
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,402
Date uploaded in London – – 1 November 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அருணகிரிநாதரும் தமிழும்! – 6
ச.நாகராஜன்
அருணகிரிநாதருக்கும் தமிழுக்கும் உள்ள இணைப்பு அதிசயமானது.
முருகனுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு எத்தகையதோ அத்தகையது அந்த இணைப்பு.
பல இடங்களில் தமிழ் முருகனைத் தமிழால் போற்றிப் புகழ்ந்த அருணகிரிநாதப் பெருமான் தமிழையும் பல்வேறு விதமாக அழகுறப் போற்றி வணங்குகிறார்.
அவர் தமிழைப் பற்றிக் கூறும் இடங்களை இந்தத் தொடரில் காணலாம்.
51) சிறுவை
பொருவி லாம லருள்பு ரிந்து மயிலி னேறி நொடியில் வந்து
புளக மேக தமிழ்புனைந்த – முருகோனே
பாடல் எண் 726 : பிறவியான சடம் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : ஒப்பில்லாத அன்பு வழியிலே கிருபை கூர்ந்து உன் மயில் மீது ஏறி ஒரு நொடிப் பொழுதில் வந்து புளகாங்கிதம் கொள்ளுமாறு மிக்க மகிழ்ச்சி கொண்டு (நக்கீரரை குகையிலிருந்து மீட்டு) திருமுருகாற்றுப்படை என்ற தமிழ் மாலையைப் புனைந்த முருகனே!
வரலாறு: இங்கு குதிரை முகத்தைக் கொண்ட ஒரு பெண் பூதத்திடமிருந்து நக்கீரரை முருகன் காத்த வரலாறு கூறப்படுகிறது.
52) திருநெல்வாயில்
நெறியி லாதவர் சூதினாற் கவர்ந்து
பொருள்செய் பூரியர் மோகமாய்ப் ப்ரபஞ்ச
நிலையில் வீழ்தரு மூடர்பாற் சிறந்த தமிழ்கூறி
நினைவு பாழ்பட வாடிநோக் கிழந்து
வறுமை யாகிய தீயின்மேற் கிடந்து
நெளியு நீள்புழு வாயினேற் கிரங்கி யருள்வாயே
பாடல் எண் 749 : அறிவிலாதவர் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : (நீதி நூல்களின் பயன் தெரியாது) நன்னெறியில் போகாதவர்கள், மற்றவர்களின் பொருளைக் கவர்ந்து சேகரிக்கும் கீழ்மக்கள், ஆசைப் பெருக்கால் உலக இன்பத்தையே விரும்பும் மூடர்கள் ஆகிய இத்தகையோரிடம் சென்று, நல்ல தமிழ்ப் பாடல்களைக் கூறி நினைவு தேய்ந்து பாழ்பட்டு, வாட்டம் அடைந்து பார்வை மங்கி, வறுமை என்ற நெருப்பின் மேல் கிடந்து, நெளிகின்ற நீண்ட புழுவினைப் போல ஆன என்னை இரக்கத்துடன் ஆண்டு அருள்வாயாக!
53) விருத்தாசலம்
முடிபவர் வடிவறு சுசிகர முறைதமிழ்
முதுகிரி வலம்வரு – பெருமாளே
பாடல் எண் 751 : திருமொழி எனத் தொடங்கும் பாடல்
பொருள் : இங்கு இறப்பவர்கள் மீண்டும் பிறப்பே இல்லாமல் ஆக்கும் தூய்மை உடைய தமிழில் முதுகிரி எனப்படும் விருத்தாசலத்தில் வெற்றியோடு வீற்றிருக்கும் பெருமாளே!
54) நிம்பபுரம்
வந்தசர ணார விந்தமது பாட
வண்டமிழ்வி நோத மருள்வாயே
பாடல் எண் 754 :அஞ்சு வித பூதமும் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : வந்தடைந்த திருவடித் தாமரைகளைப் பாட எனக்கு வண்தமிழில் அற்புதக் கவித்துவத்தை நீ அருள்வாயாக!
55) யாழ்ப்பாணாயன் பட்டினம்
ஏத்தா நாளுந் தர்ப்பண செபமொடு
நீத்தார் ஞானம் பற்றிய குருபர
யாப்பா ராயுஞ் சொற்றமி ழருள்தரு முருகோனே
பாடல் எண் 759 : பூத்தார் சூடுங் கொத்தலர் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : நாள் தோறும் போற்றி நீர்க்கடன், ஜெபம் ஆகிய இவைகளைச் செய்து, துறவோர் ஞான நிலையில் பற்றிய குருபரனே, யாப்பிலக்கணம் ஆய்ந்தமைந்த சொற்களைக் கொண்ட தமிழ்ப் பாக்களைத் தந்து அருளிய (திருஞானசம்பந்தராக வந்த) முருகனே.
56) சீகாழி
சேனக்குரு கூடலி லன்று ஞானத்தமிழ் நூல்கள் பகர்ந்து
சேனைச்சம ணோர்கழு வின்கண் – மிசையேறக்
பாடல் எண் 766 : ஊனத்தசை தோல்கள் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : சேனன் என்னும் பட்டப் பெயர் வைத்திருந்த சமண குருக்களின் முன்னிலையில் மதுரையில் முன்பு (திருஞானசம்பந்தராக வந்து) ஞானத் தமிழ் நூல்களாகிய தேவாரப் பாட்டுக்களைப் பாடி கூட்டமான சமணர்கள் கழுவில் ஏறும்படி செய்து…
57) சீகாழி
சருவி யிகழ்ந்து மருண்டு வெகுண்டுறு
சமயமு மொன்றிலை யென்ற வரும்பறி
தலையரு நின்று கலங்க விரும்பிய தமிழ்கூறுஞ்
சலிகையும்
பாடல் எண் 771 : சருவியிகழ்ந்து எனத் தொடங்கும் பாடல்
பொருள் : மதப் போராட்டத்தில் ஒருவரை ஒருவர் இகழ்ந்தும், பயந்தும், கோபித்தும் வருபவரான சமயவாதிகளும், கடவுள் என்ற ஒன்றே இல்லை என்று கூறும் நாத்திகர்களும், பறிதலையரான சமண குருமாரும் ஆகிய இவ்வனைவரும் கலங்க அனைவரும் விரும்பத் தக்க தமிழ்ப் பாடல்களை (திருஞானசம்பந்தராக வந்து) கூறும் செல்வாக்கையும்….
பாடல் சிறப்புக்கள் : பறிதலை என்ற சொல்லால் சமணர்கள் ‘இப்போது துக்கம் பிற்பாடு சுகம்’ என்ற மந்திரத்தைச் சொல்லி தலைமயிர்களைப் பறிக்கும் வழக்கம் இங்கு சுட்டிக்காட்டப் படுகிறது.
சலிகை என்றால் செல்வாக்கு என்று பொருள். இங்கு செல்வாக்கு தொடங்கி முருகனின் 16 லக்ஷணங்களை அருணகிரிநாதர் விவரிக்கிறார்.
58) பாகை
கூட லான்முது கூனன் றோட வாதுயர் வேதங்
கூறு நாவல மேவுந் – தமிழ்வீரா
பாடல் எண் 789 : ஆடல் மாமத ராஜன் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : மதுரையம்பதியின் அரசனின் (கூன்பாண்டியனின்) கூன் தொலையும்படி (சமணரோடு) வாதம் செது உயர்ந்த வேதப் பொருள் கொண்ட தேவாரப் பாடல்களைப் பாடிய (திருஞானசம்பந்தராகிய) நாவன்மை படைத்த தமிழ் வீரனே!
வரலாறு : இங்கு கூன்பாண்டியன் கூன் நிமிர்த்தப்படும் வரலாறு சொல்லப்படுகிறது.
59) சிக்கல்
விலையில்த மிழ்ச்சொற் குன்போலு தாரிகள்
எவரென மெத்தக் கொண்டாடி வாழ்வெனும்
வெறிகொளு லுத்தர்க் கென்பாடு கூறிடு – மிடிதீர
பாடல் எண் 827 : புலவரை ரக்ஷிக்கும் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : விலைமதிப்பற்ற தமிழ்ச் சொல்லை ஆதரிப்பதற்கு உன்னைப் போல் சிறந்த கொடையாளிகள் யார் தான் உள்ளார்கள் என்று நிரம்பப் புகழ்ந்து, தமது வாழ்வே பெரிது என்ற தீவிர உணர்ச்சி கொண்ட லோபிகளிடம் என் வருத்தங்களைப் போய் முறையிடும் வறுமை நிலை தீர…
60) திருப்பந்தணை நல்லூர்
நிதிபொங் கப்பல தவங்க ளாலுனை
மொழியும் புத்திகள் தெரிந்து நானுனை
நிகர்சந் தத்தமிழ் சொரிந்து பாடவு – மருள்தாராய்
பாடல் எண் 856 : மதியஞ் சத்திரு எனத் தொடங்கும் பாடல்
பொருள் : (அருள்ச்) செல்வம் பொங்க பல தவப் பேற்றின் பயனால் உன்னைப் புகழும்படியான அறிவு புலப்பட்டு, நான் உன்னை ஒளி வீசும் சந்தத் தமிழ்ப் பாக்களை நிரம்பப் பொழிந்து பாடவும் உனது திருவருளைத் தந்தருள்வாயாக!
குறிப்பு & நன்றி : https://www.kaumaram.com தளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன் விளக்கத்தையும் இந்த தளத்தில் காணலாம்.
***
புத்தக அறிமுகம் – 100

விண்வெளியில் மனித சாதனைகள் (பாகம்-3)
பொருளடக்கம்
நூலில் உள்ள அத்தியாயங்கள்
1. பெயரில் என்ன இருக்கிறது?
2. விண்வெளி நிலையத்தில் மின்சக்தி!
3. சிவப்பாகும் விண்வெளி!
4. விண்வெளி வீராங்கனையின் காதல் களேபரம்!
5. புதிய சாதனை படைத்த வீராங்கனை!
6. ஹாலிவுட் திரைப்படம் காப்ரிகார்ன் ஒன் – 1
7. காப்ரிகார்ன் ஒன்! – 2
8. ஸ்டீபன் ஹாகிங்கின் ஜீரோ கிராவிடி பயணம்!
9. யூரி ககாரினைத் தேர்ந்தெடுத்த காரணம் என்ன?
10. ஒரு லட்சம் விண்கற்களைப் பட்டியலிடும் அதிசய முயற்சி! – 1
11. ஒரு லட்சம் விண்கற்களைப் பட்டியலிடும் அதிசய முயற்சி! – 2
12. விண்கல்லில் இறங்க ஒரு திட்டம்!
13. நட்சத்திர மர்மங்கள்! – 1
14. நட்சத்திர மர்மங்கள் – 2
15. நட்சத்திர மர்மங்கள் – 3
16. நீர் நிறைந்த புதிய பூமி கண்டுபிடிப்பு!
17. ஒரு அமெரிக்க கப்பலின் கதை!
18. மூன்றாவது தொழில் புரட்சி!
19. வீட்டை விட்டு நெடுந்தூரத்தில்!
20. பாமரனுக்கும் அறிவியல்! – கார்ல் சகன்
21. கார்ல் சகனைக் கவர்ந்த இந்தியா!
22. பிரபஞ்சம் பற்றிய தமிழர் அறிவு!
23. நடராஜ நடனமும் பிரபஞ்ச ரகசியமும்!
24. செவ்வாய்க்கு முதலில் செல்ல ஆசையா?
25. சந்திரனை நோக்கி இந்திய விண்கலம் ஏப்ரல் 2008ல் ஏவப்படும்!
26. விண்வெளி நிலையத்தில் உயிர்வளி உற்பத்தி!
27. மூன்று சூரியோதயங்கள் உள்ள உலகங்கள்!
28. விண்வெளி வீரர்கள் குடிக்கலாமா?
29. பீனிக்ஸ் மார்ஸ் லேண்டர்!
30. சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற ஆசிரியை!
31. பறக்கும் தட்டுகள் பற்றிய சர்வதேச மகாநாடு!
32. ரோஸ்வெல் பறக்கும் தட்டு மர்மம்! – 1
33. ரோஸ்வெல் பறக்கும் தட்டு மர்மம்! – 2
34. ரோஸ்வெல் பறக்கும் தட்டு மர்மம்! – 3
35. ரோஸ்வெல் பறக்கும் தட்டு மர்மம்! – 4
36. சாதித்தது ஆயிரம், சாதிக்க வேண்டியதோ கோடி!
நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:
This is the third and final part of the series that deals with humanity’s expeditions into space and beyond, as published in the weekly “Bhagya”. Continuing from the previous two parts, several facts regarding space missions are explained in detail. The book not only satisfies the intellect of the readers, but also motivates them to read further on this topic. A perfect read for everybody, and a perfect gift to space enthusiasts!
ஆயிரக்கணக்கான வாசகர்களின் கவனத்தை ஈர்த்த, ச .நாகராஜன் ‘பாக்யா’ இதழில் எழுதி வந்த, தொடரின் மூன்றாம் பாகம் இப்பொழுது நூலாக உங்கள் கைகளில்! முதல் இரண்டு பாகங்களில் விடுபட்ட பல செய்திகள் இதில் உள்ளன. மாணவர்களின் அறிவுக்கு விருந்தாகவும் அவர்களின் படிக்கும் பழக்கத்தைத் தூண்டும் உற்சாக ஊக்கியாகவும் திகழக் கூடியது! படிக்கவும் பரிசளிக்கவும் ஏற்ற நூல்*
இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.
அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ விண்வெளியில் மனித சாதனைகள் -பாகம் 3’ நூலைப் பற்றிய சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.
*