் ஆத்திரமும் ஒரு விஞ்ஞானியின் திகைப்பும்!

23. க்ராண்ட் கான்யான் அனுபவமும் டாக்ஸி டிரைவர் தந்த வைர நகைகளும்!

24. தங்கப் பல்லக்கில் ஏற மறுத்த ராஷ்டிரபதி!

25. சேவை செய்ய வாய்ப்பு கிடைத்ததே, இது ஒரு அதிர்ஷ்ட தினம்!

26. ஜெனரல் கரியப்பா இந்திய ராணுவத் தலைமைப் பொறுப்பை ஏற்றது எப்படி?

27. தன் புடவையால் இருவரைக் காத்த பெண்மணி!

28. மற்ற மதங்களை விட ஹிந்து மதம் உயர்ந்தது-ஏன்?

29. வந்தே மாதரம்! கீதம் பிறந்த கதை!

30. வேத மந்திரங்கள் மூலம் தீ மூட்டப்பட்ட உண்மை சம்பவம்!

31. இறந்த மகளை உயிர்ப்பித்த சரஸ்வதி தேவியை வணங்கத் துவங்கிய சுல்தான் இரண்டாம் இப்ராஹீம்!

32. நமது தேசத்தின் அடையாளம்!

33. இந்தியா மறந்த, ஜப்பான் போற்றும் ஒரு மகத்தான இந்தியர்!

*

நூலில் நான் வழங்கிய என்னுரை இது :

என்னுரை

இந்தியா பூவுலகின் புண்ய பூமி. உலகின் தாயகம். இது கடவுளால் நிர்மாணிக்கப்பட்ட தேசம் என்பதை சம்ஸ்கிருத சுபாஷிதம் ஒன்று இப்படித் தெரிவிக்கிறது:

ஹிமாலயம் சமாரம்ய யாவத் இந்து சரோவரம் |
தம் தேவநிர்மிதம் தேசம் ஹிந்துஸ்தானம் ப்ரசக்ஷதே ||

இமய மலையில் ஆரம்பித்து இந்து மாகடல் வரை எது எல்லையைக் கொண்டுள்ளதோ அது கடவுளால் நிர்மாணிக்கப்பட்ட ஹிந்துஸ்தானம் என்று அறியப்படுவதாகும். புவியில் வாழும் அனைவரும் பாரத தேசத்தின் ரிஷிகளிடமிருந்து எப்படி வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதைக் கற்க வேண்டும் என்கிறது மனு ஸ்மிருதி.

ஏதத்தேச ப்ரசூதஸ்ய சகாஷாதக்ரஜன்மனா |
ஸ்வம் ஸ்வம் சரித்ரம் சிக்ஷேரன் ப்ருதிவ்யாம் சர்வமானவா: ||

இந்தப் பூமியில் வசிக்கும் அனைவரும் வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பது பற்றியும் நல்லொழுக்கம் கொள்வது பற்றியும் இந்த தேசத்தின் (பாரதத்தின்) புராதன ரிஷிகள், மகான்கள் ஆகியோரிடமிருந்து கற்க வேண்டும் – (மனு ஸ்மிருதி)

எல்லையற்ற இதன் பெருமையை பல்லாயிரக் கணக்கான சம்பவங்கள் அன்றிலிருந்து இன்று வரை நிரூபித்துள்ளன; நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

கடல் போன்ற அந்த சம்பவங்களில் ஒரு சில திவலைகளைக் கட்டுரைகளாகப் படைத்து வந்தேன்.

இந்தியாவின் மேன்மையைச் சுட்டிக் காட்டும் கட்டுரைகள் இப்போது பல பத்திரிகைகளிலும் ப்ளாக்குகளிலும் வெளியாகி வருகின்றன.

அவற்றில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து, தொகுத்து அவ்வப்பொழுது ஆங்கிலத்தில் கல்கத்தாவிலிருந்து வெளிவரும் வார இதழான ‘ட்ரூத்’ – TRUTH வெளியிட்டு வருகிறது. அவற்றில் பலவற்றை அவ்வப்பொழுது தமிழாக்கம் செய்து தமிழ் வாசகர்களுக்கு அளித்து வந்தேன்.

இது போன்ற நல்ல கட்டுரைகளை ஆங்கிலத்தில் படிக்க விரும்புவோர் https://sdpsorg.com/truth இணைய தளத்தில் படிக்கலாம்.

‘ட்ரூத்’ ஆசிரியர் டாக்டர் திரு ஷிப் நாராயண் சென் (Dr. Shib Narayan Sen) உற்ற நண்பராக இருந்து எனக்கு அவ்வப்பொழுது ஊக்கமும் உற்சாகமும் தந்து வருகிறார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றி.

இந்தக் கட்டுரைகளை www.tamilandvedas.com இல் அவ்வப்பொழுது வெளியிட்டு வந்த லண்டன் திரு ச.சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

இந்த நூலை அழகுற வெளியிட முன் வந்த பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கட்டுரைகள் வெளியான போது அவ்வப்பொழுது பாராட்டி எனக்கு ஊக்கமளித்த அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக.

நன்றி.

சான்பிரான்ஸிஸ்கோ                               ச. நாகராஜன்
31-8-2022

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852   

**

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: