
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,426
Date uploaded in London – – 9 November 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
எது வேண்டும்? கட்டுரை எண் 6136 வெளியான தேதி
1-3-2019 – இந்தக் கட்டுரையில் வள்ளலார் உள்ளிட்ட பெரியோர் வேண்டும் என்று வேண்டுகின்ற பட்டியலைக் காணலாம். தொடர்ந்து இதோ … அருணகிரிநாதர்…..
அருணகிரிநாதருக்கு என்ன ‘வேணும்’? – 2
ச. நாகராஜன்
அடியார்களுக்கு என்ன வேண்டும் என்பதைக் கேட்பதில் அருணகிரிநாதருக்கு ஈடு இணை இல்லை.
அவர்களுக்கு வேண்டுவதைத் தனக்கு வேண்டும் என்று தன்னை முன்னிலைப் படுத்திக் கேட்கிறார்.
தனக்கு என்னென்ன வேண்டும் என்று ஒரு பெரிய பட்டியலையே அவர் முருகனிடம் தருகிறார்; தனது பக்தர்களுக்கு முருகன் அவர்கள் கேட்டதையும், கேட்காமல் விட்ட அரிய பல செல்வத்தையும் அளிப்பான் என்பது அவருக்குத் தெரியும்.
அவர் ‘வேணும்’ என்று மென்மையாக கேட்பதை இங்கு பார்ப்போம்.
6) சிதம்பரம்
அழிந்துற்ற மடமானை யறிந்தற்ற மதுபேணி
அசைந்துற்ற மதுமாலை – தரவேணும்
பாடல் எண் 488 – சுரும்புற்ற எனத் தொடங்கும் பாடல்
பொருள் : (மனம்) அழிந்துள்ள இளமானாகிய இப்பெண்ணின் விரக வேதனையை அறிந்து சமயம் பார்த்து விரும்பி உன் மார்பில் அசைந்தாடும் தேன் நிறைந்த மலர் மாலையைத் தந்தருள வேண்டும்.
குறிப்பு: இந்தப் பாடல் அகத்துறையில் நா’யக நாயகி’ பாவத்தில் அமைந்துள்ள ஒரு பாடல். இதில் விரக வேதனையை அதிகமாக்கும் குயில், வாடைக்காற்று, மன்மதன், மலர் அம்புகள், மாதர் வசைச் சொல், மலர் மஞ்சம், மாடுகளின் மணி முதலியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
7) கோடைநகர்
பூதலமெ லாம லைந்து மாதருட னேக லந்து
பூமிதனில் வேணு மென்று – பொருள்தேடிப்
போகமதி லேயு ழன்று பாழ்நரகெய் தாம லுன்றன்
பூவடிகள் சேர அன்பு தருவாயே
பாடல் எண் 703 – ஆதிமுதனாளிலென்றன் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : பூமியில் எல்லா இடங்களிலும் அலைந்து, பெண்களுடன் மருவிக் கலந்து பூமியில் அவசியத்தினால் பொருள்களைத் தேடி, சுக போகங்கள் ஈடுபட்டுத் திரிந்து, பாழான நரகத்தை நான் அடையாமல் உனது மலர்ப்பாதங்களை அடைய அன்பைத் தந்தருள்வாயாக!
8) திருவம்பர்
கழி கோல(ம்) மண்டி நின்றாடி யின்ப வகை
வேணுமென்றுகண் சோர ஐம்புலனொ – டுங்குபோதில்
பாடல் எண் 805 – சோதி மந்திரம் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : மிக்க அலங்காரங்கள் நிறையும்படி நின்று அனுபவித்து இன்ப வகையே வேண்டும் என்று இருந்தும், கண் பார்வை தளர்ந்து ஐந்து புலன்களும் ஒடுங்குகின்ற சமயத்தில் …..
9) மதுரை
தெளியு ஞான மோதிக் கரைந்து
சிவபு ராண நூலிற் பயின்று
செறியு மாறு தாளைப் பரிந்து – தரவேணும்
பாடல் எண் 962 – முகமெலா நெய் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : தெளிவைத் தரும் ஞான நூல்களை ஓதி ஒலித்தும் சிவபுராண நூல்களில் பயிறும், மனம் நெருங்கிப் பொருந்துமாறு உன் திருவடிகளை அன்பு கூர்ந்து தந்தருள வேண்டும்.
10) பொதுப் பாடல்
மாய
மறலி யூர்ப்புகு மரண யாத்திரை
வாரா வானாள் போநாம் நீமீ – ளெனவேணும்
பாடல் எண் 1061 – முதலியாக்கையுமிளமை எனத் தொடங்கும் பாடல்
பொருள் : மாயமாக வந்த யமனுடைய பட்டணத்துக்குப் புகும் சாவு என்னும் பயணம் உனக்கு வாராது, வானுலகை ஆள நாம் போவோம், நீ என்னுடன் வா, என்று கூறி என்னை அழைத்துச் செல்ல நீ வர வேண்டும்.
11) பொதுப் பாடல்
வேலைய டைக்கஅ ரிக்கு லத்தொடு
வேணுமெ னச்சொலு மக்க ணத்தினில்
வேகமொ டப்பும லைக்கு லத்தைந -ளன் கைமேலே
பாடல் எண் 1147 – ஓலைதரித்த குழை எனத் தொடங்கும் பாடல்
பொருள் : கடலினை அணையிட்டு குரங்குக் கூட்டத்துடன் அடைக்க வேண்டும் என்று சொல்லி அதைக் கேட்ட அந்த நொடியிலேயே, மிக விரைவாக அந்தக் கடல் நீரில் மலைக் குவியல்களை நளன் என்னும் வானரத் தச்சன்….
12) பொதுப் பாடல்
அலங்கார நன்றி – தென மூழ்கி
அகன்றா சையும்போய் விழும்பா ழுடம்பால்
அலந்தேனை யஞ்ச லெனவேணும்
பாடல் எண் 1265 – பெருங்காரியம் போல் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : பிணத்திற்கு அலங்காரம் நன்றாய் அமைந்தது என்றும் சிலர் கூறி, பிணம் எரிந்ததும் நீரில் மூழ்கி, இருந்த ஆசையையும் பாசத்தையும் மறந்து செல்ல, விழுந்து பாழாகும் இந்த உடம்பைக் காரணமாக வைத்து மனம் கலங்கி எங்கு அலைந்து திரிந்த என்னை அஞ்சாதே என்று கூறி நீ வர வேண்டும்.
***
அருணகிரிநாதர் ‘வேணும்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்திய அனைத்துத் திருப்புகழ் பாடல்களையும் பார்த்து விட்டோம்.
சில பாடல்களில் வேணும் என்ற சொல் அவர் வேண்டுனவற்றைக் குறிப்பிடாது பாடலில் உள்ள பொருளுக்குத் தக அமைந்ததையும் இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பு & நன்றி : https://www.kaumaram.com தளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன் விளக்கத்தையும் இதில் காணலாம்.
இந்தத் தொடர் நிறைவடைந்தது!
புத்தக அறிமுகம் – 108
திறன் கூட்டும் தியானம்
பொருளடக்கம்
நூலில் உள்ள அத்தியாயங்கள்
1. விதியை வெல்லலாம்
2. கடவுளைக் காணலாம்
3. அறிவியல் வியக்கும் அதிர்ஷ்ட சக்கரம்!
4. ஏற்றம் தரும் எண்ண சக்தி
5. எண் 108க்கு முக்கியத்துவம் ஏன்?
6. திறன் கூட்டும் தியானம்
7. ஒரு கை ஓசை
8. ஜென் காட்டும் புது வாழ்வு
9. மந்திர மொழி தமிழ்!
10. நாம ஜபம் நல்கும் நன்மைகள்
11. ராம நாம மகிமை
12. சொல்லின் செல்வன் அனுமன்
13. மடிதடவாத சோறும், சுறு நாறாத பூவும்
14. முழுதும் அழகிய குமரன்!
15. தெய்வீகக் காதல்
16. நவரத்னங்கள் போக்கும் நவகிரக தீமைகள்
17. வேத கணிதம்
18. விஞ்ஞானிகள் வியக்கும் பண்டைய பாரத விமான இயல்!
19. உடலுடன் மறைந்த ஞானிகள்
20. விஞ்ஞானிகள் வியக்கும் அதீத புலனாற்றல்!
21. வித்தக சித்தர் கணம்!
22. சூரிய ஒளியில் உயிர் வாழும் யோகி!
23. உலகில் பெரும் ஆத்திகர் சந்தித்த நாத்திகர்
24. ரமண மகரிஷி வாழ்விலே…
25. கருவிலே உருவும், திருவும்!
26. ‘தர்ம’ சங்கடம்
27. கண்ணனை விஞ்சிய கதாபாத்திரங்கள்
*
நூலிற்கு கோகுலம் கதிர் ஆசிரியர் டாக்டர் கமலி ஶ்ரீபால் அவர்கள் வழங்கிய அணிந்துரை இது:
நல்ல கல்வி எது என்பதனை நம்முடைய முன்னோர்கள் விளக்கி இருக்கின்றனர். ஒரு பொருளின் தன்மையை அறிய அந்தப் பொருள் நம் மீது ஏற்படுத்தும் விளைவுகளை உணர்ந்து அனுபவித்துச் சொல்லி விடலாம். அது போல நல்ல கல்வி என்ன விளைவுகளை உண்டாக்கும் என்பதைப் பார்த்தால் நமக்கு நல்ல கல்வி எது என்பது புலப்படும்.
நல்ல கல்வியின் விளைவுகள் யாவை?
1. உடல் வலிமை பெற்றுப் பொலிவாக விளங்க நல்ல கல்வி கற்றுத் தர வேண்டும்.
2. நல்ல கருத்துக்கள் என்ற வெள்ளத்தை நல்ல கல்வி நம் உள்ளத்தில் நிரப்ப வேண்டும்.
3. உணர்ச்சிகளால் உந்துபடாமல், அலைக்கழிக்கப்படாமல் அந்த உணர்ச்சிகளையே ஆன்ம தியானத்தால் செழுமைப்படுத்த நல்ல கல்வியை கற்றுத் தர வேண்டும்.
4. ஒவ்வொரு உயிரினுள்ளும் இறைவனுடைய ஒரு பொறி இருக்கிறது. இந்தப் பொறி பெரிதாக வியாபித்து மனிதனைச் சிறந்தவனாக்க நல்ல கல்வி வழி முறைகளைச் சொல்லித் தர வேண்டும்.
மேற்கூறிய கருத்துக்களில் இருந்து நமக்குத் தெளிவாக தெரிபவை இரண்டு நிலைகள் :
1. ஒரு மனிதனுக்குத் தன் முனைப்பு, தன்னுடைய உழைப்பு முக்கியம்.
2. தன் முனைப்பும், தன்னுடைய உழைப்பும் எந்தத் திசையில் செல்ல வேண்டும் என்று சொல்லித் தர ஒரு நல்ல சற்குரு வேண்டும்.
இந்த இரண்டு நிலைகளையும் ‘திறன் கூட்டும் தியானம்’ என்று ஆசிரியர் ச.நாகராஜன் அவர்கள் எழுதியிருக்கும் நூல் உள்ளங்கை நெல்லிக்கனி போல எடுத்து விளக்குகிறது.
எப்படி விளக்க முடியும்?
இந்நாட்டில் தோன்றிய தொன்மையான நூல்கள், இந்த நாட்டில் தோன்றி வாழ்ந்த இதிகாச புருஷர்களின் வாழ்க்கைச் சரித்திரங்கள், முன்னோர்கள் நம்பிய நம்பிக்கைகள், பழங்காலத்தில் இருந்த பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள், இந்தியாவிற்குத் தன்னிடம் இருக்கும் தங்கம் தெரியவில்லையே என்று இன்றைய மேல் நாட்டு விஞ்ஞானிகள் படும் வேதனை, மனமும், மனதில் தோன்றும் எண்ணங்களும் மகத்தான சக்தி படைத்தவை என்பதை விளக்கும் நிகழ்ச்சிகள், திறன் கூட்டும் தியானத்தால் ஆன்ம பலம் அதிகரிக்கும் போது சாதிக்க முடியாதது என்பது இல்லை என்பதைக் காட்டும் சம்பவங்கள் – என இவை அனைத்தையும் எளிய இனிய தமிழில் எழுதி இருக்கும் அன்பர் திரு ச.நாகராஜனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்த நூலை அழகாக வெளியிட்டவர்களுக்குப் பாராட்டு. இந்த அரிய நூல் வெளிவர உழைத்த நல் உள்ளங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
இந்தப் பிறப்பில் நாம் பள்ளியில் படித்துக் கொண்டு இருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த பிறப்பில் நாம் கல்லூரிக்குச் செல்ல வேண்டும். ஆரம்பப் பள்ளிக்குச் செல்வதைப் போல கீழே விழுந்து விடக் கூடாது. அப்படி விழாமல் இருக்க ஆன்மாவில் படிந்து இருக்கும் அழுக்குகள், பாவங்கள் நீக்கப்பட வேண்டும். அதை எப்படிச் செய்வது என்பது 27 கட்டுரைகளில் இந்திய மெய்ஞ்ஞானப் பாரம்பரியம், இன்றைய மேலை நாட்டு விஞ்ஞான நியதிகள் இரண்டையும் இணைத்து ஆசிரியர் சுவையாக விளக்குகிறார். படிக்கத் தொடங்கினால் படித்து முடிக்க வேண்டும் என்று ஆர்வத்தைத் தூண்டும் நூல். ஒவ்வொருவரும் படித்துப் பயன் பெற வேண்டிய நூல்.
இறைவன் அருளால் திரு ச. நாகராஜன் அவர்களின் இலக்கியப் பணி மேன்மேலும் வளர மனதாரப் பிரார்த்திக்கிறேன்.
கமலி ஶ்ரீபால்
*
நூலில் இடம் பெறும் முன்னுரை இது:
“தினமும் காலையில் அற்புதமான பிரபஞ்சமளாவிய தத்துவத்தைக் கொண்ட பகவத் கீதையில் என் அறிவைக் குளிப்பாட்டுகிறேன்” என்று ஹென்றி டேவிட் தோரோ குறிப்பிடுகிறார். காஞ்சி பரமாச்சார்யரை காளஹஸ்தியில் சந்தித்த கிரீஸ் தேசத்து ராணி ஃப்ரெடெரிகா இந்து தத்துவத்தில் அதிக ஈடுபாடு உடையவர். இயற்பியலில் தான் செய்த மிகவும் முன்னேறிய ஆராய்ச்சிகள் தன்னை ஆன்மீகத் தேடுதலில் ஈடுபடுத்தியதாகவும் அது தன்னை முடிவில் ஆதி சங்கரரின் அத்வைதக் கொள்கையை ஏற்க வைத்ததாகவும் தான் எழுதிய நூலில் குறிப்பிடுகிறார்.
ரஷிய விஞ்ஞானிகள் ஶ்ரீ சக்கர மகிமையை உணர்ந்து வியக்கின்றனர்! அமெரிக்க விஞ்ஞானிகள் தியானத்தின் ஆற்றலை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து அதிசயிக்கின்றனர்.
உலகப் பேரறிஞர் ஆர்னால்ட் டாய்ன்பி சகிப்புத் தன்மையுள்ள ஹிந்து மதத்தை வாயாரப் புகழ்ந்து அனைவரும் திரும்ப வேண்டிய ஒரே தத்துவம் இதுவே என்று குறிப்பிடுகிறார்.
மாக்ஸ்முல்லர் சிறப்பான எதைப் பற்றிக் கேட்டாலும் தன் விரல்கள் இந்தியாவையே சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது என்கிறார்! பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் ஒரு வேளை அழிந்தாலும் பகவத் கீதை அழியாது என்று வியந்து கூவுகிறார் வாரன் ஹேஸ்டிங்க்ஸ்.
இப்படி நூற்றுக் கணக்கான வெளிநாட்டுச் சிந்தனையாளர்களும், தத்துவ ஞானிகளும், விஞ்ஞானிகளும், அறிஞர்களும் போற்றிப் புகழும் தத்துவங்கள், கொள்கைகள், நூல்கள், இதிஹாஸங்கள் பாரதத்தில் பொக்கிஷம் போல நிறைந்துள்ளன.
அறிவியல் பூர்வமாக இவற்றை ஆராய்ந்த விஞ்ஞானிகள் இந்த தத்துவங்களின் ரகசியங்களை எடுத்துரைக்கின்றனர். அதன் சொந்தக்காரக் குழந்தைகளான நாம் பிரமிக்கிறோம்!
நம் தத்துவங்களை நாம் போற்றி ஆராதித்து அறிவியல் வழியிலும் ஆன்மீக ரீதியிலும் இந்த ரகசியங்களை ஆராய்ந்து உணர்ந்து நம் சந்ததியினருக்கு இவற்றை அப்படியே நாம் தர முனைய வேண்டும்; இது நம் கடமை! இந்த வகையில் ஒரு சிறிய முயற்சியே எனது கட்டுரைகள்.
அவ்வப்பொழுது இவற்றை வெளியிட்ட கோகுலம் கதிர், மஞ்சரி, கலைமகள், தின பூமி, ஞான ஆலயம், சினேகிதி, மங்கையர் மலர், இணைய தள இதழான நிலாச்சாரல் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு என் மனமுவந்த நன்றி உரித்தாகுக.
இந்த நூலுக்கு நல்லதொரு அணிந்துரை நல்கிய டாக்டர் கமலி ஶ்ரீபால் அவர்களுக்கு என் மனமுவந்த நன்றி.
கட்டுரைகளை எழுத பல வகைகளிலும் உதவி செய்யும் என் மனைவி மற்றும் மகன்களுக்கு எனது நன்றி.
பாரதத்தின் ஞானிகள், யோகிகள், முனிவர்கள் அனைவருக்கும் இந்த நூலை அர்ப்பணிக்கிறேன். நன்றி.
ச.நாகராஜன்
*
நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:
Foreign thinkers, scholars, philosophers, scientists have always appreciated the philosophies, doctrines, books, and epics which are immortal treasures of ancient India.. The scientists have taken up the task of digging into the hidden secrets and succeeded in disclosing some of the astonishing facts. The book consist of 27 chapters wherein Dr KAMALI SRIPAL explores the realized souls from generations mingled with the modern day western doctrines in a blissfully interesting manner.
வெளிநாட்டுச் சிந்தனையாளர்களும், தத்துவ ஞானிகளும், விஞ்ஞானிகளும், அறிஞர்களும் போற்றும் தத்துவங்கள், நூல்கள், இதிஹாஸங்கள் பாரதத்தில் பொக்கிஷம் போல நிறைந்துள்ளன. விஞ்ஞானிகள் இவற்றை ஆராய்ந்து இவற்றிலுள்ள ரகசியங்களை அறிவியல்பூர்வமாக வெளிக்கொணரும்போது பிரமிப்பாக இருக்கிறது! அப்படி ஏராளமான ரகசியங்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. இதற்கு அணிந்துரை வழங்கியுள்ள டாக்டர்.கமலி ஸ்ரீபால் அவர்கள், “இந்திய மெய்ஞானப் பாரம்பரியம், இன்றைய மேலை நாட்டு நியதிகள் இரண்டையும் இணைத்து ஆசிரியர் சுவையாக விளக்குகிறார்” என்று பாராட்டுகிறார்!
*
இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.
அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ திறன் கூட்டும் தியானம் ’ நூலைப் பற்றிய சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.
*