அருள்வாயே! – 3 (Post No. 11,457)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,457

Date uploaded in London – –   20 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 அருணகிரிநாதர் தொடர்!

அருள்வாயே! – 3

ச.நாகராஜன் 

அருணகிரிநாதர் ‘அருள்’ என்ற சொல்லைத் திருப்புகழில் ஆண்ட இடங்கள் ஏராளம்.

திருப்புகழை ஓதி விநாயகர், முருகன் உள்ளிட்ட தெய்வங்களின் அருளை வேண்ட விழையும் அன்பர்கள் இந்தப் பாடல்களை ஓதும் போது பரவசம் அடைவது இயல்பு.

அவர் அருள்வாயே என்று கூறும் இடங்களின் தொகுப்பு இது:

படித்து மகிழ்வோம்; பாடிப் பரவுவோம்!

  19) பழநி

 மடமாதர்

தாக போகமொ ழித்துஉ னக்கடி

  யானென் வேள்விமு கத்தவ முற்றிரு

     தாளை நாளும்வ ழுத்திநி னைத்திட – அருள்வாயே

 பாடல் எண் 113 –  ‘ஆலகாலம் என’ எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : விலைமாதர்களின் மீதுள்ள காமவிடாயை நீக்கி, உன்னுடைய அடியான் எனக் கொண்டு, ஆராதனையுடன் கூடிய தவ ஒழுக்கத்தை மேற்கொண்டு, உனது இரு திருவடிகளைத் தினமும் போற்றி நினைக்கும்படி அருள்வாயாக!

 20) பழநி

 மருவிய பரம ஞான சிவகதி பெறுக நீறு

  வடிவுற அருளி பாத – மருள்வாயே

 பாடல் எண் 124 –  ஒருவரை ஒருவர் எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : பொருந்திய பரம ஞானமாகிய சிவ கதியை பெறுவதற்காக திருநீற்றைத் தந்து, நல்ல நிலையை நான் அடைய எனக்கு அருளி, உன் திருவடிகளைத் தந்தருள்வாயாக!

  21) பழநி

      பொருட் பறிமாதர்

செயலிழுக் காமலிக் கலியுகத் தேபுகழ்ச்

    சிவபதத் தேபதித் தருள்வாயே

பாடல் எண் 131 –  கரியிணைக் கோடென எனத் தொடங்கும் பாடல்

பொருள் : பொருளைப் பறிக்கின்ற விலைமாதர்களின் சூழ்ச்சிகள் என்னைக் கவராத வண்ணம், இந்தக் கலியுகத்தில் புகழப்படுகின்ற சிவ பதவியில் என்னைப் பொருந்த வைத்து அருள்வாயாக!

22) பழநி

     மனது துயரற வினைகள் சிதறிட

       மதன பிணியொடு கலைகள் சிதறிட

          மனது பதமுற வெனது தலைபத மருள்வாயே

பாடல் எண் 146 –  குருதி மலசலம் எனத் தொடங்கும் பாடல்

பொருள் : மனத்தின் துன்பங்கள் ஒழியவும், வினைகள் சிதறிப் போகவும், காமநோயும் காம சாஸ்திரமும் விலகி நீங்கவும், என் மனம் பக்குவப்படவும், எனது தலையில் உனது திருவடிகளைச் சூட்டி அருள்வாயாக!

23) பழநி

                மயலாலும்

     என்றென் றுங்கன் றுந்துன் பங்கொண்

         டுனதிரு மலரடி பரவிட மனதினில்

     நன்றென் றுங்கொண் டென்றுஞ் சென்றுந்

        தொழுமகி மையினிலை யுணர்வினி னருள்பெற

     இன்பும் பண்புந் தெம்புஞ் சம்பந்

        தமுமிக வருள்பெற விடைதரு விதமுன மருள்வாயே

பாடல் எண் 150 –  குன்றுங் குன்றும் எனத் தொடங்கும் பாடல்

பொருள் : காம இச்சையாலும், எந்த நாளும் மனம் இரங்கி நொந்து போதலையும், துன்பத்தையும் கொண்டுள்ள நான் உனது மலர் போன்ற இரு திருவடியை போற்றுதற்கும் மனத்தில் நல்லது என்று எப்பொழுதும் அறிந்து என்றும் உனது திருக்கோயிலுக்குச் சென்று தொழுகின்ற பெருமையின் பண்பை என் அறிவில் நின் அருளால் நான் பெறவும், இன்பமும், நற்பண்ப்டும் உற்சாகமும் உனது தொடர்பும் சேர்ந்து நிரம்பும்படியான அருளைப் பெறவும் நீ அனுமதி செய்யும் வழியை முன்னதாகக் காட்டி அருள்வாயாக!

 இங்கு மூன்று இடங்களில் அருள் என்ற வார்த்தை வருவதைக் கவனித்து மகிழலாம்.

நின் அருள் பெறமிக அருள் பெறஅருள்வாயே!

 24) பழநி

 பாவிகள் பாலே

   சிந்தைத் தயவுகள் புரிவே னுனையே

      வந்தித் தருள்தரு மிருசே வடியே

         சிந்தித் திடமிகு மறையா கியசீ ரருள்வாயே

பாடல் எண் 151 –  கொந்துத் தரு குழல் எனத் தொடங்கும் பாடல்

பொருள் : பாவிகளாகிய வேசியரிடத்தே மனம் அன்பு கூர்ந்த செயல்களைச் செய்பவனாகிய அடியேன் உன்னையே வணங்கி, திருவருளைப் பாலிக்கும் உனது இரு திருவடிகளைத் தியானிக்க சிறந்த ரகசியமாகிய உபதேசப் பொருளை அருள்வாயாக!

 25) பழநி

       முன்றலை வாயில டைத்துச் சிங்கிகொள்

        மங்கைய ராசைவி லக்கிப் பொன்பத மருள்வாயே

பாடல் எண் 155 –  சிந்துர கூரமருப்பு எனத் தொடங்கும் பாடல்

பொருள் : முன்புறத்தில் உள்ள வாசல் கதவை அடைத்து நாணம் இன்மையைக் கொண்ட மாதர்கள் மீது எனக்குள்ள ஆசையை விலக்கி, உனது அழகிய திருவடியைத் தந்து அருள்வாயாக!

 26) பழநி

  வருதுரக மயில்மணிகள் சத்திக்க நிர்த்தமிட

   ஒருபதுட னிருபுயமு மட்டுத் தொடைக்கிசைய

     மனமகிழ இனிய மொழி செப்பிச் சிவத்தபத  மருள்வாயே

பாடல் எண் 157 –  சிறு பறையும் எனத் தொடங்கும் பாடல்

பொருள் : நீ ஏறி வரும் குதிரையாகிய மயிலின் மணிகள் சத்தம் செய்ய நடனம் ஆடும்படி பன்னிரு புயங்களும் தேன் ஒழுகும் மாலைக்குப் பொருந்தி விளங்கம் மனம் மகிழுமாறு இனிய உபதேச மொழியைக் கூறி, உனது சிவந்த திருவடியை அருள்வாயாக!

 27) பழநி

 அகிலபுவ னாதி யெங்கும் வெளியுறமெய்ஞ் ஞான இன்ப

    அமுதையொழி யாத ருந்த அருள்வாயே

  பாடல் எண் 161 –  சுருளளக பார எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : எல்லா உலகங்களிலும் உள்ள தலங்கள் யாவையும் சுத்த ஞான வெளியாகவே கண்டு, மெய்ஞ்ஞான இன்ப அமுதத்தை ஓய்வின்றிப் பருக அருள்வாயாக!

 குறிப்பு நன்றி : https://www.kaumaram.com தளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன்  விளக்கத்தையும் இதில் காணலாம்.

                                             ***.                                  தொடரும்

புத்தக அறிமுகம் – 119 

திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் – 1 

பொருளடக்கம் 

நூலில் உள்ள 52 அத்தியாயங்ளில் முதல் 26 அத்தியாயத் தலைப்புகள் :

 1. பாடல்கள் பல விதம்! ஒவ்வொன்றும் ஒரு விதம்!!      

2. சின்னப் பெண்ணான போதிலே!

3. மன்மத லீலையை வென்றார் உண்டோ?   

4. ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம் உச்சரிக்க வேண்டும்!

5. சோலை மலரொளியோ – உனது சுந்தரப் புன்னகைதான்!

6. மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்!        

7. நல்லதோர் வீணை செய்தே அதை …!          

8. காற்றினிலே வரும் கீதம்!           

9. மயிலேறும் வடிவேலனே!          

10. ஞானப் பழத்தைப் பிழிந்து..!     

11. சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி, சேதி தெரியுமா?    

12. மன்னவன் வந்தானடி!     

13. ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு!        

14. மலர்ந்தும் மலராத பாதி மலர் போல!       

15. கட்டோடு குழல் ஆட ஆட!      

16. நதி எங்கே போகிறது? கடலைத் தேடி!       

17. கல்யாண ஊர்வலம் வரும்! உல்லாசமே தரும்!!          

18. துதியை பாடுவாய் கோமள கிளியே!          

19. வசந்தமுல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண்புறாவே!

20. முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே!

21. சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா!         

22. துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே!          

23. நான் ஆணையிட்டால்.. அது நடந்து விட்டால்! 

