
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,464
Date uploaded in London – – 23 November 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கலியுக அவதாரம் ஶ்ரீ சத்ய சாயிபாபா!
ச.நாகராஜன்
இன்று, நவம்பர் 23. ஶ்ரீ சத்யசாயிபாபாவின் அவதார தினம்.
எல்லையற்ற அவதார பெருமைகளை நினைவு கூர்ந்து அவரைப் போற்றி வணங்குவோம்.
1) ஶ்ரீ சத்ய சாயிபாப அவதார தோற்றம் : 23-11-1926 சமாதி : 24-4-2011
வயது 84
2) ஆந்திர மாநிலத்தில் அனந்தப்பூர் மாவட்டத்தில் புட்டபர்த்தியில் தோற்றம். சாதாரண சிறு கிராமமாக இருந்த புட்டபர்த்தி லட்சக்கணக்கான பக்தர்களின் யாத்திரை ஸ்தலமாக பகவானின் அருள் விளையாடலால் மாறியது.
3) பாபா நிறுவிய ஶ்ரீ சத்யசாயி சேவா சமிதி ஆயிரத்திதொள்ளாயிரத்து அறுபதுகளில் வீறு கொண்ட இயக்கமாயிற்று. 126 நாடுகளில் சமிதியின் கிளைகள் தோன்றி அரும்பணி ஆற்றலாயின.
4) இதற்கு 1200 கிளைகள் உலகெங்கும் உள்ளன.
5) பகவான் ஆற்றிய உரைகளின் ஆங்கில வடிவம் SathyaSai Speaks என்ற பெயரில் 42 தொகுதிகளாக வெளி வந்துள்ளன. அவற்றை
https://archive.org/details/sathyasaispeaks/sss01%20%28194%29%20%281953%20a%201960%29/ என்ற தளத்தில் படிக்கலாம்.
6) ஷீர்டி சாயியின் அடுத்த அவதாரம் ஶ்ரீ சத்ய சாயிபாபா. அடுத்த அவதாரம் கர்நாடக மாநிலத்தில் பிரேம சாயியாக எடுப்பேன் என்று அவர் அருளுரை பகர்ந்துள்ளார்.
7) வாஹினி என்ற வரிசையில் பகவான் கீதா வாஹினி, ஞான வாஹினி, பிரேம வாஹினி, தியான வாஹினி, தர்ம வாஹினி, பிரசாந்தி வாஹினி, சூத்திர வாஹினி, பாகவத வாஹினி, ப்ரச்னோத்தர வாஹினி ராமகதா ரஸ வாஹினி, சத்ய சாயி வாஹினி, உபநிஷத் வாஹினி, வித்யா வாஹினி உள்ளிட்ட நூல்களைப் படைத்து அருளியுள்ளார்.
7) சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவ மனையை110 கோடி ரூபாய் செலவில் அமைத்து 1991 நவம்பர் 2ஆம் தேதி திறந்து வைக்க சங்கல்பம் கொண்டார் பாபா. மூன்று லட்சம் சதுர அடியில் அமைந்துள்ள பிரம்மாண்டமான மருத்துவ மனை இது.
8) அப்போதைய பிரதமர் திரு பி.வி.நரசிம்ம ராவ் இந்த மருத்துவ மனையைத் திறந்து வைத்தார்.
9) உலகில் உள்ள பெரும் விஞ்ஞானிகள் பாபாவை தரிசித்தனர்; அவரது அற்புதங்களை நேரில் கண்டனர்; வியந்தனர்.
10) டாக்டர் ப்ராங்க் பாரனோஸ்கி அரிஜோனா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர். அவர் பாபாவை தரிசித்தார். அவரது ஒளிவட்டத்தை (அவுரா) கண்டு வியந்தார். அவரை LOVE WALKING ON TWO FEET என்று வர்ணித்தார்.
11. உலகின் பிரபல சைக்கியாட்ரி நிபுணர் டாக்டர் சாமுவெல் சாண்ட்விஸ் பாபாவை தரிசித்தார். அவரது அருளைப் பெற்றார். AMAZING, UNBELIEVABLE, UNTHINKABLE என்று வர்ணித்தார். இனி சைக்கியாட்ரியே இல்லை! சாயிகியாட்ரி தான் என்று சிலேடையாக உரைத்தார்.
12. அமெரிக்காவைச் சேர்ந்த வால்டர் கோவான் 1971ஆம் ஆண்டு இந்தியா வந்தார். பாபாவை தரிசித்தார். திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக டிசம்பர் 25ஆம் தேதி காலை மரணமடைந்தார். உயிர் பிரிந்திருந்த உடலை பாபா காலை பத்து மணிக்குப் பார்க்க வருவதாகச் சொன்னார். சவத்தை மீண்டும் பார்க்க வந்த டாக்டர் அவர் உயிருடன் இருப்பதைப் பார்த்து பிரமித்தார். நாசி துவாரம், காதுகளில் வைக்கப்பட்டிருந்த பஞ்சு அகற்றப்பட்டது. உயிர் பிழைத்த கோவான் பாபாவே தன்னை வந்து காப்பாற்றியதாகவும் நடந்ததை விவரமாகவும் குறிப்பிட்டார்.
13. ஹாலிவுட்டில் கொடி கட்டிப் பறந்த திரைக்கதை ஆசிரியர் ஆர்னால்ட் ஷுல்மன் இந்தியா வந்தார். பங்களூரில் ஒய்ட்பீல்டில் பகவானைச் சந்தித்து ஆசி பெற்றார். அவர் கண்ட அனுபவங்கள் அவரைத் திகைக்க வைத்தது.
14. உலகெங்கும் இருந்த பக்தர்களின் வீடுகளில் இருந்த தெய்வீகப் படங்களிலிருந்து ஒரு கால கட்டத்தில் ஏராளமான விபூதி தானாகத் தோன்றியது. இது எப்படி என்று அனைவருக்கும் புரியவில்லை. பாபாவின் அருள் விளையாடல்களில் இதுவும் ஒன்று என்று அவர்கள் தெளிந்தனர்.
15. சிவராத்திரியன்று தனது உடலிலிருந்து லிங்கத்தை பாபா எடுப்பதை லட்சக் கணக்கான பக்தர்கள் கண்டு ஆனந்தித்து வந்தனர்.
16. பாபாவின் அணுக்கத் தொண்டரான கஸ்தூரி 1959தொடங்கி பாபாவுடன் நெருங்கி இருக்க ஆரம்பித்தார். 1982இல் அவர் எழுதிய LOVING GOD அவரது அனுபவங்களைத் தெளிவாகக் கூறும் ஒரு அபூர்வமான நூல்!
17. பிரசாந்தி நிலையத்திலிருந்து (புட்டபர்த்தி) சனாதன சாரதி என்ற ஆன்மீக மாத இதழ் ஆரம்பிக்கப்பட்டது. அதில் ஏராளமான ஆன்மீகக் கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன்.
18.உலகில் உள்ள ஏராளமான ஆன்மீகப் பெரியார்கள் பாபாவை தரிசனம் செய்து அருள் பெற்றுள்ளனர்.
19. பாரத ரத்னா திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமி பாபாவின் அணுக்க பக்தை. பாரத ரத்னா சச்சின் டென்டுல்கர் பாபாவின் பக்தர். பாபாவின் சமாதி தினத்தன்று நேரில் வந்து அஞ்சலி செலுத்தி அதில் அவர் கலந்து கொண்டார்.
20. பிரதமராக இருந்த பி.வி.நரசிம்மராவ், வாஜ்பாயி, மன்மோகன் சிங் ஆகியோர் பாபாவைப் பெரிதும் போற்றியவர்கள். பிரதமராக இருந்த மன்மோகன் சிங் சமாதி தினத்தன்று நேரில் வந்து கலந்து கொண்டார்.
21. HELP EVER, HURT NEVER என்பதே பாபாவின் உபதேசம். MY LIFE IS MY MESSAGE என்று சுருக்கமாக தனது உபதேச சாரத்தை ஒரே வரியில் அவர் எடுத்துரைத்தார்.
22. DEDICATION, DEVOTION, DISCIPLINE, DISCRIMINATION, DETERMINATION என்று இப்படி ஐந்து Dக்களைக் கூறிய பாபா இந்த ஐந்து நியமங்களையும் எவர் ஒருவர் நன்றாகப் பின்பற்றித் தேர்ச்சி பெறுகிறாரோ அவர் இறையருள் பட்டமான தெய்வானுக்ரஹம் என்பதை அடைவார் என்றார்.
23. பாபாவின் மஹிமை எல்லையற்றது. எந்த நேரத்திலும் அவரை வணங்கலாம்; அருள் பெறலாம்! அவரவர் அனுபவத்தையும் பெற்று மகிழலாம்!
***
புத்தக அறிமுகம் 121 – 1
அற்புத அவதாரம் சத்யசாயிபாபா
(அம்ருத சாகரம் இணைப்பு) –
பொருளடக்கம்
நூலில் உள்ள அத்தியாயங்கள்
1. அவதாரம் உதித்தது
2. பிராமண பாலகன்
3. செப்பினட்லு சேஸ்தாரா?
4. நானே சாயிபாபா
5. ஷீர்டி சாயி
6. ஷீர்டி சாயியின் அற்புத வாழ்க்கையில்
7. பூர்வ ஜென்ம பந்தம்
8. மீண்டும் அவதரிப்பேன்
9. அவதாரப் பணி துவக்கம்
10.சித்ராவதி நதிக் கரையில்
11. பிரசாந்தி நிலையம்
12. ரிஷிகேச யாத்திரை
13. சுப்பம்மாவிற்கு அனுக்ரஹம்
14. ஜோடி ஆதிபல்லி ஸோமப்பா
15. பத்ரிநாத் யாத்திரை
16. ஸ்வாமி அபேதானந்தருக்கு அருள்
17. கிழக்கு ஆப்பிரிக்க விஜயம்
18. சனாதன சாரதி
19. கஸ்தூரி பெற்ற அருள்
20. கஸ்தூரி கண் அன்புக் கடவுள்
21. சிவராத்திரி லீலை
22. அற்புதங்கள் என் விசிடிங் கார்டுகள்
23. ராஜ குடும்பத்தின் அனுபவம்
24. இந்திய விஞ்ஞானிகளின் வியப்பு
25. ஈஸ்வரம்மா
26. சத்ய சாயி சேவா நிறுவனங்கள்
27. இந்திரா தேவி பெற்ற அனுக்ரஹம்
28. ஹோவர்ட் மர்பட்
29. உல்ப் மெஸ்ஸிங்கிற்கு அனுக்ரஹம்
30. சுவாமியின் ஒளிவட்டம்
31. இறந்தவர் எழுந்தார்
32. சைக்கியாட்ரிஸ்ட் கண்ட சாயிகியாட்ரி
33. விஞ்ஞானிகளை வியக்க வைத்தவ்ர்
34. அருள் பெற்ற ஆர்னால்ட் ஷுல்மன்
35. நக்ஸலைட் பக்தரானார்
36. கேன்ஸர் கேன்ஸல்ட்
37. சூப்பர் ஸ்பெஷாலிடி ஆஸ்பத்திரி
38. பல நாடுகளிலும் சாயி
39. பாபா தன்னைப் பற்றிக் கூறியது!
40. சுவாமியின் அருள் உரைகளும் நூல்களும்
41. பிரேம சாயி
*
2002ஆம் ஆண்டு அச்சுப் பதிப்பாக வெளி வந்த நூலில் இடம் பெற்ற முன்னுரை இது:
நாம் வாழும் காலத்தில் அற்புதமான அவதாரம் நிகழ்ந்துள்ளது! ஶ்ரீ சத்ய சாயிபாபா தோன்றிய காலத்திலேயே நாமும் பிறந்து வாழ்ந்து வருவது நாம் செய்த மிகப் பெரும் பாக்கியம்!
ஶ்ரீ ராமருடன் வாழ்வதில் அயோத்திவாசிகள் எவ்வளவு சந்தோஷம் அடைந்தார்களோ, ஶ்ரீ கிருஷ்ணருடன் வாழ்வதில் மதுரா, கோகுலம், பிருந்தாவனவாசிகள் எவ்வளவு ஆனந்தம் அடைந்தார்களோ அவ்வளவு சந்தோஷமும், ஆனந்தமும் சாயி லீலைகளை அனுபவிப்பதில் பெறுகிறோம்.
1965ஆம் ஆண்டு முதல் முதலாக பகவானைத் தரிசிக்கும் பேறு கிடைத்தது. பழம் பெரும் சாயி பக்தரான திரு பி.எஸ்.ஏ. சுப்ரமணிய செட்டியார் அவர்கள் முன்னின்று ஏற்பாடு செய்த புட்டபர்த்தி யாத்திரையில் என் தந்தையார் தினமணி திரு வெ.சந்தானம் அவர்களுடன் குடும்பம் முழுதும் பயணப்பட்டோம். எல்.ஐ.சி. உயர் அதிகாரி திரு கே.ஆர்.கே.பட் உட்பட மதுரை பக்தர்கள் புட்டபர்த்தியில் அடைந்த ஆனந்த அனுபவம் வார்த்தைகளில் விளக்க முடியாதது! பர்த்தியில் தந்தையாருடன் அந்தரங்க பேட்டி அறையில் குடும்பம் முழுதும் சென்றோம். பகவான் தனது விசிடிங் கார்டை சிருஷ்டித்து எனது தந்தையாருடன் அந்தரங்க பேட்டி அறையில் கொடுத்த போது, சுமார் நூறு நாட்களில் பகவான் பற்றி நூற்றியெட்டு பாடல்களை இயற்றி ராக தாளத்துடன் அதை அச்சிட்டு நூலை சுவாமியிடம் எனது தந்தையார் சமர்ப்பித்த போது அது தோன்றிய அந்தக் கணமே சமர்ப்பிக்கப்பட்டு விட்டது என்ற பகவான் பதங்கள் துள்ளிக் குதித்து வந்துள்ளன என்றும் குறிப்பிட்டார். இது தான் எங்கள் குடும்பம் பகவானுடன் தொடர்பில் வந்த முதல் நிகழ்ச்சி.
சாயி பக்தியில் ஊறித் திளைத்த பக்தர்களுடன் சேவா தளத்தில் இணைந்தேன். காலை நான்கு மணிக்கு நகர சங்கீர்த்தனம், பிறகு மதுரை எர்ஸ்கின் மருத்துவ மனியில் சேவை, பிறகு மேலப் பனங்காடியில் இலவச மருத்துவ முகாம், மாலையில் கோவிலில் உழவாரப் பணி, பிறகு சாயி பஜன், சத்சங்கம் என்று எல்லா நிகழ்ச்சிகளையும் ஒவ்வொரு ஞாயிறு அன்று செய்து வந்தோம். புட்டபர்த்திக்கு சேவாதளத் தொண்டர்களை அழைத்துச் செல்லும் வாய்ப்பு, பல கூட்டங்களிலும் முகாம்களிலும் பங்கு கொள்ளும் பேறும் கிடைத்தது. பாபாவின் திருக்கரத்தால் பரிசு வாங்கும் பேறும் கிடைக்கப் பெற்றேன்.
அவரது அற்புத சரித்திரத்தை எழுத வேண்டுமென்ற எண்ணம் பல வருடங்களாக இருந்த போதிலும் பணியின் பிரம்மாண்டம் மலைப்பைத் தந்தது. வருடங்கள் கழிந்தன.
விநாயகா பதிப்பக உரிமையாளர் திரு சுவாமிநாதன் திடீரென்று ஒரு நாள் இயற்கையாக சர்வ சாதாரணமாக சாயிபாபா சரித்திரத்தை எழுதுங்கள் என்றார்.
பகவானே இந்தப் பணியைச் செய்யத் தூண்டுகிறார் என்று உணர்ந்தேன்.
எனது தந்தையார் சேர்த்த புத்தகங்களும் நான் வாங்கிய புத்தகங்களும் நிறைய இருந்தாலும் நூலுக்குச் சில முக்கிய புத்தகங்கள் தேவையாக இருந்தன. எனது சகோதரர் திரு வி.எஸ். மீனாட்சிசுந்தரிடம் இருந்த புத்தகங்களை எடுத்துக் கொண்டு – இல்லை, அள்ளிக் கொண்டு வந்தேன். எடுத்துச் செல்ல அன்புடனும் ஆர்வத்துடனும் அனுமதி கொடுத்த அவருக்கு என் நன்றி.
பாபாவின் சரித்திரம் பல ஆயிரம் பக்கங்கள் எழுதினாலும், சரித்திரத்தின் ஒரு சிறிய பகுதியையே கூறியிருப்பதாக ஆகி விடும்.
அவ்வளவு மகத்தான சரிதம்! கபீர்தாஸரின் “ஏழு சமுத்திர நீரை மையாக ஆக்கினாலும், பூமியையே பேப்பராக ஆக்கினாலும், மரங்களை பேனாக்களாக ஆக்கினாலும், பகவானே! உன் புகழை எழுத முடியாது” என்ற வாக்கின்படி சாயி அவதாரத்தின் மகிமையை முற்றிலுமாக யாரே உரைக்க வல்லார்?!
இதை எழுதுவதற்கு உதவியாக இருந்தும் சாயி சேவாதள பணிகள், பஜனா மண்டலி பணிகள் ஆகியவற்றில் ஊக்கமுடன் ஈடுபட்டு வரும் என் மனைவி சித்ரா நாகராஜன், மற்றும் மகன்கள் திரு நா.சத்யநாராயணன், திரு நா. விஜயகிருஷ்ணன் ஆகியோருக்கு என் நன்றி. சாயி பக்தியை ஊட்டி வளர்த்த என் தந்தை, தாய்க்கு நன்றி!
நல்ல முறையில் இதை அச்சிட்ட திரு சுவாமிநாதன் அவர்களுக்கு என் நன்றி.
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்றி மணிவாசகர் கூறியது போல சுவாமியை வணங்கச் செய்த அருளை நினைந்து ஆனந்தம் அடைகிறேன். பரமபாவன நாமமான சாயி நாமத்தை உச்சரித்து, அவரது லீலைகளை அனுபவித்து, அவர் காட்டிய வழியில் சாதனை புரிந்து அவர் அருளுக்குப் பாத்திரர்களாக ஆவோமாக!
சாயி அன்பர்கள் அனைவருக்கும் இந்த நூலைக் காணிக்கையாக்குகிறேன்.
சென்னை அன்புடன் ச.நாகராஜன்
1-10-2002
நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:
Linking with the previous incarnation of Shirdi Sai and the expected incarnation of Prema Sai, this book describes in detail the living legend Sri Sathya Sai Baba. The 41 chapters are truly blissful, providing an insight into the miracles of Sathya Sai Baba. Also attached are 108 prime discourses of Sathya Sai Baba. A must read for Sai devotees and spiritually inclined people.
நாம் வாழும் காலத்தில் நம்மோடு வாழ்ந்த அற்புத அவதாரமான ஸ்ரீ சத்திய சாயிபாபாவின் வாழ்க்கை வரலாற்றைத் தெளிவாக விளக்கும் நூல். அவருடைய முந்தைய அவதாரமான ஷீர்டி சாயி பற்றியும் அடுத்து அவர் பிரேம சாயியாக அவதரிக்கப் போவது பற்றியும் நூலில் காணலாம். 41 அத்தியாயங்களில் சாயியின் அற்புத வரலாற்றை விரிவாகப் படிப்பது ஆனந்தமான அனுபவம்! அத்துடன் ஸ்ரீ சாயிபாபாவின் 108 முக்கியமான உரைகளின் தொகுப்பும் நூலில் இரண்டாவது பகுதியாக இணைக்கப்பட்டுள்ளது. சாயி அன்பர்களும் ஆன்மீக நாட்டம் உடையவர்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல்!
*
இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.
அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘அற்புத அவதாரம் சத்யசாயிபாபா!’ நூலைப் பற்றிய சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.
*