சங்கத் தமிழ் இலக்கியத்தில் புராணக் காட்சிகள் -4 (Last Part)- Post No.11,313

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,313

Date uploaded in London – 1 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பகுதி 4

ஒரே பாடலில் 4 கடவுள்கள்

சங்க இலக்கியத்தில் உள்ள 18 மேல் கணக்கு நூல்களில் புறநானூறுதான் பழமையான பகுதி. அதில் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் பாடிய ஒரே பாடலில் (புறம் 56) நான்கு கடவுளரும், அவர்தம் வாகனங்களும் , அவர்தம் கொடிகளும் வருவதால் சங்கத் தமிழர்கள் இந்து சமய புராணங்களை முற்றும் கற்று உணர்ந்தவர்கள் என்பது தெரிகிறது. மேலும் இவற்றை மன்னர்களுக்கு உவமையாகப் பயன்படுத்துவதால் பொது மக்களுக்கும் இந்தக் கதைகள் நன்கு தெரியும் என்பதைக் காட்டுகிறது. சம்ஸ்க்ருத நூல்களிலும் கல்வெட்டுகளிலும் ஒருவரை வாழ்த்திடும்போது சூரிய சந்திரர் உள்ள வரை என்று வாழ்த்துவது மரபு. அதையும் இப்பாடலில் காண்கிறோம்.

சிவன்பலராமன்கிருஷ்ணன்முருகன் என்ற வரிசையில் நக்கீரனார் பாடுகிறார். பலராமனின் கொடி  பனை மரக்கொடி என்றும் கிருஷ்ணனின் கொடி கருடக்  கொடி என்றும் , முருகனின் வாகனம் /கொடி மயில் என்றும், சிவனின் வாகனம்  ரிஷப/ காளை என்றும் பாடுகிறார்.

2000 ஆண்டுகளுக்கு முன்னர் தென் கோடியிலுள்ள மதுரையில் ஆண்ட பாண்டிய மன்னன் இளவந்திகை பள்ளித் துஞ்சிய நன் மாறனை போற்றுகையில் இந்தச் செய்திகள் அனைத்தும் நமக்குக் கிடைத்துள்ளன. ஆக நக்கீரனார்க்கு சிவ புராணம்கந்த புராணம், பாகவத புராணம் ஆகியன எல்லாம் மனப்படமாகத் தெரியும் என்பதையும் நாம் அறிய முடிகிறது

இதுமட்டுமல்லாமல் வேத காலக் கடவுளான யமனையும் ஒப்பிடுகிறார்.

,

வாகனங்கள் , கொடிகள் இவை எல்லாம் அக்காலத்தில் கோவில்களில் படங்களாகாவோ சிலைகளாகவோ இருந்திருக்க வேண்டும். ஏனெனில் ஏறத்தாழ இதே காலத்தில் உருவான சிலப்பதிகாரத்தில் இத்தனை கடவுளரையும் குறிப்பிட்டு கோவில்களையும் குறிப்பிடுகிறார் இளங்கோ  அடிகள்.

சிசுபாலவதம்

கிருஷ்ணனைக் குறிப்பிடுகையில் ‘இகழுநர் அடுநன்’ என்ற அடை  மொழியைப் போடுகிறார் நக்கீரர்.

இதன் பொருள் – கேலி, கிண்டல், பகடி செய்வோரை தீர்த்துக் கட்டுபவன் என்பதாகும்; கிருஷ்ணனால் தீர்த்துக் கட்டப்பட்டவர்களில் கம்சன், சிசுபாலன், ஜயத்ரதன் துரியோதனன் முக்கியமானவர்கள்; இவர்களிலும் கிருஷ்ணனால் கொல்லப்பட்டவர்கள் கம்சன், சிசுபாலன் ஆவர் .

சிசுபாலன் எப்போது பார்த்தாலும் கண்ணனை ஏசியும் பேசியும் வந்தான். 99 முறை உனக்கு மன்னிப்பு வழங்குவேன். நூறாவது முறை நீ கேலி செய்யும்போது இருக்க மாட்டாய் என்கிறார். அப்படியே பூமெராங் வடிவத்தில் செயல்படும் சுதர்சன சக்கரத்தை ஏவினார் அவன் தலை துண்டாயிற்று. இதை மாக என்னும் கவி சிசுபாலவதம் என்ற நூலாக சம்ஸ்க்ருதத்தில் பாடி வைத்தார். அதையும் நக்கீரர் படித்திருப்பார் போலும். ஆகையால்தான்  இகழுநர் அடுநன்’ என்ற சொற்றொடரைக்  கையாளுகிறார்.

இப்போது பாடலைப் படியுங்கள் ; நன்றாகப் புரியும்

ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை,

மாற்று அருங் கணிச்சி, மணி மிடற்றோனும்;

கடல் வளர் புரி வளை புரையும் மேனி,

அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்;

5

மண்ணுறு திரு மணி புரையும் மேனி,

விண் உயர் புள் கொடிவிறல் வெய்யோனும்,

மணி மயில் உயரிய மாறா வென்றி,

பிணிமுக ஊர்திஒண் செய்யோனும் என

ஞாலம் காக்கும் கால முன்பின்,

10

தோலா நல் இசை, நால்வருள்ளும்,

கூற்று ஒத்தீயே, மாற்று அருஞ் சீற்றம்;

வலி ஒத்தீயே, வாலியோனை;

புகழ் ஒத்தீயே, இகழுநர் அடுநனை;

முருகு ஒத்தீயே, முன்னியது முடித்தலின்;

15

ஆங்கு ஆங்கு அவர் அவர் ஒத்தலின், யாங்கும்

அரியவும் உளவோ, நினக்கே? அதனால்,

இரவலர்க்கு அருங் கலம் அருகாது ஈயா,

யவனர் நன் கலம் தந்த தண் கமழ் தேறல்

பொன் செய் புனை கலத்து ஏந்தி, நாளும்

20

ஒண் தொடி மகளிர் மடுப்ப, மகிழ் சிறந்து,

ஆங்கு இனிது ஒழுகுமதி! ஓங்கு வாள் மாற!

அம் கண் விசும்பின் ஆர் இருள் அகற்றும்

வெங் கதிர்ச் செல்வன் போலவும்குட திசைத்

தண் கதிர் மதியம் போலவும்,

25

நின்று நிலைஇயர், உலகமோடு உடனே!

திணை அது; துறை பூவை நிலை.

—மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார், புறநானூறு 56

சிவனுக்கு திருநீலகண்டன் என்ற பெயரும் உண்டு. சங்க காலத்திலேயே இது பிரபலமாகிவிட்டது. பிற்கால நாயன்மார் பட்டியலிலும் இதைப் படிக்கிறோம். அவ்வையார் இன்னும் தெளிவாக நீல மணிமிடற்றோன் (புறம் 91) என்றே சிவனைப் போற்றுகிறார்.

முப்புரம் எரிசெய்த சிவனை (திரிபுராந்தகன்) முன்னொரு கட்டுரையில் குறிப்பிட்டேன்.

இன்று தசாவதார சிலைகளிலும் பொம்மைகளிலும் பலராமனின் கலப்பையை பார்க்கிறோம் ; அதையும் நக்கீரர் நாஞ்சில் என்கிறார். சிவனுடைய ஆயுதமான மழுவை கணிச்சி என்கிறார். ஆக , அந்தக் காலத்தில் எல்லார் வீட்டுச் சுவர்களிலும் இந்த ஓவியங்கள் இருந்திருக்க வேவேண்டும்; கோவில்களில் விக்கிரகங்களும் இருந்திருக்கலாம்.

ஒரே பாட்டில் நக்கீரர் நமக்கு ஏராளமான புராணச் செய்திகளைக் கொட்டித் தீர்த்துவிட்டார்.. தமிழ்ச் சங்கத்தை தலைவராக இருந்து  நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சிவனுக்கே சவால் விட்டவர் இவ்வளவையும் அறிந்ததில் வியப்பில்லை.

XXXX

கலர்களும் கடவுள்களும்

எப்போதெல்லாம் பல நிறங்களைக் காண்கிறார்களோ அப்போதெல்லாம்  கடவுள் நிறங்கள்தான் தமிழர்களுக்குத் தோன்றும். அவ்வளவு பக்திமான்கள் தமிழர்கள்.

முல்லைக்கலி பாடிய நல்லுருத்திரன் மஞ்சுவிரட்டு என்னும் ஜல்லிக் கட்டு நிகழ்ச்சியைக்  காணப்போகிறார். அங்கு யாதவ குலப்  பெண்கள் வளர்த்த காளைகளை அவிழ்த்துவிடவும் அவைகளை அடக்க ஆயர்குடி இளைஞர்கள் பாய்ந்து வருகின்றனர். இந்த ஜல்லிக்கட்டு பாகவத புராணத்திலும் உளது; கிருஷ்ணன் ஏழு காளைகளை அடக்கிய செய்தி அது. இப்போது கலித்தொகையில் வரும் கலர்களை/ வண் ணங்களைப்  பார்ப்போம் :

இந்தப் பாட்டில் பாண்டிய நாட்டைக் கடல் கொண்ட செய்தியும், யாதவ குலம் மிகப் பழமையான குலம் என்பதையும் நல்லுருத்திரன் சுட்டிக்காட்டுகிறார்

மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின்மெலிவு இன்றி மேல் சென்று, மேவார் நாடு இடம்படப்,
புலியொடு வில் நீக்கிப், புகழ் பொறித்த கிளர் கெண்டை,
வலியினான் வணக்கிய, வாடாச் சீர் தென்னவன்
தொல் இசை நட்ட குடியொடு தோன்றிய
நல் இனத்து ஆயர், ஒருங்கு தொக்கு, எல்லாரும்-
வான் உற ஓங்கிய வயங்கு ஒளிர் பனைக் கொடிப்
பால் நிற வண்ணன் போல் பழி தீர்ந்த வெள்ளையும்,
பொரு முரண் மேம்பட்ட பொலம் புனை புகழ் நேமித்
திரு மறு மார்பன் போல் திறல் சான்ற காரியும்,
மிக்கு ஒளிர் தாழ் சடை மேவரும் பிறை நுதல்
முக்கண்ணான் உருவே போல் முரண் மிகு குராலும்,
மா கடல் கலக்குற மா கொன்ற மடங்காப் போர்
வேல் வல்லான் நிறனே போல் வெரு வந்த சேயும், ஆங்கு அப்
பொரு வரும் பண்பினவ்வையும், பிறவும்
உருவப் பல் கொண்மூக் குழீஇயவை போலப்,
புரிபு புரிபு புகுத்தனர், தொழூஉ.
அவ் வழி, முள் எயிற்று ஏஎர் இவளை பெறும், இது ஓர்
வெள் ஏற்று எருத்து அடங்குவான்.

—–கலித்தொகை 104

சுருக்கமான பொருள்

பாண்டிய நாட்டைக் கடல் கொண்டது. ஆகையால் அவன் சேர சோழ நாடுகளை வென்று அவர்களுடைய கொடிகளை அகற்றினான். பழமையான யாதவர் இனம் காளை பிடிக்கும் ஏறு தழுவும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர் ;அங்கே வந்த மாடுகளின் நிறங்கள் :

பனைக்கொடி பலராமன் போல வெள்ளை மாடு ;

திருமாலைப் போல கருப்பு நிறம் உடைய மாடு ;

முக்கண்ணன் / த்ரயம்பகன் போல செக்கப் செவேல் காளை ;

சூரனை வென்ற முருகன் போல இளம் சிவப்பு நிற எருது .

இதில் இன்னும் குறிப்பிடத்தக்க விஷயங்கள் : திரு மறு மார்பன் = ஸ்ரீவத்சன் ;பிறைநுதல் = நெற்றிக் கண் கொண்ட சிவன் ;தாழ் சடை = விரி சடை சிவன்; இதை நடராஜர் திரு மேனிகளில் காணலாம் ; முக்கண்ணான் – திரயம்பகன் ; வேல் வல்லான் = வேலாயுதன் முருகன்

தமிழர்களுக்கு எங்கும் எப்போதும் சிவன், விஷ்ணு, கந்தன் நினைப்புதான் !

வாழ்க தமிழர்[ வளர்க பக்தி!

.—subham—

Tags- சிவன்பலராமன்கிருஷ்ணன்முருகன், மஞ்சுவிரட்டு ,ஜல்லிக் கட்டு, ஏறு தழுவும், முல்லைக்கலி , நல்லுருத்திரன்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: