கடவுளைக் காட்டு! – 2 (Post No.11,305)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,305

Date uploaded in London – –    29 SEPTEMBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கடவுளைக் காட்டு! – 2

ச.நாகராஜன் 

1

கடவுளைக் காட்டு

‘கடவுள் இருக்கிறார் என்றால் எனக்குக் காட்டு’ என்ற நாத்திகவாதியின் கூற்றிற்கும் கூட காலம் காலமாகப் பலரும் பதில் அளித்து வந்துள்ளனர்.

‘பார்க்க வேண்டிய ஒருவனுக்குத் தகுதி இருந்தால் அவன் பார்க்க முடியும்’ என்பது தான் எளிய பதில்!

கால்குலஸ் போட வேண்டுமெனில் அதற்கான அடிப்படை கணித அறிவு வேண்டுமல்லவா?

அறுவை சிகிச்சை செய்ய ஆசைப்படும் ஒருவனுக்கு சர்ஜனாக ஆக வேண்டுமெனில் அதற்கான படிப்பையும் அனுபவத்தையும் பெற்றால் தானே அது முடியும்?

தேனின் சுவை என்ன என்று கேட்பவனுக்கு விளக்கம் எத்தனை பக்கங்களில் தந்தாலும் அவனால் உணர முடியுமா?

சுவைத்துப் பார்த்தால் தானே தேனின் சுவையை அவன் அறிய முடியும்.

‘பக்குவிகள் அறிய முடியும்’ என்று ஒரு சிறிய பதிலை மெய்ஞானிகள் ‘கடவுளைக் காட்டு’ என்பவனுக்குப் பதிலாக அளிக்கின்றனர்.

2

கடவுளைக் கண்டதுண்டா?

ஸ்வாமி விவேகானந்தர் இராமகிருஷ்ண பரமஹம்ஸரை, “நீங்கள் கடவுளைக் கண்டதுண்டா?” என்று கேட்டார்.

“ஆம், பார்த்திருக்கிறேன்” என்று பதில் சொன்னார் பரமஹம்ஸர்.

“அப்படியானால் அவரை எனக்குக் காட்டுங்கள்” என்றார் விவேகானந்தர்.

அவரை அருகிலிருந்த கங்கை ஆற்றுக்கு இழுத்துச் சென்ற பரமஹம்ஸர் கங்கை நீரில் ஆழ்த்தினார்.

மூச்சு முட்டியது விவேகானந்தருக்கு.

ஒரு வழியாக விவேகானந்தரின் தலையை வெளியில் எடுத்தார் பரமஹம்ஸர்.

திகைத்துப் போன விவேகானந்தர் பரமஹம்ஸரைப் பார்த்தார் – ‘இப்படிச் செய்யலாமா?’ என்று.

“நீரில் மூழ்கி இருந்த போது என்ன நினைத்தாய்?” கேள்வியைக் கேட்டார் பரமஹம்ஸர்.

“உயிர் பற்றிய நினைப்பு ஒன்று தான் இருந்தது” என்றார் விவேகானந்தர்.

இது போல ஏகாக்ர சிந்தனையுடன் இறைவனை நினை; அவர் உனக்குக் காட்சி அளிப்பார் என்றார் பரமஹம்ஸர்.

விவேகானந்தருக்குப் புரிந்தது.

அவர் பரமஹம்ஸர் காட்டிய வழியில் சென்றார்; கடவுளைக் கண்டார்.

3

இறைவன் எவ்வளவு தூரத்தில் இருக்கிறான்?

இறைவன் இருக்கிறான் என்றால் அவன் எவ்வளவு தூரத்தில் இருக்கிறான் என்று மன்னன் ஒருவன் தன் குருவைக் கேட்டான்.

உடனே அவர், “அவன் கூப்பிடு தூரத்தில் தான் இருக்கிறான்!” என்று பதில் கூறினார்.

ஒருமுனைப்போடு ‘ஆதிமூலமே’ என்று கூக்குரலால் கூப்பிட்ட கஜேந்திரனுக்கு அந்தக் கணத்திலேயே காட்சி அளித்து அவனைக் காப்பாற்றினான் இறைவன்.

“இதயகமல வாஸா! ஹிருஷிகேஸா” என்று அலறிய திரௌபதிக்கு ஆடை அளித்து அந்தக் கணமே காப்பாற்றினான் கண்ணன்.

ஆக அவன் கூப்பிடு தூரத்தில் தானே இருக்கிறான். இதயத்தில் உறைபவனே என்றாள் திரௌபதி. கூப்பிடு தூரத்தில் இருந்த அவன் உடனே வந்து அவளைக் காத்தான்!

மன்னன் புரிந்து கொண்டான்; எப்படி இறைவனைக் கூப்பிட வேண்டும் என்றும் அறிந்து கொண்டான்!

4

கடவுளை எப்படிக் காண்பதுஇப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான்?!

மன்னன் ஒருவன் தன் மந்திரியிடம், ‘கடவுளை எப்படிக் காண்பது, அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான். எனது இந்த இரண்டு கேள்விகளுக்கும் சரியான விடையை நாளை அரசவையில் அனைவருக்கும் முன்னாலும் சொல்ல வேண்டும். இல்லையேல் தண்டனை உண்டு’ என்றான்.

கவலைப்பட்ட மந்திரி வீட்டிற்கு வந்து சோகமாக இருந்தான்.

அவனது கவலையைப் பார்த்த  மந்திரியின் சிறுவயது மகன் விஷயம் என்ன என்று கேட்டு மன்னனின் கேள்விகளை அறிந்து கொண்டான்.

‘இதற்கு நானே பதில் சொல்வேனே’ என்ற அவனை மந்திரி ஆச்சரியத்துடன் பார்த்தார்.

மறுநாள் அரசவை கூடியது. மன்னன் மந்திரியைப் பார்த்தான்.

மந்திரியோ தன் மகனைக் காட்டி, “இந்த இரண்டு கேள்விகளும் பெரிய கேள்விகள் இல்லை மன்னா! என் மகனே பதில் கூறுவான்” என்றார்.

“இந்தச் சிறுவனா?” என்று அதிசயித்த மன்னன் அவனைப் பார்த்தான்.

“மன்னா! எனக்குத் தயிரைக் கொண்டு வரச் சொல்லுங்கள்” என்றான் சிறுவன்.

பானையில் தயிர் வந்தது.

அதைக் காட்டிய சிறுவன், ‘இதோ இப்போது இது கடையப் படப் போகிறது’ என்றான்.

தயிரைக் கடைந்தவுடன் வெண்ணெய் மேலே மிதந்து வந்தது.

“மன்னா! இதோ இந்த வெண்ணெய் உள்ளே தானே இருந்தது? எப்படி வந்தது இப்போது?” என்றான்.

“கடைந்தவுடன்” என்றான் மன்னன்.

“அதே போலத் தான் இறைவனும். அனைவரின் உள்ளேயும் இருக்கிறான். முறுக வாங்கிக் கடையுங்கள். உங்களுக்குத் தானே வெளிப்படுவான்” என்றான் சிறுவன்.

மன்னன் முகம் மலர்ந்தது.

‘அடுத்த கேள்விக்கு பதில்?’ என்றான் மன்னன்.

“மன்னா! நான் குருஸ்தானத்தில் இருந்து அல்லவா இதற்குப் பதில் சொல்ல வேண்டும். நீங்கள் உங்கள் சிம்மாசனத்தை விட்டு இறங்கி இங்கே என் ஸ்தானத்தில் அமருங்கள். உங்கள் இடத்தைத் தாருங்கள்” என்றான்.

மன்னனும் இணங்கினான். அவன் கீழே அமர சிறுவன் சிம்மாசனத்தில் அமர்ந்தான்.

காவலாளிகளைக் கூப்பிட்டு தனக்கு பணிவிடைகளைச் செய்யச் சொன்னான் சிறுவன்.

அவர்களும் மன்னனின் சிம்மாசனத்தில் அமர்ந்த அவனுக்கு அவனது ஆணையின்படி அனைத்தும் செய்தனர்.

“மன்னா! இதைத் தான் இறைவன் இப்போது இங்கு செய்து கொண்டிருக்கிறான். நீங்கள் மன்னர். நானோ சிறுவன். ஆனால் உங்கள் இடத்தை எனக்குக் கொடுத்து என் இடத்தை உங்களுக்குக் கொடுத்து அவரவர் முன்பு செய்த வினைக்கு ஏற்ப பலன்களைத் தருகிறான். புரிகிறதா, உங்களுக்கு?” என்றான் சிறுவன்.

மன்னன் விக்கித்துப் போனான்.

அரசவையில் உள்ள அனைவரும் மேதையான அந்த சிறுவனைப் பாராட்டினர்.

அன்றிலிருந்து அவனை அரசவையில் தன் மந்திரிகுழாத்தில் ஒருவனாக அமர்த்திக் கொண்டான் மன்னன்.

இந்த நீதிக் கதை உணர்த்துவது தான் இறைவனைப் பற்றிய உண்மை!

5

காண்பதற்கு எளியன்!

வாதுக்களாலும் பற்பல ஏதுக்களாலும் இறைவனை அறிய முடியாது.

தூய்மையான உள்ளத்துடனுன் அன்புடனும் தகுந்த செய்கைகளினால் மட்டுமே இறைவனை அறிய  முடியும் காண முடியும்!

அப்போது அவன் எளியன்!

***

 புத்தக அறிமுகம் – 71

விஞ்ஞானத்தை வியக்க வைக்கும் மெய்ஞானம்!

நூலில் உள்ள அத்தியாயங்கள்

1. ஹான்ஸ் ஜென்னி   விளக்கும் மந்திர மகத்துவம்!                     2. ஹிந்து மதம் கூறும் பிரபஞ்சத்தின் வயது!

3. ஹிந்து மதம் ஒரு மதமல்ல, ஒரு வாழ்க்கை முறை!

4. அணுத்துகள் விஞ்ஞானிகள் வியக்கும் நடராஜ நடனம்!

5. விஞ்ஞானிகள் வியக்கும் மந்திர மகத்துவம்!

6. விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்!

7. ஓம் பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சி தரும் புது உண்மைகள்!

8. ஷ்ரோடிங்கரின் பூனை விளக்கும் பிரம்ம ரகசியம்!

9. நாஸா வியக்கும் சம்ஸ்கிருத மொழி!

10. ஆரேகானில் தோன்றிய அதிசய ஶ்ரீ யந்திரம்

11. விஞ்ஞானிகள் வியக்கும் வித்தக சித்தர் கணம்!

12. இறைவன் இருக்கிறான் உயிரியல் தரும் ஆதாரங்கள்!

13. அகிலாண்ட கோடி பிரம்மாண்ட – மல்டிவர்ஸ் – நாயகியே சரணம்!

14. க்வாண்டம் பிஸிக்ஸ் அடிப்படையில் வெள்ளையர் வியந்த அருள்

   வெள்ளம்!

15. பெருவிலிருந்து வந்த தம்பதியர் கண்ட ரமணர்!

16. கணிதத்தின் மூலம் கடவுள்!

17. மூளை ஆற்றலை ஊக்குவிக்கும் தோப்புகரணம்!

18. அற்புத புருஷரைச் சந்தித்து ஆனந்தம் அடைந்த அதிசய சித்தர்

**.

நூலைப் பற்றிய சிறு அறிமுகக் குறிப்பு:-

வளர்ந்து வரும் அறிவியல் நாளுக்கு நாள் நமக்குத் தரும் புத்தம் புது உண்மைகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன! ஆனால் இதே உண்மைகளை மெய்ஞானிகள் தங்கள் அனுபவத்தாலும் தவத்தாலும் முன்பே கூறி இருப்பதை அறியும்போது நமக்குப் பிரமிப்பு இரட்டிப்பாகிறது. ‘ஞான ஆலயம்’ மாத இதழில் விஞ்ஞானத்தையும் மெய்ஞானத்தையும் ஒப்பிட்டு எழுதப்பட்ட தொடர் இப்பொழுது நூலாக! இறையன்பர்களுக்கு ஆன்மிக விருந்தாகவும் ஆன்மிகத்தை நம்பாதவர்களுக்கு அதை அறிவியல் நோக்கோடு விளக்கும் அறிவு விருந்தாகவும் ஒருசேரத் திகழும் இந்த நூல் இரு தரப்பினருமே கண்டிப்பாகப் படிக்க வேண்டிய ஒன்று!

*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘விஞ்ஞானத்தை வியக்க வைக்கும் மெய்ஞானம்!’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

**

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: