விநோத விடு(டி)கவிப் பொக்கிஷம்!  (Post No.11,303)  – Part 1   

WRITTEN BY B.KANNAN, DELHI

Post No. 11,303

Date uploaded in London – 28 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

                            விநோத விடு(டி)கவிப் பொக்கிஷம்!                

            Written By B.Kannan, New Delhi

சமீபத்தில் நாட்டுப்புற இலக்கிய நூல்களைப் படிக்கத் தேடுகையில் தற்செயலாக இரு சிறியப் புத்தகங்களைக் காண நேர்ந்தது. அவையிரண்டும் நாம் பாட்டிமார், கொள்ளுப் பாட்டிமார்களிடமிருந்துக் கற்றுக் கொண்டதும், மூளைக்கு வேலைக் கொடுக்கக் கூடியதுமான, புதிர் இலக்கியத்தைப் பற்றியதுதான்!

“அம்மாடி என் செல்லம், டேய் பேராண்டி! நான் இப்போ புதிர் போடுறேன்,கண்டுப் பிடிக்கிறீங்களா? கடகடா,குடுகுடு நடுவிலே பள்ளம், அக்காள் வீட்டுக்குத் தங்கச்சி போகலாம், தங்கச்சி வீட்டுக்குள் அக்காள் நுழைய முடியாது!, ஆள் இறங்காத குளத் திலே இறங்கி சுற்றிச் சுற்றிக் கும்மாளமிடுது!’ என்ன சொல்லுங்க பார்க்கலாம்என்று வாய்நிறையப் பற்கள், நமுட்டுச் சிரிப்புடன் நம்மைக் கேள்வி கேட்டப் பெரியவங் களை மறக்க முடியுமா, என்ன? ( விடை: கல் உரல், படி-ஆழாக்கு, மத்து)

122 புதிர் வெண்பாக்கள் கொண்ட விநோத விடிகதை என்ற முதல் புத்தகம் ஆதிபுரி இரத்தினவேலு முதலியார் அவர்களால் 1898-ம் ஆண்டு, தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தால் வெளிடப் பட்டுள்ளது. இதன் திருத்தப்பட்ட மறுபதிப்பு, விவேக விளக்க விநோத விடுகவிப் பொக்கிஷம் என்ற தலைப்பில் த. குப்புசாமி நாயுடு அவர்களால் 1938-ல் பிரசுரமானது.ஒவ்வொரு செய்யுளும் உற்சாகமுடன் நம்மைச் சிந்திக்க வைக் கிறது. அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டச் சில புதிர்களைப் பார்க்கலாம்…….

முதலில், மேற்கண்ட நூல்களின் தலைப்பிலுள்ள ‘விடி’, ‘விடுகவி(தை)’ என்பதற்கு இடையேயுள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்வது நல்லது. அச்சில் நூல்கள் வருவ தற்கு முன் வாய்மொழி இலக்கியங்களே, அதாவது, கதை, பாடல், பழமொழி, விடு கதை என்பவை, புழக்கத்தில் இருந்தன. இவற்றுள் அறிவூட்டுதலையும், அறிவுநுட் பத்தை வளர்ப்பதிலும் பெரும்பங்காற்றியவை விடிகளாகும். உறவுமுறை, உயிரி னங்கள், அன்றாடம் புழக்கத்திலிருக்கும் பொருட்கள் என அனைத்துக் கருத்துருவி லும் விடிகள் விடுக்கப்படுகின்றன. உடனுக்குடன் ஓரிரு சொல்லில் விடுக்கும் புதி ருக்குப் பதில் பெறப்படுவது விடிகள் எனப்படும். ஒரு பொருளின் பெயரை மனதில் இருத்தி, அதன் குணங்களை வரிசையாகச் சொல்லி, அப்பொருள் எதைக் குறிக்கிறது என்று கேட்பதே இதன் நோக்கம்.

(உ.ம்.) ‘ஓடியாடி வேலை செய்வாள், பின்னர் மூலையில் ஒதுங்கிக் கிடப்பாள்’ (துடைப்பம்).

‘தாடிக்காரன், கொண்டைக்காரன் சமையல் அறைக்குள் சென்றால் வெள்ளைக்காரன்’

(தேங்காய்). உடைபட்டால் வெண்ணிறமாகத் தானே தோற்றமளிக்கும்!

‘அச்சு இல்லாத சக்கரம், அழகு காட்டும் சக்கரம், அது என்ன? (வளையல்)

இதிலிருந்து சற்றுமாறுபட்டு கேட்கப்படும் கேள்வியின் பதில் ஒரு கதையாக அமை யுமானால் அது விடுகதை வகையாகிறது. இதில் கேள்வி கேட்கப்பட்டவர்கள் தான் பதில் கூறமுடியும். (உ.ம்) அக்பர்- பீர்பல், கிருஷ்ணதேவராயர்-தெனாலிராமன், வேதா ளம்-விக்கிரமாதித்தன்,போஜ ராஜன்-பதுமைப் புதிர்க் கதைகள் எனலாம். இதற்குரிய ஒரு சுவாரசியமானச் சொல்லாடல் நிகழ்வைக் கட்டுரை முடிவில் காணலாம்.

இப்போது நாம் புத்தகத்தில் சொல்லப்படும் சில விடிகளுக்கு விளக்கம் காண்போம்….

எதையும் ஆரம்பிக்கும் முன் பிள்ளையார்சுழி போட வேண்டுமல்லவா? எனவே அந்தக் காப்புச் செய்யுளிலிருந்தே சுவாரசியம் சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. விநாயகரைப் பற்றிய விளக்கம், இதோ……

வருங்காலம் நிகழ்ந்துரைப்பான் சாஸ்திரியல்ல

வாங்கியுண்ண வழிபார்ப்பான் முடவனல்ல

 சுரும்புமுகர் மலர்முடிப்பான் சுதனுமல்ல

     துகளில்பசும் புல்சுமப்பான் தோட்டியல்ல

 பருமனுடல் நீறணிவான் பரமனல்ல

     பலரில்லம் புசிக்கும்பர தேசியல்ல

 பொருந்துவனக் கிளிபோன்ற மொழியினாளே

     புகழுண்டாம் இக்கதையைப் புகலுவாயே.

{எதிர்காலம் நலமுற வழி காட்டுவான், சோதிடன் அல்ல, உட்கார்ந்த இடத்திலிருந்தே சாப்பிடக் கிடைக்குமா எனப்பார்ப்பான், நொண்டியல்ல,

வண்டு முகரும் மலரை அணிவான் (மலர்க்கணை ஏந்திய மன்மதன்) மகனுமல்ல,

தன் மேல் பசும்புல் (அருகம்) சுமப்பான், தோட்டக்காரனல்ல, பருத்த உடலில் சாம் பல் நீறணிவான் முக்கண்ணன் அல்ல, பலரது வீட்டிலும் விரும்பிச் சாப்பிடுவான், பரதேசி அல்ல, அப்படியானால், கிள்ளை மொழி பேசும் பெண்ணே, பொருத்தமான பதில் கூறுவாய்! )

இதோ இவரை நமக்கு நன்றாகத் தெரியுமே!

பார்த்துமுகம் பல்காட்டுங்கண் ணாடியல்ல,

   பசங்களிடம் சேட்டைசெயும் வேசியல்ல,

கூத்தாடிப் பணம் பறிக்கும் தாசியல்ல,

   குந்திசற்று மிருக்காது நாயுமல்ல,

போத்துகின்ற கொடியாகும் பூமியல்ல,

போர்புரிந்து ஜெயமடையும் விஜயனல்ல,

சாத்துகின்ற விக்கதையின் பயனைச் சொன்னால்

சரணமென்றே அவரடியைச் சாரலாமே!

{ பார்த்தால் மூஞ்சி, பல் காட்டும், கண்ணாடியல்ல, பசங்களிடம் வம்பு செய்யும் வேசியல்ல, அரங்கமேறி காசு கேட்கும் கணிகையுமல்ல, ஓரிடத்தில் சும்மா யிருக்காது, நாயுமல்ல, கிளையில் தொங்கும் கொடியுமல்ல, சண்டையிட்டு ஜெயிக்கும், பார்த்தன் அல்ல, இவர் யார் என்று சொன்னால் அவர் பாதங்களைச் சரணடையலாம்! }  ( மந்தி, குரங்கு)

இதைக் கண்டால் மயங்காதவர் உண்டோ?

நீலக்கண் ணாடிகொள்ளும் கவரையல்ல,

   நேர்த்தியுடன் தான்விரிக்குங் கடையுமல்ல

கால்தூக்கி நடனமிடுங்  காளியல்ல

   கால்கொண்டே பாம்பாட்டும் ஜோகியல்ல

மேல்நிறைந்த பொட்டுமுண்டும் வானமல்ல

மேன்மைமிகக் கொண்டாடும் வேந்தனல்ல

பாலுக்கு நிகரான மொழியினாளே

பத்மினியே இக்கதையைப் பகருவாயே!

{ சுவரில் மாட்டிவிட்ட நீலக் கண்ணாடியல்ல, பாங்காகப் பொருட்களைப் பரத்தி வைக்கும் கடையுமல்ல, ஒருகால் தூக்கி நாட்டியமாடும் காளியுமல்ல, கால்களைக்

கொண்டே பாம்பை வசப்படுத்தும், பாம்பாட்டியுமல்ல, மேனிமுழுதும் கண்பொட்டு உண்டு, ஆகாயமல்ல, தேவேந்திரனுமல்ல, மேன்மைமிகு மருதநில வேந்தனல்ல (இந்திரன்), பெண்ணே, பத்மினியே விடைசொல்லுவாயே!} (வண்ணத் தோகை மயில்)

இன்னுமொன்று….

மண்மிதித்து மேற்றுளைக்கும் குயவனல்ல

மதித்துவயல் நெல்காக்கும் மனிதனல்ல

கண்ணிரண்டுங் குழிந்துநிற்குங் குருடனல்ல

கற்கோட்டைக் குள்ளிருக்கும் வேந்தனல்ல

எண்ணமுடன் பகைஞர்பசி நோயைத் தீர்ப்பான்

ஈரைந்து கரமுடையோன் பரமனல்ல

பெண்ணணங்கே இக்கதையின் சாரமாய்ந்து

பேசிடிலோ ஆசிரியப் பெயருண்டாமே!

{ மண்சேற்றை மிதித்துப் பிசைந்து, துளையிட்டு மண்பாண்டம் செய்யும் குயவ னல்ல, வயற் கரையில் மறைந்திருந்துப் பயிர்க் காக்கும் விவசாயியல்ல, இரண்டு கண்களும் குழிவாயிருக்கும், குருடனல்ல, உறுதியானக் கற்கோட்டையில் இருக்கும் அரசனல்ல, தன் பகைவனின் (மனிதன்) பசியைத் தீர்த்து வைப்பான், பத்து கைகள் உண்டு ஆனால் தெய்வமல்ல, இதன் பொருள் கண்டு பதில் கூறுவாய், பெண் அணங்கே! }  (நண்டு)

இதை வேறுவிதமாக கிராமப்புறங்களில் கூறுவதுமுண்டு

எட்டுக்கால் ஊன்றி, இரண்டு கால் படமெடுக்க, வட்டக் குடை பிடித்து வாறாராம் வன்னியப்பு! (சிற்றரசன்).

 to be continued……………………………..

tags- B.Kannan, விநோத, விடு(டி)கவி ,பொக்கிஷம்,

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: