திருச்செந்தூர் நிரோஷ்ட யமக அந்தாதி- 2 (Post No.11,380)

 

WRITTEN BY B. KANNAN

Post No. 11,380

Date uploaded in London – 21 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

XXXXX

(First part of this article was posted here yesterday)

பாடல் 7-ஐப் பார்ப்போம்

சாரங்கஞ் சங்கரி கட்கிச்சித் தேய்ந்தகைச் சங்கரனார்

சாரங்கஞ் சங்கரி தாஞ்சக் கரங்கையிற் றாங்கினன்சேய்

சாரங்கஞ் சங்கரி யாநண் ணினர்க்கந்தத் தந்திரத்தா

சாரங்கஞ் சங்கரி தேயெனச் செய்நின் சரண்டந்ததே

பதம் பிரித்தால்,

சாரங்கம்(மான்) சங்கரி கட்கு(கண்) இச்சித்து ஏய்ந்தகைச் சங்கரனார்

சாரங்கம்(வில்) சங்கு அரிதாம் சக்கரம் கையில் தாங்கினன் சேய்(மன்மதன்)

சார் அங்கம் சங்கரியா நண்ணினர்க்கு அந்தத் தந்திரத்து ஆ

சாரம் கஞ்சம்(செந்தாமரை) கரிதே எனச்செய் நின சரண் தந்ததே

உமாதேவியின் கண்ணழகு காண அவரைப் பார்த்த கண் வாங்காது மான் இருந்தாற் போல் அந்த மான் ஏந்திய இடது கரத்தையுடைய ஈசனும், சார்ங்கம் எனும் வில், பாஞ்ச சன்யம் எனும் சங்கு, அருமையான ஆழி முதலியவற்றையும், திருக்கரத்தில் கொண்ட திருமாலின் மைந்தன் மன்மதன் உடலை எரித்துச் சாம்பலாக்கிய யோக நிலையிலிருந்த மகேசனுக்கு, சிறந்த சிவாகம சீலத்தை, செந்தாமரை மலரையும் கருநிறமாக நாணச் செய்யும் உமது திருவடி மலர்கள் உதவின.

தெய்விகப் பார்வை மானின் நோக்கிற்கு இடம் செய்த மாதேவர், காம நோக்கில் அணுகிய மால் மகனின் உடலைப் பொசுக்கினார், பஞ்சாயுதபாணியாய் இருந்தும் திருமாலால் ஒன்றும் செய்ய முடியவில்லை. செந்தாமரையை நாண வைத்த செந்தி லாண்டவன் திருவடிகள் உரிய இப்பேற்றைச் சிவனாருக்கு உதவினதாம் “செந்தில் அத்தா! என்கதி என்னவாகும்? எனக்கு அப்பேறு எப்போது கிடைக்கும், என்று இறைஞ்சுகிறாராம் சிவப்பிரகாச சுவாமிகள்.

12-ம் செய்யுளில் கோவை அவிநாசியில் முதலை விழுங்கியச் சிறுவனை ஆளுடை நம்பிகள் ஈசனிடம் முறையிட்டு உயிர்ப்பித்த நிகழ்வு விவரிக்கப்படுகிறது.

“முப்புரமாவது மும்மல காரியம்” எனும் தத்துவக் குறிப்பு இழையோடும் 15-ம் பாடல் ஈசன் முப்புரம் எரித்தக் கதையைச் சொல்கிறது. சிவனின் நெற்றிக் கண்ணி லிருந்து வெளிப்பட்ட அருட்பொறிகள் ஆறையும் கங்கை தன் அலைக்கைகளால் தாங்கியதால் கங்கை தனயன் எனும் பொருளில் செவ்வேள் காங்கேயன் என அழைக்கப்படுகிறான் என்ற விளக்கத்தை 29-ம் பாடலில் தருகிறார்.

நாள்கள் கோள்கள் நலமில்லை என்று நையாதே;வாய்ப்பான செல்வம் இல்லை யென்று வருந்தாதே; மனை மக்கள் சுற்றம் சரியில்லை என்று மாழ்காதே; உடல் பிணி கண்டு உலையாதே தொல்லை அனைத்தும் தொலைய வேண்டுமேல், வா, செந்தூரான் திருவடிகளைத் தியானம் செய். கதிர்வேலா, ” நல்ல இடங்காண் இரங்காய் இனி” என்று இறைஞ்சு என்கிறார் வேறொரு பாடலில். சாக்கிய நாயனார் விருத்தாந்தமும் இன்னொரு இடத்தில் சொல்லப்படுகிறது.
தட்சனின் மனத்திமிரை அழித்து அவனைச் சிவகணத்தவருள் ஒருவனாக்கிக் கொண்ட சிவனாரின் அருமைப் புதல்வன் குமரன், ஐந்தாம் சங்கர சொரூபர் அகத்தியருக்குச் செந்தமிழும், சிவஞானமும் சித்திக்கச் செய்தான். செந்திலம்பதி யில் உறையும் அப்பெருமானை அடிபணிந்தால், உருத்திரப் பதவி, வைகுந்த மற்றும் பிரம்மப் பதவிகளை அவ்வள்ளல் வழங்குவான் என்கிறார் மற்றொரு இடத்தில்.

 28-ம்செய்யுளைப் பார்ப்போம்……

கணக்காக நாய்கடின் காய நிலையெனக் கண்ணியென்ன

கணக்காக நானலைந் தெய்த்தே நெழிற்செந்திற் கந்தநெற்றிக்

கணக்காக னார்தந்த நின்றனை யேயெனிக் காதலினாற்

கணக்காக னாநிகர்த் தேயழி யங்கத்தின் காதலற்றே.

பதப் பிரிவு: கண(கூட்டம்)க் காகம் நாய்கள் தின் காயம்(உடல்) நிலை எனக் கண்ணி(நினைத்து), என்ன கணக்கு ஆக நான் அலைந்து எய்த்தேன்? (சோர்வ டைந்தேன்) எழில் செந்தில் கந்த! நெற்றிக் கண் அக்குஆகனார்( எலும்பு மாலை அணிந்தவர்) தந்த நின்றனையே, இனிக் காதலினால் கண (நினைத்தபடி)க் கா(காப்பாற்றும்), கனா நிகர்த்தே அழி அங்கத்தின் காதல் அற்றே.

பொருள்: காக்கைக் கூட்டங்களும், நாய்களும் தின்னும் உடலை நிரந்தரம் என நம்பி, எந்த நோக்கத்துக்காக உழன்று இளைத்தேனோ தெரியவில்லையே! திருச்செநூரில் உறையும் கந்தவேளே, கனவைப் போல் அழியும் இவ்வுடல் மீதுள்ளப் பற்று ஒழிந்து,

நெற்றிக் கண்ணும், எலும்பு மாலையும் தரித்த சிவனார் அருளியு உம்மையே இனி ஆர்வமுடன் தியானிக்கச் செய்து கதியற்ற என்னைக் காப்பாயாக!

ஏன்றாவது ஒருநாள் அழியும் உடல் இது. அதை உணராமல் என்றும் நிலைத்திருக் கும் என எண்ணியிருந்தது எவ்வளவு முட்டாள்தனம்? அங்கங்களின் வளர்ச்சியும், தளர்ச்சியும் கனவு போல் தோன்றிக் கழியும் உடலல்லவோ இது?

“பாலனான பருவம்போம் பன்னுகுமாரப் பருவம்போம்

கோலமான தருணம்போம் கோலை யூன்றிக் குனிந்தெழுந்து

காலன் மாய்க்க அனைவர்களும் கல்லென்றழுது பேர்மாற்றி

ஏலப் பிணமென் றொருபெயரிட்(டு) இடுகாட் டிடுதல் ஒரு தலையே!

சூரிய உதயம், அதன் அஸ்தமனம் இரண்டையும் தினமும் கண்கொண்டுப் பார்த்தும், இளங்கன்று வளர்ந்து பசு,காளை,எருது எனவாகிப் பின் மரித்துவிடும் நிலையினைப் பார்த்தும் கூட,தோன்றியப் பொருளுக்கு ஒருநாள் அழிவு உண்டென்பதை அறியாதார் விழியிலா மாந்தர் என்கிறார் திருமூலர் .(திருமந்திரம் பாடல் 49)

ஆகவே உடல் பற்றை நீக்கி எப்போதும் உன்னையே நினைக்கும்படி செய்து என்னைத் தடுத்தாட்கொள்வாயாக! என்று வேண்டுகிறார்.

பற்றற்றான் தாளைப் பற்றினால் உள்ள பிறபற்று ஒழியும் என்பதற்கேற்ப, கந்தா, உன்னிடம் அடைக்கலம் புகுந்தேன். அநியாய எப்பிறப்பையும் எனக்கு அளித்திடாதே!

சிவனார் அருளியச் செல்வமே! ஆணவ இருளை அகற்றி, உத்தம உயிர்களை ஒளி மயமாக்கும் ஞானசக்தியாம் வேல் கரத்து விமலா, திருச்செந்திலில் எழுந்தருளியி ருக்கும் காங்கேயா, உன் பாதங்களில் சரணடைகிறேன் என்று உருகுகிறார்.

இது போன்று அருளாளர்கள் அருளிச் செய்த இத்தகு நிரோட்ட யமக அந்தாதிப் பாடல்களைப் படிக்கும் போது, நம் இதழ்கள் ஒட்டவில்லையாயினும், மனம் இறை வனோடு ஒட்டி-உறவாடி இரண்டறக் கலந்து விடுவதை, இச்செய்யுள்களை ஆழ்ந்து கற்போரால் நன்கு உணர முடியும்.

            செந்தில் வேல் முருகனுக்கு அரோஹரா!

 Tags- திருச்செந்தூர் ,நிரோஷ்ட யமக அந்தாதி, B Kannan

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: