
Post No. 11,331
Date uploaded in London – – 7 OCTOBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
குட்டிக் கதைகள்! சுட்டிக் காட்டுவதோ சுவையான செய்திகள்!
ச.நாகராஜன்
சில வரிகளில் பெரிய விஷயங்களை விளக்கும் குட்டிக் கதைகளில் தான் எவ்வளவு சுவையான விஷயங்கள் அடங்கி இருக்கிறது! ஒவ்வொன்றையும் படித்தவுடன் சற்று ஆழ்ந்து சிந்தித்தால் நாம் அடையும் லாபமோ கணக்கிடமுடியாத அளவில் இருக்கும்! சில குட்டிக் கதைகளைப் பார்போமா?
முக்தி அடைந்த விதம்
சாது வேஷம் போட்ட சோம்பேறிகள் சிலர் ஒரு கிராமத்திலிருந்த தோட்டத்தை ஆக்கிரமித்து நன்றாக உண்டு கொழுத்து வந்தனர். ஒரு நாள் பழுத்த பழங்களைப் பறிக்க எண்ணிய ஒரு தொப்பை சந்ந்தியாசி மரத்தின் உச்சியில் உள்ள கிளையின் மீது கிடுகிடுவென்று ஏறினார். அவரது பாரம் தாங்காமல் கிளை முறிய கீழே விழுந்த அவர், இறந்து போனார். அந்தச் சமயத்தில் யோகி ஒருவர் அங்கே வர, கூடவே கிராமமக்களும் கிராம அதிகாரியும் வந்து குழுமி விட்டனர்.
கிராம அதிகாரி (போலி) சாதுக்களைப் பார்த்து இவர் எப்படி இறந்தார் என்று வினவ அவர்கள் முழித்தனர். யோகி, கிராம அதிகாரியை நோக்கி, “அவர் பாரம் தாங்காமல் அவரே முக்தி அடைந்தார்!” என்று பதில் சொன்னார்.
கருணை புரிய எல்லை எதுவும் இல்லை
அடர்ந்த இமயமலைக் காடுகளில் பனி பொழிந்திருந்த குளிர் காலக் காலை நேரம். யாருமே இல்லாத வனாந்தர பிரதேசம்! ஒரு சாது அந்தப் பனி மலை பிரதேசத்தில் ஒரு ஒற்றையடிப் பாதை வழியே சென்று கொண்டிருந்தார்.தூரத்திலே ஒரு இளம் தளிர் – ஒரு அடி உயரம் இருக்கும்- சாய்ந்து கிடந்தது. ஓடோடிச் சென்ற அந்த சாது இளம் செடியைப் பார்த்தார். ஐஸ் கட்டி அதன் தண்டின் மேல் விழுந்திருக்கவே கனம் தாங்காது அது சாய்ந்து கிடந்திருந்தது. சாது அந்த ஐஸ் கட்டியை மெதுவாக விலக்கி விட்டார். செடி நிமிர்ந்தது. சாது தன் வழியே போனார்.
ஞானம் வரும் நேரம்!
“ஒரு நிமிடத்தில் ஞானம் அடைந்து விட முடியுமா என்ன ?” சிஷ்யன் குருவிடம் சந்தேகத்தோடு கேட்டான்.
“நிச்சயமாக அடைந்து விட முடியும்” என்று குரு பதில் சொன்னார்.
“ஆனால், குருவே, ஒரு நிமிடம் என்பது மிகவும் குறைவான நேரமாக இருக்கிறதே”-சந்தேகம் தீராத சிஷ்யன் மென்று விழுங்கினான்.
“59 விநாடிகள் அதிகமாக இருக்கிறது, அப்பனே!” என்றார் குரு.
மற்ற சிஷ்யர்கள் எல்லோரும் இந்த உரையாடலைக் கேட்டு திகைத்தனர்.
பிறகு குரு கேட்டார்:-“ சந்திரனைப் பார்க்க எவ்வளவு நேரம் பிடிக்கிறது?”
“உடனே பார்க்கலாமே!… அப்படியானால் எல்லோராலும் ஏன் ஞானம் பெற முடியவில்லை? ஆன்மீக சாதனையில் இவ்வளவு காலம் ஏன் செலவிட வேண்டியிருக்கிறது”- சிஷ்யர்கள் வினவினர்.
“கண்களை மூடிக்கொண்டே இருக்கும் ஒருவருக்கு கண்னைத் திறக்க எவ்வளவு காலம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்! ஆனால் கண்ணைத் திறந்து விட்டால் க்ஷண மாத்திரத்திலேயே பார்க்க முடியும், இல்லையா!” சாதுவின் விளக்கத்தை சிஷ்யர்கள் புரிந்து கொண்டனர்!
நெருப்பிடம் விளையாடாதே!
யோகி ஒருவரின் ஞானத்தைப் பார்த்த அரசன் ஒருவன் அவர் விரும்பாத போதும் கூட வற்புறுத்தி ஒரு மாளிகையை அளித்து அதில் தன்னை நல்வழியில் செலுத்துவதற்காக எப்போதும் கூடவே வசித்து வர பெரிதும் வணங்கி வேண்டினான்.
யோகிக்கு வந்த வாழ்வைக் காணப் பொறுக்காத ஒரு செல்வந்த பிரபு அரசரிடம் ஒரு நாள், “ அரசே! அந்த யோகி ஏராளமாகப் பணத்தையும் தங்க, வெள்ளிக் கட்டிகளையும் சேர்த்து வைத்திருக்கிறார். இவற்றை அதிக வட்டிக்கு வேறு விடுகிறார். அப்படி வட்டிக்குத் தரும் போது அரசன் என்று இறக்கிறானோ அன்று இதைத் திருப்பித் தந்தால் போதும் என்று வேறு சொல்கிறார்.” என்றார்.
குழம்பிப் போன அரசனுக்கு திரும்பத் திரும்ப இதைச் சொல்லவே அவனுக்கு யோகியின் மீது கோபம் வந்தது.
அரச சபை கூடியிருந்த போது நேரடியாகவே கோபத்துடன் அரசன் அவரிடம் கேட்டான்:-“ என்ன யோகியாரே! பணத்தையும் தங்கம் முதலானவற்றையும் அதிக வட்டிக்கு மக்களுக்கு விடுவதோடு நான் இறக்கும் போது அவற்றை வாங்கிக் கொள்வதாகச் சொல்கிறீர்களாமே, இது உண்மையா?”
யோகிக்கு செல்வந்தரின் பொறாமையும் சூழ்ச்சியும் புரிந்தது.
மிக மெதுவாக சாந்தமான குரலில், “ ஆமாம், மன்னா! அப்படித் தான் சொல்லிக் கொடுக்கிறேன்!” என்றார்.
சபையிலுள்ளோர் ஆஹா என்று கூவினர். செல்வந்தரோ இன்றோடு யோகியின் அத்தியாயம் முடிந்தது என்று மகிழ்ந்தார்.
அரசர் ஆச்சரியத்தோடு யோகியைப் பார்த்து,” என்ன தைரியம் இருந்தால் இப்படி செய்வீர்கள்; செய்வதை ஒப்புக் கொள்ளவும் செய்வீர்கள்” என்றான்.
அரசனை நோக்கிய யோகி, “ மன்னரே ! நான் விடும் அகாத வட்டிக்கு எந்தக் குடிமகனானாலும் கூட அசலையும் வட்டியையும் திருப்ப முடியுமா என்ன? அவர்கள் என்ன செய்வார்கள்? அரசன் இறக்கவே கூடாது! நெடு நாள் வாழ வேண்டும். நாங்கள் பணத்தை திருப்பி அளிக்கத் தேவையே இருக்கக் கூடாது என்று இறைவனை தினம் தோறும் பிரார்த்தனை அல்லவா செய்வார்கள். இந்தக் கூட்டுப் பிரார்த்தனையால் அரசர் நெடு நாள் வாழ்ந்து தேசம் சுபிட்சமாக இருக்குமல்லவா! அதனால் அப்படிச் செய்தேன்” என்றார்.
மனம் குளிர்ந்த அரசன், “யோகியாரே! கஜானாவில் இருந்து எவ்வளவு வேண்டுமானாலும் இன்னும் எடுத்துக் கொள்ளுங்கள்! மக்களை நான் நீண்ட நாள் வாழுமாறு பிரார்த்தனை செய்ய உதவி புரியுங்கள்” என்று வினயமாக வேண்டினான்.
யோகியாரோ, “ அரசரே! இதற்குத் தங்கள் கஜானா பணத்தை எடுக்க வேண்டுமா,என்ன, இதோ இருக்கிறாரே, இந்த செல்வந்தர் இவரிடம் உள்ளதே போதுமே” என்றார்.
எதுவும் பேச முடியாமல் செல்வந்தர் திகைக்க, அரசன் ஆமோதிக்க, மக்கள் மகிழ
யோகியார் செல்வந்தரின் பணம் அனைத்தையும் எடுத்து மிக அதிக வட்டிக்கு ஏழைகளுக்கு வழங்கினார்! அதை தானமாகப் பெற்ற மக்கள் அரசனை வாழ்த்தினர்!
***
புத்தக அறிமுகம் – 79
ராமாயண வழிகாட்டி! (பாகம் 1)
நூலில் உள்ள அத்தியாயங்கள்
பொருளடக்கம்
முதல் பகுதி
- மனப்பூர்வமாகக் கொண்டாடப்பட வேண்டியவர்கள் யார்?
- பொறுமையே அழகு!
- கழிந்த இரவு மீண்டும் வராது!
- சமுத்திரத்தில் சேரும் இரு கட்டைகள்!
- உற்சாகமே உயிர்!
- ராமர் போற்றிய மஹாத்மா!
- ஒன்றை அறியும் விஷயத்தில் ஆறு பிரமாணங்கள்!
- உற்சாகமே பலம்!
- உயிரைக் காப்பாற்றிக் கொள்!ஆனந்தம் உன்னை வந்து அடையும்!!
- சரணடைந்தோரைக் காக்கும் விரதம் கொண்ட அதிசய புருஷன் ராமன்!
- அனுமனிடம் சீதை சொன்ன கரடி கதை!
- சினம் காக்க!
- மனமே அனைத்துப் புலன்களின் இயக்கத்திற்கும் காரணம்!
- நாள் அல்ல, உயிரை அறுக்கும் வாள்!
- ராம ராஜ்யம் – 1
- ராம ராஜ்யம் – 2
- ராம ராஜ்யம் – 3
- ராம ராஜ்யம் – 4
- சீதை ராமருக்குச் சொன்ன ஆயுதம் பற்றிய கதை!
- பாதுகையின் மஹிமை!
- ராமம் ஸத்யபராக்ரமம்!
- கோசலையின் ஆசீர்வாதம்!
- சீதை சொன்ன காகாஸுரன் கதை!
- மண்டோதரியின் மாண்பு !
- ராமரின் சாஸ்வதமான அனுஷ்டானம்!
- முனிவரின் இரக்கம்! ராமாயண உதயம்!!
- ராமாயணம் சௌபாக்யம், பாப நாசனம், வேத சமம்!
இரண்டாம் பகுதி
1. காண்ட, ஸர்க்க, ஸ்லோக எண்ணிக்கை விவரம்
2. ஏழு காண்டங்களில் உள்ள ஸர்க்கங்களின் விவரம்
3. ராமாயண காலத்தில் பாரத தேசத்தின் வரைபடம்
*
இந்த நூலைப் பற்றிய சிறு அறிமுகக் குறிப்பு:-
ராமாயணம்…ரகு வம்ச இளவரசரின் வாழ்க்கைப் பயணம். புனித பாரதத்தின் தலைசிறந்த இதிகாசம். வாழ்க்கை வழிகாட்டி. உறவுகளுடனான கடமைகளை வலியுறுத்தும் ஆதி காவியம்! வால்மீகி முனிவரின் செவ்விய மதுரம் சேர்ந்த கூரிய கவிதைகள்… தமிழில் புதிய ஒரு முயற்சியாக, 24,000 சமஸ்கிருத ஸ்லோகங்களில் இருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்லோகங்கள் எளிய நடையில், அழகிய தமிழில், உரிய விளக்கங்களுடன் இந்நூலில் தரப்பட்டுள்ளன. அசலின் சுவை எப்பொழுதுமே ஈடு இணையில்லாததுதான்! படித்துத்தான் பாருங்களேன்!
*இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.
அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ராமாயண வழிகாட்டி (பாகம் 1)நூலைப் பற்றிய சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.
Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
**