அருள்வாயே! – 4 (Post No.11,459)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,459

Date uploaded in London – –   21 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அருணகிரிநாதர் தொடர்!

அருள்வாயே! – 4

ச.நாகராஜன் 

அருணகிரிநாதர் ‘அருள்’ என்ற சொல்லைத் திருப்புகழில் ஆண்ட இடங்கள் ஏராளம்.

திருப்புகழை ஓதி விநாயகர், முருகன் உள்ளிட்ட தெய்வங்களின் அருளை வேண்ட விழையும் அன்பர்கள் இந்தப் பாடல்களை ஓதும் போது பரவசம் அடைவது இயல்பு.

அவர் அருள்வாயே என்று கூறும் இடங்களின் தொகுப்பு இது:

படித்து மகிழ்வோம்; பாடிப் பரவுவோம்!

28) பழநி

முறியுமவர் தங்கள் வித்தை தானிது

  முடியவுனை நின்று பத்தி யால்மிக

      மொழியும்வளர் செஞ்சொல் வர்க்க மேவர  அருள்வாயே

பாடல் எண் 171 –  நிகமமெனில் எனத் தொடங்கும் பாடல்

பொருள் : ஒன்றும் தெரியாததால் வெட்கத்தால் முகம் வெளுத்து மனம் குலைந்து போனவர்களுடைய வித்தை தான் இந்தக் கல்வி எல்லாம். இத்தகைய கல்வி போதும். இது முடிவதாக, இனியேனும் உன்னை மனம் ஒரு வழி நின்ற பக்தியுடன் நிரம்பத் துதிப்பதற்கு, மேலும் மேலும் எழுகின்ற செவ்விய சொற்களின் பெருக்கே எனக்கு வருமபடி அருள்வாயாக!

29) பழநி

உருகியே யுடலற வெம்பி வாடியெ

  வினையிலே மறுகியெ நொந்த பாதக

     னுனதுதாள் தொழுதிட இன்ப ஞானம தருள்வாயே

பாடல் எண் 178 –  பெரியதோர் கரி எனத் தொடங்கும் பாடல்

பொருள் : மனம் உருகி உடல் எல்லாம் கொதித்து வாடி, வினைக்குள் கலங்கி நொந்த பாதகனாகிய எனக்கு உன் திருவடிகளைத் தொழும்படியான ஞான இன்பத்தை அருள்வாயாக!

30) பழநி

மாய

மனதை யுடைய அசட்டு மனிதன் முழுது புரட்டன்

   மகிழ வுனது பதத்தை யருள்வாயே

பாடல் எண் 186 –  முதிர வுழையை எனத் தொடங்கும் பாடல்

பொருள் : மாயம் நிறைந்த மனம் கொண்ட மூட மனிதனாகிய நான் முழுப் பொய்யன். களிக்கும்படி உன் திருவடியைத் தந்து அருள்வாயாக!

31) பழநி

மெத்தத்துக் கத்தைத் தித்தியி

  னிச்சித்தத் திற்பத் தத்தொடு

   மெச்சிச்சொர்க் கத்திற் சிற்பர மருள்வாயே

பாடல் எண் 187 –  முத்துக்கு எனத் தொடங்கும் பாடல்

பொருள் : அதிகமான துன்பத்தை அனுபவித்த நான் இனிமேல் மனத்தில் உண்மையுடன் உன்னை மெச்சிப் புகழ்ந்து, விண்ணுலகத்திலும் மேலான ஞான வீட்டைப் பெறும்படி அருள்வாயாக!

32) பழநி

பாடுந்தொனி நாதமு நூபுர

 மாடுங்கழ லோசையி லேபரி

   வாகும்படி யேயடி யேனையும்  அருள்வாயே

பாடல் எண் 188 –  மூலம் கிளர் ஓர் எனத் தொடங்கும் பாடல்

பொருள் : பாடல் ஒலியின் நாதத்திலும் சிலம்புகளின் கழல் ஒலியிலும்  அன்பு பொருந்தும்படியாக அடியேனுக்கு அருள்வாயாக!

33) பழநி

இசைபயில்ஷ டாக்ஷ ரமதாலே

   இகபரசௌ பாகிய மருள்வாயே

பாடல் எண் 192 –  வசனமிக ஏற்றி எனத் தொடங்கும் பாடல்

பொருள் : மீண்டும் மீண்டும் சொல்லிப் பயில்கின்ற ஆறெழுத்து மந்திரமமான சரவணபவ தரும் பயனாலே இம்மைக்கும் மறுமைக்கும் நல்வாழ்வைத் தந்து அருள்வாயாக!

34) பழநி

போது கங்கையி னீர்சொ ரிந்திரு

   பாத பங்கய மேவ ணங்கியெ

      பூசை யுஞ்சில வேபு ரிந்திட அருள்வாயே

பாடல் எண் 200 –  வேய் இசைந்து எனத் தொடங்கும் பாடல்

பொருள் : மலரையும், கங்கை நீரையும் நிரம்பப் பெய்து உனது இரு தாமரைத் திருவடிகளை வணங்கிஏ சில பூஜைகளையும் செய்ய அருள்வாயாக!

35) சுவாமிமலை

சிவாயவெ னுநாமமொ ருகாலுநி னையாததி

  மிராகரனை வாவென் றருள்வாயே

பாடல் எண் 201 –  அவா மருவு எனத் தொடங்கும் பாடல்

பொருள் : சிவாய என்ற திருமந்திரத்தை ஒரு போதும் நினைக்காத அஞ்ஞான இருளுக்கு இருப்பிடமாக உள்ள அடியேன உன் திருவடியில் சேர்ந்து இன்புற வருக என்று அழைத்து அருள்வாயாக!

36) சுவாமிமலை

ஓமெழுத் திலன்பு மிகவூறி

  ஓவியத் திலந்த மருள்வாயே

பாடல் எண் 212 –  காமியத் தழுந்தி  எனத் தொடங்கும் பாடல்

பொருள் : ஓம் என்னும் பிரணவப் பொருளில் ஈடுபாடு மிகவும் ஏற்பட்டு யான் சித்திரம் போல மோன நிலை முடிவை அடைய அருள்வாயாக!

குறிப்பு நன்றி : https://www.kaumaram.com தளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன்  விளக்கத்தையும் இதில் காணலாம்.

                                             ***.                                  தொடரும்

புத்தக அறிமுகம் – 119/A

திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் – 2 

பொருளடக்கம் 

நூலில் உள்ள 52 அத்தியாயங்ளில் அடுத்த 26 அத்தியாயத் தலைப்புகள் :

26. சும்மா கெடந்த நெலத்தைக் கொத்தி!    

27. மாசிலா உண்மைக் காதலே! 

28. ஆஹா! நம் ஆசை நிறைவேறுமா? 

29. பூவாகிக் காயாகிக் கனிந்த மரம் ஒன்று!

30. சம்மதமா – நான் உங்கள் கூட வர சம்மதமா?  

31. ஆடி வா, ஆடி வா, ஆடி வா!  

32. தேன் உண்ணும் வண்டு, மாமலரைக் கண்டு!  

33. மலர்கள் நனைந்தன பனியாலே!  

34. உன்னழகைக் கன்னியர்கள் கண்டதினாலே!  

35. ரோஜா மலரே ராஜகுமாரி!   

36. கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே! 

37. பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே!  

38. நான் ஒரு முட்டாளுங்க!

39. உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன்   

    வகுத்ததடா!

40. கல்லிலே கலை வண்ணம் கண்டான்!   

41. பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை!   

42. காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வைத்து..!    

43. மனம் என்னும் மேடை மேலே முகம் ஒன்று ஆடுது!

44. அம்மா என்றால் அன்பு; அப்பா என்றால் அறிவு!    

45. நான் என்றால் அது அவளும் நானும்!   

46. ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்!

47. கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே!   

48. ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே!  

49. பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியமானது நெஞ்சம்!

50. உந்தன் சபையில் எந்தன் விதியை சோதித்தே ராஜாவே நானும்

     பார்த்தேனே!   

51. ஆற்றின் கரைதனிலே, கண்ணன் என்னை கேலி செய்தானே!

52. சங்கீத சௌபாக்கியமே என்றும் குன்றாத பெரும் பாக்கியமே!

*

நூலுக்கு திரு P.வெங்கட்ராமன் அவர்கள் அளித்துள்ள

வாழ்த்துரை இது:

வாழ்த்துரை

லட்சக்கணக்கான ரசிகர்கள் கேட்டு பெரிதும் ரசிக்கும் காலத்தால் அழியாத பாடல்களை அழகுற நேர்த்தியாக படைத்துள்ள திரு ச.நாகராஜன் அவர்களின் சலியாத உழைப்பு போற்றுதற்குரியது. ‘காற்றிலே வரும் கீதமாய்’ – ‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகமாய் – ‘சங்கீத சௌபாக்கியமாய்’ பாடல் தலைப்புகள் பரவசப்படுத்துகின்றன.

‘பாடல்கள் பல விதம் – ஒவ்வொன்றும் ஒரு விதம்’ என துவக்கத்தில் கூறும் நூலாசிரியர் திரு ச.நாகராஜன் நேயர்கள் பெரிதும் விரும்பும் பாடல்களை தலைப்பாக்கி, பாடலாசிரியர் – இசையமைப்பாளர் – இயக்குநர் – பாடல் பிறந்த சூழ்நிலை – மலர்ந்த கதை – திரைப்படத்தின் சிறப்பு என பயணிக்கும் நூல் தமிழ் திரையுலக தமிழிசையின் தலை சிறந்த ஆவணமாக திகழ்கிறது. உள்ளம் மகிழ்கிறது.

திரு ச.நாகராஜனின் தந்தையார் தெய்வத்திரு வெ.சந்தானம் அவர்கள் பாரம்பரிய தேசபக்த குடும்பத்தில் பிறந்து – நாட்டின் விடுதலைக்காக சிறை சென்ற ‘மணிக்கொடி’ வீரர். ‘தினமணி’ மதுரைப் பதிப்பின் பொறுப்பாசிரியராகத் திகழ்ந்தவர். இதழியல் சூழ்நிலையில் வளர்ந்த என்னை தினமணி மதுரைப் பதிப்பின் பகுதி நேர செய்தியாளராக நியமித்து என்னை ஊக்குவித்தவர் பெருந்தகை வெ. சந்தானம் அவர்கள். அரை நூற்றாண்டு காலமாக அவரது குடும்பத்தாருடன் பழகிவரும் நல்வாய்ப்பு பெற்றவன்.

அமரர் சந்தானம் அவர்களின் குமாரன் திரு ச.நாகராஜன் ஒரு அற்புதப் படைப்பாளி. எழுத்தின் பல பரிமாணங்களிலும் தடம் பதித்து வரும் உழைப்பாளி. அறிவியலும் ஆன்மீகமும் இவருக்கு இரண்டு கண்கள்.

புகழ்பெற்ற டி.வி.எஸ். நிறுவனத்தின் வாகன கட்டுமானத் துறையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மேலாளராக இவரது பங்களிப்பு குறிப்பிடத் தகுந்தது. அறுபதுக்கும் மேல் இவர் எழுதிய புத்தகங்கள் அற்புதமானவை. இவரது படைப்புகள் வலைதளத்தில் மிகுந்த ஆர்வத்துடன் நேசிக்கும் – வாசிக்கும் உலகளாவிய அளவில் பல்லாயிரக் கணக்கில் நேயர்கள் உள்ளனர் என்பது இவருக்கு பெரிதும் பெருமை சேர்ப்பதாகும். சுயமுன்னேற்றம் – படைப்பாற்றல் திறன் – நிர்வாக இயல் படைப்புகள் – இவர் நடத்திய பயிற்சி முகாம்கள் என இவரது திருவினையாக்கும் முயற்சிகளுக்கு முக்கிய அடித்தளம் எனலாம்.

‘திரைப்பட பாடல்களின் ஒரு பயணம்’ எனும் இந்த நூலுக்கு வாழ்த்துரை வழங்கியுள்ளார் கலைமாமணி டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள்.

தொழிலதிபராக – எழுத்தாளராக – பேச்சாளராக – கலாபிமானியாக பல் பரிமாணங்களைக் கொண்ட இயல் – இசை – நாடகம் என முத்தமிழைப் போற்றும் திருமகனார் நல்லியார் எனும் பெருமகனார்.

தாமறிந்த மிகப் பழைய தமிழ் திரைக்காவியங்கங்களை மிகவும் ரசித்து மகிழ்பவர் இந்த பழமை விரும்பி. ‘விண்டேஜ் ஹெரிடேஜ்’ எனும் பழைய திரைப்படங்களை தொடர்ந்து திரையிடும் அமைப்பிற்கு நல்லுதவி செய்பவர்.

தமிழ்த் திரையுலக கவிஞர்களைப் பற்றியும் இசையமைப்பாளர்கள் பற்றியும் தரமான வெளியீடுகளைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் மணிவாசகர் பதிப்பக உரிமையாளர் திரு ச.மெ. மீனாட்சி சோமசுந்தரம் அவர்களும், பதிப்பக மேலாளராகத் திகழும் இராம. குருமூர்த்தி அவர்களும் பெரிது நன்றிக்குரியவர்கள்.

      பி.வெங்கட்ராமன்

        சென்னை – 9

 *

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம்’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

*

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: