
Post No. 11,397
Date uploaded in London – 30 OCTOBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Written By B.Kannan, New Delhi
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களுக்கு எனது வணக்கம் பல.
எந்த மொழி இலக்கியத்திலும் விடுகதைகளுக்குப் பஞ்சமில்லை. நம் முன்னோர்களி டமிருந்து இவற்றைக் கேட்டிருக்கலாம். அரசவையை அலங்கரித்தக் கவிஞர்கள் பல ரும் அவையோரை மகிழ்விக்க இவற்றைப் பயன்படுத்தி உள்ளனர். இவற்றில், ஓரடி, ஈரடி,குறளடி,நாலடி என 8 அடிகள் வரை இருக்கும் வெண்பா விடுகதைகள் உள்ளன. விவேக விளக்க விநோத விடு(விடி)கதைப் பொக்கிஷம் என்ற அரிய நூல், (இப்போது அச்சு வடிவில் கிடைப்பதில்லை), முதலில் 1898-ல் தஞ்சை சரஸ்வதிமகால் வெளியீ டாக வந்து பின்,(1933)-ல் அதன் திருத்தியப் பதிப்பு வெளிவந்தது. சுமார் 122 விடுகதை வெண்பாக்கள் (மூலம் மட்டும்) கொண்டது.விடை கண்டுபிடிக்க ஏதுவாக கவிஞர் அங்கெங்கே புராண நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி நம்மைத் துப்புதுலக்க வைக்கும் எளிய வழியைப் புலப்படுத்துகிறார். இதன் பொருளுரை இல்லை என்று அறிகிறோம். இதைத் தமிழ் அன்பர்களுக்கு அளிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்
இதிலிருந்து 7 வெண்பாக்கள் கட்டுரை எண் 11303/28-9-22, மற்றும் வரிசை எண் 11306/ 29-9-22-ல் வெளியாகியுள்ளன. ஏனையச் செய்யுட்களைத் தொடர்ந்து விளக்க முயற் சிக்கிறேன்..
பொருள் விளக்கத்தில் தவறிருந்தால் திருத்திக் கொள்ளச் சித்தமாய் இருக்கிறேன். எடுத்துக் காட்டி உதவுங்கள்.
அடுத்த விடுகதைப் பாடல்களைப் பார்ப்போம்……
வருணன்னிட்ட கடலதனை வற்றச்செய்த
மாதவன்வாழ் திருமதுரா புரிநன்னாட்டில்
இருபுறமுந் தையலுடன் எருதி லேறி
இச்சையாய்ப் படைத்ததெலாம் ஏற்றுக்கொண்டு
பரிவுடனே நடமாடித் திரிதலைந்து
பலர்பாலுந் தையலரை பாரில்விட்டுப்
பிரியமுள்ளத் தாசருக்குத் தாசராகும்
பெருமாளு மல்லவிதப் பேசுவீரே!
பொருள்: மதுரையின் மேல் வருணன் ஏவிய ஆழ்கடலை வற்றிப் போகுமாறு மகேசன் செய்தருளியத் திருவிளையாடல் நடந்த கூடல் மாநகரில் வசிப்போரே, இதற்கு விடை சொல்லுங்களேன். தனது அருமை எருதுவுடன் மனைவியர் புடை சூழ ஊர் சுற்றுவார், விருப்பமுடன் கொடுப்பதைக் கையேந்தி வாங்கிச் சாப்பிடுவார், மாந்தரை மயக்கிப் பின்தொடர வைப்பார், ஆனால் அடியாரை ஆட்கொண்டு அவர் களுக்குத் தாசனாக விளங்கும் கேசவப் பெருமாள் அல்ல, அவர் யார்?
விடை: பரமசிவன்
இங்கு, திருவிளையாடல் புராண நிகழ்வையும், நைமிசாரண்யத்தில் ரிஷிபத்தினிகள் ஈசனைப் பின் தொடர்ந்ததையும் சுட்டிக்காட்டி விடை கண்டறியத் துப்பு கொடுக்கப் பட்டுள்ளது.
கூத்திதனக் கேயலைவான் குடியனல்ல
குலமில்லக் குலம்புகுந்தான் மிடியனல்ல
வாத்திதனை யேபழித்தான் வம்பனல்ல
மயில்கோழி தனைவளர்ப்பான் மறவனல்ல
தேத்துந்தேன் தினையுண்பான் வேடனல்ல
திகழ்வேடந் தான் தரித்தான் சித்தனல்ல
பூத்தமலர்க் கணையுடையான் தேவிபோன்ற
பொற்கொடியே இக்கதையைப் புகலுவாயே!
பொருள்: ஊரெல்லாம் நடனமாடி அலைவான் குடிகாரனல்ல, தேவன் அவன், ஆண்டியும் கூட ஆனால் பொருளற்ற ஏழையல்ல, குடிமாறி மண்ணுலகத் தையல் குலம் ஏகினான்,அறிவூட்டும் வாத்தியானான் வம்பளக்க அல்ல, கலாபம், கூகை வைத்திருப்பான் வேடுவனல்ல, தேனும், தினைமாவும் மகிழ்வுடன் கலந்துண்பான் வேடனல்ல, ஞானப்பழம் போல் திகழ்வான் சித்தனல்ல, மலர்க்கணைகள் உடைய மன்மதனின் சதி, ரதி போன்றப் பொற்கொடியே, இது யார் எனக் கூறுவாய்!
விடை: சுப்ரமண்யர்/ முருகன்

காவடி எடுப்பதையும், ஆண்டியாய் நிற்பதையும், குலம் மாறி குறமகள் வள்ளியை மணந்ததையும்,அப்பனுக்குச் சுப்பனாய் விளங்கியதையும் எடுத்துக் காட்டுகிறது இவ் வெண்பா.
மிடியன்=பொருளற்றவன், திகழ்=ஒளி, கூத்தி=கூத்தாடி /நடனமாடி, மயில்=கலாபம், கோழி=கூகை
உடல்நீண்ட பாதமுண்டு படிக்கமல்ல
உடம்பிலே கண்ணுண்டிந் திரனுமல்ல
முடியில்பல கங்குண்டு குல்லாவல்ல
முழநீளம் நீண்டசீங் குழலுமல்ல
இடைநிறைந்த சபைபாடும் புலவரல்ல
இச்சையுறும் படிநடக்குந் தாசியல்ல
பெடையன்ன நடைநடக்கும் பெண்ணேகண்ணே
பெறுமையுறும் இக்கதையைப் பேசுவாயே!
பொருள்: உயரமான உடல் நிற்கப் பாதமுண்டு,ஆனால் எச்சில் உமிழும் பாத்திர மல்ல, மேனியில் கண்களுண்டு இந்திரன் அல்ல, சிரசில் பல வரம்புகளுடன் நாடாக்கள் தொங்கும் குல்லாவல்ல, முழம் நீள முரளியுமல்ல, அவை நிரம்பிய சபையில் பாடும் புலவர் அல்ல,முழு இன்பம் தரும் ஆனால் கணிகையல்ல, பெட்டைக்கோழி போல் உல்லாச நடை பயிலும் அணங்கே, இதன் பெயர் என்ன?
விடை: நாதஸ்வரம்
படிக்கம்=எச்சில் உமிழும் கலம், கங்கு=வரிசை,வரம்பு, கரை, சீவாளியுடன் தொங்கும் கயிறு, சீங்குழல்=புல்லாங்குழல் பெடை=பெண்கோழி
வாசல்வழி போகாமற் பிறகேகூடி
வருவாரும் போவாரும் நிரம்பவுண்டும்
காசலையாம் அன்னமுண்டும் தண்ணீருண்டும்
கையாடக் காலாடும் கியானஞ்சேரும்
ராசிபமோ பின்னாலே தனமுஞ்சேரும்
ராஜர்கொலு வினிலொருத்த நாலேதோன்றும்
தேசுலவுந் தென்கூடற் பதியில் வாழும்
தெரிவையரே இதன்பயனைச் செப்புவீரே!
பொருள்: விருந்தினருக்குத் ‘தனியாக’ப் பாடி, மயக்கி,நன்றாக உண்ணவைத்து, சீக்கி ரத்தில் வெளியேற விடமாட்டார், ‘சுருதி’ பெற கரணையும், ‘தொப்பி’ சுகம் கிடைக்க காசு கொடுக்காமல் மாவும், நீரும் கேட்பார், இசைத்தல் நயம்பட “குட்டும்” (மூட்டு அடி) படுவார், கை ஆடும் கூடவே காலும் அசையும்,ஞானமும் பெருகும், பின்னால் பணமும் சேரும், ராஜசபையில் கம்பீரமாய் வீற்றிருப்பார், நிலவொளி வீசும் கூடல் நகரில் வசிக்கும் கட்டிளம் பெண்ணே, இதற்கு விடை சொல்லுவாய்!
விடை: மிருதங்கம், மத்தளம்
காசலை=பணம் கொடுக்காமல், கியானம்=ஞானம், அறிவு, வலப்பக்கத் தோலில் கறுமை நிற கரணை/சிட்டம்/சோறு இடப்பெற்றிருக்கும், இடப்பக்கம் ‘தொப்பி’ எனப் படும்.
நம் பாட்டன்-பாட்டிமார்கள் சுவைபட இப்படியும் கூறுவர்-
“கெஞ்சிக்கெஞ்சிக் கேட்டாலும் ‘பக்கம்’ பார்த்துப் பேசமாட்டான்,
கையால் ‘இரண்டு’ போடு போட்டால் மடை திறந்த வெள்ளம் போல்
பாய்ந்து அலறுவான்”
கட்டியடித் தேயகற்றுங் கதிருமல்ல
கால்மாறிப் பாயவிடும் வாய்க்கா லல்ல
வெட்டிமறித்தே திரும்பும் படையுமல்ல
விலங்கினத்தின் தோல்சுமக்கும் பொதியுமல்ல
பட்டமுடன் முடிதரிக்கும் வேந்தனல்ல
பலநாளும் இரும்பையுண்ணும் பசிதீராது
துட்டமதன் போர்ஜெயிக்கும் வடிவினாளே
சொற்பமல்ல இக்கதையைச் சொல்லுவாயே!
பொருள்: கட்டி அடித்தால் பறக்கும் ஆனால் ‘போரடி’த்தால் நெற்கதிரிலிருந்துப் பிரிந்தோடும் பதர் போலல்ல,கால் மாற்றிப் பாய்ந்தோடும் வரப்பு நீருமல்ல, பகை வரை வென்று திரும்பும் படையுமல்ல, தோல் ஆடையைத் தாங்கும் பொதிசுமக்கும் கழுதையல்ல, ராஜஅணிகலன்கள் போட்டிருக்கும்,ராஜாவல்ல நாள்தோறும்‘இரும்பை’ ருசித்துச் சுவைத்துக் கொண்டிருக்கும், பசி ஆறாது, துஷ்டர்களைப் புறமுதுகு காட்டி ஓட வைக்கும், அது யார் சொல்லடி, என் கண்ணே!
விடை: குதிரை
தோல் சுமக்கும்=சேணம், இரும்பு=கடிவாளம்
இதற்கு நம் வீட்டுப் பெரியோர் வாக்கு இப்படி இருக்கும்:
“மூன்று எழுத்து கொண்டது, தலை போனால் மறைப்பு ஆகும்,
இடை குறைந்தால் ஊளையிடும், கடை வெட்டுப் பட்டால் துள்ளும்,
மூன்றும் இணைந்தால் முந்தி ஓட்டம் பிடிக்கும்!”
மஞ்சள்தனை மெய்யணியும் மடந்தையல்ல
மணம்புரிந்தே காதல்கொளும் மனைவியல்ல
கொஞ்சிபல பேரேந்தும் குழந்தையல்ல
கொற்றவர்க ளிடத்தமருந் திருவுமல்ல
பிஞ்சகன்மேல் நின்றாடும் பாம்புமல்ல
பிரியமுடன் சேயருந்துந் தேனுமல்ல
கொஞ்சுகிளி மொழியுமிளம் பருவமாதே
குணமுண்டா மிக்கதையைக் கூறுவாயே!
பொருள்: உடல் மஞ்சள் பூசியிருக்கும் ஆனால் அதைத் தடவியிருக்கும் பெண்க ளல்ல,வாசம் முகர்ந்து நாடுவர் ஆசையுடன், மனைவியல்ல,பலர் கையெடுத்துக்
கொஞ்சிக் குலாவுவர், குழந்தையல்ல, அரசர்களுடனிருந்து நல்வினைப் பயக்கும்,
மனைவியோ, செல்வமோ அல்ல, சிவனார் தலைமீது வைத்துக் கொள்வதுண்டு, பாம்பு அல்ல, சந்தோஷத்துடன் சிறுவர் இதன் ரசம் குடிப்பதுண்டு,ஆனால் தேன் அல்ல, கிள்ளைமொழி பேசும் பருவப் பெண்ணே, உடலுக்குக் குணமளிக்கும் இக் கதை நாயகன் யார் எனக் கூறுவாய்!
விடை: எலுமிச்சம் பழம்

பிஞ்ஞகன் (பிஞ்சகன்)= பிறவித் தளையை அறுப்பவன், பரமசிவன்
“பிறப்பறுக்கும் (மறுபிறப்பின்றி) பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க….” (திருவாசகம்-
சிவபுராணம்,–மாணிக்கவாசகர்- வாழ்த்துப் பாடல் 6-11 வரிகள் காண்க
கிராமத்துப் பெரியோர் கூற்று, இதோ
தொட்டால் மணக்கும், குடித்தால் புளிக்கும்
மஞ்சள் சட்டை மாப்பிள்ளை, திருஷ்டி பரிகாரம்,
மண மணக்கிறார் வீட்டிலே!
சீருலவுங் கருங்குருவிக் குபதேசித்த
தேசிகன்வாழ் திருமதுரா புரிநன் னாட்டில்
நீருமவன் பேருரைக்க சத்தங் காணும்
நெய்பால்சர்க் கரையமுது நிறைய நிற்கும்
ஆரும்மகி ழாமல்கலத் தடிசிலுண்டு
யாவருக்கும் ஆகாதான் அமிர்தச்சென்னி
பேருமொரு லிபிகாணும் எங்குமுண்டு
பேதமில்லை யிங்கிதனைப் பேசுவீரே!
பொருள்: ஈரமான இடம் எனச் சொன்னாலே அவன் சத்தம் கேட்கும்,
எல்லாரும் வெறுத்து ஒதுக்கும் வேண்டப்படாதவனாக இருந்தாலும்
இனிமையாகப் பாட்டிசைக்கும் பாணன், ஓரெழுத்துப் பெயர் கொண்டவனை எங்கும் காணலாம், யார் அனுமதியும் பெறாமல் விருப்பமுடன் நெய், பால், சர்க்கரை, நெய்ச் சோறு விருந்து உண்பான், கருங்குருவிக்கு மிருத்யுஞ்சய மந்திரம் உபதேசித்த மகே சன் உறையும் மதுரையம்பதியில் வாழும் பெண்ணே, அவன் யார் சொல்?
விடை: ஈ
அமிர்தச்சென்னி=இனிமையாகப் பாட்டிசைக்கும் பாணன்.
இங்கேயும் சிவனாரின் ஒரு திருவிளையாடல் சம்பவம் குறிக்கப்படுகிறது.
இதற்குப் பாட்டிமார் விடுகதை இதோ….
“கால் ஆறு, சிறகு இரண்டு,
கண் இரண்டும் கடுகு போல,
முழிக்கிறாயே, இளிச்சவாயா,
இன்னுமா புரியவில்லை, அட, ஈ ஸ்வரா!
மங்கையர்கள் அதிமோக மாகக்கொள்வர்
வண்ணநிற மாயிருக்கும் பூவுமல்ல
சங்கரனார் பிறப்பதற்குத் தேசமெங்கும்
தலைவிரித்துத் திரியுமது பேயுமல்ல
பொங்குங்காய் கறிக்குறவாய்ப் பொருந்திவாழும்
புகழான நன்மையதிற் சிலுருசெய்யும்
திங்கள்முகம் போலிலங்கும் தெரிவையாரே
திறமாயிக் கதைப்பயனைச் செப்புவாயே!
பொருள்: பெண்கள் அதிகமாக மோகம் கொள்ளும் பொருள், பொன்னிறமானது
ஆனால் பூவல்ல, ‘மாகி’யும் போது தேசமெங்கும் தலை விரித்துத் திரியும் குறி சொல்லும் தேவராட்டி அல்ல, வேகும் காய்கறி, சோற்றுப் பானையில் பக்தி, பரவசமுடன் நன்மை பெறக் கட்டுவர், மதிமுகம் கொண்டவளே,பதில் சொல்லுவாய்!
விடை: மஞ்சள் கொத்து, மாகி= மகர சங்கராந்தி
இதை இப்படியும் சொல்லலாம்: மண்ணுக்குள்ளே ஒளிந்திருப்பாள் பொன்னம்மாள்.
மன மகிழ்ச்சியுடன் இப்பதிவை முடிப்போமா?
கிராமத்து மக்கள் தாங்கள் வேலை செய்யும் வயல்-வரப்பு, காடு-கழனிகளின் சுற்று வட்டாரத்தில் கண்டு களிக்கும் இயற்கையின் அதிசயத் தோற்றங்களை விடு(விடி) கதையின் கருப்பொருளாக்கி உடனிருப்போரை மகிழ்விப்பர். மரங்களில் பறவைகள் கூடுகட்டி வாழ்வது இயற்கை. ஆனால் மற்றகூடுகள் போல் குழிவுள்ளப் பாத்திரம்
மாதிரி இல்லாமல் தனித்து வேறுவிதமாய்ச் செங்குத்தாக மரத்தில் தொங்குவது இந் தத் தூக்கணாங்குருவிக் (WEAVER BIRD) கூடு மட்டும்தான். இதை வைத்து ஒரு விடு கதை உள்ளது.
தூத்துக்குடு மாவட்டம் கோவில்பட்டியில் அருள்புரியும் ஈசன் பூவண்ணநாதன் உடனுறை செண்பகவல்லி அம்மன் ‘ஓய்வு’ (!) எடுத்த சமயம் சிரித்து, மகிழ்ந்துப்
மலர் தொடுத்ததாகவும், அது தூக்கணாங்குருவிக் கூடு போன்றுத் தோற்றமளிப்ப தாகவும் அமைக்கப்பட்டுள்ளது இந்த வட்டார விடுகதை. அதைப் பார்ப்போம்….
“செண்பகவல்லி அம்மனும், பூவண்ணநாதரும் சிரித்து, மகிழ்ந்துத் தொடுத்த மலர்மாலையைச் சிக்கில்லாமல் அவிழ்ப்பவருக்குச் சிக்கந்தா மலை சீதனம்”
பூச்சரமும், பூமாலையும் அக்கூடு மாதிரி தானே இருக்கும்?
சிக்கந்தா-சிக்கந்தர்-மலை= திருப்பரங்குன்றம். 13-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மதுரை ஆளுநராக இருந்த ‘இஸ்கந்தர் (சிக்கந்தர்) துல்கர்னைனின் பள்ளிவாசலும்,
நினைவிடமும் இங்கு இருப்பதால் இப்பெயர் வழக்கில் உள்ளது.
“பட்டணத்து அம்மாடி! நான் திருப்பரங்குன்றத்தையே தர்றேன்னு சொல்றேன்; நீ
என்னமோ சென்னப் பட்டணத்தில் பாதிதான் தருவேன் எங்கிறாயே!” என்று நக்கல் அடிக்கிறது தூத்துக்குடி பெரிசு! இதோ அந்த வேறு ஒன்று அதே குருவிக் கூட்டைப் பற்றி…
“சின்னப் பெண்ணும், சின்னப் பையனும் சேர்ந்து கட்டின மாலை,
அதைச் சிக்கில்லாமல் அவிழ்ப்பவருக்குச் சென்னப் பட்டணம் பாதி!”
பி.கு.: கொசுறுச் செய்தி
இக்குருவி இனத்தில் ஆண் குருவிதான் இடம் தேர்வு செய்து, பொருட்களைத் திரட்டிக் கூடு கட்டும். ராணி அம்மா திடீர்திடீரென வந்து கள ஆய்வு செய்யும்- வெயிலுக்கு இதமாகவும், குளிருக்குத் தணிப்பாகவும் இருக்குமாறு உள்ளதா என்று! எதிர்பார்ப்பு சரியாய் இருக்குமானால் தன் அலகால் ஆணுக்கு ஒரு ‘ஷொட்டு’ நேர் மாறாக இருந்தால், அலகு, கால் இரண்டாலும் ஒரே மொத்துமொத்தி விரட்டிவிடும். விரக்தியில் ஆண்குருவி தான் கட்டியக் கூட்டைக் கலைத்து விட்டுப் போய்விடும்!
இப்போது சொல்லுங்கள், பூவண்ணநாதர் ஜெயிப்பாரா, சின்னப் பொண்ணு முந்து வாளா?
விடுகதைகள் தொடரும்…….