
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,328
Date uploaded in London – – 6 OCTOBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பிரச்சினையைத் தீர்ப்பது எப்படி?
ச.நாகராஜன்
எல்லோருக்கும் அவரவர் வாழ்க்கையில் பிரச்சினைகள் நிறைய உண்டு. அவற்றை எப்படித் தான் தீர்ப்பது?!
ஒரு ராஜகுமாரி இருந்தாள். அவளுக்குக் கண்களில் ஒரு பிரச்சினை இருந்தது. கண்களில் ஒரே எரிச்சல்.
ராஜகுமாரி அல்லவா? அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள்.
ராஜா மிகவும் வருந்தினார்.
ராஜ வைத்தியர்கள் அழைக்கப்பட்டனர். அவர்கள் கண்களுக்கு மருந்தைத் தந்தனர். ஆனால் ராஜகுமாரியோ அதை போட்டுக் கொள்ள மறுத்தாள். தனது கண்களைத் தொட்டுப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
அப்படித் தொடுவது கண்களின் எரிச்சலைக் கூட்டியதோடு புண்ணும் உருவாக ஆரம்பித்தது.
இது தாங்க முடியாமல் போன போது ராஜகுமாரி ஓவென்று கதற ராஜா இதை யார் தீர்க்கிறார்களோ அவர்களுக்கு ஆயிரம் பொன் சன்மானம் தருவேன் என்று முரசறிவித்தார்.
பலரும் முயன்றனர். ஒருவராலும் ராஜகுமாரியின் பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை.
ஒரு நாள் ஒரு இளைஞன் வந்தான். அடுத்த நாட்டிலிருந்து வந்திருப்பதாகவும் தான் மிகப் பெரிய வைத்தியர் என்றும் தெரிவித்தான்.
ராஜா அவனை ராஜகுமாரியைப் பார்க்க அனுப்பினார்.
அவன் ராஜகுமாரியைப் பார்த்தான். அவள் அலறுவதையும் பார்த்தான். அவள் எந்த ஒரு வித மருந்தையும் எடுத்துக் கொள்ள மறுப்பதோடு தன் கண்களை தானே குத்திக் கொண்டிருப்பதையும் அவன் மற்ற மருத்துவர்களிடமிருந்து கேட்டு அறிந்திருந்தான்.
அவளைப் பத்து நிமிடம் பார்த்து விட்டு, ‘ஹா ஹா’ என்று சிரித்தான்.
ராஜ குமாரி திகைத்தாள்.
“ஏன் இந்த சிரிப்பு” என்று வைத்தியரை அவள் கேட்டாள்.
“ஆஹா! இது ஒரு பிரச்சினையே இல்லையே! கண்கள் சரியாகத் தான் இருக்கிறது. பிரச்சினை வேறு இடத்தில் இருக்கிறது” என்றான் அவன்.
“எந்த இடம்? என்ன பிரச்சினை?” என்று திகைப்புடன் கேட்டாள் ராஜகுமாரி.
“ஐயோ! அதைச் சொல்ல முடியாதே! சொல்லவும் கூடாதே! ராஜா அனுமதி தந்தால் மட்டும் தான், அது பற்றிப் பேசவே முடியும். நான் வருகிறேன்!” என்றான் அவன்.
திகைத்துப் போன ராஜகுமாரி உடனே தன் தந்தையை வரவழைத்து வைத்தியர் கூறியதைச் சொல்ல ராஜா, இளம் வைத்தியரைப் பார்த்து, ”நான் அனுமதி தருகிறேன். பிரச்சினை என்ன?” என்றார்.
“அரசே! ராஜகுமாரியின் கண்களில் ஒரு பிரச்சினையும் இல்லை. பிரச்சினை வேறு இடத்தில் இருக்கிறது. அதுவும் பெரிய பிரச்சினை” என்றான் இளைஞனான அந்த வைத்தியர்.
“என்ன அது?” – ராஜா கேட்டார்.
“அரசே! ராஜகுமாரிக்கு கண்களில் பிரச்சினையே இல்லை. ஆனால் ராஜகுமாரிக்கு ஒரு வால் முளைக்கப் போகிறது. அது ஒன்பது கஜ நீளம் அளவு பெரிதாக வளரப் போகிறது. ஆனால் அது தோன்றியவுடன் ராஜகுமாரி அதைப் பற்றிச் சொல்லி விட்டால் அதை உடனே என்னால் குணமாக்கி விட முடியும்” என்றான் அவன்..
ராஜகுமாரி பயந்து போனாள். அவள் தனது வாலைப் பற்றி நினைக்க ஆரம்பித்து அது எப்போது தோன்றப் போகிறது என்பதையே நினைத்திருந்தாள்.
சில நாட்கள் கழிந்தன. கண்களைத் தொடவே இல்லை ராஜகுமாரி.
கண்கள் பூரண குணம் அடைந்தன. எரிச்சல் இல்லவே இல்லை.
ராஜாவிடம் வந்த வைத்தியர் ராஜகுமாரியின் கண்கள் எப்படி இருக்கிறது என்று கேட்டான்.
மனமகிழ்ச்சியோடு ராஜா, “கண்கள் பூரண குணம் அடைந்து விட்டன, ஆனால் வால் தான் இன்னும் தோன்றவில்லை” என்றார்.
ராஜகுமாரியும் அதை ஆமோதித்தாள்.
வைத்திய இளைஞன் கூறினான் : “வால் தோன்றவே தோன்றாது. சிறிய பிரச்சினையை ஊதி ஊதி ராஜகுமாரியே வளர்த்து வந்ததால் இப்படிச் சொன்னேன். அழகிய ராஜகுமாரிக்கு வால் எப்படி வரும், வளரும்?” என்ற இளைஞன் சிரித்தான்.
ராஜா அவனுக்கு ஆயிரம் பொன்களை அளித்ததோடு அவனை நிரந்தரமாகத் தன்னுடன் இருக்குமாறு வேண்டினார்.
இந்த புத்தமதக் கதை கூறும் நீதி பெரிய நீதி! அது என்ன?
எப்போதும் நாம் தான் பிரச்சினை இல்லாத ஒன்றை பிரச்சினையாக இனம் காண்கிறோம். தானாகத் தீரக் கூடிய சிறிய பிரச்சினையை ஊதி ஊதி விட்டுப் பெரிய பிரச்சினையாக ஆக்குகிறோம். அப்போது பிரச்சினை மட்டுமே வாழ்க்கையாக ஆகி விடுகிறது.
“எனது பிரச்சினை, என் பிரச்சினைக்கு ஒரு தீர்வு, எனது ஆசை, எனக்கு வேண்டியவை, எனக்குப் பிடிக்காதவை” – இவை நம்மை ஆக்கிரமிக்கும் முன்னர் அவற்றை நாம் இனம் கண்டு ஒதுக்க வேண்டும்.
சுயநலத் துடிப்புகளாலும் மறுப்புகளாலும் வாழ்க்கையை நாமே பாழாக்கிக் கொள்ளாமல் உள்ளதை உள்ளபடி பார்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
பிரச்சினைக்கே பிரச்சினை தந்து அதை அண்டவிடாமல் செய்ய இதுவே சிறந்த வழி!
***
புத்தக அறிமுகம் – 78
சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்! (பாகம் 4)
நூலில் உள்ள அத்தியாயங்கள்
பொருளடக்கம்
1. பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் அபாயம்!
2. தேனீக்களை அழிக்கும் பேப்பர் கப்புகள்!
3. அன்னை பூமியின் உரிமைகளுக்கு ஒரு சட்டம்!
4. காற்றையும் நீரையும் தூய்மையாக இருக்கும்படி காப்போம்!
5. பசுமை இயக்கம் பரவட்டும்!
6. உத்வேகமூட்டும் ஒரு காட்டின் கதை!
7. பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாப்போம்!
8. தட்பவெப்ப நிலை மாற்றத்தால் ஏற்படும் அபாயம்!
9. பவளத்திட்டுகளைப் பாதுகாப்போம்
10. கார்பன் மானாக்ஸைடு தரும் அபாயம்!
11. ஒலி மாசைக் கட்டுப்படுத்துவோம்
12. கடலில் ஏற்படும் ஒலி மாசால் கடல் வாழ் உயிரினங்கள் அழியும்
அபாயம்!
13. தகிக்கும் வெப்பத்தால் தவிக்கும் பூமி!
14. பசுமையைப் பாதுகாப்போம் ஆற்றலைச் சேமிப்போம்!
15. சுற்றுப்புறச்சூழலைப் பாதுகாக்கப் பல வழிகள் உண்டு!
16. காட்டை அழிப்பதால் பெருகும் நோய்கள்!
17. நதிகள், குளங்களின் தூய்மையைக் காப்போம்!
18. கடலில் அமிலத்தன்மை அதிகரிப்பு!
19 கடலில் கலக்கும் சாத்தான்கள்!
20. நாம் காக்க இருப்பது ஒரே ஒரு பூமி தான்!
21. புவி வெப்பத்தால் சுருங்கும் தாவரங்களும் மீன் வகைகளும்!
22. புவி வெப்பத்தால் பாதிக்கப்படும் பருவநிலை
23.. அழிந்து வரும் மழைக் காடுகள்!
24. உருகி வரும் பனிப்பாறைகளும் உயரும் கடல் நீர் மட்டமும்!
25. கார்பன் தரும் சவால்!
26. மரங்கள் மடியும் அபாயம்! விழிப்புணர்வு தேவை!!
27. ஒளியீரி விளக்குகளுக்கு மாறுவோம்!
28. காற்றில் மாசை ஏற்படுத்துவது வாகன நச்சுப் புகையே!
29. ஓஸோன் உறை பாதுகாப்பின் அவசியம்
30. ஆர்க்டிக் பனி உருகுகிறது!
31. நான்கு அணுகுண்டுகள் வெளிப்படுத்தும் வெப்பம் அளவு பூமியின்
வெப்பம் விநாடிக்கு விநாடி அதிகரிக்கிறது!
32. காற்று மாசு இந்தியாவில் ஐந்தாவது பெரும் ஆட்கொல்லி!
33. உரத்தொழிற்சாலைக் கழிவுகள்!
34. வீட்டில் தோட்டம் வளர்க்கலாமே!
35. நம் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் பயங்கர ஒலிகள்!
36. அதிக ஒலியைக் கட்டுப்படுத்துவோம்!
37. இமயமலைக் காடுகளைக் காப்போம்!
38. தட்பவெப்ப மாறுபாட்டினால் சீரழியும் மனித உறவுகள்!
39. சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் நவீன கண்டுபிடிப்புகள்!
40. பூமி 300 கோடி டன் ஐஸை வருடந்தோறும் இழக்கிறது!
*
இந்த நூலுக்கு மேலாண்மை இயல் பயிற்சியாளரும் எழுத்தாளருமான திரு என்.சி. ஶ்ரீதரன் அவர்கள் அளித்துள்ள முன்னுரை:
முன்னுரை
திரு. ச. நாகராஜன் அவர்களின் ‘சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் நான்காம் பாகம்’ படித்துப் பார்த்தேன். ஒவ்வொரு பக்கமும் ஒரு பொக்கிஷம். இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது நான் எங்கோ படித்த ஒரு கதை நினைவுக்கு வருகிறது.
ஒரு கிராமம். அந்த கிராமத்தில் ஒரு வீட்டுத்தலைவன் தன்னுடைய கையில் ஒரு பையுடன் வீட்டுக்குள் நுழைகிறான். வந்தவன் பையிலிருந்து ஏதோ ஒன்றை எடுக்கிறான். அது என்னவென்று எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதை அந்தப்பக்கம் போன ஒரு எலியும் பார்த்துக் கொண்டிருக்கிறது. அவன் வெளியே எடுத்தது ஒரு எலிக்கத்திரி. அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த எலி தலைதெரிக்க ஐயோ! இந்த வீட்டில் ஒரு எலிக்கத்திரி இருக்கிறது! இந்த வீட்டில் ஒரு எலிக்கத்திரி இருக்கிறது! என்று கதறியவாறு ஓடியது. எதிரே வந்த ஒரு கோழியிடம் தான் பார்த்ததைச் சொல்லியது. ஆனால் கோழியோ எலிக்கத்திரி இருந்தால் அது உனக்கு பிரச்சனை. என் நேரத்தை வீணாக்காதே என்று சொல்லியவாறே தன் வேலையைப் பார்க்கப் போனது. அந்த எலி அடுத்து தன் எதிரே வந்த ஆட்டிடம் இதைப் பற்றிச் சொல்லியது. அதற்கு ஆடு நானும் கேள்விப்பட்டேன் எலியாரே. இருந்தாலும் சற்று கவனமாக இரும். நல்ல வேளை இதனால் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. நான் தப்பித்தேன் என்று சொல்லியவாறு சிரித்துக்கொண்டே போனது. அதன் பிறகு அந்த எலியின் முன்னால் ஒரு எருமை மாடு வந்தது. எலியை ஒரு மாதிரி பார்த்தவாறே என்ன எலியாரே, நானும் கேள்விப்பட்டேன். உன் பிரச்சனையைப் பற்றி ஊர் முழுவதும் சொல்லிக்கொண்டு திரிகிறார்களே? என்னுடைய நேரத்தை வீணாக்குவதற்கு முன் நான் கழண்டு கொள்கிறேன் என்று சொல்லியவாறே தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தது.
ஆக, எலியின் பிரச்சனையைப் பற்றி யாருமே கண்டு கொள்ளவில்லை.
அன்று நடு இரவு. ‘டப்’ என்று ஒரு சப்தம் கேட்டது. சரி, எலிதான் எலிக்கத்திரியில் மாட்டிக் கொண்டுவிட்டது என்று நினைத்து, அந்தக் குடும்பத்தலைவி, இருட்டில் கண் தெரியாமல் தட்டுத் தடுமாறி விளக்கைப் போட்டாள். எலிக்கத்திரியில் சிக்கியது எலியல்ல. ஒரு விஷப்பாம்பின் வால் பகுதி மட்டும். அரைகுறையாக மாட்டிக்கொண்டிருந்தது. வலியால் துடித்துக் கொண்டிந்த அந்தப் பாம்பின் தலைமேல் அந்தக் குடும்பத்தலைவி காலை வைக்க, அது அவள் காலைத் தீண்டியது. குடும்பத்தலைவன் ஒரு நாட்டு வைத்தியரை உடனே அழைத்து வந்தான். விஷம் தலைக்கு ஏறக்கூடாது என்றால் முதல் உதவியாக ஒரு டம்ளர் கோழி சூப் கொடுக்க வேண்டும் என்றார் அவர். குடும்பத்தலைவன் உடனே அந்தக் கோழியை எடுத்துக் கொண்டு ஒரு கையில் கத்தியுடன் சமையலறை நோக்கிச் சென்றான்.
மறுநாள் அந்தக் குடும்பத்தலைவின் உடல்நிலை மோசமாக, விருந்தினர்கள் அவரைப் பார்க்க வர ஆரம்பித்தனர். அனைவருக்கும் அந்தக் குடும்பத்தலைவன் ஆட்டுக்கறி சமைத்து உபசரித்தான்! சில நாட்களில் அந்தக் குடும்பத்தலைவி இயற்கை எய்தினாள். அவருடைய பதினாறாம் நாள் சடங்கிற்கு அந்த மாடு உணவானது!
ஆக, ஒருவருக்கு வந்த பிரச்சனை அனைவரையும் பாதிக்கும் என்று கோழியோ, ஆடோ அல்லது மாடோ உணரவில்லை.
இந்தக் கதை நம்முடைய இப்போதைய சூழ்நிலைக்கு மிகவும் பொருந்தும். காடுகள் அழிவது பற்றியோ, ஓசோன் அடுக்கில் ஓட்டை விழுவது பற்றியோ, நம்முடைய சுற்றுப்புறம் மாசு அடைவது பற்றியோ யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இதற்கு முக்கிய காரணம் இந்தப் பிரச்சனையைப் பற்றி நாம் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. இது பற்றிய எளிமையான புத்தகங்கள் இல்லை.
இந்தக் குறையை நிவர்த்தி செய்ய வந்துள்ளது என் நீண்ட நாள் நண்பர் திரு. ச. நாகராஜன் அவர்களுடைய இந்தப் புத்தகம். சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பற்றி இவ்வளவு எளிமையான ஒரு ஆராய்ச்சிக் கட்டுரைத் தொகுப்பை வேறு யாராலும் கொடுக்க முடியுமா என்பது சந்தேகம். ஒவ்வொரு பகுதியிலும் அவர் கொடுத்திருக்கும் விவரங்கள் நம்மைப் பிரம்மிக்க வைக்கிறது. படிப்பவர்கள் மிக மிக எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகம் அனைத்துப் பள்ளியிலும் கட்டாயப் பாடமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் நம்முடைய அடுத்த தலைமுறையாவது சுற்றுப்புறச் சூழலை நாம் எப்படியெல்லாம் மாசுபடுத்திக் கொண்டிருக்கிறோம், இனிமேலும் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்வார்கள்.
இந்தப் புத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தை தினமும் பள்ளிகளில் இறை வணக்க கூட்டத்தில் படிக்க வேண்டும்.
திரு. ச. நாகராஜன் அவர்கள் இது போன்ற விழிப்புணர்வு புத்தகங்களை மேன்மேலும் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
20-3-2014 திருவள்ளூர் என்.சி. ஸ்ரீதரன்
*
இந்த நூலுக்கு நான் அளித்துள்ள என்னுரை
என்னுரை
சுற்றுப்புறச் சூழ்நிலையை மாசுபடாமல் காக்க வேண்டும் என்பது வேத காலத்திலிருந்து இருந்து வரும் உயர்ந்த சிந்தனையாகும். வேத ரிஷிகள் நாம் வாழும் இந்த பூமியை மாசுறாமல் காக்க வேண்டிய அவசியத்தை இடையறாது வலியுறுத்தி வந்துள்ளனர்.
இன்றைய வேக யுகத்திலோ இது பற்றி சிந்திப்பதற்கே யாருக்கும் போதிய நேரம் இல்லை. விளைவு, நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறது. புவியின் வெப்பம் கூடிக் கொண்டே போகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் ஆல் இண்டியா ரேடியோவின் வானொலி நிலையங்கள் சுற்றுப் புறச் சூழ்நிலையை மாசின்றிப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அன்றாடம் காலை நேரத்தில் உயரிய சிந்தனைகளை ஒலிபரப்பி வருகின்றன..
ஆல் இண்டியா ரேடியோவுடனான எனது தொடர்பு முப்பது வருடங்களுக்கும் மேலாக நீடிக்கும் அற்புதமான ஒரு தொடர்பு. திருச்சி, மதுரை, சென்னை என அகில இந்திய வானொலி நிலையங்களில் எனது நாடகங்கள், அறிவியல் சம்பந்தமான உரைகள், சுற்றுப் புறச் சூழ்நிலையை மேம்படுத்துவதற்கான உரைகள் மற்றும் உரைச் சித்திரம் ஆகியவை அவ்வப்பொழுது ஒலிபரப்பப்பட்டு வந்துள்ளன.
தொலைக்காட்சியின் ஆதிக்கம் அதிகம் நிறைந்துள்ள இந்த நாளிலும் கூட வானொலிக்கு இருக்கும் மதிப்பே தனி என்பதை எனக்குக் கிடைக்கும் பின்னூட்டங்கள் உணர வைத்துள்ளன. வானொலியின் நல்ல தாக்கத்தால் சுற்றுப்புறச் சூழ்நிலையை மேம்படுத்தும் ஏராளமான நல்ல பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது மகிழ்ச்சி தரும் ஒரு விஷயம். இந்த உரைகளை உருவாக்க வாய்ப்பும், ஆக்கமும் ஊக்கமும் தந்த அகில இந்திய வானொலியின் பல்வேறு நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கும், நிலைய இயக்குநர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..
சுற்றுப்புறச்சூழலை மேம்படுத்துவன் அவசியத்தை நாடு, இனம், மதம் என்ற எல்லையைத் தாண்டி அனைவருக்கும் கொண்டு சென்று பூமியைக் காக்க வேண்டிய கடமை நம்மில் ஒவ்வொருவருக்கும் உண்டு. அந்த வகையில் இந்த வானொலி உரைகளை வெளியிட முன் வந்துள்ள லண்டன் நிலா பப்ளிஷர்ஸ் உரிமையாளர் திருமதி நிர்மலா ராஜு அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.
