
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,406
Date uploaded in London – – 2 November 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அருணகிரிநாதரும் தமிழும்! – 7
ச.நாகராஜன்
அருணகிரிநாதருக்கும் தமிழுக்கும் உள்ள இணைப்பு அதிசயமானது.
முருகனுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு எத்தகையதோ அத்தகையது அந்த இணைப்பு.
பல இடங்களில் தமிழ் முருகனைத் தமிழால் போற்றிப் புகழ்ந்த அருணகிரிநாதப் பெருமான் தமிழையும் பல்வேறு விதமாக அழகுறப் போற்றி வணங்குகிறார்.
அவர் தமிழைப் பற்றிக் கூறும் இடங்களை இந்தத் தொடரில் காணலாம்.
61) திருவிடைமருதூர்
மதுர கவியடைவு பாடி வீடறிவு
முதிர அரியதமி ழோசை யாகவொளி
வசன முடையவழி பாடு சேருமருள் – தந்திடாதோ
பாடல் எண் 859 : இலகு குழைகிழிய எனத் தொடங்கும் பாடல்
பொருள் : இனிமை நிரம்பிய பாடல்கள் எல்லாவற்றையும் பாடி, வீட்டின்ப ஞானம் நிரம்ப உண்டாக, அருமையான தமிழ் இசை பிறக்க,
அறிவு மொழிகள் பொலிகின்ற வழிபாட்டு நெறியில் சேரும்படியான உனது திருவருளைத் தரமாட்டாயோ?
62) திருச்சக்கிரப்பள்ளி
துட்ட நிக்ரக சத்தித ரப்ரப
லப்ர சித்தச மர்த்தத மிழ்த்ரய
துட்க ரக்கவி தைப்புக லிக்கர – செனுநாமச்
சொற்க நிற்கசொ லட்சண
பாடல் எண் 878 : திட்டெனப் பல எனத் தொடங்கும் பாடல்
பொருள் : துஷ்டர்களை அடக்கும் சக்தி வேலைத் தரிப்பவனே, புகழும் கீர்த்தியும் கொண்ட வல்லமை வாய்ந்தவனே, முத்தமிழில் முடிப்பதற்கு அருமையான (தேவாரப்) பாடல்களை (திருஞானசம்பந்தராக வந்து) சீகாழி அரசு என்னும் புகழ் பெற்று, (அப்பாடல்களைக் கற்றவர்களுக்கு) வீட்டுப் பேறு நிலைத்து நிற்கும்படி சொன்ன அழகை உடையவனே!
63) வயலூர்
மோகன விருப்பைக் காட்டி ஞானமு மெடுத்துக் காட்டி
மூதமிழ் முனிக்குக் கூட்டு – குருநாதா
பாடல் எண் 915 : மேகலை நெகிழ்த்து எனத் தொடங்கும் பாடல்
பொருள் : அன்பு மிக்க விருப்பத்தைக் காட்டி, ஞான சாஸ்திரங்களை விரித்து எடுத்து உரைத்துக் காட்டி, பழந் தமிழ் வல்ல அகத்திய முனிவருக்கு அந்த ஞானத்தைக் கூட்டுவித்த குருநாதனே!
64) அவிநாசி
அங்கத்தைப் பாவிசெய் தாமென
சங்கத்துற் றார்தமி ழோதவு
வந்துக்கிட் டார்கழு வேறிட – வொருகோடிச்
பாடல் எண் 944 : பந்தப்பொற் பார எனத் தொடங்கும் பாடல்
பொருள் : எலும்பிலிருந்து பெண்ணைப் படைக்கின்றோம் என்று சங்க காலத்துப் புலவர்களின் (தேவாரத்) தமிழ்ப் பாடலை நீ ஓதவும், உனது அருமை பெருமை தெரிந்து மகிழ்ந்து உன்னைச் சேராதவர்களாகிய அமணர்கள் கழுமரத்தில் ஏறவும்
வரலாறு : திருமயிலை சென்ற திருஞானசம்பந்தர் பூம்பாவையை எலும்பிலிருந்து உயிருடன் எழுப்பிய நிகழ்வை இந்தப் பாடல் குறிக்கிறது. (போதியோ பூம்பாவாய் -திருஞானசம்பந்தர் பாடலை அன்பர்கள் படிக்கலாம்)
65) தனிச்சயம்
தலைச்சுமைச் சடைச்சிவற் கிலக்கணத் திலக்கியத்
தமிழ்த்ரயத் தகத்தியற் – கறிவோதுஞ்
பாடல் எண் 954 : இலைச்சுருட் கொடு எனத் தொடங்கும் பாடல்
பொருள் : தலையில் சுமை போலப் பாரமான சடையைக் கொண்ட சிவபெருமானுக்கும், இலக்கணம், இலக்கியம், நாடகம் என்னும் முத்தமிழில் வல்லவரான அகத்திய முனிவருக்கும் ஞான போதகனே, சாமர்த்தியத்தில் முதல் இடத்தில் இருப்பவனே!
66) மதுரை
வடவெற் பங்கய லன்றணி குசசர
வணையிற் றங்கிய பங்கய முகதமிழ்
மதுரைச் சங்கிலி மண்டப இமையவர் – பெருமாளே
பாடல் எண் 961 : புருவச் செஞ்சிலை எனத் தொடங்கும் பாடல்
பொருள் : வடக்கே உள்ள இமயமலைக்கு அருகே சமீபத்தில் உள்ள அழகிய தர்ப்பைகள் வளர்ந்துள்ள சரவணப் பொய்கையில் முன்பு வளர்ந்த தாமரை போன்ற திருமுகத்தை உடையவனே, தமிழ் வளர்ந்த மதுரையில் சங்கிலி என்னும் மண்டபத்தில் வீற்றிருப்பவனே, தேவர்களின் பெருமானே!
குறிப்பு : மதுரையில், சங்கிலி மண்டபம் இப்போது கிளி மண்டபம் என அழைக்கப்படுகிறது.
67) மதுரை
தரும நீதி சேர்தத் துவங்கள் – தனி யோகம்
தவறி லாம லாளப் பிறந்த
தமிழ்செய் மாறர் கூன்வெப் பொடன்று
தவிர ஆல வாயிற் சிறந்த – பெருமாளே
பாடல் எண் 962 : முகமெலா நெய் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : எல்லா வேதங்களிலும் கூறப்பட்ட லட்சணங்கள், ஆறு சமயங்கள், மூன்று உலகங்கள், தரும நீதிகளுடன் சேர்ந்த உண்மைகள், தவம், யோகம் (ஆகிய இவை எல்லாம் சிறந்து ஓங்கும்படி) பிழையின்றி ஆட்சி செய்வதற்கே தோன்றிய தமிழ் வளர்த்த திருஞானசம்பந்தனே, பாண்டியனுடைய சுரத்தோடு கூனும் அன்று நீங்க மதுரையில் (திருநீறு தந்து) சிறந்த பெருமாளே
வரலாறு; இங்கு மதுரையில் கூன் பாண்டியனின் கூன் தீர்ந்த வரலாறு சொல்லப்படுகிறது.
68) இலஞ்சி
இலங்கு தரதமிழ் விளங்க வருதிரு
இலஞ்சி மருவிய பெருமாளே
பாடல் எண் 971 : கரம் கமலம் மின் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : விளக்கம் பூண்டுள்ள தமிழ் விளங்க திருஞானசம்பந்தராக வந்து தமிழ் மொழிந்தவனே, திரு இலஞ்சி நகரில் வீற்றிருக்கும் பெருமாளே!
69 ) ஒடுக்கத்துச் செறிவாய்
அகப்பட் டுத்தமிழ் தேர்த்த வித்தகர்
சமத்துக் கட்டியி லாத்த முற்றவன்
அலைக்குட் கட்செவி மேற்ப டுக்கையி லுறைமாயன்
பாடல் எண் 987 : வழக்குச் சொற்பயில் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : தமிழில் வல்ல அறிஞர்களிடத்தில் வசப்பட்டு சாமர்த்தியமான கவியின் ஈற்றடியிலுள்ள இறுதிப் பொருளில் விருப்பம் கொண்டவனும், கடலில் (ஆதிசேஷன் என்னும்) பாம்பின் மேல் படுக்கை கொண்டிருக்கும் மாயனுமாகிய திருமாலுக்கு – முனிவர் உருவில் வந்த போது ….
வரலாறு : காஞ்சீபுரத்தில் ஆழ்வாரின் சீடனாகிய கனிகண்ணன் வரதராஜப் பெருமாளை நோக்கி ‘கனிகண்ணன் போகின்றான்’ என்று ஆரம்பித்து ‘நீயுமுன்றன் பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்’ என்று பாட,
பெருமாள் அவரது ஈற்றடியில் வசப்பட்டு காஞ்சீபுரத்திலிருந்து கிளம்ப, பின்னர் மீண்டும் குடியேற வேண்ட அவ்வண்ணமே அருள் பாலித்தார்; ஆகவே அவருக்கு சொன்னவண்ணம் செய்த பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது. இங்கு அந்த வரலாறு சுட்டிக் காட்டப்படுகிறது.
70 ) பொதுப் பாடல்
சங்கமேறும்
மாத மிழ்த்ரய சேயே நமோநம
வேத னத்ரய வேளே நமோநம
வாழ்ஜ கத்ரய வாழ்வே நமோநம – என்று பாத
பாடல் எண் 992 : போத எனத் தொடங்கும் பாடல்
பொருள் : சங்கப் பலகையில் ஏறி அமர்ந்த முத்தமிழ்ச் செம்மலே, போற்றி, போற்றி. ரிக், யஜுர், சாமம் என்ற மூன்று வேதங்களும் தொழும் தெய்வமே போற்றி போற்றி. வாழ்கின்ற பூலோகம், அந்தரம், சுவர்க்கம் ஆகிய மூவுலகங்களும் போற்றும் செல்வமே போற்றி போற்றி!
குறிப்பு & நன்றி : https://www.kaumaram.com தளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன் விளக்கத்தையும் இந்த தளத்தில் காணலாம்.
***
புத்தக அறிமுகம் – 101

அறிவியல் துளிகள் (பாகம்–1)
பொருளடக்கம்
நூலில் உள்ள அத்தியாயங்கள்
1. கெப்ளர் விண்கலம்
2. உயிர் தரும் ஆக்ஸிஜன் சுழற்சி!
3. ஹெலனின் தியாகம்!
4. நம்பிக்கை இழக்காதீர்கள்! மனம் தளராதீர்கள்!
5. ஹிப்னாடிஸ யோசனை மூலம் முன்னேற முடியும்!
6. கண்டுபிடிப்புகளைப் பிரபல விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது எப்படி?
7. யுரேகா கண்டுபிடிப்புகள்!
8. பகல் கனவில் பல கண்டுபிடிப்புகள்!
9. சாவுக்கடல் சாகிறதா?
10. விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யூரி ககாரின்
11.. ககாரின், விண்ணில் கடவுளைப் பார்த்தீர்களா?
12. சைபர்னெடிக்ஸ்!
13 ‘ஐ லவ் யூ’-வில் சைபர்னெடிக்ஸ்!
14. பிரச்சினைகளைத் தீர்க்கும் நவீன சாதனங்கள்!
15. ஒஸாமா பின் லேடனைப் பிடிக்க உதவிய சாடிலைட்டுகள்!
16. அதிகார ஆணவம் பற்றிய விநோத ஆராய்ச்சி!
17. பெண்களின் எண்ணிக்கையை உலகில் குறைய வைத்த
அல்ட்ராசானிக்
18. 6 மில்லியன் டாலர் பயோனிக் மூளை!
19. நாம் எல்லோருமே ரஜினிகாந்த்தான்!
20. சந்தோஷத்தை விலைக்கு வாங்கலாம்!
21. சந்திரனில் செக்ஸ்
22. நூறு ஆண்டுகள் வாழ ஒரு அதிசய மாத்திரை!
*
இந்த நூலுக்கு பிரபல விஞ்ஞானியான திரு K.G.நாராயணன் அவர்கள் அளித்த அணிந்துரை இது:
திரு K.G.நாராயணன்
அற்புதத் துளிகள்
தென்னை மரத்திலிருந்து தேங்காய் விழுந்தால் தலை தப்பியது என்று ஆறுதல் கொள்வது இயற்கை. அதுவே நம்மில் பெரும்பாலோரின் பிரதிக்கிரியை. ஆனால் ஆயிரத்தில் ஒருவர் – ஐசாக் நியூட்டன் போன்றவர் – தேங்காய் ஏன் தரையை நோக்கி விழுந்தது, வானத்தை பார்த்து ஏன் பறக்கவில்லை என்று அண்ணாந்து பார்த்து அதிசயிப்பார். அந்த அற்புதத்தின் காரணத்தை அறிய முயற்சிப்பார். இரவும் பகலும் தன் அறிவின் திறத்தினால் இயற்கை ரகசியத்தின் மேல் கூட்டை உடைத்து உள்ளிருக்கும் பொருளை எல்லோருக்கும் தெரியுமாறு வெளியில் கொணர வெறி கொண்டவர் போல் உழைப்பார். சிறிய வெற்றி அடைந்தாலும் அதையே முதல் படியாகக் கொண்டு அடுத்த கேள்விக்கு விடை தேடத் தொடங்குவார். காற்று வெளியில் நடக்கும் இந்த விந்தை கடலுக்கு அடியிலும் நடக்குமா என்று வினவுவார். அவருடைய தேடுதலில் தோல்விகளும் வெற்றிகளே.
இயற்கையின் ரகசியங்களை ஆராய்ந்து அறிவதற்கு உண்டாகும் “கொலை வெறி” சில பேருக்கு மட்டுமே உண்டாகிறதா? அதற்க்கு மூல காரணம் என்ன? இயற்கையை அன்றாட வாழ்வுத் தேவைகளுக்குப் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆசையா? அல்லது நம்மை சூழ்ந்திருக்கும் உலகைப் பற்றி அறிந்துகொள்ளவேண்டும் என்னும் பேராவலா ? மூளைக் கிளர்ச்சியா? இரண்டும் தான். கடந்த பல நூற்றாண்டுகளாக ஏற்பட்டிருக்கும் கணக்கற்ற அறிவியல் முன்னேற்றங்கள் இவ்விரண்டு காரணங்களாலும் உந்தப் பட்டவையே. இந்த அறிவியல் முன்னேற்றங்களால் மனித வாழ்க்கை மிகவும் – அளவிட முடியாத முறையில் – மாற்றப் பட்டிருக்கிறது. பொறியியல் துறையிலும் மருத்துவத் துறையிலும் வியக்கம் தரும் பெரும் சாதனைகள் மனிதனின் அன்றாட வாழ்வை மிக ஆழமான முறையில் மாற்றியிருக்கின்றன. அதே சமயத்தில் பிரபஞ்சம் எப்படி உருவாகியது போன்ற அன்றாட வாழ்விலிருந்து வெகு தூரத்தில் உள்ள கேள்விகளுக்கும் சில சின்ன சின்ன விடைகள் கிடைத்திருக்கின்றன. ஐந்தாயிரம் ஆண்டுகளாக அறிந்து கொண்ட பொருள்களைவிட பல மடங்குகள் அதிகமாக கடந்த முன்னூறு ஆண்டுகளில் அறிவியல் மூலமாக அறிந்து கொண்டிருக்கிறோம். இந்த மகத்தான முன்னேற்றங்களைப் பற்றி முடிந்தவரை தெரிந்து கொள்வது நாம் எல்லோருக்கும் தவிர்க்க முடியாத தேவை ஆகி விட்டது.
திரு நாகராஜன் அவர்களின் அறிவியல் துளிகள் இந்தத் தேவையை பூர்த்தி செய்யும் முயற்சிகளில் தலையாயதாகத் திகழ்கிறது. உரேகா தருணம் என்பதென்ன? மனிதனின் மூளைதான் வருங்கால போர்க்களம் என்கிறார்களே – எப்படி? சந்திரன் சீனாவுக்கு சொந்தமாகப் போகிறதா? உலகையே மாற்றி அமைக்கபோகும் 10 பிரம்மாண்டமான கண்டுப்புகள் எவையாக இருக்கும்? இவை போன்ற நூற்றுக்கணக்கான அறிவியல் துளிகளை அனைவரும் அறியக்கூடுமாறு அன்றாட பழக்கத் தமிழில் பகர்ந்து கொண்டிருக்கிறார். தமிழருக்கும் தமிழுக்கும் நாகராஜன் செய்திருக்கும் பாராட்டுக்குரிய பெரும் சேவை இது.
மஹா விஞ்ஞானி நியூட்டன் சொல்கிறார்:
” நான் மற்றவர்களுக்கு எப்படித் தெரிகிறேன் என்று தெரியாது. ஆனால் எனக்கு நான் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறு பையன் போல் தான் தோன்றுகிறேன். பல கோடிக்கணக்கான விந்தைகள் மூழ்கியிருக்கும் பரந்த கடலுக்கு எதிரில் மணலில் கிடக்கும் சில சிப்பிகளையும் வண்ணக் கற்களையும் கண்டு வியப்பு அடைந்து கொண்டிருக்கிறேன் ” . அதே கருத்தை “கற்றது கை மண்ணளவு; கல்லாதது உலகளவு” என்று ஔவையார் சொன்னார்கள். அறிவியல் துளிகளும் அது போன்ற மற்ற முயற்சிகளும் எல்லோர்க்கும் கை மண் அளவாவது அறிவியல் அளிக்கின்றன. நம் நன்றிக்கும் பாராட்டுகளுக்கும் உரியவர் திரு நாகராஜன்.
பங்களூரு K.G.நாராயணன்
28-8-2012
*
நூலுக்கு எனது முன்னுரை இது:
முன்னுரை
நாம் வாழும் இன்றைய யுகம் அறிவுப் புரட்சி யுகம் என்று அழைக்கப்படுகிறது. அறிவியலில் முன்னேறியுள்ள மேலை உலகத்தில் இன்று அமெரிக்காவில் மட்டும் வருடத்திற்கு சுமார் 50000 புத்தகங்கள் புதிதாக வெளியிடப்படுகின்றன. உலகெங்கும் சுமார் நான்கு லட்சம் பத்திரிக்கைகள் வெளியிடப்படுவதாக மதிப்பிடப்படுகிறது. அமெரிக்காவில் லைப்ரரி ஆஃப் காங்கிரஸில் பதினோரு கோடியே முப்பது லட்சம் விஷயங்கள் உள்ளன. ஒரு நாளைக்கு சுமார் 20000 புதிய விஷயங்கள் சேர்க்கப்படுகின்றன. இது இரண்டாயிரம் ஆண்டின் துவக்கத்தில் இருந்த நிலை.
கணினியின் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து வந்த இன்டர்நெட்டின் வரவு லட்சக்கணக்கான வலைத் தளங்களை நமக்கு அறிமுகப்படுத்தி விட்டது. அவற்றில் கோடிக் கணக்கில் அனைத்து விஷயங்கள் பற்றியும் கோப்புகள் குவிகின்றன.
தொலைக்காட்சியை எடுத்துக் கொண்டாலோ ஒரு வாரத்திற்கு உள்ள 168 மணி நேரத்தில் பல்லாயிரம் மணித்துளிகள் நிகழ்ச்சிகளை உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி சேனல்கள் அளிக்கின்றன. எதைத் தேர்ந்தெடுத்துப் பார்ப்பது என்று திகைக்க வேண்டியதாக இருக்கிறது!
தகவல்கள் குவிந்து விட்ட நிலையில் தேவையற்ற தகவல்களும் ஏராளமாக இருப்பதால் நல்லனவற்றைத் தேர்ந்தெடுக்கும் பெரும் சுமை நம் மீது விழுந்து விட்டது – வைக்கோல்போரில் ஊசியைத் தேடுவது போல!
மிக அழகாக கவிஞர் டி.எஸ். எலியட் கூறியது தான் நம் நினைவுக்கு வருகிறது:-
Where is the life we have lost in living?
Where is the wisdom we have lost in knowledge?
Where is the knowledge we have lost in information?
தகவல் புரட்சியில் அற்புதமான அறிவுத் துளிகளைத் தேடிப் படித்தால் நல்லறிவு வளரும். அது ஆக்கபூர்வமான நன்மைகளை நல்கும்.
இது ஒருபுறம் இருக்க, மேலை உலகில் அதிவேகமாக அறிவியல் வளரும் இன்றைய சூழ்நிலையில் நல்ல விஷயங்களைத் தமிழ் உலகிற்குத் தர வேண்டிய கடமையும் நமக்கு உண்டு.
மிக அருமையாக பாரதியார்,
:பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புது நூல்கள்
தமிழ் மொழியிற் இயற்றல் வேண்டும்
என்று நமக்கு உள்ள கடமையைச் சுட்டிக் காட்டினார்.
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் அறிவியல் உலகில் மிக முக்கியமானம் சுவையான விஷயங்களைத் தொகுத்துத் தந்து அறிவியல் துளிகளைச் அறிமுகப்படுத்தும் பணியில்
எனது நண்பரும் சிறந்த கதாசிரியர், இயக்குநர், நடிகர் மற்றும் பத்திரிக்கை ஆசிரியருமான திரு கே.பாக்யராஜ் அவர்கள் என்னை ஊக்குவித்தார். அதனால் வாரம் தோறும் பாக்யா வார இதழில் மலர்ந்தது அறிவியல் துளிகள்!
அறிவியல் சம்பந்தமான சுவையான விஷயங்களுடன் விஞ்ஞானிகள் வாழ்வில் நடந்த சம்பவங்களையும் வாரம் தோறும் தரலானேன்.வாசகர்கள் ஆதரவோடு தொடர் இன்றும் தொடர்கிறது.
இந்த அறிவியல் துளிகளுக்கு இந்தியாவின் தலை சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரும் எனது சிறந்த நண்பருமான டாக்டர் கே.ஜி. நாராயணன் அவர்கள் அணிந்துரை அளித்துள்ளது எனது நற்பேறே!. எனது இனிய நண்பரும் விஞ்ஞானியுமான திரு தேசிகன் மூலம் அறிமுகமான அவர் டிஆர் டி ஓ என அழைக்கப்படும் Defene R&D Organisation (DRDO) இல் பல்லாண்டுகள் பணியாற்றியவர். இயக்குநராக இருந்து வழி காட்டியவர். நமது பாரத தேசத்தின் பாதுகாப்பிற்கான முக்கிய சாதனங்கள் உருவாக வழி காட்டியவர். விமான இயலில் குறிப்பிடத் தகுந்த துறையான வான் பயண மின்னணுவியலில் (Avionics)
போர் விமானத்தின் கட்டுப்பாடு சாதனத் துறையில் தேஜஸ் (Tejas) என்ற இந்திய இலகு ரக போர் விமானத்தின் (Indian Light Combat aircraft) பறத்தல் கட்டுப்பாடுகள் (flight control) மற்றும் பறத்தல் ஒப்புச்செயலாக்கத்தில் (flight simulation) அவரது சாதனை குறிப்பிடத் தகுந்தது. இந்திய விமானப் படையின் முன்னணிப் போர் விமானங்கள் மற்றும் ஆளில்லா வான்வழிக் கலங்களுக்கான (front line fighters of India Air Force and Unmanned Air Vehicles) பறத்தல் கட்டுப்பாடுகள் மற்றும் ஒப்புச் செயலாக்கத்திலும் அவரது பணி மகத்தானது. பெரிய விஞ்ஞானி என்றாலும் கூட இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு அதற்கும் நேரம் ஒதுக்குபவர். பழகுவதற்கு எளிமையானவர்.அறிவியல் துறையில் இளைஞர்கள் முன்னேறுவ்தை வெகுவாக ஆதரிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு வழிகாட்டியாகவும் உறுதுணையாகவும் இருப்பவர். கிராமப்புறங்களில் அறிவியல் கல்வியை ஊக்குவித்து அதனைப் பரப்பும் அகஸ்தியா இண்டர்நேஷனல் பவுண்டேஷனில் ஆலோசகராக இருந்து அறிவியல் வளர்ச்சி முன்னேற்றத்தில் இன்றும் அவர் ஈடுபட்டிருப்பது ஒன்றே அறிவியலைப் பரப்புவதில் அவருக்குள்ள ஆர்வத்தை எடுத்துக் காட்டச் சிறந்த சான்றாகும்.
அவரை அணுகி அணிந்துரை நல்க வேண்டியபோது மிகவும் மனமுவந்து அற்புதமான உரையை நல்கியுள்ளார். அவருக்கு எனது உளம் கனிந்த நன்றியை உரித்தாக்குகிறேன். பாக்யா இதழில் இந்தத் தொடரை வெளியிட்டு வரும் திரு கே.பாக்யராஜ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி உரித்தாகுக. தொடரை வாங்கிப் படிக்க எளிதாக அமையுமாறு பகுதி பகுதியாக வெளியிடத் தீர்மானித்து முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் வெளி வருகின்றன.
இந்த நூலை மின்னணு முறையில் மிக அழகிய முறையில் வெளியிட முன் வந்துள்ள லண்டனைச் சேர்ந்த நிலா பப்ளிஷர்ஸ் உரிமையாளர் திருமதி நிர்மலா ராஜு அவர்களுக்கும் ஆக்கபூர்வமாக அவருக்கு உதவி புரிந்து வரும் திருமதி யஷஸ்வினி மற்றும் திரு கார்த்திகை பாண்டியனுக்கும் எனது நன்றிகள்.
எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த பல ஆண்டுகளாக எனது விஞ்ஞானக் கட்டுரைகளை மனமுவந்து வரவேற்றுப் படித்து என்னைப் பெரிதும் ஊக்குவித்து வரும் வாசகப் பெருமக்களுக்கு எனது உளம் கனிந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.
பங்களூரு ச.நாகராஜன்
·
நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:
The benefits of ever-growing science to the humanity is countless! The collection of articles about science and its progress, published in ‘Bhagya’ weekly magazine is now in the form of an e-Book in your computer! It is remarkable that every chapter of this book has an ending about incidents in the life of some great scientists. Just the titles of some memorable articles are fascinating such as ‘The 1000 planets explored by Kepler Satellite’, ‘Is the Dead Sea, dying?’ ‘6 Million Dollars Bionic Brain’ and ‘The Secret pill that makes you live for a hundred years’. Then there is no doubt the whole book will be an excitement to the readers! Just read it!
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் அறிவியல், மனித குலத்திற்குத் தரும் நன்மைகள்தான் எத்தனை! வாரா வாரம் ‘பாக்யா’ இதழில், நவீன கண்டுபிடிப்புகளையும் அறிவியல் முன்னேற்றங்களையும் பற்றி எழுதப்பட்டு வந்த தொடரின் முதல் பாகம் இப்போது மின்னூலாக உங்கள் கணினியில்! ஒவ்வோர் அத்தியாயத்தின் இறுதியிலும் அறிவியல் அறிஞர் ஒருவர் வாழ்வில் நிகழ்ந்த பொருள் பொதிந்த சம்பவம் ஒன்றும் இடம்பெறுவது சிறப்பு! ‘கெப்ளர் விண்கலம் காணும் 1000 கிரகங்கள்’, ‘சாவுக்கடல் சாகிறதா’, ‘6 மில்லியன் டாலர் பயோனிக் மூளை’, ‘நூறு ஆண்டுகள் வாழ ஓர் அதிசய மாத்திரை’ என நூலில் இடம்பெற்றிருக்கும் சில அத்தியாயங்களின் பெயர்களே வியப்பூட்டுகின்றன என்றால் மொத்த நூல்…? படித்துத்தான் பாருங்களேன்!
இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.
அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ அறிவியல் துளிகள் -பாகம் 1’ நூலைப் பற்றிய சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.
*