Post No. 11,394
Date uploaded in London – 29 OCTOBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
ஐரோப்பாவில் 8 நாடுகளுக்கு இடையே அமைந்த நாடு (Austria) ஆஸ்திரியா. அதன் தலை நகரம் (Vienna) வியன்னா. மதுரை, காஞ்சிபுரம் போன்ற நகரங்களை வருணிக்கும்போது கோவில் நகரம் என்று அடைமொழி கொடுக்கிறோம். அப்படியானால் வியன்னாவை என்ன சொல்லி அழைக்கலாம்? நான் ‘மியூசியங்களின் நகரம்’ (City of Museums) என்றே அழைப்பேன். இரண்டாவது அடை மொழி கேட்டல் இசை நகரம் என்றே அழைப்பேன்.மொசார்ட், பீதோவன் ஸ்டராஸ் , ஷுபெர்ட் போன்ற இசை மேதைகளின் பிறப்பிடம் அல்லது வாழ்விடம் இது.
எந்த ஊருக்கும் போவதற்கு முன்னர் எதற்காகப் போகிறோம், அங்கு என்ன பார்க்கவேண்டும் என்று முன் கூட்டியே படித்துவிட்டு, பார்க்க வேண்டிய இடங்களைத் தீர்மானித்துவிட்டு அதற்காகத் திட்டமிட்டு போக வேண்டும். குடும்பத்தோடு, குறிப்பாக சிறு வயது குழந்தைகளுடன் போகும்போது நாம் திட்டமிட்டபடி எல்லாம் நடக்காது. அவர்களுடைய உடல்நலமும் மன நலமுமே முக்கியம். ஆயினும் இந்த ஆஸ்திரிய விஜயம் திட்டமிட்டபடி நடந்ததால் வெற்றி என்றே சொல்லுவேன் . அது எப்படி?
நான் பார்க்க திட்டமிட்ட இடங்கள்:
வியன்னாவின் அரண்மனை , டான்யூப் நதி, ஓவியங்கள் நிறைந்த பெல்வெடெர் மியூசியம், ஹவுஸ் ஆப் ம்யூசிக் எனப்படும் இசை மியூசியம், , ஹரே கிருஷ்ணா இயக்கம் நடத்தும் கோவிந்தா உணவுவிடுதி.
இவை அனைத்தும் இனிதே நடந்தேறியது. ஆயினும் மொசார்ட் மியூசியம், பேரக்குழந்தைகளுக்காக டெக்னலாலஜி மியூசியம் போக எண்ணினேன்; இயலவில்லை.ஐந்துக்கு நாலு பழுது இல்லை என்று திருப்தி அடைந்தேன்.
xxx
சில அறிவுரைகள்
ஷோன் பிரன் (Schonbrunn palace) அரண்மனைக்குச் சென்றோம். ஆயினும் ஐரோப்பா முழுதும் எல்லா அரண்மனைகளும் ஒரே மாதிரிதான் உள்ளன. 1990ல் பாரிசுக்கு அணித்தேயுள்ள வெர்சாய் அரண்மனைக்குச் சென்றேன். அண்மையில் ஸ்பெயின் நாட்டின் தலை நகரான மாட்ரிட்டில் உள்ள அரண்மனைக்குச் சென்றேன் இடையில் சுவீடன் நாட்டின் தலை நகரான ஸ்டாக்ஹோமில் உள்ள அரசாங்க மியூசியத்துக்குச் சென்றேன் ஒவ்வொன்றுக்கும் நுழைவுக் கட்டணமோ ‘யானை விலை , குதிரை விலை’. ஒரே ஒரு மியூசியத்தைப் பார்த்தாலே போதும்.
அங்கே என்ன இருக்கும்? அரசர்கள், அரசிகள் உபயோகித்த படுக்கை, நாற்காலிகள், சோபாக்கள், ஆயுதங்கள், இசைக் கருவிகள், பிரம்மாண்டமான கண்ணாடிகள், பளிங்குச் சிலைகள், அவர்கள் உபயோகித்த பெரிய டைனிங் டேபிள், வெள்ளி, தங்கக் கத்திகள் கிண்ணங்கள், சில இட ங்களில் காலணிகள், சுருட்டுகள் , கிரீடங்கள் மஹாராணியின் அலங்கார, அறைகள் , அலங்காரப் பொருட்கள், விதவிதமான கடிகாரங்கள் (தங்கம் அல்லது தங்க முலாம் பூசப்பட்டவை) முதலியன எல்லா இடங்களிலும் இருக்கும். அவை எல்லாம் இந்திய போல 2000 ஆண்டுப் பழமையானதும் அல்ல. அதிகம் சொல்லப் போனால் 300, 400ஆண்டுப் பழமை உடையானதான் ; இதற்குப் போய் நேரத்தையும் பணத்தையும் செலவழிப்பது நியாயமில்லை. ஆகையால் ஒரு ஐரோப்பிய மியூசியம் பார்த்தாலே போதும்; காஸை செலவழிக்காதீர்கள்.மேலும் படிக்கட்டுக்கு மேலே போட்டோ எடுக்கவும் அனுமதி இல்லை. அவர்கள் விற்பனை செய்யும் படங்களையே வாங்க வேண்டும்..
அவர்களைப் பொறுத்தவரை கட்டணம் நியாயமானதே; ஒவ்வொரு அறையிலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொக்கிஷங்களைக் காவல் காப்பதற்கு ஊழியர்கள், அவர்களை மேற்பார்வை செய்ய அதிகாரிகள், கழிப்பறை, ஓய்வு அறை , உணவு விடுதி வசதிகள் என்று அவர்கள் ஏராளமாக பொருட் செலவு செய்கிறார்கள். ஆகவே டிக்கெட் கட்டணம் நியாயமானதே. நம்மைப் பொறுத்த வரையில் ஒரு அரண்மமனையைப் பார்த்தால் போதும். ஒரு குறிப்பிட்ட இடத்தின் வரலாற்றை ஆராய்வோருக்கு அந்தந்த மியூசியம் அவசியம்.
எனக்குப் பிடித்ததும் பிடிக்காததும்
ஆஸ்திரியா முழுதும் ஜெர்மன் மொழிதான் உபயோகத்தில் உள்ளது; மருந்துக்கும் ஆங்கிலம் கிடையாது. ரயில் டிராம்களில் சொல்லப்படும் அறிவிப்புகளும் ஜெர்மன் மொழியில்தான். இதுதான் எனக்குப் பிடிக்காத விஷயம். மியூசியங்களில் மட்டும் துண்டுப் பிரசுரங்களில் கொஞ்சம் ஆங்கிலத்தைக் காணலாம்.
பிடித்த விஷயம் என்னவென்றால் டிராம் (Tram) மற்றும் ரயில் போக்குவரத்து. சொன்ன நேரத்திற்கு வண்டிகள் வரும்; அவற்றை போர்டில் தெளிவாகவும் காட்டுகின்றனர். நான் வசிக்கும் லண்டன் இதற்கு நேர் மாறானது. அடுத்த மெட்ரோ ரயில் 3 நிமிடம் என்று எழுதியிருக்கும். ஒரு நிமிடம் காட்டும்போது அது மாறாமல் நின்றுவிடும். ரயில் 6, 7 நிமிடங்களுப் பின்னரே வரும். உண்மையில் போர்ட் என்ன காட்ட வேண்டும்? மைனஸ் 1, மைனஸ் 2 என்றுகாட்டவேண்டும். அப்படிச் செய்வது இல்லை. சுவிஸர்லாந்திலோ, ஆஸ்திரியாவிலோ சொன்ன நேரத்துக்கு டிராம் , ரயில்வண்டிகள் உங்கள் முன்னே நிற்கும். அந்த வகையில் வியன்னா பாராட்டுக்குரியதே.
நாங்கள் எல்லோரும் 72 மணி நேர டிக்கெட் வாங்கி 3 நாட்களுக்கு முழுதும் உபயோகித்தோம் அந்த டிக்கெட்டுகளை பஸ் , ரயில், டிராம் எல்லாவற்றுக்கும் பயன்படுத்தலாம்.
கோவிந்தா ரெஸ்டாரண்ட்
ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் ஐரோப்பா முழுதும் கோவிந்தா(Govinda) ரெஸ்டா ரண்ட் நடத்துகின்றனர். நான் போர்ச்சுகல் தலைநகரான லிஸ்பனில் ஹரே கிருஷ்ணா உணவு வீடுதிக்குச் சென்றுள்ளேன்; வியன்னாவில் உள்ள உணவு விடுதி மிகவும் சிறியது ; ஒரு கடையில் 10, 15 பேர் உட்கார்ந்து சாப்பிடும் வகையில் உள்ளது; சுற்றிலும் விற்பனைக்கான கலைப் பொருட்கள் இருக்கின்றன. ஆயினும் சாத்வீகமான உணவு.
இந்த இடத்தில் வேகன் VEGAN FOOD உணவு விடுதிகள் பற்றி ஒரு எச்சரிக்கை தர விரும்புகிறேன்.. பால், தயிர், வெண்ணெய், சீஸ் ஆகியவற்றைத் தவிர்ப்பது இந்துக்கள் கொள்கை அல்ல . வேத காலம் முதல் இன்று வரை கடவுளரும் சந்யாசிகளும் பயன்படுத்துவது பால் பொருட்களே. மேலும் மாட்ரிட் Madrid நகரில் மீன், நண்டு ஆகிய உணவுகளையும் வேகன் ரெஸ்டாரண்ட் விற்கிறது ஆகையால் வெஜிட்டேரியன்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.வியன்னா நகரில் SCHONBRUNN PALACE அரண்மனை, டவுன்ஹால், நகர கடைத்தெரு, பல இத்தாலிய உணவு விடுதிகளுக்குச் சென்றோம். தங்கியிருந்த ஹோட்டல் வாசலுக்கே டிராம் வந்ததால் முக்கால்வாசி அதில்தான் பயணம் செய்த்தோம்.
xxx
மஹாராணியின் அலங்கார, அறைகள் , அலங்காரப் பொருட்கள்
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் ஹங்கேரிய அரசு குடும்பத்தில் பிறந்த எலிசபெத்தின் பட்டப்பெயர் (Sisi or Sissi) சிஸ்ஸி . அவள் பேரழகி; கூந்தல் ராணி. தினமும் அவளுடைய நீண்ட முடியைக் கட்டுவதற்கு; பின்னுவதற்கு 3 மணி நேரம் செலவிடுவாளாம். வாரத்துக்கு ஒரு முறை முட்டை மற்றும் மதுபானம் மூலம் தலைமுடியைக் கழுவுவாளாம் அன்று அவருடைய நிகழ்சசிகள் அனைத்தும் ரத்து.! நாங்கள் SCHONBRUNN PALACE அரண்மனைக்குள் நுழைந்தவுடன் சிஸ்ஸியின் நீண்ட கூந்தல் அலங்காரத்தைக் கண்டோம். ஏனைய அனைத்தும் நான் மேலே கொடுத்த பட்டியலில் உள்ள பொருட்களே ! ஆஸ்திரியப் பேரரசர் ஜோசெப் பிரான்ஸை மணந்தாலும் ஆஸ்திரிய நாட்டின் சக்ரவர்த்தினியாகவும் ஹங்கேரியின் மஹாராணியாகவும் வாழ்ந்த சிஸ்ஸி நல்ல வாழ்க்கை பெறவில்லை. ஒரே மகனும் மருமகளும் தற்கொலை செய்து கொண்டனர். அவளோ கொலை செய்யப்பட்டாள் ; ஆயினும் மகன் இறந்த பின்னர் தனிப்பட்ட கப்பலில் ஐரோப்பா முழுதும் சுற்றுப் பயணம் செய்தாள் .
வியன்னா நகரம் பழைய நகரங்களில் ஒன்று. கட்டிடங்கள் எல்லாம் கருங்கற்களால் கட்டப்பட்டவை போல காட்சி தரும் ;ஆயினும் பெரும்பாலான கட்டிடங்களில் குதிரை வீரன் மற்றும் பழங்கால் சின்னங்கள் இருப்பதால் எவை புதிது அவை பழையன என்பது தெரியவில்லை நாங்கள் நகர மண்டபம், பெரிய சர்ச்சுகள் , அரண்மனை, மியூசியம் வாசல்களில் நின்று புகைப்படங்கள் எடுத்தோம்.
புகழ்மிகு (நிர்வாண )ஓவியங்கள் நிறைந்த Belvedere Museum பெல்வடேர் மியூசியம் குறித்தும் இசை மியூசியம் (House of Music) குறித்தும் அடுத்த கட்டுரையில் விளம்புவேன் .
TO BE CONTINUED……………………………………………
–SUBHAM —
tags- ஆஸ்திரியா, வியன்னா, அரண்மனை, சிஸ்ஸி , சிஸி , மஹாராணி