சங்கத் தமிழ் இலக்கியத்தில் புராணக் காட்சிகள் -2 (Post No.11,304)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,304

Date uploaded in London – 28 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சங்கத் தமிழர்கள் இந்து மத நூல்களைக் கரைத்துக் குடித்துவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும். பழந்  தமிழ் நூல்களில் அமிர்தம்,  இந்திரன் என்பனவெல்லாம் தினசரி பேச்சுவழக்கில் கூட இருந்திருக்கிறது. இது எப்படித் தெரிந்தது என்று நீங்கள் வியக்கலாம். அம்ருத என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லை மூன்று உச்சரிப்புகளில் (three different spellings) 40 இடங்களில் பழந்  தமிழர்கள் பயன்படுத்துகின்றனர். உலகப் புகழ் பெற்ற திருவள்ளுவர் அவர்தம் திருக்குறளில் அமிழ்தம் (குறள்  64, 720, 1106 ) என்றும் சாவா மருந்து என்றும்  (குறள் 82) பயன்படுத்துகிறார். திருவள்ளுவர் இந்திரன் என்ற சொல்லை குறள் 25லும்  பயிலுகிறார்.

சிலர் இது தமிழ்ச் சொல்லாக இருக்கலாம் ஏனெனில் தொல்காப்பியரும் இந்திரன், வருணனைத் தமிழ்க் கடவுளராகக் காட்டுகிறார் என்று சொல்லிப் பசப்பினர் . ஆனால் அவர்களின் சந்தேகத்துக்கு அதற்கும் முன்னரே புறாநானூறு விடை கூறிவிட்டது   திருவள்ளுவருக்கு முன்னர் வாழ்ந்த கடலுள் மாய்ந்த இளம் பெரு வழுதி என்ற பாண்டிய மன்னன், தமிழர்கள் இந்திரன் அமிழ்தம் கிடைத்தால்கூட தனியே சாப்பிடாமல் பகுத்துண்டு உண்ணுவர் என்று பாடிவிட்டார்.

“உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்

அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்

தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்;

துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்

புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்

 உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;

அன்ன மாட்சி அனைய ராகித்

தமக்கென முயலா நோன்தாள்

பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.”—புறநானூறு 182

XXX

இப்போது மேலும் சில புராணக் காட்சிகளைக் காண்போம் .

நீல நிற யமுனை நதியும், வெள்ளை நிற கங்கை நதியும் கலப்பதை உலகப் புகழ் பெற்ற காளிதாசன் வருணிப்பதை (மேகதூதம் 51, 61; ரகு வம்சம்  13-54/57) நினைவுகூறும்  வகையில் கபிலர் பாடுகிறார் :

மாயோன் அன்ன மால்வரைக் கவா அன்

வாலியோன் அன்ன வெள்ளருவி – நற்றிணை 32, கபிலர்

பொருள் :

“நீல நிற மலை கிருஷ்ணன் போல உள்ளது ; அங்கே வானிலிருந்து விழும் வெண்ணிற அருவி பலராமன் போல உள்ளது. காளிதாசன் (கி.மு .முதல் நூற்றாண்டு) , கபிலருக்கு முன்னால் வாழ்ந்தவன். அவனும் வெள்ளை, நீல நிறத்தைக் கண்டவுடன் இப்படி பலராமன்- கிருஷ்ணன்”  என்று ஒப்பிடுகிறான்

கிருஷ்ணன் – கோபியர் கதை தமிழர்களுக்கு அத்துபடி என்று காட்டும் இன்னும் ஒரு கவிதையும் சங்கத் தமிழ் நூல்களில் காணக்கிடக்கிறது :

அகநானூறு 59, பாடியவர் மருதன் இள நாகன்

தண் கயத்து அமன்ற வண்டு படு துணை மலர்ப்

பெருந் தகை இழந்த கண்ணினை, பெரிதும்

வருந்தினை, வாழியர், நீயே! வடாஅது

வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை,

அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர் 5

மரம் செல மிதித்த மாஅல் போல,

புன் தலை மடப் பிடி உணீஇயர்அம் குழை,

நெடு நிலை யாஅம் ஒற்றி, நனை கவுள்

படி ஞிமிறு கடியும் களிறே தோழி!

சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல்,10

சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து,

அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை,

இன் தீம் பைஞ் சுனை ஈரணிப் பொலிந்த

தண் நறுங் கழுநீர்ச் சேண் இயற் சிறுபுறம்

தாம் பாராட்டிய காலையும் உள்ளார் 15

வீங்கு இறைப் பணைத் தோள் நெகிழ, சேய் நாட்டு

அருஞ் செயற் பொருட்பிணி முன்னி, நப்

பிரிந்து, சேண் உறைநர் சென்ற ஆறே.

—–அகநானூறு 59, பாடியவர் மருதன் இள நாகன்

மருதன் இள நாகன் பாடிய இந்தப் பாடலில் இரண்டு புராணச் செய்திகள் உள்ளன. பாகவத புராணம்கந்த புராணச் செய்திகளை இங்கே காண்கிறோம்.

பொருள் :

“வடக்குத் திக்கில் நீர்வளம் பொருந்திய யமுனை ஆற்றின் மணலை உடைய அகன்ற துறையில் நீராடிய யாதவர் குல மகளிர் குளிர்ந்த தழையை உடுத்திக்கொள்ளக் குருந்த மரம் வளையும்படி மிதித்துத் தந்தான் கண்ணன் . அவனைப்  போல ஆண்  யானையானது, தனது துணைவியான பெண் யானை உண்பதற்காக அழகிய தளிர்களை உடைய  ‘யா’ மரத்தை வளைத்துத் தருகிறது”.

இந்தக் கதையின் முழு வடிவம் சம்ஸ்க்ருத நூலில் உள்ளது.  யமுனை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த  ஆயர் / யாதவர் மகளிரின் ஆடைகளை கண்ணன் விளையாட்டாக எடுத்து மரத்தின் மீது போட்டுவிட்டான். அப்போது கண்ணனின் அண்ணன் பலராமன் தூரத்தில் வந்து கொண்டு இருந்தான். அவன் மிகவும் கறாரான (Very Strict man) பேர்வழி ; அண்ணனுக்குப் பயந்த கண்ணன், பெண்களுக்கு ஆடை கிடைக்குமாறு குருந்த மரத்தை வளைத்துக் கொடுத்தான்

‘யா’ மரத்தின் தழைகளைத் தின்னுவதற்கு வசதியாக பெண் யானைக்கு, ஆண் யானை வளைத்துக் கொடுத்ததற்கு மிகவும் பொருத்தமான உவமை இது. தமிழர்கள், பாகவத புராணத்தை 2000 ஆண்டுகளுக்கு முன்னர், தினமும் படித்திருப்பார்கள் போலும் .

இதை நான் எழுத்துவதற்குக் காரணம் என்னவென்றால் யமுனை நதியைத் தொழுநை என்று அழைக்கிறார் மருதன் இளநாகன். வடக்கேயுள்ளவர்கள் ஜமுனா என்பர். அது எப்படி தமிழில் தொழுனை ஆனது என்பதை உரைகார்கள் விளக்கவில்லை.ஆனால் அப்படியே பேசசு வழக்கில் சொல்லியிருக்கவேண்டும்

தொழு என்றால் மாட்டுக் கொட்டில் . யமுனைக்கரையில் கண்ணன்  வளர்ந்த இடம் மாட்டுக் கொட்டில் தான். தொழு என்றால் தொழுதல் , வணங்குதல் என்ற பொருளும் உண்டு. கண்ணனை கோபியர்கள் தொழுத நதி என்றும் பொருள் சொல்லலாம். ஆனால் இந்த கோபியர்- கண்ணன் சம்பவம் சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவையில் மேலும் விரிவாகவே இடம்பெறுகிறது. அங்கும் இளங்கோ அடிகள், தொழுநை என்றே குறிப்பிடுகிறார்.

ஆய்ச்சியர் குரவை

கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன் 1

இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்

கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ;

பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன் 2

ஈங்குநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்

ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ;

கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவன் 3

எல்லைநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்

முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ;

தொழுனைத் துறைவனோ டாடிய பின்னை

அணிநிறம் பாடுகேம் யாம்;

இறுமென் சாயல் நுடங்க நுடங்கி 1

அறுவை யொளித்தான் வடிவென் கோயாம்

அறுவை யொளித்தான் அயர அயரும்

நறுமென் சாயல் முகமென் கோயாம்;

வஞ்சஞ் செய்தான் தொழுனைப் புனலுள் 2

நெஞ்சங் கவர்ந்தாள் நிறையென் கோயாம்

நெஞ்சங் கவர்ந்தாள் நிறையும் வளையும்

வஞ்சஞ் செய்தான் வடிவென் கோயாம்;

XXX

தொழுநைத் துறைவன் ராதா என்ற பெயருடைய நப்பின்னையுடன்  ஆடிய காட்சியையும் கண்ணனின் ஏனைய திருவிளையாடல்களையும் ஆய்ச்சியர் குரவை –யில்  படம்பிடித்துக் காட்டுகிறார்  இளங்கோ.

XXX

மீண்டும் அகநானூறு பாடல் 59க்கு வருவோம். இங்கு கந்த புராணச்  செய்தியையும் மருதன் இளநாகன் நமக்கு வரைந்து காட்டுகிறார்.

சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல்,10

சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து,

அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை,

இந்த வரிகளின் பொருள்

சூர பன்மனையும் அவனுடைய உறவினரையும் அழித்த, ஒளி பொருந்திய இலை போன்ற, நீண்ட வேலை உடைய சினம் மிக்க முருகப் பெருமானின் குளிர்ந்த திருப்பரங்குன்றம் . அது நல்லந்துவனால் பாடப்பட்டது

ஆக , அகநானூற்றின் காதல் கவிதையில் கூட இரண்டு புராணச்  செய்திகளை நமக்கு அளித்துவிட்டார் இளநாகன்.

—தொடரும்

TAGS- ஆய்ச்சியர் குரவை, சூரபன்மன் , தொழுநை, கண்ணன், நப்பின்னை , ராதா, கோபியர், பாகவதம், கந்த புராணம் , சங்க இலக்கியம், யாதவர் , மகளிர் புராணச் செய்திகள் 2

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: