
Post No. 11,455
Date uploaded in London – 19 November 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
மகாபாரதத்தை ஒரு காடு என்று கருதினால் அதில் இரண்டு பெரிய மரங்கள் உள்ளன. ஒன்று நல்ல மரம்; மற்றொன்று தீய (விஷ) மரம்; ஆதாவது முள் மரம். இந்தியாவின் பிரபல ஆங்கில எழுத்தாளரும், ஆந்திர பல்கழகத் துணைவேந்தருமான கே ஆர் ஸ்ரீனிவாச ஐயங்கார் (1908-1999) மஹாபாரத மரங்களைக் கீழ்கண்டவாறு வருணிக்கிறார்:-
யுதிஷ்டிரன்-மரம்,
அர்ஜுனன்- பெரிய கிளை,
பீமன்- வலுவான மரக் கிளைகள்
நகுல, சகாதேவர்கள் – பூக்களும், பழங்களும்
கிருஷ்ணன், முனிவர்கள் – வேர்
இதே போல எதிர் தரப்பிலுள்ள துர்யோதனாதிகளையும் அவர் ஒரு கெட்ட மரமாக வருணிக்கிறார்
துரியோதனன் -மரம்,
கர்ணன் – பெரிய கிளை,
சகுனி – வலுவான மரக் கிளைகள்
துஷ்சாசனன் – பூக்களும், பழங்களும்
திருதராஷ்டிரன் – வேர்
Jealous Duryodhana is the foul tree,
Karna is its trunk, Sakuni
Its branches, Dushasana its flowers
And fruits; and Dhrutarastra
With his unbridled mind and impulses
Sustains the underground roots.
Yudhisthira , incarnate Righteousness,
Is the fair tree, Arjuna
Its trunk, Bhima its branches; Nakula
Sahadeva its flowers , fruits;
And Krishna , Veda and the wise, the roots
Of the great Bharata tree.
–K.R.Srinivasa Iyengar

இந்த மர உருவகம் மஹாபாரதம் குறித்து ஆழமாக அறிய நமக்கு உதவி புரிகிறது.
மஹாபாரதம் உலகிலேயே மிக நீண்ட இதிஹாசம் ; பழங்கால உலகின் மிகப்பெரிய புஸ்தகம்; இந்திய வரலாறு மற்றும் பண்பாட்டின் என்சைக்ளோபீடியா (கலைக்களஞ்சியம் ) என்பதையெல்லாம் நாம் அறிவோம்.
உலகில் ஒரே ஒரு நூல் மட்டும்தான் தன்னைப்பற்றிப் பெருமை பேசுகிறது :
உலகிலுள்ள எல்லா விஷயங்களும் இதில் உள ;
இதில் இல்லாத விஷயங்கள் உலகில் இல
என்பது எல்லோரும் அறிந்த வாசகமே.
பராசரருக்கும் சத்யவதிக்கும் புதல்வராக அவதரித்த வேத வியாஸர் இதை நமக்கு எழுத்து வடிவில் கொடுத்தார். அதற்கு விநாயகப் பெருமான் எழுத்தராக இருந்து உதவி புரிந்தார். ‘மஹா’ என்றால் ‘பெரிய’. ஆங்கிலத்திலுள்ள மெகா MEGA என்ற சொல் இந்த ஸம்ஸ்க்ருதத்திலிருந்து வந்ததே ! பாரத என்றால் பாரத வம்சத்தின் கதை.
வியாசரின் அம்மா பெயர் சத்யவதி; அதன் தொடர்ச்சியை இன்றும் காணலாம். நிறைய பெண்களின் பெயர்கள் ‘வதி’ அல்லது ‘மதி’ என்றே முடிவடையும். சைவ இலக்கியத்தில் வரும் புனிதவதி, திலகவதி முதல் நம்ம ஊர் அடுத்த தெருவில் வசிக்கும் பார்வதி, பிரபாவதி வரை பல பெயர்களில் காணலாம். பாரதீய கலாசாரத்திற்கு வித்திட்டது மஹாபாரதம் .
மஹாபாரதத்தை ஐந்தாவது வேதம் என்பர். ஏனெனில் ரிக், யஜுர் , சாம,அ தர்வண வேதங்களைப் பிராமணர்கள் மட்டுமே பயில முடியும்; மேலும் அதற்கு ஐந்து வயது முதல் சுமார் 25 வயது வரை மனம், மொழி, மெய் மூன்றிலும் பிரம்மச்சரியத்தை அனுஷ்டித்து, வேத பாட சாலையிலேயே தங்கி,குருவுக்கு துணிமணி துவைத்துப் போட்டு சேவை செய்து பட்டம் வாங்க வேண்டும். இன்று பிராமண ஜாதிக்காரர்களே இதற்குத் தயாராக இல்லாதபோது மற்ற ஜாதிக்காரர்களை மேளதாளம் கொட்டி, வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தாலும் வரமாட்டார்கள். ஏனெனில் , பெண்களை நினைத்தால் ஞாபக சக்தி வளராது; வேதங்களோ வாயமொழியாகக் கேட்டு நினைவில் வைக்கவேண்டிய தெய்வீக வாசகங்கள் !
இப்படி இருந்தால் கலியுகத்தில் வேதம் அழிந்துவிடாதா என்று கவலைப்
படாத வியாசர் நாலு சீடர்களை அழைத்து நீங்கள் 4 வேதங்களைப் பார்ப்பனர்களுக்கு கற்பியுங்கள்; அதன் ஜுஸை JUICE (ரசம்) 700 பாக்களில் வடித்து பகவத் கீதை என்னும் பெயரில் மஹாபாரதத்துக்குள் நுழைத்து விடுகிறேன். அதை எல்லோரும் அறிய சுவையான கதையை எழுதி சர்க்கரைப் பூச்சு தடவிய மாத்திரையாக (sweet coated capsules) கொடுத்துவிடுகிறேன் என்று செய்யப்பட்டதே மஹாபாரதம். சுருங்கச் சொன்னால் வேதம் என்ன சொல்கிறாதோ அதையே இந்த இதிஹாசமும் சொல்கிறது.
இதிகாசம் என்றால் ஸம்ஸ்க்ருதத்தில் வரலாறு என்று பொருள்; புராணமும் வரலாறுதான். உண்மையில் அவை அவ்வப்பொழுது Constantly Updated |History ‘அப்டேட்’ செய்யப்படும் வரலாறு.. ஆகையால் என்றும் பு’துமையுடன் இருக்கும் பழமை’ என்று சம்ஸ்க்ருதத்தில் செப்பினர்- புரா அபி நவம்= புராணம்= OLDER THAN THE OLDEST, BUT NEWER THAN THE NEWEST
மாணிக்கவாசகர் இதையே சிவபெருமான் வருணனையில் சேர்த்துக்கொண்டார்
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
–திருவெம்பாவை
Xxx

மஹாபாரதம் ஐந்தாம் வேதம் என்பதற்கு என்ன சான்று?
இந்துக்கள் வாழ்க்கையை நான்கு பகுதிகளாகப் பிரித்தனர் :
பிரம்மசர்யம் (மாணவர் வாழ்க்கை – அரசியலில் சேராதே; காதல் வலையில் விழாதே)
கிருஹஸ்தாஸ்ரமம் (இன்பத்தை ஆசை தீரும் மட்டும் அனுபவி; அது சிற்றின்பம்தான் )
வானப்பிரஸ்தம் ( உன் மகன், மகள் , உறவினர், பேரக்குழந்தைகள் விஷயத்தில் தலையிடாதே )
சன்யாசம் ( வீட்டிலிருந்தோ , கோவிலுக்குச் சென்றோ, மடங்களுக்குச் சென்றோ பேரின்பத்தை அனுபவி)
இந்த நான் கிற்கும் மஹாபாரதத்தில் ஏராளமான கதைகளும் எடுத்துக் காட்டுகளும் உள .
xxxx
கால்பந்து, கூடைப்பந்து, பூப்பந்து விளையாடுவோர் அந்தப் பந்துகளை வெறுமனே தட்டுவதில்லை. பாயிண்டுகள் எடுத்துவெல்ல ஒரு குறிக்கோளை (Goal) நோக்கிச் செல்லுகின்றனர். அது போலவே இந்துக்களுக்கு 4 புருஷார்த்தங்களை வேதம் முன்வைக்கிறது . அவை தர்ம, அர்த்த, காம, மோக்ஷ என்ற நான்காகும்.
இதையே திருவள்ளுவரும் பின்பற்றி அறம், பொருள் இன்பம் — முப்பால் – என்று தனது நூலுக்கு பெயர் சூட்டினார். நாம் அதற்குத் திருக்குறள் என்று புது நாமகரணம் செய்தோம் . தொல்காப்பியத்திலும், புறநானூற்றிலும் இவை வருகின்றன – அறம் , பொருள், இன்பம்.
வீடு என்பதைத் தனியாய்ச் சொல்லவேண்டியதில்லை என்ற மரபு தமிழில் பின்பற்றப்படுகிறது
xxx
புருஷ + அர்த்தம் என்றால் என்ன ?
புருஷஷ்ய அர்த்தஹ புருஷார்த்தஹ என்பது சம்ஸ்க்ருத விளக்கம்.
புருஷ என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லில் இருந்து PERSON பெர்ஸன் என்ற ஆங்கிலச் சொல் பிறந்தது இதற்கு சம்ஸ்க்ருதத்தில் இரு பொருள் உண்டு; முதல் அர்த்தம் மனிதன் MAN ; மற்றோரு அர்த்தம் இறைவன் SUPREME BEING ; ரிக்வேதத்தின் பத்தாவது மண்டலத்திலுள்ள, இறைவனைப் பிரபஞ்ச வடிவாக வருணிக்கும் , புருஷ ஸூக்தம் மிகவும் பிரசித்தம் . இங்கு இறைவனைக் குறிக்காது மனிதனையே குறிக்கும். அதாவது புருஷஸ்ய அர்த்தஹ புருஷார்த்தம் ; அப்படியானால் என்ன பொருள்:? மனிதர்கள் விரும்பக்கூடிய அர்த்தம்/செல்வம் என்று பொருள்.
புருஷன் என்பது எப்படி வந்தது என்பதையும் காண்போம்
பகவத் கீதையும் தமிழ் பக்திப் பாடல்களும், சித்தர் பாடல்களும் நமது உடலை ஒன்பது வாசல் வீடு navadwara puri என்று பாடுகிறது . அதை சம்ஸ்க்ருதத்தில் புரி சேதே இதி புருஷஹ என்று அர்த்தம் செய்வார்கள். இதற்கு உடல் என்னும் புரியில் வசிப்பவன் என்று பொருள்.
மஹாபாரதம் ஒரு ஒப்பற்ற இலக்கியப் படைப்பு என்று ஸ் லோகத்திலும் வருகிறது.
தரமே அர்த்தே ச காமே ச மோக்ஷே ச பரதர்ஷப
யதிஹஸ்தி ததன்யத்ர யன்னே ஹஸ்தி ந தத் க்வசித்
–மஹா பாரதம்
இந்த நூலில் காணப்படும் அறம் , பொருள், இன்பம், வீடு என்பன வேறு இடங்களிலும் கிடைக்கக்கூடியதே. ஆனால் இந்த புஸ்தகத்திலுள்ள எல்லா விஷயங்களையும் வேறு எங்கும் காண இயலாது .
தர்ம என்ற சொல்லை உலகிலுள்ள வேறு எந்த மொழியிலும் மொழி பெயர்க்க முடியாது. அறம் என்று தமிழில் சொன்னாலும் அது முழு வீச்சைத் தராது வீட்டு வாசலிலும் ரயில் நிலையங்களிலும் , கோவில் வாசல்களிலும் நிற்கும் பிச்சைக்காரர்கள் சாமி கொஞ்சம் தருமம் போடுங்க , சாமி என்று சொல்லுவதை பார்க்கிறோம். இதை ‘அறம் போடுங்க’ என்று மொழிபெயர்க்கமாட்டோம்.
தர்ம என்றால் என்ன ?
சம்ஸ்க்ருத மொழி வல்லுநர்கள் இதை ‘த்ர்’ என்ற சம்ஸ்க்ருத வேர்ச்ச்சொல்லில் இருந்து பிறந்தது என்கின்றனர். தாங்கு / ஆதரி என்று தமிழில் சொல்லலாம். இந்த உலகத்தையே தாங்கி நிறுத்துவது தர்மம்தான். அது அழிந்தால்- அதாவது அறநெறி அழிந்தால் –உலகம் அழிந்து போகும். இதை பகவத் கீதையிலும் (FOURTH CHAPTER OF BHAGAVAD GITA) காண்கிறோம் .
யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத |
அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம் || 4-7 BG ||
பாரத யதா யதா-பாரதா, எப்போதெப்போது, தர்மஸ்ய க்லாநி-தர்மம் அழிந்துபோய், அதர்மஸ்ய அப்யுத்தாநம் பவதி-அதர்மம் எழுச்சி பெறுமோ, ததா ஹி ஆத்மாநம் ஸ்ருஜாம், யஹம்-அப்போது நான் என்னைப் பிறப்பித்துக் கொள்ளுகிறேன்.
பரித்ராணாய ஸாதூனாம் வினாஶாய ச துஷ்க்ரு தாம் |
தர்ம ஸம்ஸ்தாபனார்தாய ஸம்பவாமி யுகே யுகே || 4-8 BG ||
ஸாதூநாம் பரித்ராணாய-நல்லோரைக் காக்கவும், துஷ்க்ருதாம் விநாஸாய ச-தீயன செய்வோரை அழிக்கவும், தர்ம ஸம்ஸ்தாபநார்தாய-அறத்தை நிலை நிறுத்தவும், யுகே யுகே ஸம்பவாமி-நான் யுகந்தோறும் பிறக்கிறேன்.
இவ்வாறு கிருஷ்ண பரமாத்மா சொல்கிறார்.
தர்மம் என்பது நான்கு ஜாதிகளுக்கும் பொது. அந்தக் கட்டுக்கோப்பு இல்லாவிடின் எல்லோரும் அழிவர்.
மஹாபாரதம் போகும் போக்கில் தர்மத்தை ஆங்காங்கு விளக்கிக் கொண்டே போகிறது
நான்கு புருஷார்த்தங்களில் — வாழ்க்கையின் குறிக்கோள்களில் /லட்சியங்களில் —எது முக்கியமானது என்று பீஷ்ம பிதாமஹரை தர்மமே வடிவான யதிஷ்டிரன் கேட்கிறான். அப்போது பீஷ்மர் உரைப்பது யாதெனில்,
தர்மத்தின் மூலமே முனிவர்கள் அக்கரையை அடைந்துள்ளனர் (பிறவிப் பெருங்கடலைக் கடந்து); உலகத்தையே தர்மம்தான் நிலை நிறுத்துகிறது. கடவுளரும் தர்மத்தினால்தான் சொர்க்கத்தில் வாழ்கின்றனர் ; தர்மத்தின் வழியில்தான் நாம் பொருளையும் தேடுகிறாம்.
அவர் சொன்னதில் தர்ம, அர்த்த, காம, மோக்ஷ நாலும் வந்துவிட்டதைக் காணலாம்.
கர்ண பர்வத்தில் மற்றொரு மேற்கோள் கிடைக்கிறது.
தாரணாத் தர்ம இத்யாஹு தர்மோ தாரயதே ப்ரஜாஹா – மஹாபாரதம் 8-69-58
இதன்பொருள்: எது எல்லாவற்றையும் (ஒரு நியதிப்படி) தாங்கி நிற் கிறதோ — அஸ்திவாரமாக இருக்கிறதோ — அதுவே தர்மம்.
நியாயமாகச் செய்யப்படும் செயல்களே தர்மம் என்ற விளக்கத்தையும் வியாசர் எழுதியுள்ளார் .
ஆரம்போ ந்யாய யுக்தோ யஹ ஸ ஹி தர்ம இதி ஸ்ம்ருதஹ – மஹாபாரதம் 3-207-77
சம்சாரம் என்னும் கடல் அல்லது நதியைக் கடந்து அக்கரை சேர/ சொர்க்கத்துக்குச் செல்ல தர்மம் என்னும் படகு தேவை என்று சாந்தி பர்வம் இயம்பும்
தர்ம ஏவ ப்லவோ நான்யஹ ஸ்வர்கம் கச்சதம் 3-31-24
பகவத் கீதையில் படகு
பாவிகளுக்குள் கொடும்பாவியாக ஒருவன் இருந்தாலும் கூட ஞானம் என்னும் படகினால் அந்த பாவ நதியைக் கடந்து விடலாம் என்று 4-36 ல் பகர்கிறார். வள்ளுவரும் பத்தாவது குறளில் இதை எதிரொலிக்கிறார்
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார் -10
xxx
தர்மத்தைக் கடைப்பிடிக்க யாரும் துணைக்கு வரவேண்டியது இல்லை. நீயே நியாயவானாக இரு. அது போதும் என்றும் விளக்குகிறது :
ஏக ஏவ சரேத் தர்ம நாஸித் தர்மே ஸஹாயதா 12-193-32
தர்மம் பற்றி ஒரு எச்சரிக்கையும் விடுக்கிறது . மஹாபாரதத்திலேயே நிறைய சம்பவங்கள் தர்ம நியாயப்படி நடந்தனாவா என்று இன்றுவரை விவாதித்து வருகிறோம். ஆன்றோர் என்ன செய்கிறார்களோ, சொல்கிறார்களோ அதுவே தருமம். ஆகையால் பாம்பின் அடிச்சசுவட்டை அறிவது எவ்வளவு கடினமோ அவ்வளவு கடினமானது தர்மத்தின் முழு இலக்கணத்தை அறிவது என்கிறது
அஹிரிவ தர்மஸ்ய பதம் துக்கம் கவேசிதம் – 12-132- 20
இறுதியாக ஒரு சில சொற்களால் முத்தாய்ப்பும் வைக்கிறது ,
யதா தர்மஸ் ததோ ஜயஹ — எங்கே தர்மம் இருக்கிறதோ அங்கே வெற்றி நிச்சயம்
பாஞ்சாலி சபதம் பாடிய பாரதியும் மஹா பாரதக் கருத்தை — நோக்கத்தை, அழகாக இயம்புவான்:

“தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்;
தருமம் மறுபடி வெல்லும்” எனுமியற்கை
மருமத்தை நம்மாலே உலகங் கற்கும்
வழிதேடி விதி இந்தச் செய்கை செய்தான்;
கருமத்தை மேன்மேலுங் காண்போம், இன்று
கட்டுண்டோம், பொறுத்திருப்போம்; காலம் மாறும்
தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்
தனு உண்டு காண்டீவம் அதன்பேர்” என்றான்.
-அர்ஜுனன் சொல்வது, பாஞ்சாலி சபதம், பாரதியார் பாடல்
–subham—tags– யுதிஷ்டிரன்-மரம், அர்ஜுனன்- பெரிய கிளை, கிருஷ்ணன்- வேர் ,
தர்மம், புருஷார்த்தம், , மஹாபாரதம், மரம்