இந்த நூலுக்கு நல்லதொரு முன்னுரையை திரு N C ஸ்ரீதரன் அவர்கள் அளித்துள்ளார். திரு ஸ்ரீதரன் ஒரு நல்ல பேச்சாளர், திறமையான நிர்வாகி. பல நூல்களை எழுதியுள்ள நூலாசிரியர். கல்வித் துறையில் பல உன்னதமான சாதனைகளைச் சாதித்து வருபவர். பல்வேறு நிறுவனங்களில் சுய முன்னேற்றம், உற்பத்திப் பெருக்கம் உள்ளிட்ட ஏராளமான முக்கிய விஷயங்கள் பற்றிய பயிற்சி வகுப்புகளைப் பல வருடங்களாக நடத்தி வருபவர். எல்லாவற்றிற்கும் மேலாக எனது இனிய நண்பர். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் நட்பு எங்களுடையது.அவர் இந்த நூலுக்கு முன்னுரை அளித்தமைக்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வளமார்ந்த வாழ்க்கையை நம் சந்ததிகளுக்கு உருவாக்க வேண்டியது நமது பொறுப்பு.அதற்கு அடித்தளம் நல்ல சுற்றுப்புறச் சூழ்நிலை. இந்த நூலைப் படிக்கும் ஒவ்வொருவரும் அதைக் காப்பதோடு மேம்படவும் உரிய முயற்சிகளை மேற்கொள்வார்களேயானால் அதுவே இந்த நூல் படைத்ததன் பயனாக மிளிரும். வாசகர்களுக்கும், இவற்றைக் கேட்டு என்னை ஊக்கிய ஏராள்மான வானொலி நேயர்களுக்கும் எனது நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.
பெங்களூரு ச.நாகராஜன்
20-3-2014 மின்னஞ்சல் :snagarajans@gmail.com
இந்த நூலைப் பற்றிய சிறு அறிமுகக் குறிப்பு:-
To understand and appreciate the pure air and sound, Thoughts on Environment IV has been published in continuation of Part I, II and III. Very thoughtful articles such as “Telling Effects of paper cups on the honey bees”, on “Save green campaign” that helps in keeping environment clean bringing awareness among the readers, on keeping the islands to ensure the safety of fish- culture in the seas, on the dangers that carbon monoxide brings, on the need to protect the society from sound pollution etc. lend color to the book. Other articles on the sufferings of earth due to heat waves, illnesses arising out of de-forestisation, increasing acids in the sea, shrinking vegetation and fishes due to heat on earth, challenge posed by carbon, pollution of the sea through wasted chemicals and bio wastes, need to protect ozone layer and several such illuminating and informative articles lend color and weight to the book.
மாசற்ற காற்று, ஒலி முதலியவனவற்றை அறிந்துகொள்ளும் பொருட்டு சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பாகம் 1, பாகம் 2, பாகம் 3 ஆகியவற்றைத் தொடர்ந்து பாகம் 4 வெளியாகிறது. பூக்களில் அயல்மகரந்த சேர்க்கைக்கு பெரிதும் உதவும் தேனீக்களை அழிக்கும் பேப்பர் கப்புகள் என்னும் அதிர்ச்சியூட்டும் தகவல், சுற்றுப்புறம் தூய்மையாக இருந்திட பசுமை இயக்கம் பரவட்டும் எனச் சுட்டும் விழிப்புணர்வு கட்டுரை, கடலின் மீன்வளத்திற்குப் பெருந்துணையாற்றும் பவளத்திட்டுக்களை பாதுகாப்போம், கார்பன் மோனாக்ஸைடு தரும் அபாயம் மற்றும் ஒலி மாசைக் கட்டுப்படுத்துவோம் என்று அறிவுறுத்தும் அற்புதக் கட்டுரைகள் உள்ளடக்கமாக உள்ளன , தகிக்கும் வெப்பத்தால் தவிக்கும் பூமி, காட்டை அழிப்பதால் பெருகும் நோய்கள், கடலின் அமிலத்தன்மை அதிகரிப்பு, கடலில் கலக்கும் சாத்தான்கள், புவி வெப்பத்தால் சுருங்கும் தாவரங்களும் மீன் வகைகளும், கார்பன் தரும் சவால், ஒஸோன் உறை பாதுகாப்பின் அவசியம் என நம் வாழ்வைப் புரட்டிப்போடும் கட்டுரைகள் நிறைந்தது என்றால் மிகையில்லை.
*
இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.
அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பாகம் – 4 நூலைப் பற்றிய சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.
Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
**