அருணகிரிநாதருக்கு என்ன வேணும்’? – 1 (Post.11,423)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,423

Date uploaded in London – –   8 November 2022                  

  November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அருணகிரிநாதருக்கு என்ன வேணும்’? – 1 

ச. நாகராஜன்

 அடியார்களுக்கு என்ன வேண்டும் என்பதைக் கேட்பதில் அருணகிரிநாதருக்கு ஈடு இணை இல்லை.

அவர்களுக்கு வேண்டுவதைத் தனக்கு வேண்டும் என்று தன்னை முன்னிலைப் படுத்திக் கேட்கிறார்.

தனக்கு என்னென்ன வேண்டும் என்று ஒரு பெரிய பட்டியலையே அவர் முருகனிடம் தருகிறார்; தனது பக்தர்களுக்கு முருகன் அவர்கள் கேட்டதையும், கேட்காமல் விட்ட அரிய பல செல்வத்தையும் அளிப்பான் என்பது அவருக்குத் தெரியும். 

அவர் ‘வேணும்’ என்று மென்மையாக கேட்பதை இங்கு பார்ப்போம். 

1) கதிர்காமம்

உடுக்கத் துகில் வேணு நீள்பசி

  யவிக்கக் கனபானம் வேணுநல்

    ஒளிக்குப் புனலாடை வேணுமெய்  – யுறுநோயை

ஒழிக்கப் பரிகாரம் வேணுமுள்

  இருக்கச் சிறுநாரி வேணுமொர்

    படுக்கத் தனிவீடு வேணுமிவ்  – வகையாவுங்


கிடைத்துக் க்ருஹவாசி யாகிய

  மயக்கக் கடலாடி நீடிய

    கிளைக்குப் பரிபால னாயுயி  – ரவமேபோம்

க்ருபைச்சித் தமுஞான போதமு

  மழைத்துத் தரவேணு மூழ்பவ

   கிரிக்குட் சுழல்வேனை யாளுவ  – தொருநாளே

பாடல் எண் 638 – உடுக்கத் துகில் வேணும் எனத் தொடங்கும் பாடல்

பொருள் : உடுப்பதற்கு உடைகள் வேண்டும்.

பெரும் பசியைத் தணிக்க உயரந்த சுவைநீர் வேண்டும்.

தேகம் நல்ல ஒளி வீசும் பொருட்டு நீரும் பட்டாடையும் வேண்டும். உடல் நோயை ஒழிக்க பரிகாரம் ( நல்ல மருந்துகள்) வேண்டும்.

வீட்டுக்குள் இருக்க இளமையான மனைவி வேண்டும்.

படுத்துக் கொள்ள ஒரு தனி வீடு வேண்டும்.

இத்தனை நலன்கள் யாவும் எனக்குக் கிடைக்கப் பெற்று, குடும்பஸ்தன் என்றவனாக ஆகி அந்த வாழ்வு என்ற மயக்கக் கடலில் மூழ்கி, பெரிய சுற்றத்தார் கூட்டத்தைக் காப்பாற்றுபவனாகி, முடிவில் என்னுயிர் வீணாகக் கழிந்து விடும்.

கருணை உள்ளத்தையும் சிவஞான போதத்தையும் நீ என்னைக் கூப்பிட்டு வைத்துத் தந்தருள வேண்டும்.

இந்தப் பாடலில் ஏழு “வேணும்’ களைப் பார்க்கிறோம்.

அனைத்தும் முக்கியமானவை. ஒரு இல்லறத்தானுக்குத் தேவையானவை. இருக்க இடம், உடுக்க உடை, புசிக்க உணவு, நோய்க்கான மருந்து, இளம் மனைவி என்று இந்தப் பட்டியல் வாழ்க்கையின் முக்கிய அம்சங்களைச் சுட்டிக் காட்டி விடுகிறது.


2) திருச்செந்தூர் 

               துயர்மேவி

மங்கை யழுது விழவே யமபடர்கள்  

  நின்று சருவ மலமே யொழுகவுயிர்

    மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை – வரவேணும்
 
பாடல் எண் 68 –  தொந்தி சரிய எனத் தொடங்கும் பாடல்

பொருள் : மிக்க துயரம் அடைந்து மனைவி அழுது விழவும், யமதூதர்கள் வந்து நின்று உயிரைக் கவரப் போராடவும், மலம் கட்டுப்பாடு இன்றி ஒழுகவும், உயிர் மங்கும் போது அந்தக் கடைசி நேரத்தில் முருகா, நீ விரைவில் மயிலின் மேல் வர வேண்டும்.

3) பழநி 

செவிடு குருடு வடிவு குறைவு

 சிறிது மிடியு – மணுகாதே 

அமரர் வடிவு மதிக குலமு

 மறிவு நிறையும்  – வரவே நின்

அருள தருளி யெனையு மனதொ

  டடிமை கொளவும் – வரவேண்டும்


பாடல் எண் 168 –  திமிர உததி  எனத் தொடங்கும் பாடல்

பொருள் : செவிடு, குருடு, அங்கஹீனம், சிறிதேனும் வறுமை என்பவை ஏதும் இல்லாது, தேவ லக்ஷணமும், உயர் குடிப்பிறப்பும், அறிவு நிறையும் வரவே, அறிவும், நீதி ஒழுக்கமும் எனக்கு வருமாறு உனது திருவருளைத் தந்தருளி என்னையும் நீ மனம் வைத்து உன் அடிமையாக ஆட்கொள்ள நீ வரவேண்டும்.


4) சுவாமிமலை  

மிகுத்த கனமதுறு நீள் சவுக்ய

 சகலசெல்வ யோகமிக்க – பெருவாழ்வு

தகைமைசிவ ஞானமுத்தி பரகதியு நீகொடுத்து

  தவிபுரிய வேணு நெய்த்த – வடிவேலா

பாடல் எண் 216-  சரண கமலாலயத்தை  எனத் தொடங்கும் பாடல்

பொருள் : மிக்க பெருமையைத் தரும் நீடித்த சுகம், எல்லாவித செல்வம், அதிர்ஷ்டம், நிறைந்த பெருவாழ்வு, நன்மதிப்பு, சிவஞானம், முக்தியாம் மேலான கதி இவை யாவும் நீ கொடுத்து உதவி புரிய வேண்டுகின்றேன். பளபளப்பும் கூர்மையும் உடைய வேலனே!

5) காஞ்சீபுரம்

எத்தனையி நெஞ்சில் எத்தனமு யங்கி

  இத்தனையி லஞ்ச லெனவேணும்

பாடல் எண் 344 –  நச்சரவமென்று  எனத் தொடங்கும் பாடல்

பொருள் : எத்தனையோ எண்ணங்களை மனதில் கொண்டு, முயற்சிகளை மேற்கொண்டு செய்பவளாகிய என்னை, இந்த அளவிலேயே அஞ்சல் (அஞ்சாதே) என்று கூறி அருள வேண்டும்.

 குறிப்பு : இது அகத்துறையில் தன்னை நாயகியாகப் பாவித்து அருணகிரிநாதர் பாடிய திருப்புகழாகும்.

*** 

குறிப்பு நன்றி : https://www.kaumaram.comதளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன்  விளக்கத்தையும் இதில் காணலாம்.

 புத்தக அறிமுகம் – 107

அறிவியல் வியக்கும் ஆன்மீகம்                                           

பொருளடக்கம்

நூலில் உள்ள அத்தியாயங்கள்

1.    அறிவியல் வியக்கும் ஆன்மீகம்

2.    இந்திர விழா   

3.    ஆதிரை உக்கிரம்    

4.    கந்தனை வளர்த்த கார்த்திகை!  

5.    சுவாதி வான மாணிக்கம் 

6.    வானில் ஆடும் ராதை    

7.    நிலவின் மனைவி ரோஹினி   

8.    பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமன்! திருவோணம்

9.    தமிழ் முனிவன் அகத்தியன் (கானோபஸ்) 

10.   வானில் ஒரு மகாபாரதம்! அவிட்டம் 

11.   அர்ஜூனன் கண்ட விசுவரூப தரிசனம் பூரம், உத்தரம் 

12.   வெளிச்சத்துக்கு வரும் வேத ஜோதிடம்   

13.   எண்ணங்கள் அழிவதில்லை!    

14.   மந்திரங்களின் மகத்துவம்!

15.   சிறப்பு ஆய்வில் ஸ்ரீ சக்கரம் மந்திரம் – யந்திரம் – தந்திரம்  

16.   எல்லாமே எண்கள்தான்!  

17.   இயற்கையின் வடிவமைப்பு இரகசியங்கள் 

18.   கண்ணும் கருத்தும் பார்வைக்கு தனி மொழி உண்டு! 

19.   வண்ணங்களின் பான்மை – வன்மை! 

20.   ஒவ்வொருவரைச் சுற்றியும் ஒளிவட்டம்   

21.   மறுபிறவி மாயம்   

22.   இசை – ஒலி – ஓசை

*

நூலிற்கு இந்து முன்னணி ஸ்தாபகர் திரு இராம கோபாலன் வழங்கிய வாழ்த்துரை இது:

திரு ச.நாகராஜன் அவர்கள் எழுதியுள்ள அறிவியல் வியக்கும் ஆன்மீகம்’ என்ற புத்தகம் ஆழ்ந்த ஆய்வுக்குப் பிறகு எழுதப்பட்டுள்ளது.

திரு ச.நாகராஜனின் குடும்பம் நாள்தோறும் கணபதி ஹோமம் நடத்தி ஆன்மீக சக்தி படைத்த குடும்பமாகும். நமது நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சிந்தனையாளர்களின் புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளைத் தேடிப் பிடித்து வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரியது.

பாரத நாட்டின் தனிச் சிறப்பான ஆன்மீகம் பற்றி நமது நாட்டினர்க்கே தெரிவதில்லை. இதன் காரணமாக தேசியத் தன்மான உணர்வு கிட்டத் தட்ட இல்லையென்றே கூறி விடலாம்.

திரு ச.நாகராஜன் அவர்களின் இந்த அரிய தொண்டுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது போன்ற நல்ல புத்தகங்களை அவர் அடிக்கடி வெளியிட்டு பாரத நாட்டுக்குச் சிறப்புச் சேர்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

                                              இப்படிக்கு

                                          இராம.கோபாலன்

                                    (இந்து முன்னணித் தலைவர்)

*

நூலில் இடம் பெறும் முன்னுரை இது:

காலம் காலமாக வானத்தில் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் நட்சத்திரங்கள் எல்லா இனத்தவரையும் எல்லா மதத்தினரையும் கவர்ந்துள்ளன.

பாரத தேசத்தில் புராதன மகரிஷிகள் ‘வானத்து ஒளியை ஆராய்வோம்’ என்று முழங்கினர்.

ரிஷிகளின் இந்தக் கூற்றை அறிந்தோ அறியாமலோ ராயல் அஸ்ட்ரானமிகல் சொஸைடியும் ‘எதெல்லாம் பிரகாசிக்கிறதோ அதெல்லாம் உற்றுக் கவனிக்கப்பட வேண்டியதே (Quic Quid Nitit Notandum) என்ற தொடரைத் தன் லட்சிய வாசகமாக (Motto) வைத்திருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது!

தேவர்களின் உறைவிடம் என்று வானத்தை நமது மகரிஷிகள் வர்ணித்துள்ளனர். மிகக் கடுமையாகத் தவம் புரிந்தோரே வானத்தில் நட்சத்திரமாக ஒளி விட்டுப் பிரகாசிக்கின்றனர் என்பது ஹிந்துக்களின் நம்பிக்கை. துருவ நட்சத்திரம் இதற்கு சிறந்த உதாரணமாகும்.

ரிக் வேதத்தில் வானவியல் பிரமிக்கத்தக்க விதத்தில் நுணுக்கமாகக் கூறப்பட்டிருப்பதை அறிஞர்கள் அறிவர்.

இதை சமீபத்தில் அறிஞர் சுபாஷ் கக் நிரூபித்துள்ளார்.

1900ம் ஆண்டிலிருந்தே பாலகங்காதர திலகர், காளிநத் முகர்ஜி, ஜி.வி.ராகவராவ் போன்று பல அறிஞர்கள் ஹிந்து புராணங்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் உள்ள தொடர்பை ஆராய ஆரம்பித்தனர்.

ஆனால் நவீன அறிவியல் இந்தப் புராணக் கூற்றுக்களை அப்படியே ஒத்திருக்கிறது என்பதை நான் வியப்போடு பார்க்க ஆரம்பித்தேன். சர் ஜேம்ஸ் ஜீன்ஸ், வில்லியம் ஹெர்ஷல் போன்ற வானவியல் விஞ்ஞானிகளின் நூல்களை ஆர்வத்துடன் படிக்கவே இந்தக் கருத்து உறுதிப்பட்டது.

புராணத்தில் கூறப்படும் ஒவ்வொரு வரியும் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே நூறு சதவிகிதம் நவீன விஞ்ஞானிகளின் ஆய்வு அறிக்கைகளுடனும், கூற்றுக்களுடனும் ஒத்திருப்பது பிரமிப்பைத் தருகிறது! தொடர்ந்து இது பற்றிய ஆய்வுகளையும், நூல்களையும், செய்தித் தாள்களில் அவ்வப்பொழுது வெளியான செய்திகளையும் சேகரிக்க ஆரம்பித்தேன். விளைவு – இந்த நூல்!

இதை எனது பெருமதிப்பிற்குரிய நண்பரும், டைரக்டரும், சிறந்த நடிகரும், பாக்யா வார இதழ் ஆசிரியரும், அறிஞரும், எழுத்தாளருமான திரு கே. பாக்யராஜ் அவர்கள் பாக்யா இதழில் தொடராக வெளியிட்டார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி.

விஞ்ஞானம் மெய்ஞானம் தொடரில் நிறைய கட்டுரைகள் மஞ்சரி மாத இதழில் வெளி வந்தன. இவற்றைப் பாராட்டி அவ்வப்பொழுது ஆக்கமும் ஊக்கமும் தந்து வெளியிட்ட மஞ்சரி ஆசிரியர் திரு எஸ். லட்சுமணன் அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி.

இந்த நூலை என் அன்னை திருமதி. ராஜலக்ஷ்மி சந்தானம் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

இந்த நூலுக்கு பாராட்டுரை தந்து கௌரவித்த ஹிந்து முன்னணி அமைப்பாளர் திரு இராம. கோபாலன் அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றி.

நூலை நல்ல முறையில் வெளியிடும் நிலா பப்ளிஷர்ஸுக்கு எனது நன்றி. எப்போதும் போலத் தங்கள் ஆதரவைத் தந்து உதவிய என் சகோதரர்களுக்கும் என் மனைவி மற்றும் மகன்களுக்கும் என் நன்றி.

வாசகர்கள் இதை ஒரு ஆரம்பமாகவே எண்ணி நட்சத்திரங்களை ஆராய ஆரம்பித்தால் இந்த நூலில் உள்ளது போல நூறு மடங்கு அற்புத விஷயங்களை அறிய முடியும். அது அவர்களின் வாழ்க்கையை எல்லாவிதத்திலும் மேம்படுத்த வழி வகுக்கும் என்பது திண்ணம்.

நூலினால் உத்வேகம் பெற்ற வாசகர்கள் தங்கள் அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். 

சென்னை                                       ச.நாகராஜன்

மின்னஞ்சல் :snagarajans@gmail.com

*

நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:

When scientific research attempted to reason the various philosophies outlined in Hinduism and spirituality, the investigation led to several surprises. The greatness of several items glorified by Hinduism were proved scientifically, thereby explaining the meaning behind several of our classical rituals, and the teachings of our gurus and scholars. This book focuses on many such methods of Hinduism, and discusses the scientific rationale behind them. Are you believer of science, but not a believer in spiritualism? Read this book and think again!

இந்துத் தத்துவம் விளக்கும் ஆன்மிக ரகசியங்களை அறிவியல் ஆராயத் தலைப்பட்டபோது அதன் முடிவுகள் பிரமிப்பூட்டின! மந்திரங்களின் மகிமை, ஒலியின் மகிமை என்று ஒவ்வொன்றாக ஆராய்ந்து அவற்றை அறிவியல் ஆமோதித்தபோது பழம்பெரும் தத்துவங்களின் உண்மையும் அவற்றைக் கண்ட ஞானிகளின் பெருமையும் உலகிற்குத் தெரிய வந்தன. அப்பேர்ப்பட்ட அரும்பெரும் இந்துத் தத்துவங்களையும் அவை பற்றிய அறிவியல் முடிவுகளையும் ஒருசேர இந்நூலில் விளக்குகிறார் ஆசிரியர். ஆன்மிகத்தை நம்புபவர்களை விட நம்பாதவர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல்!

*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ அறிவியல் வியக்கும் ஆன்மீகம் ’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

*

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: