
WRITTEN BY B.KANNAN, DELHI
Post No. 11,306
Date uploaded in London – 29 SEPTEMBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Part Two
மின்சாரப் பம்ப் செட் புழக்கத்தில் வருவதற்கு முன் கிராமங்களில் வயலுக்கு நீர் பாய்ச்ச ‘ஏத்தம்’ உபயோகப்பட்டது. இளங்காலையில் விவசாயி “மூங்கில் இலை மேலே, தூங்கும் பனிநீரே! தூங்கு பனிநீரை வாங்கு கதிரோனே!” என உல்லாசமாகப் பாடியவாறே ஏற்றம் இறைப்பர். அதை விளக்கும் ‘விடி’ ஒன்றை ஆசிரியர் தரும் அழகே, அழகு!
சீருண்ட மங்கையர்க்கு வளையல் விற்ற
செம்மலுறை திருமதுரா புரிநன்னாட்டில்
நீரேறத் தலையாகும் வாலுங்கூழை
நிற்பதுகீ ழிருகாலு மொருகான்மேலே
சீருடனே ஒருகாலில் நடக்கும்போது
திடமாக மெலிரண்டாட் சுமைசுமக்கும்
வாரணியுங் கொம்புமுள தோடிப்பாயும்
வண்மையுள விக்கதையை வழுத்துவீரே!
{ இறைவன் சொக்கநாதர் வளையல் வியாபாரியாகத் தோன்றி, அழகிய வணிகர் மகளிருக்கு வளையல்கள் விற்று, அணிவித்து, அவர்களின் சாபத்தைப் போக்கிய கூடல்மாநகரில் நடப்பதைப் பாருங்கள்! நீர் நிரப்பத் தலையாகும், குட்டை வாலு முண்டு,கீழே நிற்பதோ இருகால்,ஒருகால் மேலே, ஒழுங்காக அந்த ஒரு காலில் நடக்கும் போது, உறுதியுடன் எளிதாக இரண்டு ஆள் பாரம் சுமக்கும், தோல்பையி லிருக்கும் நீரும் செடிகளின் வேர் நோக்கிப் பாயும்!}

அடுத்து நாம் பார்க்கப் போவது ஒரு சாதாரண சின்னப் ‘பொடி’ விஷயமே! ஆம், ‘ஸ்நஃப் பவுடர்’, நுகட்காரம், நாசிப்பொடி, மூக்குப் பொடி என்றழைக்கப்படும் விநோதப் பழக்க வழக்கத்தைப் பற்றிதான். இது பரவலாக மேட்டுக்குடி மக்களி டமும், புலவர்கள், கலஞர்களிடமும் அவர்களின் அந்தஸ்துக்கு ஒரு முக்கிய அடையாளமாக 70, 80-ம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. டி.ஏ.எஸ்.ரத்தினம் பட்டணம் பொடியை மூக்கில் ஏற்றிக் கொள்ளாவிட்டால் மற்ற காரியம் எதுவும் சுமுகமாக நடந்தேறாது என்ற நிலை! அருகில் இருப்பவருக்குச் சங்கடம் கலந்த அருவருப்பு, துணி துவைப்போர்க்கு அவஸ்தை என்பதை இப்பிரியர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். கடைக்காரர் பிரத்தியேகமான பொடி ஜாடியிலிருந்து சன்ன மானத் துகளை, மிகவும் மெலிதான, நீண்ட, தலைப் பகுதியில் சின்னக் குழியுடனி ருக்கும் கரண்டியால் தட்டித்தட்டி (விழும் ஆனால் அதிகம் விழாத மாதிரியும் இருக் கும்!) மட்டைநார் இலையில் போடும் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்!
“பொடிக்கடி நாசித் துளையிலே புகுத்திப் பொங்கினேன், ஐயகோ!” என்கிறார் வள்ள லார் (திரு அருட்பா,அவா அறுத்தல், பாடல் 12). “சோமசுந்தரன் கடையில் செய்த பொடியினைப் போடா மூக்குப் புண்ணியம் செய்யா மூக்கு” என்று தமிழ் தாத்தா உ.வே.சா. அவர்கள் ஒரு கவிதையே பாடியுள்ளார். சாதாரணமானவர்களுக்குத் தும் மலைத் தரும்பொடி இங்கு புலவர் மூலம் புதிர் வெண்பாவைக் கொடுத்துள்ளதை ரசிக்கலாம்….
கிள்ளிக்கை பார்ப்பதுவுந் தேய்ப்பதுவு முண்டும்
கெம்பீர மாய்வறுத்து இடிப்பதுவுமுண்டும்
அள்ளிநறு நெய்சுண்ணஞ் சேர்ந்தாடலுண்டும்
அதற்கான ஜாடியதி லடைப்பதுண்டும்
கள்ளருந்துங் காளைடைப்போற் றிரிவதுண்டும்
கருதிமரி யாதைகெட்டு நடப்பதுண்டும்
புள்ளிமயிற் சாயலென்றும் நடையினாளே
பொற்கொடியே இக்கதையைப் புகலுவாயே!
{ ஒரு சிட்டிகைக் கையிலெடுத்துப் பார்த்துத் தேய்ப்பது உண்டாம், நன்றாக வறுத்து சன்னமாய் இடிப்பதுமுண்டாம், நறுமணமிக்க நெய், சுண்ணாம்பு சேர்ப்பது உண்டு, அதற்கான ஜாடியில் வைப்பதுண்டாம், கள் குடித்த காளையைப் போல் திரிந்துப் பிறரிடம் மரியாதைக் கெட்டு நடப்பது உண்டாம். மயில் போல் ஒய்யாரநடை பயி லும் பொற்கொடியே இதற்குப் பதில் என்ன?}
இதோ பொம்மலாட்ட நாட்டுப்புறக் கலைக்கு வீரவணக்கம் செலுத்துகிறார் புலவர்….
குலுக்குண்டு வலுக்கொண்டு குதிப்பதுண்டு
கொத்துமணி முத்துவடங் கொள்வதுண்டு
வலிப்புண்டு, சிரிப்புண்டு வாட்டமுண்டு
மருங்கிலுடை யணியொட்டி யாணமுண்டு
கலுக்குண்டு, பிலுக்குண்டு அலைப்புமுண்டு
கணிக்கவல்ல வேசியுங்கூத் தாடியல்ல
சிலைக்குநிகர்வடிவழகி தேவமாதே
தெளிவாயிக் கதைப்பயனைச் செப்புவாயே!
{ குலுக்கி-மினுக்கி, பலம் கொண்டுக் குதிக்கும், பல சாரம் கொண்ட மணிமாலை, முத்துச் சங்கிலி அணிந்திருக்கும், அழகு காட்டும்,சிரிக்கும், வாடும்,இடையில் ஒட்டியாணம் தரித்திருக்கும், பகட்டு-ஆடம்பரம் காட்டி வருந்தவும் செய்யும், கணிகை, வேசி, கூத்தாடியுமல்ல, அழகியத் தெய்வப் பெண்ணே, விடை பகருவாய்!}
படித்து, ரசிக்க இன்னும் பல புதிர் வெண்பாக்கள் உண்டு. கடைசியாக ஒரு விடு(டி) கதையுடன் முடிவு செய்வோம்…காஞ்சி மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஒருகள ஆய்வு ஆராய்ச்சியில் கிராம மக்கள் சொன்ன ஒரு விடு(டி)கதை……
ஊருக்கு ஒதுக்குப்புரமாக மாடு மேய்த்துக் கொண்டிருந்தப் பையன் அவ்வழியே சென்ற ஒரு பைராகியைப் பார்த்துக் கேட்கிறான்:
“அய்யா, புல்லாங்குழலாம் ,புலித்தோலாம்! பூரண புஸ்தகமாம்,
போறதோர் பண்டாரமே, நாளை இதே வழி வருவியா?” (குழலூதி,புலித்தோல் அணிந்து ஊர் சுற்றும் எல்லாம் அறிந்த ஞானியே, நாளையும் இவ்வூர்ப் பக்கம் வருவீரா?)
அதுக்கு அந்தப் பைராகி அளிக்கும் சொல்லாடல் பதிலைப் பாருங்கள்!
“அப்பனே! வெள்ளி வேர் கடந்து, வேங்கணம் பொய்மாரி, கள்ளிப் பால் வத்தி
,கடலும் திசைமாறி, பம்பையாடு குட்டியிட்டு, வறட்டாடு பால் கறந்து,
செத்தாடு குட்டியிட்டு,, செனையாடு பால் கறந்து, ஒலக்கைத் துளுத்து,
ஒரலேறிப் பூப்பூத்து,அம்மி பழஞ்சாறாம், நார்த்தங்கா(ய்) ஊறுகாயாம்,
எருது பசுவாகி, பசுவும் ஈனும் காலத்தில் வருவேன்! என்றாராம்.
{பொருள்–நான் நிச்சயம் இவ்வழி வருவேன். அதற்குரியச் சாத்தியக் கூறுகளைச் சொல்கிறேன், கேள் அப்பனே! வெள்ளியாகிய நிலா சாய்ந்து,இருள் பொய்யாக மாறி, வெளுத்தவுடன் வருவேன்,
கள்ளிப்பால் வத்தி= வெட்டுண்டக் கள்ளிச் செடியிலிருந்து வடியும் பால் வற்றிக் காயும் போது வருவேன்,
கடலும் திசை மாறி= கட்டுடலாய் இருந்தாலும் உட்கார்ந்து எழும்போது உண்டாகும் தடுமாற்றம் நிற்கையில் வருவேன்,
பம்பையாடு குட்டியிட்டு….செனையாடு பால் கறந்து= முல்லை நில ஆடு வயதுக்கு வந்து, குட்டிபோட்டு, பால் வற்றிவிட்ட ஆடு பால் சுரக்க,செனை ஆடு குட்டிப் போட் டுப் பால் கொடுக்கும் சமயம் வருவேன்,
ஒலக்கை துளுத்து= இப்போது நட்ட தென்னம்பிள்ளை வளர்ந்து,
ஒரலேறிப் பூப்பூத்து= உலக்கை மாதிரி உயர்ந்து நின்று, பூப்பூத்து காய்க்கும் போது,
அம்மி பழஞ்சாறாம்….ஊறுகாயாம்=உச்சி வெயிலில் உடல் காக்க, அம்மியில் அறைத் தக் கூழும், பழஞ்சாறும், தொட்டுக்க நார்த்தங்காய் ஊறுகாயும் கொண்டு வாரேன்,
எருது பசுவாகி= காளை, பசுவைச் சினையாக்கி,
பசுவும் ஈனும் காலத்தில் வருவேன்= அந்தப் பசுவும் கன்று போடும் போது நிச்சயம் நான் வருவேன் எனச் சாதுரியமாகவும், நக்கலாகவும் பதிலளித்துச் சென்றாராம்!}
அக்காலத்தில் சாதாரணமானவர்களிடம் கூட தமிழ் எப்படியெல்லாம் செழித்து வளர்ந்துள்ளது என்பதை நினைக்கும் போது நமக்குப் பெருமை பிடிபடவில்லையே!
வாழ்க தமிழ், வளர்க தமிழ் மொழி!
Tags- மூக்குப் பொடி, பைராகி, சொக்கநாதர் ,வளையல் வியாபாரி, ‘ஏத்தம்’