
Post No. 11,429
Date uploaded in London – – 10 November 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அருணகிரிநாதர் போற்றும் ‘ வேண்ட அரிய பொருளை வேண்டும் அளவில் உதவும் பெருமாள்’!
ச.நாகராஜன்
அருணகிரிநாதர் முருகனிடம் மிக உயரிய கிடைத்தற்கரிய பொருளை விரும்பி வேண்டுவது நம்மை மெய் சிலிர்க்க வைக்கும்.
1) திருவருணை திருத்தலம்
ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே
கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே
மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே
ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே!
(பாடல் எண் 1328)
அடியார்களால் பெரிதும் விரும்பிப் பாடப்படும் புகழ் பெற்ற திருப்புகழ் பாடலான இதன் பொருள் :
ஏறத்தக்க மயில் மீது ஏறி திருவிளையாடல்களை செய்தது ஒரு முகம். சிவபெருமானுக்கு ஞன உபதேசம் செய்தது ஒரு முகம். உன் திருப்புகழைப் பாடி ஓதும் அடியார்களின் இருவினைகளையும் தீர்ப்பது ஒரு முகம். கிரௌஞ்ச மலையை உருவும்படியாக உனது வேலை ஏவியதும் பின்பு அமைதி காத்ததும் ஒரு முகம். உனக்கு எதிரியாக இருந்த அசுரர்களை வதைத்து அழித்ததும் உன் முகம். வள்ளியைத் திருமணம் செய்து கொள்ள விழைந்து ஆசையுடன் வந்தது உன் முகம்.
இப்படி ஆறுமுகமாக நீ காட்சி அளிப்பதன் பொருளை எனக்கு அருளிச் செய்ய வேண்டும். தொன்மையாக இருக்கும் திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே!
ஆறுமுகத்தின் பொருளை விளக்க வேண்டும் என்று இப்படி வேண்டுகிறார் அருணகிரிநாதர்.
இந்தப் பாடலின் உள்ளார்ந்த தெய்வீக அர்த்தம் பரந்து விரிந்த ஒன்று.
2) அடுத்து திருமாந்துறை திருத்தலத்தில் அவர் கூறுவது இது:
வேண்டுமவர் தங்கள் பூண்டபத மிஞ்ச
வேண்டிய பதங்கள் – புரிவோனே
(பாடல் எண் 899 – ஆங்குடல் வளைந்து எனத் தொடங்கும் பாடல்)
பாடலின் பொருள் : வேண்டிக் கொள்ளும் அடியார்கள் கொண்டுள்ள பதவி மேம்பட்டு விளங்க அவர்கள் விரும்பிய திருவடிகளைத் தந்து அருள் புரிபவனே!
3) அடுத்து கழுகுமலை திருத்தலத்தில் அவர் அருளுவது இது:
வேண்டு மடியர் புலவர் வேண்ட அரிய பொருளை
வேண்டு மளவி லுதவும் – பெருமாளே
(பாடல் எண் 634 – கோங்கமுகை மெலிய எனத் தொடங்கும் பாடல்)
பொருள் : வேண்டி நிற்கும் அடியார்களும் புலவர்களும் உன்னை வேண்ட, வேண்டுதற்கு அருமையான பொருளை அவர்களுக்கு வேண்டிய அளவுக்குத் தந்து உதவும் பெருமாளே.
வேண்டுவதை வேண்டும் அடியார்களுக்கு வேண்டும் அளவு தரும் பெருமாளை, ஆறுமுகம் ஆன பொருள் நீ அருள வேண்டும் என்று அருணகிரிநாதர் வேண்டுவது எவ்வளவு ஆழ்ந்த பொருள் படைத்த ஒன்று!
அருணகிரிநாதர் வழி செல்வோம்; அவர் அருளிய திருப்புகழை ஓதுவோம். வேண்டுவதை வேண்டுமளவு தரும் வேலனின் அருளைப் பெறுவோம்!
***
புத்தக அறிமுகம் – 109
நவகிரகங்கள்
பொருளடக்கம்
நூலில் உள்ள அத்தியாயங்கள்
1. நவக்கிரகங்கள்
2. நவக்கிரக பட்டியல்
3. நவக்கிரக கோவில்கள்
4. நவக்கிரகங்களுக்கு உரிய ரத்தினக் கற்கள்
5. நவக்கிரக மண்டலம்
6. நவக்கிரகங்களுக்கு உரிய எண்கள்
7. நவக்கிரக யந்திரங்கள்
8. நவக்கிரக ஸ்தோத்ரம்
9. நவக்கிரக அஷ்டோத்தர சத நாமாவளி
10. சூரிய அஷ்டோத்தர சத நாமாவளி
11. சந்திர அஷ்டோத்தர சத நாமாவளி
12. செவ்வாய் அஷ்டோத்தர சத நாமாவளி
13. புதன் அஷ்டோத்தர சத நாமாவளி
14. குரு அஷ்டோத்தர சத நாமாவளி
15. சுக்ர அஷ்டோத்தர சத நாமாவளி
16. சனி அஷ்டோத்தர சத நாமாவளி
17. ராகு அஷ்டோத்தர சத நாமாவளி
18. கேது அஷ்டோத்தர சத நாமாவளி
19. ஆதித்ய ஹ்ருதயம்
20. சூர்ய நமஸ்காரம்
21. கோளறு திருப்பதிகம்
22. திருநள்ளாற்றுத் தேவாரம்
23. தசரதர் இயற்றிய ஸ்தோத்ரம்
24. நவ கிரக ஸ்தோத்ர கிருதிகள்
25. ராமாயண பாராயணமும் கிரக தோஷ நிவர்த்தியும்
26. நவக்ரஹங்களுக்கு உரிய காலஹோரை விவரம்
27. கிரகங்கள் – அறிவியல் உண்மைகள்
*
நூலில் இடம் பெறும் முன்னுரை இது:
நம்மை ஆளுகின்ற நாயகர்கள் நவ கிரகங்கள்!
வினைப்பயனை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற இயற்கை நியதி ஒரு பக்கம் இருக்க அவற்றில் கடும் விளைவுகளை ஏற்படுத்துவற்றில் மாற்றக் கூடியதை மாற்றவும், தீய பலன்களின் கடுமையைக் குறைக்கவும், நல்ல பலன்களின் சக்தியை அதிகரிக்கவும் நவ கிரக வழிபாடு உற்ற துணையாக அமையும்.
இப்படி ஒரு நூலை வெளியிட வேண்டும் என்றவுடன் ஆக்கமும் ஊக்கமும் தந்த என் சகோதரர் திரு வி.எஸ். மீனாட்சிசுந்தர் அவர்களுக்கு இந்த நூலை சமர்ப்பிக்கிறேன்.
நூலை உருவாக்க ஆக்கமும் ஊக்கமும் தந்த என் அன்னை, சகோதரர்கள், என் மனைவி மற்றும் மகன்களுக்கு எனது நன்றி.
நவகிரகங்களை உரிய முறையில் வழிபடுவதன் மூலம் ஆசி பெற்று மென்மேலும் உயரவிருக்கும் வாசகர்களுக்கு இந்த நூலை சமர்ப்பிக்கிறேன்.
சென்னை ச.நாகராஜன்
*
நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:
This book is an encyclopedia of nine planets. This book consists of 27 chapte encompassing the description of the temples, gems and numbers of the nine planets.gSome of them are the yanthras, sthothras, ashtothras, ADHITYA HRUDAYAM, KOLARU THIRUPPADHIKAM, Dasaratha’s SANEESWARA STHOTHRAM.Also the chanting of Ramayana and the method of chanting for the parihara of the planetary positions are included. Besides this all the scientific truths behind the planets are also well explained. This book can help us to get over the evil effects of the planetary positions by chanting of the shlokas.
நவக்கிரகங்கள் பற்றிய கலைக்களஞ்சியம்! நவக்கிரகக் கோவில்கள், அவற்றிற்குரிய ரத்தினக் கற்கள், எண்கள், யந்திரங்கள், ஸ்தோத்திரங்கள், அஷ்டோத்திரங்கள், ஆதித்ய ஹிருதயம், கோளறு திருப்பதிகம், தசரதர் இயற்றிய சனீஸ்வர ஸ்தோத்திரம், கிரக தோஷ நிவர்த்திக்குச் செய்ய வேண்டிய ராமாயண பாராயண முறை ஆகியவற்றை மட்டுமின்றி நவக்கிரகங்கள் குறித்த அறிவியல் உண்மைகளையும் தரும் நூல்.
இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.
அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ நவ கிரகங்கள் ’ நூலைப் பற்றிய சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.
*