
WRITTEN BY Dr. A. Narayanan MSc. Ph.D., London
Post No. 11,390
Date uploaded in London – 28 OCTOBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
DR.A.NARAYANAN POEMS ON SKANDA/ MURUGA AND PARTHASARATHY
பார்த்தசாரதி திருவடிகளே சரணம்
பார்த்தசாரதி பார்த்தனைக் காத்த சாரதி
பார்த்தோரை பார்வையிலேயே ஈர்த்த சாரதி
நேர்த்தியான மூர்த்தியாய் முருக்கிய மீசையும்
முழித்த பார்வையும் புல்லாங்குழலற்றுப் பிறைமதிப்
புன்னகையோடுப் பொல்லாப் பகைவரைப் போரில்
கொல்லாக் கொற்றவன் கோழையெனப் புரவியுடன்
பூட்டிய பெருந்தேர் ஓட்டிய இடையர் குலத்தோனே
இடம் மாறி கிருத்தினன் கீர்த்திக்கு சாரதியான
உலகோர் உய்ய அறமோங்க கீதையெனும்
வேதமீன்ற வேங்கட கிருட்டிணனே
பார்த்தனுக்குப் பாத்திரமான பரமனோ
ஆழியும் சார்ங்கமும் கதையும் ஏந்தா
ஊழி முதல்வனாய் ஊதிய பாஞ்ச சன்யம்
முழங்கியதோ பஞ்சவரிடம் தஞ்சமடைந்தால்
மிஞ்சுவர் படையுடன் பங்காளிகள் அல்லேல்
எஞ்சுவது இப்போர்களம் பிணக்குவியலிலென
அணிதேர்புரவி ஆட்பெரும் இரு படை இடையே
அருச்சுனன் ஆணைக்கு தேரை நிருத்திய
விமலன் விசயனை நோக்கக் கண்டானோ
தனஞ்செயனின் கண் தேங்கிய தாபத்தை
கணை ஏவும் கைகள் நடுங்கப்
பார்த்தன் பங்காளிகளையும் பயின்ற
விச்சை ஈன்ற குருவையும் கொன்று
குவித்த குருதி மண்ணில் கொடி
ஏற்றியவரோ! குந்தியின் குமரர்கள்
கொலை வெறிப் பாண்டவரெனப்
பழிச் சொல் ஏற்பதா வென விதிர்க்க
தூக்கத்தை வென்றோன் துக்கத்தில்
துடிக்கப் பந்த பாசமெனும் வியந்தரன்
பற்றியதில் வியந்தனன் விமலன்
நாடிழந்து நாடியவள்நாணம்
நடு அவையில் பறிபோகாக்
கண்ணன் காத்ததையும் மறந்து
நஞ்சுப் பகைவரை உன்னியரென
மன்னிப்பது வீரனுக்கு வேணா
வைராக்கியமெனக் கார்முகில்
வண்ணன் போர் முனையில் பல்
குணனுக்குப் போதித்தப் புவி
யுள்ளோர்க் கெல்லாம்பொருந்தும்
வேதமே கீதையெனுபநிடதம்
துவங்கியதோ கீதோபதெசம் துயருற்றோன்
துலங்கப் பிறப்பு இருப்பு இறப்பெல்லாம்
துயருரறூம் உடலுக்குரியதாக நின்றோர்
இறப்பதும் சென்றோர் பிறப்பதெனும் பிறப்பு
இறப்பு சுழற்சியில் அழிவிலா ஆத்மா அடுத்தடுத்
திருக்கும் கூடே உடல், உடை கிழியும்போது புத்
தாடை உடலேற்பது போலப் புதுப்புதுஉடலேற்கும்
சீவாத்மா சிதைக்கவோ எறிக்கவோ நனைக்கவோ
உலர்த்தவோ முடியாதொன்றாக பரமாத்மாவின்
சேவகனாய் உடலிலிருப்பதை நீ!அறிவாயோ
படையாய் நிற்குமிவரெவரும் இன்றிறப்பர்
பிறப்பர் நாளை மிண்டும் இறப்பர் பிறப்பர்
அறப்போரில் புறம் நோக்காப் பகைவனை
அழிப்பதே உன் கடமை பார்த்தா ! மேலும்
பற்றற்றாற்றும் எக்கடமையும் யோகமாய்
ஞானமெனும் பாதையிணைந்து விளக்குரூம்
பக்தியில் அறிவாயோ எதிலும் இயங்குவனும்
எதையும் இயக்குவனும் பிரப்ஞ்சம் விரிதலும்
சுரிதலுமாக எல்லாமென்னிடமிருந்தே அர்சுனா!
என விமலன் பகர வியந்தானோ விசயன்
தாமோதரன் தாள் தனஞ்சயன் தஞ்சமடைய
திருவாய் விளம்பிய விசுவரூபம் நேரில் காண
அருத்தித்தோனுக்கு அவன் புறக்கண் காண
இயலா விராட ரூபம் காண்பதற்கேற்ற
ஞானக்கண்ணருளியதில் கண்டு களித்ததோ
ஞாலத்தையளந்தோன் கொண்ட கோலத்தில்
அண்ட பகிரண்டமும் ஆயிரம் தலையும்
அதற்கேற்ப அளப்பிலா ஆயுதங்கள் தாங்கிய
கரங்களும் அதிசய அணிகலங்களும் ஆடை
அலங்காரமுமாய் விளங்கிய விசுவேசுவரன்
ஒன்றில் பலவாய் காட்சி தந்த உம்பர்கோமானின்
ஒளி வீசும் விராட ரூபத்தில் கௌரவர் சேனையில்
வீரர்களும் மகாரதிகளும் விசுவரூபன் வாயினுள்
வீழ்வோரும் வெளிவருவோருமாய் காட்சி காண
ஊர்வன, நிற்பன,நீந்துவன நடப்பன, பறப்பன வென
வெல்லாம் ஒருங்கே திரண்டதைக் கண்டு வியந்து
விதிர்த்தானோ விசயன் சாட்டையும் சங்குமேந்திய
சாரதியா! பஞ்சவர்க்கு உறவும் நண்பனுமானவன
கஞ்சனைவதைத்த கிருட்டிணனா! எட்டிப்பிடிக்க
இயலாதோன் இசைந்தானே கட்டியுறவாட.
விசுவரூபம் கண்டு வியந்து வியர்த்த விசயன்
விமலனை சங்கு, சக்கரம், சார்ங்கம் கதையுடன்
விட்டுணுவாய் காண வேண்ட வேய்ங்குழலோன்
விராட உருவம் களைந்து விட்டுணுவாய்த் தோன்ற
விசயன் வில்லேந்தி வீரிட்டு விடுத்த சரமாரியில்
விழுந்தன சிரங்கள் பலவாயினும் மகாரதிகளை
வீழ்த்த வசுதேவன் வகுத்தனோ சூட்சி பல்வேராக
வீடு பெற மரணமண்டா மகாரதிகள் மாதவன் தன்
வீடுடையானாக்கி யறமோங்க யுகந்தோருமவதார
விட்டுணுவினிலக்கோ அறம் வழுவோரையழிப்பது
நாராயணன்
xxx

கந்தன் கருணை
ராகம்: சிம்மேந்த்ர மத்யமம்
பூங்காற்றுச் சுமந்த வந்தப் பூ மணமாய்
பொறி வண்டுத் தேடியத் தேன் சுவையாய்
வருவாயோ முருகா! தரிசனம் தருவாயோ
ஓமுருகா! வேல் முருகா!
வா முருகா! வடிவேலழகா!
கந்தன் கழலோ தாமரையோ அதில்
வண்டின் ரீங்காரம் ஓம் காரம்
தண்ட பாணியின் திருக்கோலமோ
பண்டாரமான பழனியாண்டியாக
ஆண் டியானாலும் அவன் திருவடியில்
வேண்டியதெல்லாமே விளைந்திடுமே
ஓ முருகா! வேல் முருகா!
வா முருகா! வடிவேலழகா!
காவடி சுமந்தோர் குன்றேறியுன்
கழலடி நிழலில் களைப்பாற
குன்றே குமரனாக
நின்றே அவர்க் கருள்வாயே
ஓ முருகா! வேல் முருகா!
வா முருகா! வடிவேலழகா!
முப்பொழுதும் உன் நினைவினிலே
எப்பொழுது நீ என் நாவினிலே
இப்பொழுது யானுன் சந்நிதியினிலே
இரப்பதோ உன் கருணை நிதி
கோல மயிலேறி சேவற் கொடி ஏந்தி
கருணைக்கடலான கந்தன் துணையாக
வேண்டியதெல்லாமே வேலவனேயாக
வேண்டியது வேறில்லை வேறில்லை
ஓ முருகா! வேல் முருகா!
வா முருகா! வடிவேலழகா!
நாராயணன்
—-subham—-