
Post No. 11,445
Date uploaded in London – 15 November 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
பழங்கால இந்துக்கள் இயற்கையை மிகவும் மதித்தனர். இது பாம்பையும் மரத்தையும் வழிபடும் மூட நம்பிக்கையில் எழுந்த சிந்தனை அன்று. மிகவும் விஞ்ஞான பூர்வமாக எழுந்த சிந்தனை. இதற்கு தெள்ளிய எடுத்துக் காட்டு மரம் என்ற ஸம்ஸ்க்ருத்ச் சொல்லில் உள்ளது. தரு என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு மரம் என்று பொருள். பல தமிழ்ச் செய்யுட்களிலும் இச் சொல் கையாளப்பட்டுள்ளதால் தமிழர்களும் அறிந்த சொல்லே. ஆங்கிலத்தில் மரத்தை ட்ரீ TARU= TREE என்பர். அதுவும் சம்ஸ்க்ருத தரு- விலிருந்து பிறந்ததே.

மரம் என்றால் என்ன?
தரு (மரம்) என்ற சொல் தாரணே என்ற வேர்ச் சொல்லிலிருந்து பிறந்தது. தாரணே என்றால் பாதுகாக்க TO PROTECT என்பது பொருள். இந்த பூமியையும் அதில் வாழும் மனிதர்களையும் பாதுகாப்பது மரங்கள் என்ற அறிவியல் சிந்தனையில் எழுந்தது இந்தச் சொல்.
மரத்திற்கு சம்ஸ்க்ருதத்தில் இன்னும் ஒரு நல்ல சொல் உளது. பாத பாஹா ; இதன் பொருள் கால்கள் மூலம் தண்ணீர் குடிப்பவன். அதாவது மனிதர்கள் கைகளில் தண்ணீரை எடுத்து, பருகுகிறோம். ஆனால் மரங்களோவெனில் கால்கள் மூலம் — அதாவது கால் பகுதியில் உள்ள வேர்கள் மூலம் — நீரை உறிஞ்சுகிறது. என்ன அற்புதமான நாமகரணம்!!
XXXX
ஜீவகன் கதை
மனிதர்களின் நோய்களுக்கு மருந்துகளையும் சிகிச்சை முறைகளையும் கண்டுபிடித்த இந்துக்கள் அதை சம்ஸ்க்ருதத்தில் எழுதியும் வைத்தனர். 2600 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த சிந்தனை உலகில் வேறு எங்கும் எழுந்தது இல்லை மஹாபாரதக் கதை ஒன்று நம் எல்லோருக்கும் தெரிந்ததே. துரியோதனனுக்கும் தரும புத்திரனான யுதிஷ்டிட்டிரனுக்கும் உள்ள சிந்தனை வேறுபாட்டைக் காட்டுவதற்காக கிருஷ்ணன் ஒரு டெஸ்ட் வைக்கிறார். உலகிலுள்ள நல்லவர் யார் கெட்டவர் யார் என்று கண்டுபிடித்து வாருங்கள் என்பது அந்தப் பரீட்சை. இருவரும் திரும்பி வந்த போது தர்மன் சொன்னான்: கண்ணா ! இவ்வுலகில் எவருமே கெட்டவர் இல்லை; எல்லோரிடத்திலும் ஒரு நல்ல குணமாவது இருக்கிறது. துரியோதனன் சொன்னான்; கண்ணா ! இந்த உலகத்தில் நல்லோர் இல்லை; அத்தனை பேரிடத்திலும் கெட்ட குணமே உளது என்று. இது இருவரின் மனத்தின் உயர்வு தாழ்வைக் கட்டுகிறது .
இதே போல மற்றொரு கதை உளது. ஜீவகன் என்பவன் புத்தர் காலத்தில் வாழ்ந்த ஒரு புகழ்பெற்ற மருத்துவன்/ டாக்டர். அவனுடைய குரு மருத்துவ உபயோகமில்லாத ஒரு மூலிகையைக் கொண்டு வா என்று அனுப்புகிறார். அவன் திரும்பி வந்து குருவிடம் சொல்கிறான்: குருவே ! இந்தப் பூவுலகில் மருந்துக்குப் பயன்படாத தாவரம் இல்லை ; விஷ சத்துடைய மூலிகைகளையும் பயன்படுத்த முடிகிறதே என்று வியக்கிறான் . உடனே குரு அவனை சிறந்த மாணவன் என்று ஏற்றுக்கொண்டு எல்லா ரகசியங்களையும் கற்பிக்கிறார். இதனால்தான் சம்ஸ்க்ருதத்தில் நாஸ்தி மூலம் ஒளஷதம் என்பர். மருந்ததாகப் பயன்படாத வேர், தாவரம் எதுவுமே இல்லை.
அமந்த்ரம் அக்ஷரம் நாஸ்தி நாஸ்தி மூலம் ஔஷதம்
அயோக்யப் புருஷோ நாஸ்தி யோஜகஸ் தத்ர துர்லப:
எல்லா எழுத்துக்களும் மந்திரங்களில் பயன்படும்; மந்திரத்துக்கு உதவாத எழுத்து என்று எதுவுமே இல்லை.
எல்லா செடிகளின் வேரும் ஏதோ ஒரு மருத்துவ குணம் உடையது; பயன்படாத தாவரம் எதுவும் இல்லை.
தகுதியற்ற மனிதர், உதவாக்கறை என்று உலகில் யாருமே இல்லை; ஒவ்வொருவரும் ஒருதுறையில் வல்லவன்.
ஆனால் அரிதான விஷயம், அவர்களைக் கண்டுபிடித்து, அவரவர் திறமைக்கேற்ற பணியைக் கொடுப்பவன் இருக்கிறானே– அவன் தான் அரிதானவன்.
அந்தக் காலத்திலேயே எல்லா தாவரங்களும் மருத்தாகப் பயன்படும்; அதைக் கண்டுபிடிப்பதே திறமை; அருமை என்று சொல்லி வைத்தனர்.
விஷஸ்ய விஷம் ஒளஷதம் என்ற சொல் வழக்கும் சம்ஸ்க்ருதத்தில் உண்டு. விஷத்தை விஷத்தால் முறிக்கலாம் . ஹோமியோபதி தத்துவமும் இதுதான். எந்தக் கிருமி நோயை உண்டாக்குகிறதோ அதையே மிகச் சிறிய அளவில் உடலில் ஏற்றினால் அதுவே நோயை எதிர்த்துப் போராடும் .
மஹா பாரதக் கதையும் இதை நமக்கு காட்டுகிறது. பீமன் மீது பொறாமை கொண்ட துரியோதனாதிகள் அவனுக்கு விஷத்தைக் கொடுத்து பாம்புகளும் முதலைகளும் நிறைந்த குளத்தில் தூக்கி எறிந்தனர். அங்குள்ள விஷப் பாம்புகள் பீமனைக் கடித்தபோது அவன் உடலில் ஏறியிருந்த விஷம் முறிந்து அவன் ஆரோக்கியத்துடன் மேலே வந்தான்.எவ்வளவு உண்மைகளை வியாசர் நமக்கு எழுதி வைத்துச் சென்றார் என்று எண்ணி எண்ணி வியக்கிறோம்.
பூமி எனது தாய்; நான் அவள் மகன் என்ற வரிகள் அதர்வண வேத பூமி சூக்தத்தில் இருப்பதைப் பலரும் அறிவர் (அ .வே மாதா பூமிஹி; புத்ரோஹம் ப்ருதிவ்யாஹா)

இதைவிட ஒருபடி மேலே செலல்கிறது ரிக் வேதம்!
வானமே என் தந்தை;
பூமியே என் தாய்;
சோம என்னுடைய சகோதரன்;
இயற்கை/அதிதி என் சகோதரி –1-191-6
த்யெளர் வஹ பிதா ப்ருதிவீ மாதா ஸோம ப்ராதாதிதிஹி ஸ்வஸா
அத்ருஷ்டா விச்வ த்ருஷ்டா ஸ்திஷ்டதே லயதா ஸுகம் 1-191-6
ரிஷி அகஸ்தியர் சொன்ன இந்த மந்திரம் “நம்மை அவைகள் காண்பதாகவும் நாம் அவர்களைக் காண்பதில்லை” என்றும் பாடி இருக்கிறார்.அவைகள் என்பதை நாம் வைரஸ் கிருமிகள் எனலாம்; அல்லது இயற்கையில் மறைந்திருக்கும் அற்புத சக்திகள் நம்மைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றன. நாம் கண்ணிருந்தும் காணாத/ அறியாத குருடர்களாக இருக்கிறோம் என்றும் சொல்லலாம்.
தாவர வைத்தியம் பற்றிய நூல்கள் நிறைய இருந்து அழிந்து போயின. ஆயினும் வராஹமிஹிரர் எழுதிய பிருஹத் சம்ஹிதா என்னும் என்சைக்ளோபீடியாவில்/ கலைக் களஞ்சியத்தில் இதற்காக ஒரு அத்தியாயமே ஒதுக்கியுள்ளார். அதற்கு வ்ருக்ஷ ஆயூர்வேதம் என்று பெயரும் சூட்டியுள்ளார். இது 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது.. பராசரரும் இது பற்றி எழுதியுள்ளார்.
700 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட சாரங்க பத்ததியில் ‘உபவன விஹார’ இருக்கிறது. நகரங்களில் சுற்றுலா பூங்காக்களை அமைப்பது எப்படி என்பதை இந்த நூல் விளக்குகிறது. மணி மேகலை முதலிய தமிழ் நூல்களிலும் புத்த மதக் கதைகளிலும் காளிதாசன் நூல்களிலிலும் பூங்காக்கள் வருகின்றன. இவற்றை மனிதர்கள் திட்டம் தீட்டிக் கட்டியதையும் காண்கிறோம்.
பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுரபால, வ்ருக்ஷ ஆயூர்வேதம் என்ற முழு நீள நூலையே எழுதி நமக்கு விட்டுச் சென்று இருக்கிறார்.
வேத கால ஆஸ்ரமங்கள்
பெரிய கட்டிடங்கள், ஏழு நிலை மாடங்களையும் வருணிக்கும் தமிழ் சம்ஸ்க்ருத நூல்களும் கூட முனிவர்களை வருணிக்கையில் அவர்கள் பர்ண சாலைகளில் வசித்ததாகவே வருணிக்கின்றன ; பர்ண என்றால் இலை / ஓலை. . அவர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை நடத்தியதால் மரம் செடி கொடிகளுக்கு எவ்வளவு முக்கியம் கொடுத்தனர் என்பதை இராமாயண, மஹாபாரதத்திலும் காளிதாசனின் சாகுந்தலத்திலும் காண முடிகிறது.
ரிக் வேதத்தில் உள்ள அரண்யாணி சூக்தம் காடுகளை அற்புதமாக வருணிக்கிறது. அதை உயிருள்ள ஒரு ஜீவனாக நமக்குக் காட்டுகிறது. காளிதாசனும் வன தேவதை பற்றி வர்ணிக்கிறன். சங்கத் தமிழ் நூல்கள் இயற்கையின் எல்லா அம்சங்களிலும் அணங்கு என்னும் தேவதை இருப்பதைப் பாடுகிறது. ஒரு பயம்/ மரியாதை கலந்த பக்தியை நாம் உணர்கிறோம்.
உபநிஷத்தில் வரும் தத்துவ விஷயங்களுக்குப் பின்னால் இயற்கைக்கு அவர்கள் கொடுத்த மதிப்பு, மரியாதையை அறிய முடிகிறது இதோ ஓரிரு உதாரணங்கள் . உடலை மூடியுள்ள பல அடுக்குகளில் முதலாவது இருப்பது அன்னமய கோசம் . சுவரை வைத்துதான் சித்திரம் என்பது போல உடலே கோவில் என்று முன்னோர்கள் அறிந்தனர். தமிழில் திருமூலர் இதைத் தெளிவாகப் பாடியுள்ளார். ஆயினும் அவர்க்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ரிஷிகளும் இது பற்றிப் பேசியிருக்கின்றனர்.
சாந்தோக்ய உபநிஷத்தின் ஆறாவது அத்தியாயத்தில் உத்தாலக / ஆருணி அவருடைய மகன் ஸ்வேதகேதுவுடன் பேசுகையில் மனம், உயிர், பேச்சு இவை உணவு, தண்ணீர், வெப்ப நிலையைச் சார்ந்தவை என்றும் ஒருவனுடைய அறிவும் நினைவாற்றலும் உண்ணுவதாலும் உண்ணாவிரதம் இருப்பதாலும் பாதிக்கப்படும் என்றும் அறிவுறுத்துகிறார்.
தைத்ரீய உபநிஷத்தில் தந்தை வருணன் கட்டளைப்படி, ப்ருகு , கடவுளைத் தேடி — பிரம்மனை அறியச் செல்கிறான். அவன் முதலில் கண்டது உணவு தானியங்கள் ; மனிதர்கள் அவைகளை உண்டு வாழ்வதால் அதுவே பிரம்மன்/ கடவுள் என்று கருதுகிறான். பின்னர் பிராணன் இல்லாமல் தானியம் வறண்டு அழிகிறது ; பிராணனும்/ உயிரும் தானியம் இல்லாமல் அழிகிறது; ஒன்றை ஒன்று சார்ந்துள்ளது என்பதை உணர்கிறான். உடலை மூடியுள்ள முதல் திரையான அன்னமய கோசம் மாசுபடக்கூடாது என்பதில் வேத கால ரிஷிகள் கண்ணும் கருத்துமாக இருந்தனர் ; அது எப்படித் தெரியும் என்ற வினா நம் மனதில் எழக்கூடும். பொது இடங்களில் எல்லா பூஜைகள், பஜனைகள் முடியும் போதும் ஒரு சாந்தி மந்திரத்தைச் சொல்லி முடிப்பார்கள். அது உலக நாடுகளின், ஐ.நா சபையின் தேசீய கீதமாக அமையும் தகுதி உடைத்து.

சுக்ல யஜுர் வேதத்தில் வரும் அந்த அற்புத மந்திரம் புறச் சூழலைப் போற்றும் மந்திரம் மட்டுமல்ல. உலகம் முழுதும் சாந்தி அளிக்கும் மந்திரமும் ஆகும்.
வானம் (நமக்கு) அமைதி வழங்கட்டும்
காற்றுமண்டலம் அமைதி வழங்கட்டும்
பூமி அமைதி வழங்கட்டும்
தண்ணீர் நமக்கு அமைதியை நல்கட்டும்
மூலிகைகள் அமைதி வழங்கட்டும்
தாவரங்கள் நமக்கு அமைதியை நல்கட்டும்
எல்லாக் கடவுளரும் நமக்கு அமைதியை நல்கட்டும்
எங்கும் அமைதி நிலவட்டும்
பிரபஞ்சம் முழுதும் அமைதி நிலவட்டும்
நலங்கள் பெருகட்டும்.
ஓம் த்யெள சாந்திஹி ; அந்தரிக்ஷம் சாந்திஹி; ப்ருதிவீ சாந்திஹி ; ஆபஹ சாந்திஹி ;ஓஷதயஹ சாந்திஹி; வனஸ்பதயஹ சாந்திஹி ; விச்வே தேவாஹா சாந்திஹி ; ப்ரஹ்ம சாந்திஹி; ஸர்வே சாந்திஹி ; சாந்திரேவ சாந்திஹி ; ஸா மா சாந்திரேதி — சுக்ல யஜுர் வேதம்
ॐ द्यौः शान्तिरन्तरिक्षं शान्तिः
पृथिवी शान्तिरापः शान्तिरोषधयः शान्तिः ।
वनस्पतयः शान्तिर्विश्वेदेवाः शान्तिर्ब्रह्म शान्तिः
सर्वं शान्तिः शान्तिरेव शान्तिः सा मा शान्तिरेधि ॥
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
XXX
பிராமணர்கள் மாதம் தோறும் செய்யும் தர்ப்பண மந்திரத்திலும் புறச் சூழலுக்காகப் பிரார்த்திக்கிறார்கள் ; இதோ அந்த மந்திரம்
ஓம் மதுவாதா ரிதாயதே
மதுக்ஷரந்தி ஸிந்தவ:
மாத்வீர் நஸ்ஸந்த்வோஷதீ:
மது நக்தமுதோஷஸி
மதுமத் பார்த்திவக்ம் ரஜ:
மது த்யௌரஸ்து ந: பிதா
மதுமான் நோ வனஸ்பதிர்
மதுமாகம் அஸ்து ஸூர்ய:
மாத்வீர் காவோ பவந்தி ந:
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
(சிறந்த செயலைச் செய்ய விரும்புகின்ற நமக்கு காற்று இனிமையாக வீசட்டும், நதிகள் இனிய நீருடன் ஓடட்டும், செடிகொடிகள் வளம் பெற்று விளங்கட்டும், இரவும் பகலும் நன்மையைத் தரட்டும், பூமி இனிமையைத் தரட்டும், நமது தந்தையான வானம் இனிமையைப் பொழியட்டும், செடிகொடிகளின் அதிபதியான சந்திரன் இனிமையாக இருக்கட்டும், பசுக்கள் அதிக பாலைப் பொழியட்டும்.)
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் !
லோகாஸ் சமஸ்தா சுகினோ பவந்து!
—SUBHAM—-
tags- சாந்தி மந்திரம், புறச்சூழல், மந்திரம், இந்துக்கள், தரு, மரம், வேதம் , பிருஹத் சம்ஹிதா