
WRITTEN BY B. KANNAN
Post No. 11,375
Date uploaded in London – 20 OCTOBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா
திருச்செந்தூர் நிரோஷ்ட யமக அந்தாதி
Written By B.Kannan,New Delhi

தமிழ் மொழியிலுள்ள 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று அந்தாதி–அதாவது ஒரு செய்யுளின் கடைச் சொல் (அ) எழுத்து அடுத்து வரும் பாட்டின் முதற்சொல்லாக அமைத்து இயற்றுவதாகும். இவ்வகையில் யமக அந்தாதி, ஏகபாத அந்தாதி, திரிபந்தாதி, இதழகலந்தாதி எனப் பல வகைகள் உள்ளன. நாம் காண இருப்பது இதழகலந்தாதி என்று அறியப்படும் ‘நிரோஷ்ட’ (அ) ‘நிரோட்ட யமக அந்தாதி யைத்தான். நிர்+ஓஷ்ட(உதடு)= உதடு ஒட்டாமல் இருப்பது என்று சம்ஸ்கிருதத்தில் பொருள். தமிழ் இலக்கண விதிப்படி பகரம், மகரம் என உதடுகள் ஒட்டிக் கலக்கா மலும், குவிந்தும் வரும் சொற்களைக் கொண்டு பொருள் வருமாறு இணைத்துப் பாடுவது நிரோட்டச் செய்யுளாகும்.
இப்படிப்பட்ட நிரோட்டச் செய்யுளுடன் யமகவடிவைச் சேர்ப்பது நிரோட்டயமக மாகும். யமகம் என்றால், பாடலின் ஒவ்வொரு அடியிலும் முதல் சில எழுத்துகளோ, சோற்றொடரோ திருப்பித் திருப்பி வெவ்வேறு பொருளில் வர வேண்டும். இப்படி நிரோட்டம்+யமகம்+அந்தாதி என இம்மூன்றும் இணைந்து இயற்றப்பெறும் பாடல் களே நிரோட்டயமக அந்தாதி ஆகும். ‘கற்பனைக் களஞ்சியம்’ துறைமங்கலம் ஶ்ரீ சிவப்பிரகாசர் சுவாமிகள் கட்டளைக் கலித்துறையில் திருச்செந்தூர் செந்திலாண் டவன் பேரில் இவ்வணி அலங்காரத்தில் பாடல் இயற்றியுள்ளார். இந்நூலே ‘நிரோட்ட யமக அந்தாதி வகையின் முன்னோடி நூலாகப் போற்றப்படுகிறது.
அந்தாதி என்றால் 100 செய்யுள்கள் இருக்க வேண்டும். ஆனால் இதில் அடங்கி யிருப்பதோ 30 பாடல்கள்தான். மற்றவை செல்லரித்துப் பாழாகிவிட்டன என்பது வருந்தற்குரிய விஷயமாகும் என்று உரையாசிரியர்கள் கருதுகின்றனர். மேலும் இவ்வகை நூலின் ஈற்றுச் செய்யுளின் அந்தமே முதற் செய்யுளின் ஆதியாக (இது மண்டலித்தல் எனப்படும்) அமையக் கூடியச் சாத்தியக் கூறுகளின் பாடல் இங்குக் காணப்படாததும் இக்கூற்றை உறுதி செய்கிறது. இந்நூலாசிரியர் பற்றியும் மற்றும் இவ்வந்தாதி இயற்றப்படுவதற்குக் காரணமாயிருந்த நிகழ்வைப் பற்றியும் அறிந்து கொள்வோம்….
காஞ்சிபுரத்தில் வேளாளர் மரபில் சிவபக்தரான குமாரசாமி தேசிகருக்கு மகனாகப் பிறந்தவர் சிவப்பிரகாசர். இளமையில் திருவண்ணாமலையில் கல்விகற்றுத் தேர்ந்து, பின்னர் பெரம்பலூர் துறைமங்கலம் சென்று ஊர்ப்பிரமுகர் அண்ணாமலை ரெட்டி யாரின் ஆதரவில் சிறப்பாகச் சிவபூஜை செய்து வந்தார். இயற்கையிலேயே கவி பாடும் ஆற்றல் பெற்றிருந்ததால்,திருநெல்வேலிக்கு அருகிலுள்ள சிந்துபூந்துறை யிலுள்ள தருமபுர ஆதீனகர்த்தா வெள்ளியம்பல சுவாமிகளிடம் இலக்கண இலக் கியம் கற்க ஆவல் கொண்டு அவரை அணுகினார். சுவாமிகள் சிவப்பிரகாசருக்கு நுழைவுத் தேர்வு ஒன்றை வைத்தார்.
“ ‘கு’ வில் ஆரம்பித்து ‘கு’ என்ற எழுத்தில் முடிய வேண்டும். இடையில் ‘ஊருடை யான்’ என்ற சொல் வரவேண்டும். இறைவனைப் புகழ்ந்து ஒரு பாடல் பாடுக!” என்றார். எவ்விதத் தயக்கமுமின்றி உடனே சிவப்பிரகாசர்,
“குடக்கோடு வானெயிறு கொண்டாற்குக் கேழல்
முடக்கோடு முன்னமணி வாற்கு–வடக்கோடு
தேருடையான் தெவ்வுக்குத் தில்லைதோல் மேற்கொள்ளல்
ஊருடையான் என்னும் உலகு!” என்ற வெண்பாவை இயற்றிச் சமர்ப்பித்தார்.
(பொருள்: மேற்கு நோக்கி ஓடும் சூரியனின் பற்களை உடைத்தவருக்கு, ஆண் பன்றியின்(கேழல்) வளைந்த கொம்பை முற்காலத்தில் அணிந்தவருக்கு, வடக்கு நோக்கி ஓடுகின்றத் தென்றலாகிய ரதத்தையுடைய மன்மதனின் பகைவருக்கு (மகேசனுக்கு), தில்லை நகர் ஊராகும், யானைத்தோல், புலித்தோல் உடுத்தும் ஆடைகளாகும், ஏறிச்செல்லும் வாகனம் காளைமாடு ஆகும் என்று உலகத்தார் சொல்லுவர்).
இதைக் கேட்டு மகிழ்வுற்ற ஆதீனம் சிவப்பிரகாசரை மாணாக்கனாக ஏற்றுக்கொண்டு, முறையாக இலக்கணப் பாடங்களைக் கற்பித்தார். குருகுலவாசம் முடிந்ததும் ஆசா னுக்குக் குருதட்சணையாகத் தன்னிடமிருந்தக் காசுகளைத் தர, அதை வாங்கமறுத்த தம்பிரான் அவரை வேறொரு பணியை முடித்துக் கொடுக்குமாறு அன்புக் கட்டளை யிட்டார்.
அக்காலகட்டத்தில் திருச்செந்தூரில் ஒரு தலைக்கனம் பிடித்தப் புலவன் இருந்தான். கோயிலுக்கு வரும் தமிழறிஞர்களை வாதுக்கு அழைத்து,வம்பு செய்து மானபங்கப் படுத்தித் துரத்தியவாறு இருந்தான். தன்னை ‘வென்றிமாலைக் கவிராயர்’ என்றும் பீற்றிக் கொண்டிருந்தான். நெல்லைத் தம்பிரான் சுவாமிகளையும் சகட்டுமேனிக்குத் தரக் குறைவாகப் பேசி வந்தான். அவனுக்குப் புத்திபுகட்ட, அவனை வாதில் வென்று, தன்னிடம் அழைத்து வருமாறு பணித்தார் தேசிகர் அவர்கள். அதன்படி செந்தில் சென்று முருகனைப் பாடிப்பரவிக் கொண்டிருக்கையில், அந்த அடாவடிப் புலவன் அவரை யாரென வினவ சிவப்பிரகாசர், ‘தாம் வெள்ளியம்பலத் தம்பிரானின் அடிப் புழுதி’ எனப் பதில் அளித்தார்.
அதற்கு அப்புலவன், ‘அந்தப் புழுதி என் புலமைக் காற்றில் பறந்து போய்விடும்’ எனக்கூற, சிவப்பிரகாசரோ, ‘பாதத்துக்குக் கீழுள்ளப் புழுதி காற்றில் பறப்பதுண்டோ!’
என எதிர்க்கேள்வி கேட்டு அவனை வாதத்துக்கு அழைத்தார். செந்தில்நாதன் கோயி லை ஒருமுறை வலம் வருவதற்குள் இருவரில் யார் முதலில் நிரோஷ்ட யமக அந்தாதி தொகையில் அதிகப் பாட்டுகள் இயற்றுகிறார்களோ அவரே வாதில் வென்ற வராவார் என்ற நிபந்தனைக்கு உட்பட்டனர். முதல் வலம் வருகையில் சிவப்பிர காசர் 30 செய்யுட்களை இயற்றிவிட, வென்றிமாலைக் கவிராயரோ ஒரு பாடலைக் கூடப் பாட முடியாமல் தத்தளித்து, ‘ஒன்றுமறியா கவிராய’ராக நின்றுத் தன் தோல் வியை ஒப்புக்கொண்டான். சிவப்பிரகாசர் அவனைத் தன்னுடன் அழைத்துச்சென்றுத் தம்பிரானிடம், விஜயன் மன்னன் துருபதனைத் துரோணாச்சாரியாரிடம் இழுத்துச் சென்று மண்டியிட வைத்தது போல், அவற்சொற்படி குருதட்சணையாக அளித்தார்…. இதுதான் திருச்செந்தில் நிரோட்ட யமக அந்தாதி பிறந்த நிகழ்வாகும்.
திருச்செந்தில் என்பது அருளுடைய ஆன்மா அடைக்கல நிலையம் என்று பொருள் படும். ( திரு=அருள், செந்து=ஆன்மா, இல்=இல்லம் ). இப்பிரபந்தம் மிறைக்கவி (சித்தி ரக் கவி) இனத்தைச் சேர்ந்தது. திருமந்திரம் சொல்வது போல், பதினாறு மாத்திரை அளவு மூச்சுக் காற்றை இடதுபக்க மூக்கு வழியாக உள்ளே இழுப்பது பூரகம் ஆகும்; இழுத்த மூச்சுக் காற்றை 64மாத்திரை அளவு உள்ளேயே நிறுத்தி வைப்பது கும்பகம் ஆகும்; வலதுபக்க மூக்கு மூலம் 32 மாத்திரை அளவில் மூச்சை வெளியே விடுவது ரேசகம் ஆகும். கட்டளைக் கலித்துறையில் அமைத்து, உதடு ஒட்டாது பாடுவதால் ரேசக, பூரக நிலை நேராக வியக்கத்தக்க வகையில் கும்பகம் விளையும் என்பது சான்றோர் வாக்கு. அவ்வகையில் இந்நூல் முழுவதும் மந்திரச் சொரூபம் தொக்கி நிற்கின்றது. ஆகையால் சில பாடல்களைப் பொருள் அறிந்து மனனம் செய்து பயன டைவோம், வாருங்கள்…..
To be continued………………………………….
rcraja2001
/ October 20, 2022அருமை சிந்தை இனிக்கின்றது…நீண்ட நாளாக தண்ணீர் தேடிய மான் குளிர்ந்த சுனையில் நீர் அருந்தும் போது எந்த மன நிலையில் இருக்குமோ அந்த மன நிலையை கட்டுரை ஆசிரியர் தந்து இருக்கின்றார்.இது போன்ற நன்முத்துக்கள் எல்லாம் அடுத்த தலைமுறைக்கு கிடைப்பதற்கு உதவி செய்யும் திரு.சந்தானம் சுவாமிநாதன்,நாகராஜன் அய்யாவின் திருவடிகளை பணிவதைத் தவிர அடியேன் என்ன செய்துவிட முடியும்?
Tamil and Vedas
/ October 20, 2022Thanks. Let us all thank Mr B Kannan for contributing to Tamil langauge even at this old age.