
Post No. 11,286
Date uploaded in London – – 22 SEPTEMBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மானேஜ்மெண்ட் வழிகள்!
செயலில் இறங்கும்போது துணிவுடன் இறங்கு!
ச.நாகராஜன்
நாம்சென் பள்ளத்தாக்கில் ஒரு குடிசையில் ஒரு தம்பதி வாழ்ந்து வந்தனர்.
கணவன் ஹூ சாங் எப்போதும் புத்தகம் படித்த வண்ணமாகவே இருப்பார். நல்ல அறிவாளி. ஏழு வருடங்கள் இப்படி கழிந்தன.
ஒரு நாள் ஹூவின் மனைவி அவரிடம் வந்தாள்.
“இதோ பாருங்கள்! இனி மேல் என்னால் முடியாது! உங்கள் புத்தகப் படிப்பால் பயன் என்ன? எனது இளமையெல்லாம் வீணாகப் போய் விட்டது. மாற்றிக் கொள்ள ஒரு ரவிக்கையும் கிடையாது. உள்ளாடையும் கிடையாது. மூன்று நாட்களாக எனக்கு உணவும் இல்லை. இனிமேல் என்னால் முடியாது! என்ன செய்வது, சொல்லுங்கள்?” என்றாள் அந்தப் பெண்மணி.
இதைக் கேட்டவுடன் தனது புத்தகத்தை மூடினார் ஹூ.
தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார். ஒரு முடிவுக்கு வந்தவர் போல திடீரென்று எழுந்த அவர் ஒரு வார்த்தையும் பேசாமல் வெளியே கிளம்பினார்.
நகரின் மையப் பகுதிக்கு வந்த அவர் அங்கு சென்ற ஒருவரைப் பார்த்து வணங்கினார்.
“ஐயா! இந்த நகரில் பெரிய பணக்காரர் யார்? தயவு செய்து சொல்லுங்கள்” என்றார்.
கேள்வி கேட்டவரை விநோதமாகப் பார்த்த அந்த வழிப்போக்கர்,
“ஐயா! நீர் எந்த ஊர்? இப்படி ஒரு கேள்வியை இங்கு நின்று கொண்டு கேட்கிறீர்கள்! இதோ, எதிரில் பாருங்கள். ஜொலிஜொலிக்கும் மாபெரும் மாளிகையை! இங்கு தான் ஊரின் பெரிய செல்வந்தர் வசிக்கிறார். அவரைப் பார்க்க 12 வாயில்களைக் கடந்து போக வேண்டும்” என்று சொன்னார்.
அவருக்கு நன்றி தெரிவித்த ஹூ 12 வாயில்களைக் கடந்து செல்வந்தர் பேட்டி கொடுக்கும் பெரிய அறைக்குச் சென்றார்.
செல்வந்தரைப் பார்த்து வணங்கிய ஹூ, “ஐயா! வணக்கம்! எனக்கு பத்தாயிரம் யாங் வேண்டும். ஒரு நல்ல வியாபாரத்தைத் தொடங்கப் போகிறேன். அதை உங்களுக்கு விரைவில் திருப்பித் தந்து விடுவேன்”
என்றார்.
செல்வந்தர் ஒரு கணம் கூட தாமதிக்காமல், “தருகிறேன். யாரிடம் எப்போது தர வேண்டும்?” என்று கேட்டார்.
“உடனேயே தாருங்கள். அந்தப் பணத்தை சந்தையில் உள்ள பெரிய கமிஷன் வியாபாரிடம் தந்து விடுங்கள். அவரை நான் பார்க்கிறேன்”
என்றார் ஹூ.
“இதோ உடனேயே சந்தையில் பெரிய கமிஷன் வியாபாரியான கிம்மிடம் அதைத் தர ஏற்பாடு செய்கிறேன்” என்றார் செல்வந்தர்.
“மிக்க நன்றி! அடிக்கடி வந்து பார்த்து உங்களைத் தொந்தரவு செய்ய மாட்டேன். அடுத்து பணத்தைத் திருப்பிக் கொடுக்க வரும் போது பார்க்கிறேன்” என்ற ஹூ அவரை வணங்கி விட்டுச் சென்றார்.
ஹூ சென்றவுடன் செல்வந்தரைச் சுற்றி இருந்தவர்கள் அவரை நோக்கிச் சரமாரியாக கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தனர்.
“யார் இந்த ஆள்? இதுவரை இவரை யாருமே பார்த்தது கிடையாது.
பார்க்க மிகவும் சாதாரணமாக இருக்கிறார்! இவருக்கு இவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்க எப்படி உங்களுக்கு மனம் வந்தது? இது சரியா!” என்று அவர்கள் கேட்டனர்.
செல்வந்தர் பதில் கூறலானார்: ”இங்கு வருபவர்கள் எல்லாம் நெளிந்து குழைந்து உண்மையே இல்லாத வார்த்தையை எல்லாம் சொல்லி என்னைப் புகழ்ந்து பின்னர் பணத்தைக் கேட்பார்கள். இதோ வந்தாரே, அவரது முகத்தில் உண்மை ஒளி வீசுகிறது. சொல்வதைச் செய்து காட்டுபவர் அவர். வளவள என்று பேசாமல் சுருக்கமாகச் சொல்ல வேண்டியதைச் சொன்னார். பெற வேண்டியதைப் பெற்றார். பாருங்கள், கூடிய விரைவில் இந்த நகரிலேயே பெரிய வணிகராக அவர் திகழப் போகிறார்”
பல பேரைத் தினமும் பார்க்கும் செல்வந்தரின் கணிப்பு படியே
நடந்தது.
வணிகத்தில் துணிந்து செயலாற்றிய ஹூ பெரும் லாபத்தைப் பெற்றார். கடனைத் திருப்பிச் செலுத்தினார்.
அவரது மனைவி அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
சரி, இந்தக் கதை சொல்லும் நீதி என்ன?
ஒரு செயலைச் செய்யத் தொடங்கும் போது துணிவுடன் அதில் இறங்கி முனைப்புடன் செயலாற்றுங்கள் (Enter Action With Boldness) என்பது தான் நீதி!
‘THE 48 LAWS OF POWER’ என்ற தனது புத்தகத்தில் Robert Greene இதை ஒரு உதாரணமாக எடுத்துக் காட்டுகிறார்! (464 பக்கங்கள்)
Enter Action With Boldness) என்பது தான் அவர் கூறும் இருபத்தி எட்டாவது விதி!
**
புத்தக அறிமுகம் – 64
சிறுவர் புராணக் கதைகள்

நூலில் உள்ள அத்தியாயங்கள்
1. துருவன்
2. பிரகலாதன்
3. பகீரதன்
4. ஸ்ரீ கிருஷ்ணர்
*
நூல் பற்றிய சிறு குறிப்பு இது :
இந்துப் புராணங்கள் தங்கச் சுரங்கங்கள்! வற்றாத ஜீவ நதிகள்! இவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு கதைகளை இந்நூலில் காணலாம். திட உறுதிக்கு உதாரணமான துருவன், பக்திக்கு உதாரணமான பிரகலாதன், விடாமுயற்சிக்கு உதாரணமான பகீரதன், வாழ்க்கையை முறையாக வாழக் கீதை மூலம் பாதை வகுத்துத் தந்த அவதார புருஷன் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா ஆகியோரின் வரலாறுகளைப் புராணத்தின் மூலத்திலிருந்து வழுவாமல், சுவையான தமிழ் நடையில் எழுதப்பட்டுள்ள இந்நூல் சிறுவர்களுக்கு மட்டுமில்லை, அனைவருக்குமே ஏற்றது!
*
இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.
அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். சிறுவர் புராணக் கதைகள் நூலைப் பற்றிய சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.
Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
**