சங்கத் தமிழ் இலக்கியத்தில் புராணக் காட்சிகள்-1 (Post No.11,301)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,301

Date uploaded in London – 27 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பழந் தமிழ் நூலான தொல்காப்பியம் முதல் பிற்காலத்தில் வந்த ‘சமயம் அல்லாத’ நூல்களில் கூட  வேத இதிஹாச, புராண கதாபாத்திரங்ககளைக் காண்கிறோம். அமிர்தம், கங்கை நதி , இமய மலை , கற்புக்கரசி அருந்ததி, சப்த ரிஷிக்கள், ராஜ சூய யாகம் , யூப நெடுந் தூண் , ஆகியவற்றையும் இந்திரன், வருணன், விஷ்ணு, ஸ்கந்தன் , சிவன் ஆகியோரையும் சங்க நூல்களில் காண்கிறோம் . புறநானூறு, அக நானூறு காட்டும் ராமாயணக்  கதைகள் கம்பனிலோ , வால்மீகியிலோ  இல்லை என்பதும், கண்ணன் – கோபியர் கதையை 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழன் எழுதிவிட்டான் என்பதும் பெருமைக்குரிய விஷயங்கள்.

தனம் தரும் கஜலெட்சுமி

சில புராணக் காட்சிகளைக் காண்போம்:

ஒரு புலவர் மலைகளையும் காடுகளையும் கடந்து செல்கிறார். அப்போது ஒரு அறிய காட்சியைக் காண்கிறார். இரண்டு புறம் மலைகள்; அந்த இரண்டிலும் அருவி நீர் கொட்டிக்கொண்டு இருக்கிறது. இந்த அ ருவிகளுக்கு இடையே ஒரு வேங்கை மரம் பூத்துக் குலுங்குகிறது. இதைப் பார்த்தவுடன் கஜ லெட்சுமி உருவம் அவர்  மனதுக்கு வந்துவிடுகிறது. உடனே கவி மழை பொழிகிறார்;

கபிலரின் குறிஞ்சிக்கலி – 44 ஆம் பாடல்

கதிர் விரி கனை சுடர்க் கவின் கொண்ட நனம் சாரல்    44-1

எதிர் எதிர் ஓங்கிய மால் வரை அடுக்கத்து,              

அதிர் இசை அருவி தன் அம் சினை மிசை வீழ,         

முதிர் இணர் ஊழ் கொண்ட முழவுத் தாள் எரி வேங்கை,     

வரி நுதல் எழில் வேழம் பூ நீர் மேல் சொரிதரப்,           

புரி நெகிழ் தாமரை மலர் அம் கண் வீறு எய்தித்         

திரு நயந்து இருந்தன்ன தேம் கமழ் விறல் வெற்ப! 

*ஞாயிற்றின் கதிர்கள் விரிந்து அடர்ந்த ஒளியால் அழகு கொண்ட அகன்ற மலைச்சாரலில், எதிர் எதிரே ஓங்கி நின்ற கரிய மலைத்தொடர்களில்,  அதிருகின்ற இசையை எழுப்பும் அருவி, தனது அழகிய கிளைகளின் மேல் விழ, முதிர்ந்த மலர்கொத்துகள் மலர்கின்ற முழவு போலும் அடிமரம் படைத்த்த, (மலர்களின் நிறம் காரணமாக) நெருப்புபோல் தோன்றும் வேங்கை மரத்தின் மேல், நெற்றியில் வரிகளையுடைய அழகிய களிறு ஒன்று, மலரும் நீரும் கலந்து ( தீ அணைக்க?) பொழிய, மொட்டு அவிழ்ந்த தாமரை மலர், தன்னிடத்தே அழகு பெற்று, திருமகள் விரும்பி இருப்பது போல், அதன் தேனின் மணம் கமழும் வெற்றியை உடைய மலைநாடனே!.

GAJA LAKSHMI FROM DENMARK (200 BCE)

கஜ லட்சுமியின் படம் எல்லார் வீட்டுக் கதவுகளிலும் , குறிப்பாக நாட்டுக்கோட்டை செட்டியார் வீட்டுத் தேக்கு  மரக்கதவுகள் அல்லது வாசலில் பொறிக்கப்பட்டிருக்கும். இலங்கையின் தென் கோடியிலும் கஜ லெட்சமி உள்ளாள் . டென்மார்க் நாட்டிலுள்ள சதுப்பு நிலப்பகுதியில்  குண்டஸ்ட்ரப்(Gundestrup in Denmark) என்னும் இடத்தில் கிடைத்த அண்டாவிலும் கஜலெட்சமி இருக்கிறாள். இவை அனைத்தும் 2000 ஆண்டுகளுக்கு முந்தியவை. ஆகையால் தமிழ்ப் புலவருக்கு கஜலட்சுமி காட்சி தந்ததில் வியப்பில்லை!

Xxx

ராவணனை அலற வைத்த கயிலை மலை

அடுத்த காட்சியைக் காண்போம் :

கபிலரின் குறிஞ்சிக்கலி – 38 ஆம் பாடல்

இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன்                 38-1

உமை அமர்ந்து உயர் மலை இருந்தனன் ஆக,               

ஐ இரு தலையின் அரக்கர் கோமான்                                  

தொடிப் பொலி தடக்கையின் கீழ் புகுத்து, அம் மலை    

எடுக்கல் செல்லாது உழப்பவன் போல –                              38-5

உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக்                

கறுவு கொண்டு, அதன் முதல் குத்திய மத யானை,     

நீடு இரு விடர் அகம் சிலம்பக் கூய்த், தன்                 

கோடு புய்க்கல்லாது, உழக்கும் நாட! கேள்;  

பொருள்:

*கயிலையிலே சிவ தனுசுவை வளைத்த ஈர சடையை உடைய அந்தணனாகிய சிவன், உமையவளொடு அமர்ந்து இருந்தான். அப்போது பத்து தலைகளை உடைய, அரகர்களின் தலைவன் இராவணன், வளை பொலிந்த தன் கைகளை அடியில் புகுத்தி  பின் அந்த மலையை எடுக்க முடியாமல் (அரற்றி) உழல்பவன் போல், 

புலியின்  உருவம் என ஏமாறும் வண்ணம் பூக்கள பூத்திருந்த வேங்கை  மரத்தின் அடியை சினத்தால் குத்திய மதம் கொண்ட யானை, நெடிய இருண்ட மலையகம் முழுதும் ஒலிக்குமாறு கூவி தன் கொம்புகளை மீட்டு எடுக்க முடியாமல் உழக்கும் நாட்டை உடையவனே! கேட்பாயாக!

ராவணன் தன் அகந்தை எல்லை மீறிப் போகவே சிவனும் உமையும் வசிக்கும் கயிலை மலையையே தூக்க முயற்சி செய்து , கைகள் நசுங்கவே, அலறிக்கொண்டு , கெஞ்சிக் கேட்டு விடுதலை பெற்றான். இதைத் தேவாரம் பாடிய  திரு ஞான சமம்பந்தர் ஒவ்வொரு பதிகத்தின் இறுதியிலும் பாடி இருக்கிறார். அவருக்கு  முன்னரே கபிலர் பாடியதில் வியப்பில்லை.

Xxxx

முருகனின் முத்து மாலை

மற்றொரு  புலவருக்கு வானத்தில் பறவகைகளைக் கண்டவுடன் முருகன் ஞாபகம்  வந்துவிடுகிறது . குமரியிலிருந்து பறவைகள் இமய மலைக்குக் குடியேறுவதை  தமிழர்கள் நன்கு அறிவார்கள். இது ஆண்டுதோறும் நடைபெறும்  பற வைகள் குடியேற்றம் ஆ கம்.இது .

நெடுவேள் மார்பில் ஆரம் போலச்

செவ்வாய் வானம் தீண்டி மீன் அருந்தும்

பைங் காற் கொக்கின் நிரை பறை  உகப்ப

……………………..

–அக நானூறு 120, நக்கீரர்

திருமுருகாற்றுப்படை பாடிய முருக பக்தரான  நக்கீரர் , வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் முருகனைப் பாடிப் பரவுவது இயற்கைதான். அவர் சொல்கிறார் —

பெரும்புகழுடைய  முருகப் பெருமானின் மார்பில் சூட்டப்பட்ட முத்துமாலை போலச் சிவந்த வானத்தில் பொருந்தி, மீனை உண்ணும் பசிய காலை உடைய கொக்கினம் , வரிசையாய்ப் பறந்து உயர, பகற்பொழுதைப் போக்கி ஞாயிறு மேற்குத் திக்கில் மறைய மலையை  அடைந்தது.

பறவைகள் குடியற்றத்தைக் காணும் பறவை இயல் ஆர்வலர்களுக்கு இந்தப் பாடலின் பொருள் தெள்ளிதின் விளங்கும் ; வானத்தைப் பார்த்தால் வெள்ளை நிறக் கொக்குகள் ,அரை வட்ட வடிவில் , ஆங்கில எழுத்தான  V  வடிவில் , பறக்கும் . அதை முத்துமாலை என்று வாருணித்தது பொருத்தமே.

To be continued…………………………….

Tags- புராணம், சங்க இலக்கியம், இந்து மதம்,கடவுள், முருகன் , முத்து மாலை, ராவணன், கயிலை மலை

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: