
Post No. 11,392
Date uploaded in London – 28 OCTOBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
பத்து நாடுகள் வழியாகப் பாயும் டான்யூப் நதியைப் (Danube River) பார்க்க வேண்டும் என்று ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை; அது 25-10-2022ல் நிறைவேறியது. குடும்பத்தோடு ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் (Vienna , Austria ) ஐந்து நாட்கள் தங்கி தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினோம்.. தீபாவளியன்று கங்கா ஸ்னானம் ஆச்சா? என்று கேட்பது சம்பிரதாயம்.அதாவது அன்றைய தினம் அதிகாலையில் எங்கு குளித்தாலும் அது கங்கையில் குளிப்பததற்குச் சமம். அதாவது அன்றைய தினம் கங்கா தேவி எல்லா நீர் நிலைகளிலும் பிரவேசிக்கிறாள் . நாங்கள் வியன்னாவில் ஹோட்டல் அறையில் குளித்துவிட்டு திருப்தி அடைந்தோம். வியன்னாவில் குடிநீர் சப்ளை அருகிலுள்ள மலை ஊற்றிலிருந்து வருகிறதாம். நதியிலிருந்து அல்ல; நிற்க .
டான்யூப் நதி மேல் ஏன் அவ்வளவு காதல் என்று கேட்கிறீர்களா? இயற்கையிலேயே விஞ்ஞானத்தின் எல்லா துறைகளிலும் , பூகோளம் , சரித்திர பாடங்களிலும் எனக்கு ஒரு ஆசை , ஈடுபாடு உண்டு.அந்தவகையில் ஐரோப்பாவின் இரண்டாவது நீளமான நதியான டான்யூப் நதியைச் சந்தித்து , ஹலோ ஹவ் ஆர் யூ ? Hello! How are you? என்று கேட்க விரும்பினேன். நாங்கள் மாலை நேரத்தில் சென்றதால் கடைசி கப்பலும் சென்றுவிட்டதால் (Boat ride or Cruise) படகு சவாரி செய்ய இயலவில்லை. ஆயினும் நீல நீரையுடைய நீளமான நதியைக் கண்டேன்; ஆனந்தம் கொண்டேன்.
இரண்டு உலக யுத்தங்களிலும் சம்மந்தப்பட்டது இந்த நதி. ஜெர்மனியில் கருங்காட்டில் (Black Forest) உற்பத்தியாகி 10 நாடுகளில் பாய்ந்து கருங்கடலில் (Black Sea) சங்கமம் அடைகிறது. ஸம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும் நீலம்/Blue என்பதை கருமைக்கும் பயன்படுத்துவோம். நீல குயில் என்போம்; கரு ங்குயில் என்று பாடுவோம். நான் பிராமணன் என்ற முறையில் தினமும் தெற்கு திசை நோக்கி நின்று, மூன்று வேளைகளில் யமதர்மனுக்குச் சொல்லும் மந்திரத்திலும் அவனை நீல நிறத்தவனே என்று போற்றுவேன். அவனோ Utter Black அட்டர் பிளாக்.;போகட்டும். கருங்காட்டில் உற்பத்தியாகி கருங்கடலில் கலக்கும் நீல(Blue Danube) டான்யூப் நதிக்கும் அப்பெயரின் பொருத்தத்தை விளக்க இவ்வளவும் சொன்னேன்.
ஹிட்லர் தோற்கப் போவது தெரிந்தவுடன் ஜெர்மானியர்கள் தங்கள் கப்பல்களை நதியில் வேண்டுமென்றே மூழ்கடித்தனர். இப்போதும் நீர்மட்டம் குறையும் போது அவைகளைக் காணலாம் .
XXX

நதியின் நீளமும் அணைகளும்
இந்தியாவில் சிந்து , பிரம்மபுத்ரா நதிகளின் நீளம் 2900 கிலோமீட்டர். கங்கை நதியின் நீளம் 2525 கிலோமீட்டர். டான்யூப் ஆற்றின் நீளம் 2850 கிலோமீட்டர். ஏறத்தாழ சிந்து நதி போன்றதே. ஐரோப்பாவின் நீளமான நதி வால்கா (Volga River) . அதன் நீளம் 3535 கிலோமீட்டர்.
ஜெர்மனியில் உற்பத்தியாகி உடனே ஆஸ்திரியாவுக்குள் நுழைவதால் அதன் தூய்மை கெடாமல் நீல நிறத்திலேயே எங்களுக்குக் காட்சி தந்தது.
இந்த நதி பற்றி நூற்றுக் கணக்கான புஸ்தகங்களும் பல டாகுமெண்டரிகளும் வெளிவந்துள்ளன.இதன் மீதும் இதன் உபநதிகள் மீதும் 700 அணைகள் உள்ளன. ஜெர்மனியில் இருக்கும் நதி மூலத்திலிருந்து அடுத்த வீடான ஆஸ்திரியா வருவதற்குள் ஆயிரம் கிலோ மீட்டருக்குள் 60 பெரிய அணைகள் இருக்கின்றன. பல நாடுகளின் குடி நீர்ப் பிரச்சனையையும் மின்சார பிரச்சனையையும் இந்த ஆற்று நீர் தீர்ப்பதோடு பாசன வசதிக்கும் பயன்படுகிறது. எல்லா வற்றுக்கும் மேலாக சுற்றுலாப்பயணிகளை கவர்ந்து இழுக்கிறது .காரணம்; ஆயிரக் கணக்கான சொகுசு(Cruises ) கப்பல்கள் பல லட்சம் மக்களை ஏற்றிய வண்ணம் இங்கே பவனி வருகின்றன.
மேலும் சில சுவையான விஷயங்களை (Bullet Points) புல்லட் பாயிண்டுகளில் காண்போம்; மைல் கணக்கில் இதன் நீளத்தைச் சொல்லவேண்டுமானால் 1777 மைல்கள் . இது தோன்றும் இடம் ஜெர்மனி ;ஆனால் சங்கமம் ஆகும் இடம் ருமேனியா
இந்த ஆற்றின் முகத்துவாரத்தில் பல லட்சம் சதுர மைல் பரப்புள்ள பசுமைக் காடுகளும் சதுப்பு நிலக் காடுகளும் பரவிக் கிடக்கின்றன
பல நாடுகளிலிருந்து வரும் குடியேற்றப் பறவைகள் இந்த நதியின் முகத்துவாரத்தில் உள்ள பிரம்மாண்டமான சதுப்பு நிலக்காடுகளில் தங்கி இனப்பெருக்கம் செய்கின்றன.
இந்த ஆறு செல்லும் 10 நாடுகள் – ஜெர்மனி, ஆஸ்திரியா , ஸ்லோவாகியா , ஹங்கேரி, க்ரோவேஷியா செர்பியா , பல்கேரியா,மால்டோவா, உக்ரைன், ருமேனியா .
மூன்று நாடுகளின் தலை நகரங்களான புடாபெஸ்ட், பெல்கிரேட், வியன்னா ஆகியவை இந்த நதிக் கரையில் அமைந்திருப்பது மற்றொரு சிறப்பு .
சொகுசு கப்பல்களோடு மிகப்பெரிய வணிகக் கப்பல்களும் செல்லும் அளவுக்கு ஆழம் உடையது இந்த நதி .
இதன் நீர்வழிப்போக்கு மட்டும்தான் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கின்றன என்று எண்ணி விடக்கூடாது. நிறைய கால்நடைப் பாதைகளும் சைக்கிள் பாதைகளும் மக்களை ஈர்க்கின்றன.
கலைஞர்கள் , இதன் கரையில் அமர்ந்து வரைவர்; கிராமியப் பாடகர்களும், புலவர்களும் பாடி மகிழ்வர் . 2000 ஆண்டு கிரேக்க, ரோமானிய வரலாற்றுடனும் இரண்டு உலகப்போர்களுடனும் தொடர்பு இருப்பதால் இதான் வரலாறு நீண்ட வரலாறு ஆகும்
இது பாயும் நாடுகளில் எட்டு கோடி மக்கள் வசிக்கின்றனர். அவர்களோடு மேலும் 20 கோடிமக்கள் இதனால் பயன் அடைகின்றனர் . பல கால் வாய்கள் உள் நாட்டிற்கு தண்ணீரை எடுத்துச் செல்கின்றன..
200 வகைமீன்கள் இதில் வசித்தாலும் குறிப்பிடத்தக்கது சால்மன் வகை மீன்தான். அது மனித உயரத்துக்கு வளருவதோடு முப்பது ஆண்டுகள் வரை வாழக்கூடியதும் ஆகும்.
இவ்வளவு அழகான நதிக்கு ஆபத்தாக விளங்குவது மனிதர்கள் கலக்கும் மாசு ஆகும். இதன் புறச் சூழல் பிரச்சனைகள் குறித்து நிபுணர்கள் எச்சகரித்துள்ளனர். பன்னாட்டு அமைப்புகள் இதில் கவனம் செலுத்தி வருகின்றன. தொழிற்சாலை கழிவுகளோடு சாக்கடை நீரையும் மக்கள் கலக்கின்றனர் .
இயற்கை வனப்பும் தூய நீரும் உடைய இந்த நதியை வருங்கால ஸந்ததி னருக்கு பாதுகாப்பது மனித குலத்தின் கடமை.
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
–subham–
Tags- டான்யூப் , நதி, ஆறு, ஜெர்மனி, பத்து நாடுகள்,நீள மான ஆறு, ஐரோப்பா