
Post No. 11,340
Date uploaded in London – – 10 OCTOBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கம்பனின் கவி இலக்கணம்!
ச. நாகராஜன்
கம்பனில் திளைத்துக் குளிக்கும் கவியான கே.என்.சிவராஜ பிள்ளை கவி இலக்கணமாகச் சுட்டிக் காட்டுவது ஏழு பண்புகளை.
அந்த ஏழையும் கம்பன் தன் காவியத்தில் எப்படிக் கட்டிக் காத்து பரிமளிக்க வைத்தான் என்பதை 36 பாக்களில் விளக்குகிறார்.
1. மாதுரியம்
“மதுரம் சொற்பொருண் மாட்டு மலிவுகொண்
டுதிர வேண்டுவதாமே முதல் விதி”
கம்பராமாயண கௌஸ்துபம் பாடல் எண் 392
மாதுரியம் இல்லாத கவி வகை மணம் இல்லாத மலர்க் குவியல். அது எண்ணம் இல்லாத மனம்; குணம் இல்லாத கொடும் தவம்.
நல்ல ஒரு கவிஞன்
“உலகியல் ஒரு பட ஆய்ந்து மாதுரீயமே துளும்பும் தீம் பொருள் கவி வார்ப்பர் சாதுரீயமாம் சொல் எனும் பல்லவத் தளிகை”
என்கிறார் சிவராஜ பிள்ளை.
2. தெளிவு
“ஒளியே வீசி உறை பொருள் காண்ப போல்
மொழியின் முன் ஓசை முதிர அதில்பொருள்
பொழிவு தூங்கப் புலன் நெறி போய நற்
தெளிவு தேங்கித் திளைத்திடல் வேண்டும்”
கம்பராமாயண கௌஸ்துபம் பாடல் எண் 395
ஒரு கவிதை தெளிவுற அமைந்து தெளிவைத் தர வேண்டும்.
அப்படித் தராத கவிதை இருள் புதர் மாய்ந்த பொருள்; விலங்கு புள்ளும் விளக்கும் முனைப்பு!
3. வளம்
இளமரக்கா இழைத்துதிர் செல்வம் போல்
மழைக் கண் மாரி வழங்கு வண் தாரை போல்
அளவையில் பொரி வாணத்தவிர்வ போல்
வளமே சொற்பொருள் மன்ன மலியுமால்
வளம் இல்லாத கவிதை எருக்க விட்டு வறழ் மலடு!
சரக்கே இல்லாத ஒரு தரித்திரன் வாணிகம் செய்யப் புகுந்தால் இரக்கம் தான் தோன்றும்.
4. பாவிகம் (Idealisation)
விழுமிய சொல்லின் மேதகு நற்பொருள்
கெழும வேண்டுவதுங் கிழமைத்தென
வழுவிற் றோய்ந்த வளாக வுரைமறு
நழுவிற் றேய்ந்திற நற்புலம் நாட்டுமே
கம்பராமாயண கௌஸ்துபம் பாடல் எண் 401
விழுமிய சொற்கள் விளங்க நற் பொருள் துலங்கப் படைப்பதுவே கவிதை
5. அணி
மணியினான் மிளிர் மாதின் வனப்பிரு
பிணியினான் மைந்தர் சிந்தையைப் பின்னுமால்;
கனியினால் கவின் கால் கவி நங்கையை
அணியினால் அழகு ஆன்றிடச் செய்வரே
கம்பராமாயண கௌஸ்துபம் பாடல் எண் 406
அணி இல்லாத கவிதை ஆபரணம் இல்லாத, மணி இல்லாத மடப்பாவை!
சொல்லிலே வந்த தொடை முதலாக உள்ளவை கவிதையிலே மின்னுதல் வேண்டும்.
6. இசை
“தண்ணொழுக்கம் தழுவிய சொல் என
எண்ணிக் கூறுவது என்னை? சீராண்டுள
வண்ணத்தால் சொல் வனப்பமைப்பால் இசை
நண்ணத்தான் கவி நாட்டுதல் வேண்டுமே
கம்பராமாயண கௌஸ்துபம் பாடல் எண் 412
இசை இல்லாத கவிதையை வசை பாடித் தூக்கி எறிவர் ஓசை நுட்பம் அறிந்தோர். ஒரு சித்திரத்தைத் தீட்ட விரும்பும் ஒரு ஓவியன் வைத்துக் கொள்வது வண்ணத்தின் கிண்ணமே. எவ்வளவிற்கு கவிதைக்கு இன்னெழில் வேண்டுமோ அவ்வளவிற்கு இசை பூசலாம்.
நசை இறந்த ஒரு நங்கையை நயந்தவன் வசை இறந்த இல்வாழ்க்கையை வழுவுவான் அல்லவா?!
ஓசை இன்பம் கவிக்கு உயிர். இதைப் பேசவும் வேண்டுமோ!
7. தொனிப் பொருள்
இனிதுளும்பிசையேர் செவிக்காவ போல்
நுனிதுளும்பிய நுண்ணறிவார் கவிக்
கனிதுளும்பிய காமர் பொருளொடு
தொனிதுளும்பிச் சுவை செயல் வேண்டுவர்.
தொனிப்பொருள் தோன்றாக் கவிதை சாறு இல்லாத கரும்பு. “எங்கு நோக்கினாலும் எல் சொரி நல் ஒளி இங்கு அடைந்து இமையவர் இன்னிசை பங்கணைந்து இணையிலாத பரிமளம் எங்குமெங்கும் இனிமை இனிமையே!”
இப்படி ஏழு பண்புகளைக் கூறித் தன் நூலை முடிக்கிறார் கம்ப ரஸிகர் கே. என். சிவராஜ பிள்ளை.
கம்பனின் அனைத்துப் பாடல்களையும் எடுத்து ஒவ்வொன்றாக எந்த ‘ஏழுடை உரைகல்லில்’ உரசிப் பார்த்தால் கம்ப ராமாயணத்தில் 113 படலங்களில் நாம் பெறுவது பத்தரை மாத்துத் தங்கமாகத் திகழும் சுமார் பத்தாயிரத்து ஐநூற்று அறுபத்தொன்பது கவிதைகள்!
வாழ்நாள் முழுவதும் அமுதம் சுவைக்கலாம். அமுதம் சுவைத்தால் வாழ்நாள் நீண்டு கொண்டே போகும்!
**

புத்தக அறிமுகம் – 82
புராணத் துளிகள்
(பாகம் 1)
பொருளடக்கம்
நூலில் உள்ள அத்தியாயங்கள்
முன்னுரை
முதல் பகுதி :புராணங்களின் பெருமை
1) ஸ்வாமி விவேகானந்தரின் உரை
2) அல்பெரூனியின் கூற்று
3) புராணங்கள் பற்றி மகாகவி பாரதியார்
4) புராணத்தின் பெருமை பற்றி ஸ்ரீ வத்ஸ சோமதேவ சர்மா
5) புராணங்களின் மஹிமை:
காஞ்சி பரமாசார்யர் நிகழ்த்திய அற்புதம்
இரண்டாம் பகுதி : புராணத் துளிகள்
1.பதினெட்டுப் புராணங்களின் பட்டியல்
2. பதினெட்டு உப புராணங்களின் பட்டியல்
3. புராணங்கள் பற்றிப் புராணங்கள் கூறுபவை!
4.புராணங்களின் லட்சணம் ஐந்து
5. முக்தியின் வகைகள்
6. நியமங்கள் பத்து வகைப்படும்!
7. ஜபத்தின் வகைகள்
8. ஜபத்தைச் செய்யும் முறை
9. விநாயகர் ஜனனம் ஆன நேரம்
10. காயத்ரி மந்திரம்
11.காயத்ரி மந்திரச் சிறப்புகள்
12.சிவனுக்கு உகந்த செயல்கள்
13 நலம் தரும் நவகிரகங்கள்
14. 108 சக்தி பீடங்களில் தேவியின் பெயர்கள்
15.யாரை எதற்காக வணங்க வேண்டும்?
16.தேவியின் எந்த சொரூபம் எதைக் காக்கும்: ஆசி கவசம்
17. நைமிசாரண்யம் ஏன் முனிவர்கள் அணுகும் இடமானது?
18.பூமிக்கு உள்ள வேறு பெயர்களும் பெயர்கள் வந்த காரணமும்
19.விபூதியின் மஹிமை:
கோர நரகத்தை சுவர்க்கமாக்கிய துர்வாசரின் விபூதி!
20.ஊர்மி சக்கரம்
21.எந்த தேவதையை எதற்காக உபாசிக்க வேண்டும்?
22.புவர், ஸுவர் முதலிய லோகங்கள் உருவான விதம்!
23.மூன்று குணங்கள் எதை எதைச் செய்யும்?
24.விபரீத ஞானமும் அன்யதா ஞானமும்
25. நர நாராயணர்களே கிருஷ்ணனும் அர்ஜுனனும்
26.பூமி தேவியின் வருத்தம் ஏன்?
27.மனத்தை அடக்குவது எப்படி?
28.ஒன்பது துர்க்கைகள்
29.ஒன்பது வித பக்தி
30. யார் யாரை வதம் செய்தனர்?
31.யுகங்கள் நான்கு!
32.யுகத்தின் வருஷங்கள் எத்தனை?
33.கலி யுகம் ஆரம்பித்தது எப்போது?
34.காவேரியின் மஹிமை
35.அவதாரங்கள் பத்து
36. கீதையின் மாகாத்மியம்
37. மூன்று லோகங்களிலும் கிடைக்காத முன்று விஷயங்கள்!
38. சமபாவத்துடன் இரு!
39. ஞான தானம் செய்பவன் பெறும் பயன்!
40.அரிதரிது மானிடர் ஆதல் அரிது!
41.உத்தம புத்திரனும் அதம புத்திரனும்
42.முயற்சி செய்வது மனிதனின் கடமை
43. உத்தம பக்தி கொண்டவர்கள் யார்?
44. பூஜிப்பவர்களை பூஜிக்காவிடில் நிகழ்பவை எவை?
45.‘இல்லை, இல்லை’ என்று சொன்னவர்கள் ‘கொடு, கொடு’
என்று கேட்பர்!
46. தானத்தின் ஆறு அம்சங்கள்
47.ஒன்பது பதிவிரதைகள்
48.புராண சிரவணத்தின் பயன்!
49.புராண சிரவணமும் நாம சங்கீர்த்தனமும்: பயன்கள்
50.நல்வாழ்த்து!
**
நூலில் உள்ள முன்னுரை இது:
முன்னுரை
புராணங்கள் ஹிந்துக்களின் பொக்கிஷம் என்று சொல்வதை விட அவை உலகின் தலையாய பொக்கிஷம் என்று சொல்லலாம். அவற்றில் இல்லாதவை இல்லை. எல்லாக் கலைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளவை அவை.
நூற்றுக்கணக்கான புராணங்களில் தலை சிறந்தவை எனக் கருதப்படுபவை பதினெட்டு.
இவற்றைப் போற்றிப் பாதுகாத்து பரப்புவதை பாரதமெங்கும் உள்ள மன்னர்கள் தங்கள் கடமையாகக் கொண்டிருந்தனர்.
எல்லா காவியங்களிலும் கதைகளிலும் இலக்கியங்களிலும் புராண மேற்கோளோ அல்லது இதர விதமான புராணப் பயன்பாடோ இல்லாமல் அவை படைக்கப்பட்டதில்லை.
தமிழ்நாட்டில் பிரவசனம் எனப்படும் புராணச் சொற்பொழிவுகளுக்காக சேர சோழ பாண்டிய மன்னர்களும் பிற்காலத்தே வந்த பல்லவ மன்னர்களும் தனி மண்டபங்களை அமைத்தனர்; அவற்றை மக்களுக்குச் சொல்லும் பிரவசனகர்த்தாக்களுக்கு நிதி உதவி, மானியம் அளித்தனர்.
தமிழ் இலக்கியங்களில் நூற்றுக் கணக்கான புராணக் கதைகள் காணப் படுகின்றன!
திருக்குறளில்,
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான்
இந்திரனே சாலும் கரி – (குறள் 25)
என்ற குறளில் புராணக் கதையான இந்திரன் -அகலிகை கதை சுட்டிக்காட்டப்படுகிறது.
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும் – (குறள் 167)
என்ற குறளில் லக்ஷ்மி (செய்யவள் – லக்ஷ்மி தேவி),மூதேவி (தவ்வை – மூதேவி) எடுத்துக்காட்டாகக் கூறப்படுகிறது.
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளாள் தாமரையினாள் (குறள் – 617) என்ற குறள் மூலம் ஒருவனுடைய சோம்பலிலே கரிய மூதேவி வாழ்கிறாள்;ஏனைய சோம்பல் இல்லாத முயற்சி உடையவனிடத்தில் திருமகள் வாழ்வதாகச் சான்றோர் கூறுவர் என்று கூறி புராணக் கருத்தை வலியுறுத்துகிறார்.
அடுத்து
அகடாரார் அல்லல் உழப்பர் சூதென்னும்
முகடியால் மூடப் பட்டார் (குறள் – 936) என்ற குறளில் சூது என்னும் மூதேவியால் விழுங்கப்பட்டவர் உணவின்றிப் பல்வகையாகத் துன்பப்படுவர் என்று மீண்டும் மூதேவியை உவமையாகக் கொண்டு அறிவுரை புகல்கிறார்.
சங்க இலக்கியங்களில் நூற்றுக்கணக்காக புராணக் கதைகளும் புராணக் கருத்துக்களும் கையாளப் படுகின்றன.
பின்னால் வந்த தேவாரம், நாலாயிர திவ்யபிரபந்தம், அருணகிரிநாதரின் திருப்புகழ், அருட்பிரகாச வள்ளலாரின் திருவருட்பா போன்ற பக்தி இலக்கியங்களிலோ ஆயிரக்கணக்கான புராணக் கதைகளையும் குறிப்புகளையும் காண்கிறோம்.
இது தவிர தமிழில் ஏராளமான புராணங்களும், தல புராணங்களும் உருவாகி இருப்பதும் குறிப்பிடத் தகுந்தது.
இவை அனைத்தும் தமிழர்களுக்கு விழிப்புணர்ச்சி ஊட்டுவதற்கான பெரும் ஆராய்ச்சிக்கு உரியது.
புராணங்கள் சுமார் நான்கரை லட்சம் சுலோகங்கள் கொண்ட மாபெரும் கடல். சுமார் எண்பது லட்சத்திற்கு மேற்பட்ட பொருள் பொதிந்த வார்த்தைகளைக் கொண்டவை.இவற்றை முற்றிலும் கற்று உணர ஒரு ஆயுள் காலம் போதாது.
இந்த நிலையில் இவற்றைத் தெரிந்து கொண்டு அறம், பொருள்,இன்பம் ஆகியவற்றை இகவுலகில் அடைந்து மறு உலகத்திற்கான முக்திப் பேறையும் அடையும் முயற்சிக்கு உதவி புரியும் வண்ணம் கடலின் சில துளிகளை ‘புராணத் துளிகள்’ என்ற பெயரில் இந்த நூலில் தொகுப்பாகக் கண்டு மகிழலாம்.
இது போன்ற நூறு பாகங்கள் உருவானால் தான் புராணக் கடலில் ஒரு அலையின் ஸ்பரிசம் பட்ட பலனை உணர முடியும்.
என்றாலும் இது ஒரு ஆரம்ப முயற்சி.
புராணத் துளிகள் அம்ருத சாகர திவலைகளாக வாசகர்கள் மேல் தூவட்டும். அறம்,பொருள்,இன்பம்,முக்திப் பேறு என புருஷார்த்தங்களான நான்கையும் வாசகர்கள் பெற்று மகிழட்டும் என எல்லாம் வல்ல அன்னை பராசக்தியை இறைஞ்சி வேண்டி இந்த நூலை வாசக அன்பர்களிடம் சமர்ப்பிக்கிறேன்.
இந்த நூலை அழகிய முறையில் மின்னணு நூலாகத் தயாரிக்க முன் வந்த நிலா பப்ளிஷர்ஸ் உரிமையாளர் திருமதி நிர்மலா ராஜு அவர்களுக்கும் மற்றும் இந்தப் புனிதமான பணியில் ஈடுபட்டு உதவியாற்றும் திரு கார்த்திகைபாண்டியன், திருமதி யஷஸ்வினி ஆகியோருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.
பங்களூர் ச.நாகராஜன்
24-3-2012
மின்னஞ்சல் முகவரி :snagarajans@gmail.com
**
Thousands of essential facts and quotes for a good life, are assorted in the Eighteen Devine Myths of The Hindu religion! They serve as a wonderful guide to the spiritual awakening in the past. Reading and understanding the four lakhs slogans in the Sanskrit language is not an easy task for anyone. But one can surely read this book to grasp some of the important and nice excerpt of them.
இந்து மதத்தின் இணையில்லாத 18 புராணங்களில் வாழ்க்கைக்குத் தேவையான ஆயிரக்கணக்கான அற்புத ரகசியங்கள் பொதிந்துள்ளன! ஆன்மிக முன்னேற்றத்திற்கான தகவல் களஞ்சியமாகப் புராணங்கள் இலங்குகின்றன. சமஸ்கிருதத்தில் சுமார் நான்கு லட்சம் சுலோகங்களில் உள்ள புராணங்களை முழுமையாகப் படிப்பது எளிதல்ல! எனவே இவற்றிலிருந்து மிக முக்கியமான, சுவையான சுவாரசியமான விஷயங்களைக் கூறும் இந்தச் சிறு நூலைப் படித்து இன்புறுவோமே!
*
இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.
அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். புராணத் துளிகள் நூலைப் பற்றிய சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.
Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
**