
Post No. 11,322
Date uploaded in London – – 4 OCTOBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கம்பன் காட்டும் புதிய கவிதை உத்தி!
ச.நாகராஜன்
“வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்; மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்”, என்று தன்னை இனம் காண்பிக்கப் புகுந்த மகாகவி பாரதியார் விண்ணில் திரிகின்ற மீனெலாம் நான்; அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்; அவை பிழையாமே சுழற்றுவோன் நான் என்று தன் அகண்ட தன்மையை விவரித்துச் சொல்லுகையில், “கம்பன் இசைத்த கவியெலாம் நான்” என்று கூறுகிறார். கம்பனின் கவிதையையும் அகண்டத்தன்மையில் சேர்த்துக் கொள்கிறார்.
(முழு கவிதைக்கு பாரதியாரின் நான் என்ற கவிதையைப் பார்க்கவும்)
கம்பனின் எல்லையற்ற தன்மையை இன்னும் விளக்கமாகக் கூற விரும்பிய மகாகவி பாரதியார் தமிழச்சாதி பாடலில், “எல்லையொன்றின்மை” எனும் பொருள் அதனைக் கம்பன் குறிகளால் காட்டிட முயலும் முயற்சியைக் கருதியும் என்று குறிப்பிட்டுத் தன் எண்ணத்தை உறுதிப் படுத்துகிறார்.தமிழ்ச் சாதி அமரத்தன்மை வாய்ந்தது என்ற தனது உறுதிக்குக் காரணமாக சிலப்பதிகாரத்தையும், திருக்குறளையும் கம்பனின் ராம காதையையும் மகாகவி சுட்டிக் காட்டும்போது அவற்றின் பெருமை நமக்குப் புலப்படுகிறது.
கம்பனின் எல்லையற்ற தன்மை இன்னும் உலகாளவிய அளவில் ஆராயப்படவில்லை; உலக கவனத்தை ஈர்க்கும் வகையில் உலகின் முன் எடுத்துச் சொல்லப்படவில்லை. தமிழன் செய்ய வேண்டிய முக்கியமான கடமை இது.
கம்பனின் எல்லையற்ற தன்மையைக் குறித்த ஆய்வுக் கட்டுரைகள் உலகளாவிய அளவில் பரவுவதற்கு முன்னர் “நாமமது தமிழரெனக் கொண்டு வாழும்” நம்மவர் அந்த எல்லையற்ற தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.
கம்பனின் எல்லையற்ற உத்திகளில் ஒரே ஒரு உத்தியை மட்டும் இங்கு பார்ப்போம்.
தன் காவிய நாயகனின் சொந்த நாடான கோசலத்தை வர்ணிக்க வந்த மகாகவி கம்பன், பெரும் பீடிகையுடன் கோசல நாட்டை வியந்து, “வரம்பெலாம் முத்தம் (கழனிகளின் வரம்புகளில் எல்லாம் முத்துக்கள்); தத்து மடையெலாம் பணிலம் (தாவிப் பாயும் தன்மையுள்ள மதகுகளில் எல்லாம் சங்குகள்)மாநீர் குரம்பெலாம் செம்பொன் ( பெரிய நீர்ப்பெருக்கையுடைய வாய்க்கால்களின் செய்கரைகளில் எல்லாம் செவ்விய தங்கக் கட்டிகள்)” என்று வர்ணிக்கத் தொடங்குகிறான். கவிதைச் சுவையில் ஆழ்ந்து அவனைத் தொடர்ந்து கோசல நாட்டைச் சுற்றத் தொடங்க நாம் எண்ணும் போது நம்மிடம் ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போடுகிறான்!
கோசல நாட்டில் தானம் செய்வோர் யாருமே இல்லையாம்! வண்மை இல்லை என்று திட்டவட்டமாகச் சொல்கிறான் .மனத்தில் ஈரம் இல்லா நாட்டவர் வாழும் நாடும் ஒரு நாடா? ராமனின் கோசலமா இப்படி? மனம் குடைகிறது. அடுத்து கம்பன் சொல்வது இன்னும் நம்மை திடுக்கிடச் செய்கிறது.அந்த நாட்டவருக்கு திண்மையும் இல்லையாம். அதாவது பராக்கிரமும் இல்லையாம்.அங்கு உண்மையும் இல்லையாம்; ஒண்மை அதாவது அறிவுடைமையும் இல்லையாம்.
கம்பனின் இந்த கோசல நாட்டின் வர்ணனையைக் கேட்டு நாம் திகைக்கும் போது, அவனே அதற்கான காரணத்தையும் தருகிறான்.
வண்மை ஏன் இல்லை தெரியுமா? யாராவது எனக்குக் கொடு என்று கேட்டால் தானே கொடுக்க முடியும்? அங்கே இரப்பவர் யாருமே இல்லை!
திண்மை இல்லை; யாராவது அந்த நாட்டின் மீது போர் தொடுத்தால் தானே பராக்கிரமத்தைக் காண்பிக்க முடியும்!
உண்மை இல்லை; ஏனெனின் பொய் என்று சில பேர் சொன்னால் தானே உண்மை என்ற ஒன்றைப் பற்றி உரைக்க வேண்டி வரும். யாருமே பொய் பேசுவதில்லை என்னும் போது உண்மை என்ற சொல்லே அங்கே இல்லாது இருப்பது இயல்பு தானே!
எல்லோரும் கல்வி அறிவும் கேள்வி அறிவும் மிக்கவராய் இருக்கும் போது ஒண்மை எனும் அறிவுடைமை அங்கு சிறந்து தோன்றவில்லையாம்!
கம்பனின் பாடலை முழுவதுமாகப் பார்ப்போம்:
“வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லை நேர் செறுநர் இன்மையால்
உண்மை இல்லை ஓர் பொய் உரை இலாமையால்
ஒண்மை இல்லை பல் கேள்வி மேவலால்”
கம்பனின் புதிய உத்தி இது. நம்மை திடுக்கிட வைத்து அந்த திகைப்பை போக்க அவன் காரணங்களை அடுக்கிக் கொண்டே போகும் போது பிரமிப்பின் உச்சத்திற்கே சென்று விடுகிறோம்.
இன்னொரு பாடலைப் பார்க்கலாம். ராவணனின் மைந்தன் அட்சகுமாரன் பெரும் படையுடன் அனுமனுடன் மோதக் கிளம்புகிறான். மூன்று கோடி தெருக்களை உடைய இலங்கையில், தங்கமாய் மின்னும் இலங்கையில், வைரமும் முத்தும் சிதறிக் கிடக்கும் இலங்கையில் சூரியனும் நுழையப் பயப்படுகிறான். அதிகமாக வெயில் அடித்து அது ராவணனுக்குப் பிடிக்காவிட்டால் என்ன செய்வது என்பது சூரியனின் கவலை. அப்படிப்பட்ட இலங்கையில் அட்சகுமாரனின் படையை யாராவது விளக்க முடியுமா?
விளக்க முடியும் என்கிறான் கம்பன். யாரால் தான் விளக்க முடியும் என்று நமக்கே சந்தேகம் வருகிறது.
அட்சகுமாரனின் யானைகளின் எண்ணிக்கையைச் சுலபமாகச் சொல்லி விடலாம். பெரிய கடலில் உள்ள சுறாமீன்களை எண்ண முடியுமானால்!
அட்சகுமாரனின் தேர்களின் எண்ணிக்கையைச் சுலபமாகச் சொல்லி விடலாம். பெரிய கடலில் உள்ள மீன்களை மட்டும் சரியாக எண்ண முடியுமானால்!
அட்சகுமாரனின் காலாட் சேனையில் உள்ள வீரரின் எண்ணிக்கையைச் சரியாகச் சொல்லி விடலாம். கடலில் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தனித்து உள்ள மணலின் எண்ணிக்கையை மட்டும் எண்ணிச் சரியாகச் சொல்லிவிட முடியும் என்றால்!
அட்சகுமாரனின் தாவிச் செல்லும் குதிரைகளின் எண்ணிக்கையைச் சுலபமாகச் சொல்லி விடலாம். கடலில் எழுந்து வந்து கொண்டே இருக்கும் அலைகளின் எண்ணிக்கையை மட்டும் எண்ணிச் சொல்லி விட முடியுமானால்!
பாடலை கம்பன் வாயிலாகக் கேட்போமா?
“பொரு கடல் மகரம் எண்ணில் எண்ணலாம் பூட்கை; பொங்கி
திரிவன மீன்கள் எண்ணில் எண்ணலாம் செம்பொன் திண் தேர்
உருவுறு மணலை எண்ணில் எண்ணலாம் உரவுத் தானை
வருதிரை மரபின் எண்ணில் எண்ணலாம் வாவும் வாசி”
(பூட்கை-யானை; உரவுத் தானை – வலிமை பொருந்திய காலாட் சேனை; வாவும் வாசி- தாவிச் செல்லும் குதிரைகள்)
“எழுகடல் மணலை அளவிடின் அதிகம் எனதிடர் பிறவி அவதாரம்” என்று பிறவிகளின் எண்ணிக்கையைப் பின்னால் வந்த அருணகிரிநாதர் கடல் மணலின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டுக் கூறுகிறார். கம்பனோ காலாட்படை வீரரின் எண்ணிக்கைக்கு அதை முன்னமேயே பயன்படுத்தி விட்டான். தாவி வரும் குதிரைளுக்கு தாவி வரும் அலைகளை உவமையாக அவன் கூறுவது சிந்திக்கச் சிந்திக்க களிப்பைத் தரும் ஒன்றாகும்.
நம்மை திகைக்க வைத்து பின்னர் காரணங்களைச் சொன்ன பின்னர் வியக்க வைக்கும் கம்பனின் உத்தி இலக்கிய உலகிற்குப் புதிது.
வடமொழியில் ஸம்பாவநாலங்காரம் என்று வழங்கப்படும் இந்த உத்தி வேறொறு பொருள் சித்திப்பதற்காக ‘இப்படி இருந்தால் இன்னது ஆகும்’ என்று வாய்பாடு படக் கூறுவது ஆகும்.
உலகின் இலக்கியங்கள் அனைத்தையும் எடுத்துப் பார்த்தால் இப்படிப்பட்ட ‘திகைக்க வைத்து வியக்க வைக்கும்’ உத்தியைத் திறம்படக் கையாண்ட மகாகவிஞன் கம்பன் ஒருவனே என்பது தெரிய வரும்.
கம்பன் கவிதையைக் கற்போம்; இதயம் களிப்போம்; உலகிற்கு அதைப் பரப்புவோம்
********************
Tags- கம்பன், அட்சகுமாரன்
புத்தக அறிமுகம் – 76
சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்! (பாகம் 2)

நூலில் உள்ள அத்தியாயங்கள்
பொருளடக்கம்
01.சுற்றுப்புறச் சூழ்நிலை மேம்பட இணையத்தைபயன்படுத்துவோம்
02. இணையத்தால் சுற்றுப்புறச் சூழல் கேட்டைத் தவிர்க்கலாம்!
03. ஓஜோன் உறையின் அவசியம்!
04. பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்ப்போம்!
05. கடல் நீர் சூடாகும் அபாயம்!
06. ஆர்க்டிக் உருகுகிறது!
07. பழைய காடுகளைக் காப்போம்! 08. ஓஜோன் துளை
09. சுத்த நீர் சேமிப்போம்
10. கடல் வளம் காப்போம்! 11. கணிணிகளால் ஏற்படும் மாசுகளைத் தவிர்ப்போம்! 12. மழைக்காடுகள் மனிதரின் செல்வம்! 13. மழைக்காடுகள் தரும் செல்வம்!
14. மரங்களை வெட்டாதீர்கள்!
15. கரியாலும் காகிதத்தாலும் பாதிக்கப்படும் சுற்றுப்புறச் சூழல்!
16. மழைக்காடுகள் என்னும் இயற்கை அதிசயம்!
17. மழைக்காடுகளின் பாதுகாப்பு!
18. காடுகள் இல்லாத எதிர்காலம்!
19. புவி வெப்ப உயர்வு!
20. துருவக்கரடிகளுக்கு அபாயம்!
21. உலகின் ஒப்பற்ற ஒரு கிராமம்
22. சிந்தனை செய்வோம்!
23. சுற்றுப்புறச் சூழலைப் பற்றிய சில உண்மைகள்!
24. புதிய கோஷம் : குறைவாகப் பயன்படுத்துவோம்!
25. சின்னச் சின்ன செயல்கள்!
26. பெட்ரோலுக்கு மாற்று
27. சுற்றுப்புறத்தைப் பாதுகாக்கும் சில மாற்று எரிபொருள்கள்
28. ஹைட்ரஜன் வாகனங்கள்
29. வியாதிகளைப் போக்கும் வேப்ப மரம்! -1
30. வியாதிகளைப் போக்கும் வேப்ப மரம் – 2
31. நீரைச் சுத்தமாக்க சுலபமான வழி!
32. பூமி கிரகத்தின் சர்வதேச ஆண்டு!
33. விஞ்ஞானிகளின் எச்சரிக்கை
34. நீர்ப் பாதுகாப்பு
35.சூரிய ஆற்றலைப் பயன்படுத்துவோம்!
35. சுத்த நீர் தட்டுப்பாடு
36. நீரை வீணாக்காமல் இருக்க வழிகள்!
37. சுற்றுப்புறச் சூழல் காக்க உபயோககரமான குறிப்புகள்
38. நமது சுற்றுப்புறச் சூழல் உரிமைகள்
*
இந்த நூலைப் பற்றிய சிறு அறிமுகக் குறிப்பு:-
This book emphasizes the importance of environmental protection. While the world has been falling apart due to environmental degradation, it is important for its inhabitants to understand the significance of protecting and safe-guarding our environment. This book consists of several interesting discussion on this topic, all of which are taken from an environmental program broadcasted on All India Radio. While environmental enthusiasts would definitely enjoy this book, it is also a necessary read for today’s younger generation who will make a societal impact tomorrow.
சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் நூல். சுற்றுச்சூழல் சீர்கேட்டால் உலகமே அழிந்து வரும் இவ்வேளையில் அது பற்றிய விழிப்புணர்வை ஒவ்வொருவரிடமும் ஏற்படுத்த வேண்டியது இன்றியமையாதது! அவ்வகையில் சுற்றுச்சூழல் ஆர்வர்லர்கள் மட்டுமின்றி அனைவருமே, குறிப்பாக நாளைய தலைமுறையினரான மாணவர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல் இது! சென்னை வானொலி நிலையத்தில் ஒலிபரப்பான நிகழ்ச்சிகளின் இரண்டாம் பாகமாக இந்நூல் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அனைவரும் படிப்பீர்! பிறருக்கும் பரிசளிப்பீர்!
*
இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.
அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பாகம் – 2 நூலைப் பற்றிய சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.
Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.