
Post No. 11,438
Date uploaded in London – 12 November 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
இந்துக்கள் வேத காலம் முதற்கொண்டு எல்லா அறிவியல் துறைகளிலும் கவனம் செலுத்தியுள்ளனர். அவைகளை சம்ஸ்க்ருதத்தில் எழுதியும் வைத்துள்ளதால் நமக்கு குறைந்தது 3000, 4000 ஆண்டு அறிவியல் வளர்ச்சி பற்றி அறிய முடிகிறது.
உலகிலேயே பழமையான நூலான ரிக் வேதத்தில் மூலிகைகளுக்காகவே ஒரு சூக்தம் ஒதுக்கியிருப்பதால் (ஓஷதி சூக்தம் , ரிக் 10-97) எந்த அளவுக்கு அவர்களுக்கு மூலிகையின் பெருமை தெரிந்திருந்தது என்பதை அறிய முடிகிறது .. முதல் மந் திரத்திலேயே 107 மூலிகைகள் பற்றிச் சொல்கிறார் ரிக் வேத கால டாக்டர். ஆயினும் அவரோ உரைகாரர்களோ நமக்கு 107 மூலிகைகளின் பெயர்களை சொல்லவில்லை. ஏனெனில் அக்காலத்தில் எல்லோருக்கும் அவை பற்றித் தெரியும். ஆனால் பிற்கால நூல்களான சுஸ்ருத சம்ஹிதா, சரக சம்ஹிதை பிருஹத் சம்ஹிதா முதலிய புஸ்தகங்கள் நமக்கு நிறைய மூலிகைகளின் பெயர்களை சொல்லி பயன்பாடுகளையும் அறிவிக்கின்றன.
அதர்வண வேத சூக்தங்களில் தாவரங்களை பல வகைகளாகப் பிரித்துப் பேசுவதால் அத்தகைய படிப்புகள் இருந்ததும் தெரிகிறது. பழம் கொடுக்கும் தாவரங்களை பலினி என்றும், பழம் தராத தாவரங்களை அபலா என்றும், பூக்கும் தாவரங்களை புஷ்பினி என்றும் , பூவாத தாவரங்களை அபுஷ்பா என்றும், எப்போதும் பூத்துக் குலுங்கும் தாவரங்களை ப்ரஸூவரி என்றும் அழைத்தனர்
OLDEST BOTANICAL CLASSIFICATION (AV.8-7-26)
அதர்வ வேதத்தில் 8-7-26ல் ஒரே பாடலில் புஷ்பவதி, ப்ரஸூவதி, பலினீ , அபலா என்று வருவதால் உலகில் முதல் முதலில் தாவரங்களை வகைப்படுத்தியது இந்துக்கள்தான் என்பதும் தெளிவாகிறது.
தைத்ரீய சம்ஹிதையில் (யஜுர் வேதம் ) மூல (வேர் )துல (பூங்கிளைகள்), காண்ட (தண்டு), வலச (மரக் கிளை ), சாகா (பெரிய கிளைகள் ) புஷ்ப, பல(பழம் ) பர்ண (இலை) என்ற தனித்தனி சொற்கள் கையாளப் படுகின்றன. ஸதபதப் பிராஹ்மணம் மேலும் பல சொற்களை எடுத்தாளுகிறது. இவ்வளவுக்கும் இவை எதுவும் தாவரவியல் (Botany) நூல் அல்ல. மதம் தொடர்பான நூல்களே .
முதல்முதலில் வ்ருக்ஷ ஆயூர்வேத என்ற சொல்லை 2300 ஆண்டுகளுக்கு முந்தைய கௌடில்யரின் (சாணக்கியரின்) அர்த்த சாஸ்திரத்தில் (2-24-1) காண்கிறோம். மரங்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கும் அற்புத துறை அது. விவசாய டைரக்டருக்கு (Director of Agriculture in Arthasasatra) க்ருஷி தந்த்ர/விவசாயம் , சுல்வ , வ்ருக்ஷ ஆயுர்வேத தெரிந்திருக்கவேண்டும் அல்லது இவைகளை அறிந்த ஒருவரை உதவியாளராக வைத்திருக்கவேண்டும் என்று சாணக்கியர் சொல்கிறார். அந்தந்த பருவத்தில் விதைகளைச் சேகரித்து வைக்கவேண்டும் என்றும் விளம்புகிறார். ஆகவே 2300 ஆண்டுகளுக்கு முன்னர் வேளாண் துறையும் அதற்கான அதிகாரிகளும் இருந்தது தெரிகிறது . முக்கியமான விஷயம் மரங்களுக்கான ஆயூர் வேதம் என்பதாகும்.
பின்னர் கஸ்யப சம்ஹிதா, வராகமிஹிரர் எழுதிய பிருஹத் சம்ஹிதா, விஷ்ணு தர்மோத்தர புராணம் (இரண்டாவது காண்டம்- அத்தியாயம் 300), அக்கினி புராணம் (282 ஆவது அத்தியாயம்) சுர பால எழுதிய வ்ருக்ஷ ஆயூர்வேத நூல்களில் மேல் விவரங்களை அறிகிறோம். தாவரவியல் தொடர்பான அபூர்வ விஷயங்களை இவை, போகிற போக்கில், சொல்கின்றன. ஆயினும் மரங்களுக்கு வரும் நோய்களை விவாதித்து குணப்படுத்துவது எப்படி என்பதை சுர பால எழுதிய வ்ருக்ஷ ஆயூர்வேத புஸ்தகத்தில் மட்டுமே காண முடிகிறது
மரங்களுக்கு ஏற்படும் கெடுதிகளை ஆறுகாரணங்களாகப் பிரிக்கிறது கஸ்யப சம்ஹிதா.
1.கடுங்குளிர்; 2.கடும் வெப்பம் ; 3.கன மழை 4.சூறாவளிப் புயல் ; 5.மரங்களின் வேர்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைதல் ; 6.யானைகள் உராய்தல் .
சீதோஷ்ண வர்ஷ வாதாதைர்மூலே வ்யாமிஸ்ரிதை ரபி
சாகினாம் து பவேத் ரோகோ த்விபானாம் லேகனேன ச – கஸ்யப சம்ஹிதா , பாடல் 71
இன்று நாம் பத்திரிக்கைகளைத் திறந்தால் இவற்றில் முதல் 4 காரணங்களால் பயிர்கள் அழி வதைப் படிக்கிறோம். ஐந்தாவது காரணம் நெருக்கமாகத் தாவரங்கள் வாழ்ந்தால் வரும் கேடுகள் பற்றிப் பேசுகிறது. யானைகள் உராய்தல் பற்றி சங்க இலக்கியப் பாடல்களில் காண்கிறோம். தமிழ்ப் புலவர்களும் சங்க காலத்திலேயே இதைக் கண்டு பாடலில் சேர்த்துள்ளனர்.
தாவரங்களுக்குக் கீழே வேர்கள் பின்னிப் பிணைந்தால் அவைகள் நன்றாகக் காய்க்காது என்று விஷ்ணு தர்மோத்தர புராணம் செப்புகிறது
அப்யாஸ ஜாதா தரவஹ ஸம் ஸ் ப்ருச ன்தஹ பரஸ்பரம்
அவ்யக்த மிஸ்ர மூலத்வாப வந்தி விபலா த்விஜ
தேஷாம் வ்யாதி ஸமுத்பதெள ச்ருணு ராம சிகித்ஸதம்
வராஹ மிஹிரர் எழுதிய ப்ருஹத் சம்ஹிதா ஒரு கலைக்களஞ்சியம். அவர் 54 ஆவது அத்தியாயத்தில் 31 ஸ்லோகங்களில் விருட்ச (வ்ருக்ஷ) ஆயுர்வேதம் பற்றிப் பாடுகிறார். இலைகள் உதிர்தல், , கிளைகள் காய்ந்து போதல், வளர்ச்சி தடைப்படுதல் முதலியவற்றை பருவ நிலை எப்படி உண்டாக்குகிறது என்று வராஹ மிஹிரர் விளக்குகிறார். மரங்களின் இலைகள் பச்சையத்தை இழந்து பாண்டுபத்ரதா (வெண்மை ) ஆவதையும் கதைக்கிறார்.
நோய்கள் பற்றிச் சொல்வதோடு சிகிச்சை பற்றியும் சொல்கிறார்.
மரங்களின் கிளைகள் பாதிக்கப்பட்டால் அவைகளை வெட்டி , அந்த இடத்தில் களிம்பு தடவ வேண்டும் என்றும் பாலையும் தண்ணீரையும் கலந்து தெளிக்க வேண்டும் என்றும் கூறுகிறார் நூலாசிரியர் வராகமிஹிரர். பழங்கள் காய்க்காவிட்டால் ஆட்டுப் புழுக்கை, எள் , பார்லி மாவு, மாட்டு மாமிசம் ஆகியவற்றைக் கலந்து 7 நாட்களுக்கு சிகிச்சை தர வேண்டும் என்பார். இன்று எவ்வளவோ நல்ல உரங்கள் வந்திருக்கலாம். 1500 ஆண்டுகளுக்கு முன்னரே இதன் துவக்கத்தை அவர் எழுத்தில் வடித்தது ஆய்வு மனப்பாண்மையைக் காட்டுகிறது
—தொடரும்……………………………
tags– தாவர நோய்கள், அற்புத மூலிகை , வராஹமிஹிரர், வ்ருக்ஷ ஆயூர்வேதம்