
Post No. 11,298
Date uploaded in London – 26 SEPTEMBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
யானை என்பதை ஆனை என்று சொல்லுவது போல.யாளி என்பதை தமிழ் நூல்கள் ஆளி என்றே குறிப்பிடுகின்றன இது அழிந்துபோன மிருகங்களில் ஒன்று. சிங்கம் போன்ற உடலும் யானை போன்ற துதிக்கையும் உடைய இந்த மிருகத்தை கோவில் தூண்களில் காணலாம். குறிப்பாக நாயக்கர் வம்ச கட்டிடக் கலையில் இது முக்கிய இடம்பெறுகிறது.
இந்த மிருகம் குறித்து தமிழ் சங்க இலக்கிய நூல்கள் 2000 ஆண்டுகளாகப் பாடுகின்றன. சில சுவையான விஷயங்களைக் காண்போம்.
நக்கண்ணையார் (Miss Sulochana= Nak Kannaiyaar) என்ற பெண் புலவர் பாடுகிறார்:-
இடம்படுபு அறியா வலம்பட்டு வேட்டத்து
வாள்வரி நடுங்கப்புகல் வந்து ஆளி
உயர்நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி
வெண்கோடு புய்க்கும் தண் கமழ் சோலைப்
பெருவரை அடுக்கத்து –அகநானூறு 252
பொருள்
தன்னால் வீழ்த்தப்படும் விலங்குகள் இடப்பக்கத்தில் விழுவதை அறியாத வெற்றி பொருந்திய வேட்டைப் புலிகளையும் நடுங்கச் செய்யும் யாளி, புள்ளிகள் மிகுந்த யானையின் முகத்தில் பாய்ந்து தாக்கி அதன் தந்தங்களைப் பறிக்கும் மலைச் சாரல் .இது நக்கண்ணை (செல்வி சுலோசனா) பாடிய பாடல்.
xxxx
யானையை சிங்கம் தாக்கும் பாடல்கள் ஸம்ஸ்க்ருதத்தில் உள்ளன. ஆ னால் யாளி பற்றிய குறிப்புகள் குறைவு. சங்கத் தமிழ் நூல்களிலும் சுமார் எட்டு இடங்களில் மட்டுமே ஆளி பயிலப்படுகிறது.
ஆளி வரும் பாடல்கள் :
அகநானூறு 78, 252, 301;
புறநானூறு 207;
பொருநராற்றுப்படை 139;
குறிஞ்சிப்பாட்டு 252;
பரிபாடல் 8-64 (சிங்கம் என்ற பொருளில் அல்ல ; வேறு பொருள்)
நற்றிணை 205;
இது தவிர பிற்கால நூல்களான சிலப்பதிகாரத்திலும் 25-48, திணைமாலை நூற்றைம்பது நூலிலும்.காணக்கிடக்கின்றன.
யாளி என்ற சொல் பெரும்பாணாற்றுப் படையில் ஒரே ஒரு இடத்தில் வருகிறது
சம்ஸ்க்ருத நூல்களில் வியாழம் என்றும் குறிப்பிடப்படுகிறது
Xxxx
புறநானூற்றில் இளவெளிமான் என்பவன், புலவர் பெருஞ்சித்திரனாரை வருக வருக என்று வரவேற்காது ஏதோ பிச்சைக்காரனுக்கு பிச்சை போடுவது போல, முகம் காணாது, பரிசு கொடுத்ததால், அவருக்குக் கோபம் ஏற்பட்டது. உண்டோ குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு என்று கம்பன் சொல்லிவிட்டுப் போனது போல ‘இந்த உலகம் பெரிதடா ; என்னைப் போன்றோரை பேணி வளர்ப்பவர் பலராடா’ என்று சொல்லிவிட்டு சிங்கம் போல வீறு நடை போடடா என்று தம்மைத்தாமே ஊக்குவித்துக் கொண்டு நடக்கிறார்.
வருகென வேண்டும் வரிசை யோர்க்கே
பெரிதே உலகம்; பேணுநர் பலரே;
மீளி முன்பின் ஆளி போல
உள்ளம் உள்அவிந்து அடங்காது வெள்ளென
நோவா தோன்வயின் திரங்கி
வாயா வன்கனிக்கு உலமரு வோரே— புறநானூறு 207;
இதில் வரும் முக்கியமான வரி மீளி முன் பின் ஆளி போல ; இதற்குப் பொருள் அரிமா நோக்கு.; அதாவது சிங்கப் பார்வை; காட்டில் சிங்கம் கம்பீரமாக நடந்து விட்டுப் பின்னால் ஒரு look லுக்- ‘நோக்கு’ விடும். அதைத் தொடர்ந்து வர எந்த மிருகத்துக்கும் துணிவு இருக்காது. அதனால் காட்டிற்கு அதுவே அரசன். யாரும் அதை வோட்டுப்போட்டுத் தேர்ந்தெடுக்கவில்லை. ஆர். எஸ். எஸ் இயக்கத்தின் அறிக்கைகளிலும் சிங்கத்தைப் போட்டு அதன் கீழ் ஸ்வயமேவ ம்ருகேந்த்ரதா — என்று எழுதியிருப்பார்கள். இந்துக்கள் பிறப்பிலேயே தலைவர்கள் என்பது இதன் பொருள். சிங்கம் முன் பின் பார்த்து நடக்கும் அரிமா நோக்கைக் குறிப்பிடும் பெருஞ் சித்திரனார் (Mr Big Painting) , கம்பீர நடை போடுகிறார்.
இந்த வரி ஸ்வயமேவ ம்ருகேந்த்ரதா– ஹிதோபதேசம், கருட புராணம் முதலியவற்றில் வருகிறது
விக்ரமார்ஜித சத்வஸ்ய ஸ்வயமேவ ம்ருகேந்த்ரதா – ஹிதோபதேசம் 2-19
வீரமுள்ளோனுக்கு அரச பதவி இயல்பாகவே வந்து சேரும் .
xxx
மீளிமுன்பின் ஆளி போல -அரிமா நோக்கு
நா பிஷேகோ ந ஸம்ஸ்காரஹ
ஸிம்ஹஸ்ய க்ரியதே வனே
விக்ரமார்ஜித சத்வஸ்ய
ஸ்வயமேவ ம்ருகேந்த்ரதா
— கருட புராணம்
பொருள்:
காட்டில் எவரும் முடிசூட்டி, சிங்கம் அரசனாவதில்லை. தனது பராக்ரமத்தின் துணை கொண்டே தானே விலங்குகளின் அரசனாக அமைகிறது சிங்கம்.
Xxx
அதே ஸ்லோகத்தின் மறறொரு வடிவம் (இதுவுமது)
நாபிஷேகோ ந சம்ஸ்கார: சிம்ஹஸ்ய க்ரியதே ம்ருகை:|
விக்ரமார்ஜிதராஜ்யஸ்ய ஸ்வயமேவ ம்ருகேந்த்ரதா ||
xxxx
நற்றிணையில் (பாடல் 205) இளநாகனார் பாடிய பாடல்
அருவி ஆர்க்கும் பெருவரை அடுக்கத்து
ஆளி நன் மான், வேட்டு எழுகோள் உகிர்ப்
பூம் பொறி உழுவை தொலைச்சிய வைந் நுதி
ஏந்து வெண் கோட்டு வயக் களிறு இழுக்கும்
துன் அருங்கானம் என்னாய் நீயே
பொருள்
“கடுமையான கானகம் வழியே மலைச் சரிவில் நீ செல்ல வேண்டும். அங்கு நீர்வீழ்ச்சிகள் ஆர்ப்பரிக்கும். அங்கு புலியால் கொல்லப்பட்ட யானையை ஆளி இழுத்துச் செல்லும். செல்வத்தைச் சேர்க்கக் கருதி நீ சென்றால் அழகிய நிறம் கொண்ட இந்தக் கன்னியின் அழகு இன்றொடு உன்னுடன் போய் விடும் அல்லவா!”.
xxxx
முடத்தாமக் கண்ணியார் பாடிய
பொருநராற்றுப்படை 139 முதல் 142 வரிகள்
ஆளி நன்மான் அணங்குடைக் குருளை
மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி
முலைக்கோள் விடா அ மாத்திரை ஞெரேரென
தலைகோள் வேட்டம் களிறு அட்டா அங்கு
Xxx
பெரும்பாணாற்றுப் படை என்னும் நூலில் கடியலூர் உருத்திரங் கண்ணனார் சொல்கிறார் –
மழை விளையாடுங் கழை வளரடுக்கத்
தணங்குடை யாளி தாக்கலிற் பலவுட ன்
கணஞ் சால் வே ழங் கதழ்வுற் றா அங் –257-259
பொருள்
மேகங்கள் விளையாடித் திரியும் மூங்கில் வார்கின்ற பக்கமலையிலே தம்மை வருத்தும் யாளி பாய்கையினால் , கொழுத்த யானைகள் பலவும் கலங்கிட ……………..
Xxx

கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டில் புலி, சிங்கம், கரடி போன்ற கொடிய விலங்குகள் என்ற பொருளில் ஆளி வருகிறது :
அளை செறி உழுவையும் ஆளியும் உளியமும்
புழற் கோட்டாமான் புகல் வியும் களிறும் 252-253
பொருள்
குகைகளில் வாழும் புலிகளும், யாளிகளும், கரடியும், காட்டு எருமைகளும் ,யானையும் உள்ள குறிஞ்சி நிலம்.
XXXX
அக நானூறு 78ம் பாடலில் முந்திய கருத்துக்களே வருகின்றன ; இது புலவர் நக்கீரன் பாடியது.
நனந்தலைக் கானத்து ஆளி அஞ்சி
இனம் தலைத் தரூஉம் எறுழ் கிளர் முன்பின்
வரி ஞிமிறு மார்க்கம் வாய்புகு , கடா அத்து
— அக நானூறு 78
பொருள்
தன் இன யானைகளைக் காத்தற் பொருட்டு , ஆண் யானையானது, வண்டுகள் ஒலிக்கும் வாயிற் புகும் மத நீரையுடையவாறு மற்ற யானைகளைச் சூழ்ந்து நிற்கச் செய்யும்.; கரடு முரடான கையால் தழுவும். அதன் காதலியான முதல் கர்ப்பத்தை உடைய இளம் பிடி யானையானது யாளிக்கு மிகவும் அஞ்சி நடுங்கும் மலைச் சாரல் இது என்று புலவர் பாடுகிறார்.
xxx
மதுரை இளம் கெளசிகனார் பாடிய பாடல் அகநானூறு 381ல் உள்ளது
ஆளி நல் மான் அணங்குடை ஒருத்தல்
மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப
ஏந்தல் வெண் கோடு வாங்கி ,குருகு அருந்தும்
அஞ்சுவரத் தகுந ஆங்கண் , மஞ்சுதப
அழல் கான்று திரிதரும் அலங்கு கதிர் மண்டிலம்
பொருள்
விலங்குகளை வருத்தும் தனமையுடைய ஆண் ஆளி , வன்மையுடைய யானையின் தலைவனான ஆண் யானை வருந்த அதன் வெண்மையான கொம்பைப் பறித்துக் குருத்தைத் தின்னும் அச்சம் தரும் வழி அது
ஆக எல்லா இடங்களிலும் ஆளியின் வலிமையை வலியுறுத்தி அது யானையின் தந்தங்களையே பறித்து விடும் என்று புலவர்கள் சொல்லுவதால் அவை முன்காலத்தில் இருந்திருக்கவேண்டும் என்றே துணியலாம்.
xxx
இதே பிளாக்கில் வெளியான கட்டுரைகள்
யாளி | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › ய…
யாளி! ச.நாகராஜன். yali. தென்னிந்தியக் கோவில்களில் பெரும்பாலான கோவில்களில் விசித்திரமான …
யாளி தத்தன் | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › ய…
6 Oct 2018 — Valluvar with Brahmin’s sacred thread;excavated at Mylapore in Chennai. Compiled by London Swaminathan. swami_48@yahoo.com
–subam—
Tags– அரிமா நோக்கு, யாளி, ஆளி , சிங்கம், யானை , வேங்கை , சங்க நூல்கள்