
Post No. 11,466
Date uploaded in London – 23 November 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
அறப்பளீச்சுர சதகம் என்னும் நூலில் அருமையான விஷயங்கள் காணக்கிடக்கின்றன ; அம்பலவாணக் கவிராயர் பாடிய இந்த நூறு பாடல்களும் கொல்லி மலையில் உள்ள அறப்பளீஸ்வரர் என்ற சிவபெருமானை நோக்கிப் பாடியதாகும். அந்த மலை, சதுர கிரி என்று அழைக்கப்படும். மதுரைக்குப் பக்கத்திலும் ஒரு சதுரகிரி உள்ளது . அது வேறு ; இது வேறு. தமிழ் இணையக் கல்விக்கழகம் இதை நமக்கு இலவசமாக வெப்சைட்டில் வெளியிட்டதற்கு நாம் நன்றிக் கடன்பட்டவர்களாவோம்.. அதற்கு முன்னரே நான் பிரிட்டிஷ் நூலகத்தில் இதைக் கண்டு, இதே பிளாக்கில் பல கட்டுரைகளை எழுதியுள்ளேன். இப்பொழுது முடிந்தமட்டும் எனது வியாக்கியானத்துடன் பாடல்களைக் காண்போம் .
முதல் பாடலில் வரும் சுவையான சொற்களை அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறேன் :–
கடலுலகில் வாழும்உயிர் எழுபிறப் பினுள்மிக்க காட்சிபெறு நரசன் மமாய்க் கருதப் பிறத்தலரி ததினும்உயர் சாதியிற் கற்புவழி வருதல் அரிது; வடிவமுடன் அவயவம் குறையாது பிழையாது வருதலது தனினும் அரிது; வந்தாலும் இது புண்யம் இதுபாவம் என்றெண்ணி மாசில்வழி நிற்றல் அரிது; நெடியதன வானாதல் அரிததின் இரக்கம்உள நெஞ்சினோன் ஆதல் அரிது; நேசமுடன் உன்பதத் தன்பனாய் வருதல்இந் நீள்நிலத் ததினும் அரிதாம்; அடியவர்க் கமுதமே! மோழைபூ பதிபெற்ற அதிபன்எம தருமை மதவேள் அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் அறப்பளீ சுரதே வனே! |
(இ-ள்.) அடியவர்க்கு அமுதமே – அடியவர்களின் துன்பத்தை
நீக்குபவனே!’
மோழை பூபதி பெற்ற அதிபன் – மோழை எனப்படும்
தலைவன் ஈன்ற தலைவன்,
எமது அருமை மதவேள் – எம் அரிய மதவேள்,
அனுதினமும் மனதில் நினைதரு – எப்போதும் உள்ளத்தில்
வழிபடுகின்ற,
சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே – சதுர கிரியில்
எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!’
கடல் உலகில் வாழும் எழுபிறப்பு
உயிர்களுள் – கடலாற் சூழப்பட்ட நிலத்தில் வாழ்கின்ற எழுவகையாகத்
தோன்றிய உயிர்களுள்;
மிக்க காட்சிபெறு நரசன்மமாய்க் கருதப் பிறத்தல்
அரிது – மிகுந்த அறிவையுடைய மக்கட்பிறப்பாய் நினைக்குமாறு பிறப்பது
அருமை,
அதினும் உயர் சாதியில் கற்புவழி வருதல் அரிது – அப்
பிறப்பினுள்ளும் உயர்குணமுடைய இனத்திலே கற்பொழுக்கமுடைய மரபிலே தோன்றுதல் அருமை,
அதுதனினும் வடிவமுடன் அவயவம் குறையாது பிழையாது வருதல்
அரிது – அவ்வாறு பிறப்பவர்களுள்ளும் அழகுடன் உறுப்புக் குறையாமலும்
பிழை இல்லாமலும் பிறப்பது அருமை,
வந்தாலும் இது புண்யம் இது பாவம் என்று எண்ணி மாசு இல்வழி நிற்றல் அரிது – அவ்வாறு பிறப்பினும் இதுநன்று இது தீது என நினைத்துக் குற்றமில்லாத நெறியில் நிற்றல் அருமை,
நெடிய தனவான் ஆதல் அரிது – (அதனினும்) பெரிய செல்வனாவது
அருமை,
அதின் இரக்கம் உள நெஞ்சினோன் ஆதல் அரிது – அதனினும்
அருட்பண்புடைய உளத்தோன் ஆவது அருமை,
அதினும் உன்பதத்து நேசமுடன் அன்பனாய் வருதல் இந் நீள்நிலத்து அரிது, ஆம் – அதனினும்உன் திருவடிகளிலே அன்புதவழும் அடியவனாக வருதல் இப் பேருலகிலே அருமையாகும்.
(வி-ரை.) எழுவகைப்பிறப்பு: வானவர், மக்கள், விலங்கு, பறவை,
ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம். பூ – உலகம், பதி – தலைவன்.
பூபதி – அரசன்; தங்களுக்கு உதவிய வள்ளல்களைப் பூபதி யென்று
புகழ்தல் அக்காலப் புலவர் வழக்கம்.
(கருத்து) அறிவுடைய மக்கட் பிறப்பாகப் பிறந்து அழகு, செல்வம்,
ஒழுக்கம், கடவுள் வழிபாடுகள் உடையவராக இருப்பது அருமை.
Xxx
லண்டன் சுவாமிநாதன் வியாக்கியானம் / விளக்க உரை
முதலில் விஞ்ஞான விஷயம் ஒன்று: உயிர்வாழ்வன அனைத்தையும் வகை வகையாகப் பிரித்தல் வேண்டும் என்று எண்ணுவது அறிவுடைமை. இது அறிவியல் அணுகுமுறை; காலம்தோறும் இது மாறிவரும். நான் பி.எஸ் சி. தாவரவியல் B.Sc. Botany படித்தபோது தாவரங்களை லின்னேயஸ் கிளாசிபிகேஷன்படி Linnaeus Classification of Plant Kingdom , படித்தேன்; செம்பருத்திப் பூ என்றால் அதை ஹைபிஸ்கஸ் ரோஸா சைனன்ஸிஸ் என்போம் . வெண்டைக் காயென்றால் ஹைபிஸ்கஸ் எஸ்குலன்டஸ் என்றும் முருங்கைக் காய் என்றால் மொரிங்கா ஆப்லெங்காடா என்றும் சொன்னோம். ரஷ்ய விஞ்ஞானி மெண்டலீவ் (Periodic Table) மூலக அட்டவணையைக் கண்டுபிடிக்கும்வரை அதை வேறு வகையாகப் பிரித்தனர். இன்னும் கொஞ்சம் காலத்தில் இதைவிட முன்னேறிய ஒன் ற வரக்கூடும்.
சம்ஸ்க்ருதத்தில் உயிர்வாழும் பிராணிகளை நாலு வகையயாகப் பிரித்தது மனு ஸ்ம்ருதியில் வருகிறது
1.அண்டஜம்: முட்டையில் இருந்து பிறப்பவை
2.ஜராயுதம்; கருப்பையில் பிறப்பவை
3.உத்பிஜம்: வித்து, வேர், கிழங்கு மூலம் பிறப்பவை
4.சுவேதஜம்: வேர்வையில் (கிருமிகள், பாக்டீரியாக்கள்) பிறப்பவை.
“அண்டசஞ் சுவேதசங்கள் உற்பிச்சம் சராயுசத்தோ
டெண்தரு லெண்பத்து நான்கு நூறாயிரந்தான்
உண்டுபல் யோனியெல்லாம் ஒழித்து மாநுடத்துதித்தல்
கண்டிடில் கடலைக் கையால் நீந்தினன் காரியங்காண்”
என்று சிவஞான சித்தியார் கூறுகிறார்.
தாவரம் முதல் தேவர்கள் வரை உள்ளவர்களை ஏழுவகையாகப் பிரித்தனர்:
1.தேவர்
2.மனிதர்
3.விலங்கு: சிங்கம், புலி, யானை, ஆடு, மாடு முதலியன
4.பறவை: காகம்,குயில், மயில், குருவி, கொக்கு முதலியன
5.ஊர்வன: பாம்பு, பூரான், தேள், பல்லி முதலியன
6.நீர்வாழ்வன: மீன், ஆமை, முதலை, திமிங்கிலம் முதலியன
7.தாவரம்: மரம், செடி, கொடி, பாசி, புல், பூண்டு முதலியன
இவைகளை 84 லட்சம் (8400000) வகைகள் என்றும் கூறினர்.
இந்த 84 லட்சம் உயிர்வகைகள் என்பது தற்போதைய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கு நெருக்கமாக வருகிறது. இதை அப்பர் தேவாரத்திலும் காணலாம். மனிதப் பிறவி அரிதிலும் அரிது , அதிலும் கூன் , குருடு உடலூனம் இல்லாமல் பிறப்பது அரிது என்பதை அவ்வையாரும் அவருக்கு முன்னால் ஆதிசங்கரரும் சொல்லிவிட்டனர்.
அரியது கேட்கின் வரிவடி வேலோய்!
அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடராயினும் கூன் குருடு செவிடு
பேடு நீக்கிப் பிறத்தல் அரிது
பேடு நீக்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வராயின்
வானவர் நாடு வழிதிறந் திடுமே
என்று அவ்வைப் பாட்டியும் கூறுவர்.
ஆதிசங்கரர் கூற்று
ஆதிசங்கரர் பல இடங்களில் மாநுடப் பிறவியின் அரிய தன்மை பற்றிக் கூறுகிறார்: “ஜந்தூனாம் நரஜன்ம துர்லபத:” (அரிது அரிது மானுடராதல் அரிது). அவர் எழுதிய விவேக சூடாமணியில் 2, 3, 4– ஆவது ஸ்லோகங்களிலேயே இதைப் பற்றிப் பிரஸ்தாபிக்கத் துவங்கி விடுகிறார்.
அரிது அரிது மனிதப் பிறவி, அதிலும் அரிது பிரம்மத்தை நாடும் பிறவி
அதனிலும் அரிது வேத அறிவு, அதனிலும் அரிது ஆத்ம ஞானம்
முக்தி பெறுவதோ நூறு கோடியில் ஒன்றே!
மூன்றாவது ஸ்லோகத்தில் மூன்று அரிய விஷயங்களைக் கூறுகிறார்: மனுஷ்யத்வம், முமுக்ஷுத்வம், மஹா புருஷர்களின் அருள். மனிதப் பிறவி, வீடு பேற்றை நாடல், பெரிய குருவின் பூரண பாதுகாப்பு என்பதே அவர் கூறுவது.
வேதத்தைப் படித்த பின்னரும் முக்தியை நாடாதவன் தற்கொலை செய்துகொள்வதற்குச் சமம் என்கிறார் நாலாவது ஸ்லோகத்தில்.
जन्तूनां नरजन्म दुर्लभमतः पुंस्त्वं ततो विप्रता
तस्माद्वैदिकधर्ममार्गपरता विद्वत्त्वमस्मात्परम् ।
आत्मानात्मविवेचनं स्वनुभवो ब्रह्मात्मना संस्थितिः
मुक्तिर्नो शतजन्मकोटिसुकृतैः पुण्यैर्विना लभ्यते ॥ २ ॥
दुर्लभं त्रयमेवैतद्देवानुग्रहहेतुकम् ।
मनुष्यत्वं मुमुक्षुत्वं महापुरुषसंश्रयः ॥ ३ ॥
மானுடப் பிறவி கிடைப்பது அரிது;அதிலும் ஆணாகப் பிறந்து பிரம்மனை நாடும் பிறப்பு கிடைப்பது மேலும் அரிது அதிலும் ஆன்ம உணர்வு பெறுவது அரிதரிது; முக்தி அடைவது என்பது நூறு கோடி பிறப்புகளில்தான் கிடைக்கும்
மூன்று விஷயங்கள் மிகவும் அரிதானவை:அவை இறையருளால்தான் கிடைக்கும்::மனிதப் பிறவி, முக்தி அடையும் வேட்கை , நல்ல குருவின் அருள் பார்வை
लब्ध्वा कथंचिन्नरजन्म दुर्लभं
तत्रापि पुंस्त्वं श्रुतिपारदर्शनम् ।
यस्त्वात्ममुक्तौ न यतेत मूढधीः
स ह्यात्महा स्वं विनिहन्त्यसद्ग्रहात् ॥ ४ ॥
எப்படியோ மனிதப்பிறவி கிடைத்துவிட்டது; வேதங்களைக் கற்கும் பாக்கியமும் கிடைத்துவிட்டது அதற்குப் பின்னரும் அவன் முக்தி அடைய முயற்சி செய்யாதிருப்பது தற்கொலைக்கு ஈடாகும்.
xxxx
மாநுடப் பிறவி எவ்வளவு அரிது என்பதை சிந்தாமணிச் செய்யுள் ஒன்று மிகமிக அழகாகக் கூறுகிறது. இதில் தத்துவம் ஒரு புறம் இருக்க தமிழர்களுக்கு கடல் பற்றி எவ்வளவு அறிவு இருந்தது என்பதையும் இது காட்டும். சீவக சிந்தாமணி என்பது திருத்தக்க தேவரால் எழுதப்பட்ட நூல். தமிழில் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. அவர் கூறுவார்:
“பரவை வெண் திரை வடகடல் படு நுகத் துளையில்
திரை செய் தென் கடல் இட்டதோர் நோன் கழி சிவணி
அரச அத்துளை அகவயிற் செறிந்தென அரிதால்
பெரிய மோனிகள் பிழைத்து இவண் மாநிடம் பெறலே” (சீவக.2749)
வட கடலில் நுகத் துளையோடு கூடிய ஒரு கழி தண்ணீரில் மிதந்து செல்கிறது; தென் கடலில் மற்றொரு கழி மிதந்து செல்கிறது. இந்த இரண்டும் ஒன்றை ஒன்று சந்திப்பது மிக மிக அரிது. அப்படியே சந்தித்தாலும் அவ்விரண்டு துளைகளிலும் ஒரு கோல் நுழைவது அரிதினும் அரிது. இந்த இரண்டு கழிகளும் ஒன்றை ஒன்று சந்தித்து ஒரு கோல் நுழைந்துவிட்டால் அது எவ்வளவு பெரிய அதிசயம் ஆகும்? அத்துணை அரிது நமக்கு மாநுடப் பிறவி கிடைத்திருப்பது என்கிறது சிந்தமணிச் செய்யுள்
மனிதனுக்கும் மிருகங்களுக்கும் உள்ள பெரிய வேறுபாடு சிந்திக்கும் திறன் ஆகும். எது நல்லது எது கெட்டது என்று மனதினால் சிந்திக்கும் அரிய பண்பு இருப்பதால் மனுஷ்ய என்று சம்ஸ்க்ருதத்தில் சொன்னார்கள். அது ஆங்கிலத்தில் MAN என்றும் தமிழில் மானுடன், மனிதன் என்றும் ஆயிற்று சிந்திப்பவன் மட்டும் மனிதன் அல்ல. சிந்தித்து நல்லவழியில் செல்பவன்தான் மனிதன்.
–subham–மனிதப் பிறவி, அரிது ,அறப்பளீச்சுர சதகம்,