24. பாலும் பழமும் கைகளில் ஏந்தி!       

25. ஒரு தாய் மக்கள் நாம் என்போம்!   

26. சும்மா கெடந்த நெலத்தைக் கொத்தி!         

         (அடுத்த 26 அத்தியாயங்கள் தொடரும்)

*நூலுக்கு பத்மஶ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள் நல்கியுள்ள அணிந்துரை இது:

 அணிந்துரை

பத்மஶ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார்

அந்தக் காலத்து நாட்டுப்புறப் பாடல்கள் இலக்கியப் படைப்புகள் என்றால் சென்ற நூற்றாண்டின் திரைப்படப் பாடல்களும் இலக்கியமே. அந்தத் திரைப்படப் பாடல்களை மேற்கோள் காட்டி அவற்றின் நயத்தைச் சொல்லும் ‘திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம்’ என்ற இந்தப் புத்தகம் ஒரு விதத்தில் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதாகிறது; மறு பக்கம் பார்த்தால் இது ஒரு ஆராய்ச்சி நூல்.

 பாடல்களை பாசப் பாடல்கள், தத்துவப் பாடல்கள், அறிவுரைப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், நடனப் பாடல்கள், இசையின் பெருமை பேசும் பாடல்கள், சடங்குப் பாடல்கள் என்று விதம் விதமாக இனம் பிரித்திருக்கிறார் நூலாசிரியர். பல பாடல்களின் கர்நாடக இசை ராகங்களையும் பதிவு செய்திருக்கிறார். பிரபலமான திரைப்படப் பாடல்கள் மூலம் கர்நாடக இசையின் ராகங்கள் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இது அருமையான வழிகாட்டி நூல்.

 காலத்தால் அழியாத பாடல்கள் என்று சில பாடல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை யாவும் கர்நாடக இசையின் சாயல் கொண்டவையே.

 ஶ்ரீமதி எம்.எஸ். அவர்கள் தமிழ்த்திரை உலகுக்காக 30 பாடல்கள் பாடியிருக்கிறார். ஐந்தரை நிமிடங்கள் மட்டுமே திரைப்படத்தில் நாம் காணும் பாடல் காட்சியைப் படம் பிடிக்க பத்து நாட்கள் தேவைப்படன. நடனப் பாடல்களின் சந்தம், கண்ணதாசனின் கவிதை நயம், கே.வி.மகாதேவனின் இசையமைப்புத் திறமை போன்ற பல விஷயங்களை இந்தப் புத்தகத்திலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.

 பல இடங்களில் முழுப் பாடல்களையும் நூலாசிரியர் மேற்கோள் காட்டியிருக்கிறார். பழங்காலப் பாடல்களில் பரிச்சயம் உள்ளவர்கள் ஹம்மிங் செய்து பார்க்கலாம். அப்படி வாசகர்களையே ஒரு ஆர்வத்தைத் தூண்டுவதாக எழுதப்பட்டுள்ள இந்த நூல் எல்லாத் துறை வாசகர்களுக்கும் சுவையான புத்தகம். திரைத்துறைக்கு ஒரு ஆவணம். நூலாசிரியர் ச.நாகராஜன் அவர்களை வாழ்த்துகிறேன்.

 *** 

The collection of articles about melodies of Tamil Cinema that were published in Nilacharal E-Magazine in 52 weekly segments now takes a new form as a book! This book contains a lot of interesting details about the songs in the early period of Tamil Cinema, wonderful songs of the golden sixties, and information about lyricists, including Marudhakasi, Kannadhasan, Vali, and several others. Details about famous music directors are also included. Some significant songs are fully keyed as well in the book.

நிலாச்சாரல் மின்னிதழில் 52 வாரங்கள் தொடர்ந்து வெளியான, தமிழ்த் திரைப்படங்களின் மெல்லிசை பற்றிய தொடர் இப்பொழுது நூலாக! தொடக்க காலத்தில் வெளியான தமிழ்த் திரைப்படங்களின் பாடல்கள், தமிழ்த் திரையுலகின் பொற்காலமாக விளங்கிய அறுபதுகளில் வெளியான அற்புதப் பாடல்கள், கவிஞர்கள் மருதகாசி, கண்ணதாசன், வாலி எனப் பாடலாசிரியர்கள் பலரைப் பற்றிய விவரங்கள், இசை அமைப்பாளர்கள் பற்றிய சுவையான விவரங்கள் என ஏராளமான தகவல்கள் இதில் உள்ளன. முக்கியமான பல பாடல்கள் முழுமையாக இடம்பெற்றுள்ள இந்த நூல் தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கு ஒரு விருந்து!

*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம்’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

*

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: