
Post No. 11,462
Date uploaded in London – – 22 November 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
மஹாபாரத வழிகாட்டி!
முயற்சியே மேன்மை தரும்!
ச.நாகராஜன்
எந்த ஒரு சிக்கலான கேள்விக்கும் மஹாபாரதத்தில் விடை உண்டு.
இதில் இல்லாதது வேறு எதிலும் இல்லை!
விதியா, முயற்சியா என்ற கேள்வி காலம் காலமாக மனித மனதைக் குடைந்து கொண்டிருக்கும் ஒரு கேள்வி.
இதற்குத் தெளிவான பதிலை மஹாபாரதத்தில் காண்கிறோம்.
முயற்சியே அனைத்தையும் தரும் என்பதே பதில்.
இதையே யோக வாஷிஷ்டமும் கூறுகிறது.
அநுசாஸன பர்வம் ஒன்பதாவது அத்தியாயம் முயற்சியின் சிறப்பைக் கூறுகிறது.
பத்தாவது அத்தியாயம் நல்வினை, தீவினைகளின் பயனைக் கூறுகிறது.
யதா பீஜம் பினா க்ஷேத்ரமுப்தம் பவந்தி நிஷ்பலம் |
ததா புருஷகாரேண பினா தைவம் ந சித்யதி ||
வித்தின்றி எதுவும் உண்டாவதில்லை. வித்தின்றி பழமும் கூட உருவாகாது. வித்திலிருந்து வித்து உண்டாகிறது. பழமும் வித்திலிருந்தே உண்டாகிறது.
வித்திலிருந்து முளை முளைக்கிறது. முளையிலிருந்து இலை உண்டாகிறது. இலையிலிருந்து காம்பு உண்டாகிறது.
காம்பிலிருந்து கிளை உண்டாகிறது. கிளையிலிருந்து மலர் உண்டாகிறது. மலரிலிருந்து கனி உண்டாகிறது.
கனியினால் வித்து ஏற்படுகிறது. வித்திலிருந்து திரும்பவும் உற்பத்தியானது உண்டாகிறது.
மஹிமை பொருந்திய வசிஷ்டருக்கு வந்த சந்தேகத்திற்கு பிரமதேவர் கூறும் பதில் இது!
நல்வினையினால் இன்பமும் தீவினையினால் துன்பமும் உண்டாகிறது.
ஒரு காரியத்தைச் செய்பவன் பாக்யத்தினால் நோக்கப்பெற்று எல்லாவற்றிலும் லாபத்தை அடைகிறான்.
செய்யாதவன் தன் நிலைகுலைந்து புண்ணில் உப்பு நீர் விட்டது போன்ற துயரத்தை அடைகிறான்.
முயற்சி செய்யாதவனுக்கு அதிர்ஷ்டத்தினால் வருவது ஒன்றுமில்லை.
நக்ஷத்திரங்களும், தேவர்களும், நாகர்களும், யக்ஷர்களும் சந்த்ரன், சூர்யன், வாயு இவர்கள் அனைவரும் மனிதர்களாயிருந்து முயற்சியினால் தேவத்தன்மையை அடைந்தவர்கள்.
தம் தம் செய்கைகளுக்குப் பலன் இல்லாது போமாயின், உலகம் தெய்வத்தையே எதிர்பார்த்துக் கொண்டு ஒன்றும் செய்யாமல் இருந்து விடும்.
அப்போது எல்லாம் வீணாகிப் போய் விடும்.
மானிடர் செய்யும் முயற்சியைச் செய்யாமல் தெய்வத்தையே நம்பி இருப்பவன், ஆண்மை இல்லாத கணவனை அடைந்த பெண் போல வீணாக வருத்தப்படுகிறான்.
புண்ய பாவங்களுக்குத் தேவ லோகத்தில் சீக்கிரமாகப் பயன் உண்டாகும்; அது போல மானிட லோகத்தில் உண்டாவதில்லை.
தானே தனக்கு நண்பன். தானே தனக்குப் பகைவன்.
தான் செய்ததற்கும் செய்யாததற்கும் தானே ஸாக்ஷி.
முன்னொரு காலத்தில் யயாதி ஸ்வர்க்கத்திலிருந்து தள்ளப்பட்டு நழுவிப் பூமியில் விழுந்த போது அவனது தௌஹித்திரர்கள் தம் தம் புண்ய கர்மாக்களினால் அவனைத் திரும்பவும் ஸ்வர்க்கத்தில் ஏற்றினர்.
(இளையின் மகனான) ஐஸன் என்று பெயர் பெற்றவனும் பூமிக்கு அதிபதியுமான புரூரவன் என்னும் ராஜரிஷி, பிராமணர்களின் சொல்லினால் ஸ்வர்க்கம் அடைந்தான்.
அஸ்வமேத யாகம் உள்ளிட்டவற்றால் மேன்மை பெற்ற கோசல தேசத்தின் அதிபதியான ஸௌதாஸன் என்பான் வசிஷ்ட மஹரிஷியின் சாபத்தினால் ராக்ஷஸத் தன்மையை அடைந்தான்.
வில்லாளிகளான அஸ்வத்தாமாவும் பரசுராமரும் ரிஷி புத்திரர்களாக இருந்தாலும் கூட ஸ்வர்க்கம் பெறவில்லை.
(ஏனெனில் அஸ்வத்தாமா தூங்கினவர்களை பாரதப் போரில் கொன்றான் பரசுராமரோ தம் புண்யலோகங்களை ராமர் பாணத்தினால் தடுத்ததால் இழந்தார்.)
இப்படி இன்னும் ஏராளமான உதாரணங்களை இந்த அத்தியாயத்தில் காணலாம்.
வழி தப்பி நடப்பவனை தெய்வம் தடுப்பதில்லை. ஸ்வதந்திராதிகாரம் தெய்வத்தின் கண் இல்லை. குருவை சிஷ்யர் அனுசரிப்பது போல மனிதன் செய்த சிறந்த கர்மத்தைத் தெய்வம் அனுசரிக்கிறது.
விடாமுயற்சியினால் தெய்வத்தைத் தூக்கி விட்டு விதியும் வினையும் சேர்வதனால் ஸ்வர்க்கத்தின் வழியை அடையலாம்.
இப்படி வசிஷ்டருக்கு பிரம்மா விடாமுயற்சி, தைவம் ஆகிய இரண்டையும் பற்றித் தெளிவாக எடுத்துரைத்தார்.
தபஸா ரூப சௌபாக்யம் ரத்னானி விவிதானி ச |
ப்ராப்யதே கர்மணா சர்வம் ந தைவாத்க்ருதாத்மனா ||
By his strenuous effort, man gains beauty, good fortune and other riches. Through endeavor man can achieve everything; by depending on providence nothing.
இடைவிடா முயற்சியினால் மனிதன் அழகு, நல்ல சௌபாக்யம் மற்றும் இதர செல்வங்களைப் பெறுகிறான்.
முயற்சியினால் மனிதன் எல்லாவற்றையும் அடைகிறான்.
அதிர்ஷ்டத்தை (தைவம்) நம்பி ஒன்றையும் அடைவதில்லை.
க்ருத புருஷகாரஸ்து தைவமேவானுவர்ததே |
ந தைவமக்ருதே கிஞ்சிதம் தாஹ்துமர்ஹதி ||
மனித முயற்சி தைவத்தைப் பின் தொடர்கிறது. ஆனால் முயற்சி இல்லையேல் தைவம் ஒன்றுமில்லை.
இதை விட முயற்சி, அதிர்ஷ்டம் (தைவம்) பற்றித் தெளிவாக எந்த நூலும் உரைக்க முடியாது.
அடுத்த அத்தியாயத்தில் நல்வினை மற்றும் தீவினைகளின் பயன் அற்புதமாக விவரிக்கப்படுகிறது.
படிக்க வேண்டிய முக்கிய அத்தியாயங்கள் இவை.
முயற்சி எடுத்து இவற்றைப் படிப்போம். சூக்ஷ்ம மர்மத்தைப் புரிந்து கொண்டு முன்னேறுவோம்.
***
Tags- முயற்சி, மேன்மை,
புத்தக அறிமுகம் – 120
அறிவியல் நிரூபிக்கும் அழிவற்ற ஆன்மா
பொருளடக்கம்
நூலில் உள்ள அத்தியாயங்கள்
1. அறிவியல் நிரூபிக்கும் அழிவற்ற ஆன்மா!
2. ஆன்மீக வாழ்க்கை மூளையில் ஏற்படுத்தும் அதிசய மாற்றங்கள்!
3. உளவியல் நோய்களைத் தியானம் மூலம் குணமாக்கும்
இன்டர்நெட் யோகி டேவிட் ஷானஹாஃப் கால்ஸா!
4. அபாய நோயிலிருந்து பிரபஞ்ச ஆற்றலால் மீண்டவர்!
5. விஞ்ஞானிகள் வியக்கும் பிரார்த்தனை மஹிமை!
6. கடவுள் துகளில் கடவுள் இல்லை, ஆனால் இருக்கிறார்!
7. கடவுள் துகளைக் கண்டு விண்ட திருமூலர்! 8. அறிவியல் விஞ்ஞானிகள் வியக்கும் அஸ்திரங்கள்
9. அதிசயிக்க வைக்கும் கர்ம பலன் ரகசியம்! – 1
10. அதிசயிக்க வைக்கும் கர்ம பலன் ரகசியம்! – 2
11. அடியார்கள் வானில் அரசாள ஆணையிட்ட அற்புதர் சம்பந்தர்!
12. அப்பர் தேவாரத்தில் அரும் பழமொழிகள்
13. பகவத்கீதையின் ஒரு பதம்!
14. ஆன்ம ஞானம் பெற அதி சுலபமான அதிசய வழி!
15. மூன்று சோதனைகள்!
16. அந்தமில் பெருமை அறம் வளர்க்கும் அழகா போற்றி!
17. இன்னொரு பிறவியும் வேண்டுவதே இந்தப் பூவுலகிலே!
18. பகவான் ரமணரைச் சந்தித்த பாக்கியவான்கள்!
19. ராஜாஜி ரமணரை தரிசித்ததுண்டா? – ஒரு விளக்கம்
20. பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவின் வாழ்வும் பகவான் ரமணரின்
வாக்கும் புகட்டும் அற்புத உண்மைகள்!
21. அரவிந்த யோகம்
22. கிருஷ்ணார்ஜுனர் – பரமஹம்ஸ விவேகானந்தர் அவதார ரகசியம்!
23. ஸ்பரிசவேதி ஸ்வாமி விவேகானந்தர்
24. ஞான சூர்யன் ஸ்வாமி விவேகானந்தரின் சிகாகோ வெற்றி!
25. சங்க ஜனனி ஸ்ரீ சாரதா மணி தேவியார்!
26. மரணத்தை வரவேற்ற மரணமில்லா மகான்!
27. காந்திஜியின் உடலிலிருந்து ராம நாமம் ஒலிக்கிறது!
28. புராணத் துளிகள்
*
இந்த நூலுக்கு ஞான ஆலயம் ஆசிரியர் திருமதி மஞ்சுளா ரமேஷ் அவர்கள் வழங்கியுள்ள அணிந்துரை இது:
அணிந்துரை
எழுத்தாளர் சுஜாதா விஞ்ஞானத்தை இலக்கியத்தில் கொண்டு
வந்து சுவாரஸ்யமாக, ஜனரஞ்சகமாக எழுதி வெற்றி பெற்றார். அதற்குப்
பிறகே எதையும் விஞ்ஞானரீதியாக அணுகி ஆராய்வது என்பது பரவலாக வர ஆரம்பித்தது எனலாம்.
ஆனால் நம் பாரத நாட்டிலோ மிகத் தொன்மையான காலத்திலிருந்தே
ஆன்மிகத்தை விஞ்ஞான அடிப்படையிலேயே வார்த்திருந்தனர். அது
மக்களிடம் பரவலாகச் சென்றடையவில்லை. நம்பிக்கை, ”பெரியவர்கள்
இப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள், அப்படிச் செய்கிறோம்” என்ற நம்பிக்கை அடிப்படையிலேயே வழிவழியாக வாழ்ந்து வந்தனர். சஞ்சலமில்லாத இந்த வாழ்வியல் முறையே நமது பலம் என்று கூட சொல்லலாம்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் சிறு குழந்தைகள் முதல் எல்லோரிடமும் கேள்விகள் இருக்கின்றன. விளக்கம் திருப்தி தந்தாலேயே அதனை ஏற்றுக் கொள்கின்றனர் இன்றைய சமுதாயத்தினர். நமது ஆன்மிகத்தில் எத்தனை விஞ்ஞானமும், அதிசயங்களும் நிறைந்துள்ளன என்பதை ஆராய்ந்து அறியும் போது வியப்பும் பிரமிப்பும்தான் ஏற்படுகின்றன. ஆனால் இவற்றையெல்லாம் விளக்குபவர்கள் தான் குறைவாக உள்ளனர்.
அப்படிப்பட்டவர்களில் மிக அபூர்வமானவர் என்றே திரு ச. நாகராüன் அவர்களை சொல்லலாம். வேதங்கள், சாஸ்திரங்கள், ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றில் உள்ள உன்னதமான விஷயங்களை அறிவியல் ரீதியாக விளக்கி, அதே சமயம் சுவாரஸ்யம் குன்றாமல் அவர் ஞான ஆலயத்திற்கு எழுதி அனுப்புவார். வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட அக்கட்டுரைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம் என அறியும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
எங்களுடைய இன்னொரு பத்திரிகையான ‘ஸ்ரீ ஜோசியம்’ பத்திரிகைக்கு விஞ்ஞானத்துடன் கூடிய ஜோதிட ரீதியான கட்டுரைகளை அனுப்பியிருந்தார். பிரமிக்க வைக்கும் தகவல்களை அவைகள் தந்தன.
எழுத்துலகில் தனக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டு
பணியாற்றி வரும் ச.நாகராஜன் அவர்கள் நீண்டகாலம் வாழ்ந்து,
இலக்கியப் பணியாற்ற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை
பிரார்த்திக்கிறேன்.
– மஞ்சுளா ரமேஷ்
– *
இந்த நூலில் உள்ள என்னுரை:-
என்னுரை
எல்லாம் வல்ல இறைவனின் திருவருளினால் ஆன்மீகக் கட்டுரைகள் அடங்கிய இந்த நூல் மலர்கிறது.
அறிவியல் வளர வளர சனாதன தர்மமான ஹிந்து மதத்தின் கொள்கைகள் அனைத்தும் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டு வருகின்றன. இவற்றைத் தொகுத்து கட்டுரைகளாகப் படைப்பது ஒரு ஆனந்தமான அனுபவம். இவற்றைப் படைக்கும் போது பல விஞ்ஞானிகளைத் தொடர்பு கொள்ளும் பாக்கியம் கிடைத்தது. உலகின் பிரபல விஞ்ஞானிகளாகத் திகழும் இவர்கள் அனைவரும் உடனே அவர்களைப் பற்றியும் அவர்கள் கண்ட ஆய்வு முடிவுகள் பற்றியும் வெளியிட எனக்கு சம்மதம் தந்ததோடு ஏராளமான குறிப்புகளையும் வாழ்த்துக்களுடன் அனுப்பி வைத்தனர்.
பிரபல விஞ்ஞானியான ஸ்டூவர்ட் ஹாமராஃப் அறிவியல் ரீதியாக அழிவற்ற ஆன்மாவின் இருப்பை நிரூபிப்பவர். பிரபல மூளை இயல் விஞ்ஞானியான ஆண்ட்ரூ நியூபெர்க் இறை உணர்வானது மூளையில் ஏற்படுத்தும் நல் விளைவுகளைத் தன் ஆய்வின் மூலம் நிரூபித்தவர். உலகின் பிரபலமான யோகா ஆய்வாளரும், விஞ்ஞானியும், குண்டலினி யோகா சிகிச்சை நிபுணருமான டேவி ஷானஹாஃப் கால்ஸா குண்டலினி சக்தி பற்றி விரிவாக ஆராய்ந்தவர். இவர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.
மஹரிஷி ரமணர், மஹரிஷி அரவிந்தர், கலியுக அவதாரம் ஸ்ரீ சத்ய சாயிபாபா, மஹாத்மா காந்திஜி, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர். ஸ்வாமி விவேகானந்தர், அன்னைஸ்ரீ சாரதா மணி தேவியார், ஸ்வாமி ராமதீர்த்தர் உள்ளிட்ட ஏராளமான மஹான்களின் வாழ்க்கையில் நடந்த அற்புத சம்பவங்களையும் அப்பர், ஞானசம்பந்தர் போன்ற அருளாளர்களின் அற்புத அருளுரைகளையும் அவ்வப்பொழுது திருமதி மஞ்சுளா ரமேஷ் அவர்கள் ஆசிரியராக உள்ள ஞான ஆலயம் இதழில் எழுதி வந்தேன். அவற்றின் தொகுப்பே இந்த நூல்.
திருமதி மஞ்சுளா ரமேஷ் தேர்ந்த ஒரு பத்திரிகாசிரியர். அற்புதமான ஆன்மீகக் கட்டுரைகளைப் படைப்பவர். பல்வேறு ஆன்மீக நூல்களை எழுதியவர்; எழுதி வருபவர். உலக நலனுக்காக இறை சம்பந்தமான பூஜை, யாகம் உள்ளிட்டவற்றை ஆகமம் மற்றும் சம்பிரதாய பூஜா விதிகள் மாறாமல் நடத்துபவர். சக்தி பீடங்களைப் பற்றியும் ராமர் சென்ற இடங்களைப் பற்றியும் நேரில் சென்று பக்திபூர்வமாகப் பார்த்து அனுபவித்து கட்டுரைகளாகப் படைத்து தான் பெற்ற ஆனந்த அலைகளை அனைவருக்கும் அளித்து வருபவர்.
தமிழ் உலகில் பல்வேறு பெண் எழுத்தாளர்கள் இருந்தாலும் அவர்களில் பெரும்பாலானோர் தங்களின் கதைகளாலும் கட்டுரைகளாலும் பிரபலமானவர்கள். ஆனால் சமூகப் பொறுப்புடன் திறம்பட பத்திரிக்கைகளை நடத்துவதுடன் சிறப்பான ஆன்மீகக் கட்டுரைகளை தலம் தோறும் சென்று நேரில் பார்த்து எழுதும் பெண் எழுத்தாளர்கள் என்று சுட்டிக் காட்ட விரலை மடக்கும் போது ஒரு விரலே, இவரைச் சுட்டிக் காட்டும் போது மடங்குகிறது.
அயோத்தி மாநகரத்தைப் பற்றி வர்ணிக்க வந்த வடமொழிப் புலவர் அற்புதமான ஸ்லோகம் ஒன்றை எழுதியுள்ளார்.:
“புரா புரீணாம் கணனப்ரஸங்கே கநிஷ்டிகா திஷ்டித மத்யயோத்யா
அத்யாபி தத்துல்ய புரீ நஜாதேத் யநாமிகா ஸார்த்தவதீ பபூவ”
“முன்னம் நகரங்களின் பெருமையைக் கணக்கிட்டுச் சொல்லும்போது, சிறப்புடைய அயோத்தி மாநகரை முதலாவதாகச் சொல்லி சிறு விரலை மடக்கினார்கள். அதற்குச் சம்மான இன்னொரு நகரம் இல்லை என்பதால் சிறுவிரலுக்கு அடுத்து மடக்கக்கூடிய ஒரு நகரத்தின் பெயரை பவித்திர விரல் அடையவில்லை. ஆகவே தான் அதற்கு அநாமிகை (பெயரில்லாதது) என்னும் பெயர் நிலைத்து விட்டது” என்பதே இதன் பொருள்.
இந்த ஸ்லோகம் குறிப்பிடும் அநாமிகா வழியே சென்று ஆன்மீகத்தை மிகச் சிறப்பாக எழுதக் கூடிய இன்னொரு பெண் எழுத்தாளரைச் சுட்டிக் காட்ட முடியாமல் அநாமிகையாக அடுத்த விரல் அமைந்துள்ளது என்று கூறுவதன் மூலமே அயோத்தி ராமனைப் பற்றி எழுதும் இவரது பெருமையைக் கூற முடியும். இத்தகு பெருமையுள்ள இவர் இந்த நூலுக்கு நல்லதொரு முன்னுரையை நல்கியுள்ளமைக்கு எனது மனமார்ந்த நன்றி.
நல்ல முறையில் இந்த நூலை வெளியிடும் லண்டன் நிலா ப்ப்ளிஷர்ஸ் உரிமையாளர் திருமதி நிர்மலா ராஜு அவர்களுக்கு எனது நன்றி.
‘அறிவால் அறிந்து உன் இருதாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே’ என்று பாடி உருகினார் அருணகிரிநாதர். அறிவியல் ரீதியாக பல்வேறு உண்மைகளைக் காட்டும் அறிஞர்களின் உரைகளை என்னைப் போலவே கேட்டு, படித்து, உணர்ந்து, ஆனந்தித்து, மகிழ்ந்து பணிய “சேர வாரும் ஜெகத்தீரே” என்று அனைவரையும் அழைத்து இக்கட்டுரைகளை வாசகர்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
பெங்களூரு ச..நாகராஜன்
*
நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது :
Scientists provide scientific explanations for the soul. Brain Scientist Andrew Newberg explains scientifically the effect of thought on God on the changes brought about in the human brain. Internet Yogi David kalsa cures psychological ailments through Kundalini Yoga. Thirumular has explained the exact measurement of Higs boson in his Thirumanthiram. It simply beholds the reader the rare episode of Sri Sathya Saibaba’s life of sacrifice based on the Thaithreeya Upanishad. Thus it has the articles on spirituality based on the analysis of scientific facts and views. There are articles on the wonderful happenings in the episodes of Mahabaratha. It is not an exaggeration when we say that this book is a spiritual book based on scientific basis- a novel attempt. We get answers for the questions arise in our minds through our scriptures and puranas- religious texts, wonders wrought by our Siddhas that baffle the scientists, the indestructible soul that is proved by scientific methods! Divine dance of Nataraja in the world! Spiritual life that brings changes in one’s brain! Articles of this type are abounding in this book that makes us wonder based on the scientific premises. Let us understand and enjoy spirituality through science!
விஞ்ஞானிகள் ஆத்மா பற்றிய விளக்கத்தை நவீன அறிவியல் வழியாகத் தருகின்றனர். மூளை இயல் விஞ்ஞானியான ஆண்ட்ரூ நியூபெர்க் கடவுளை பற்றிய எண்ணம் மூளையில் ஏற்படுத்தும் மாற்றத்தை அறிவியல் நோக்கில் விளக்குகிறார். இண்டர்நெட் யோகி டேவிவட் கால்ஸா குண்டலினி யோகம் மூலம் உளவியல் வியாதிகளைத் தீர்க்கின்றார். ஹிக்ஸ் போஸானின் சரியான அளவை திருமூலர் தன் திருமந்திரத்தில் விளக்கியுள்ளார். ஸ்ரீ சத்யசாயிபாபா தியாகம் பற்றிய தைத்ரீய உபநிடதத்தின்படி வாழ்ந்து காட்டிய அரிய சம்பவம் அனைவரின் உளத்தையும் உருக்குகிறது. இப்படி ஆன்மீகம் தொடர்பான செய்திகளை அறிவியல் நோக்கில் அலசும் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மேலும் மஹாபாரத நிகழ்வுகளில் அதிசயமாக உள்ள நிகழ்வுகள் பற்றிய கட்டுரைகளும் இந்த நூலில் உள்ளன. புதிய பாணியிலான அறிவியல் இணைந்த தமிழ் ஆன்மீக நூல் இது என்றால் மிகையில்லை! நம் உள்ளத்தில் எழும் கேள்விகளுக்கு விடை தரும் புராணங்கள், விஞ்ஞானிகள் வியக்கும் நம் சித்தர்களின் அற்புதங்கள், அறிவியல் வழி நிரூபிக்கப்படும் அழிவற்ற ஆன்மா!, அண்டத்தில் ஆடவல்லானின் அற்புத நடனம்! ஆன்மீக வாழ்க்கை மூளையில் ஏற்படுத்தும் அதிசய மாற்றங்கள்! என நம்மை அறிவியல் ஆதாரத்துடன் வியக்க வைக்கும் கட்டுரைகள் இந்நூலில் பொதித்து கிடக்கின்றன. அள்ளிப்பருகி அறிவியல் வழி ஆன்மீகம் அறிவோம்.
இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.
அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘அறிவியல் நிரூபிக்கும் அழிவற்ற ஆன்மா’ நூலைப் பற்றிய சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.
*