
Post No. 11,468
Date uploaded in London – 24 November 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
லண்டன் சுவாமிநாதன் வியாக்கியானம் / விளக்க உரை
First verse was posted yesterday. Following is the second verse.
2. இல்லாளின் சிறப்பு
கணவனுக் கினியளாய், ம்ருதுபாஷி யாய், மிக்க
கமலைநிகர் ரூப வதியாய்க்,
காய்சினம் இலாளுமாய், நோய்பழி யிலாததோர்
கால்வழியில் வந்த வளுமாய்,
மணமிக்க நாணம்மடம் அச்சம் பயிர்ப்பென்ன
வரும்இனிய மார்க்க வதியாய்,
மாமிமா மற்கிதம் செய்பவளு மாய், வாசல்
வருவிருந் தோம்பு பவளாய்,
இணையில்மகிழ் நன்சொல்வழி நிற்பவளு மாய்வந்தி என்பெயர் இலாத வளுமாய், இரதியென வேலீலை புரிபவளு மாய்ப்பிறர்தம் இல்வழி செலாத வளுமாய், அணியிழை யொருத்தியுண் டாயினவள் கற்புடையள் ஆகும்;எம தருமை மதவேள் அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் அறப்பளீ சுரதே வனே! |
(இ-ள்.) எமது ………… தேவனே! கணவனுக்கு இனியளாய் – கணவன்
பார்வைக்கு அழகியவளாய்,
மிருது பாஷியாய் – இன்மொழி யுடையவளாய்,
கமலை நிகர்மிக்க ரூபவதியாய் – திருமகளைப்போலச் சாலவும் அழகியாய்,
காய்சினம் இலாதவளுமாய் – வெறுக்கத்தக்க கோபம் இல்லாதவளாய்,
நோய்பழி இல்லாதஓர் கால்வழியில் வந்தவளுமாய் – நோயும் இழிவும்
இல்லாத ஒப்பற்ற மரபிலே பிறந்தவளாய்,
மணம்மிக்க நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு என்ன வரும் இனிய மார்க்க வதியாய் – புகழத்தக்கநான்கு பண்புகளும் பொருந்திய நல்லொழுக்கமுடையவளாய்,
மாமி, மாமற்கு இதம் செய்பவளுமாய் – மாமிக்கும் மாமனுக்கும் நலம் புரிபவளாய்,
வாசல்வரு விருந்து ஓம்புபவளாய் – வாயிலில் வரும் விருந்தினரை
ஆதரிப்பவளாய்,
இணைஇல் மகிழ்நன் சொல்வழி நிற்பவளுமாய் – ஒப்பற்ற
கணவன் மொழிப்படி நடப்பவளாய்,
வந்தி என் பெயர் இல்லாதவளுமாய் – மலடியெனும் பெயரில்லா தவளாய்,
இரதியெனவே லீலை புரிபவளுமாய் – இரதியைப்போல இன்பக்கலவி செய்பவளாய்,
பிறர்தம் இல்வழி செலாதவளுமாய் – மற்றவருடைய வீட்டுவழி செல்லாதவளாய்,
அணியிழைஒருத்தி உண்டாயின் – அழகிய அணிகலன்களையுடைய ஒரு
மங்கை இருந்தால், அவள் கற்பு உடையளாகும் – அவள் கற்புடையவள்
எனப்படுவாள்.
(க-து.) இங்குக் கூறப்பட்டவை கற்புடைய பெண்ணின் பண்புகள்.
xxx
வாழ்க்கைத் துணை நலம், இல் வாழ்க்கை ஆகிய தலைப்புகளில் 20 குறள்களில் வள்ளுவர் சொன்னதை அனைவரும் அறிவர்; சில புதிய ஒப்பீடுகளைக் காண்போம்
சகுந்தலைக்கு கண்வர் அறிவுரை
உலகப் புகழ் பெற்ற கவிஞன் காளிதாசன்–. அவன் எழுதிய நாடகங்களில் உலகமே போற்றி வியந்த நாடக நூல் சாகுந்தலம். அதில் சகுந்தலை என்னும் அழகி உலகம் அறியாத அப்பாவிப் பெண்.அவள் கணவன் வீட்டுக்குப் (அரசனின் அரண்மனை) போவதற்கு முன், வளர்ப்புத் தந்தை கண்வர் சொன்னது:
“என் அன்பு மகளே. உன் கணவன் வீட்டுக்குச் செல்லப் போகிறாய். அங்கே:-
உன்னை விட வயதில் மூத்த பெரியோருடன் கவனமாகப் பழகி, அவர்களுக்குச் சேவை செய். அரசனின் சக மனைவிகள் இடத்தில் நட்போடு வாழ். கணவன் உனக்கு ஏதேனும் கஷ்டம் கொடுத்தாலும் கோபத்தில் எதையும் சொல்லிவிடாதே. நீ யார் யாருக்குச் சேவை செய்கிறாயோ அவர்களுக்கு எல்லா மரியாதைகளும் கொடு. செல்வத்திலும் சுக போகங்களிலும் வாழப் போகும் நீ அகந்தையும் தலைக்கனமும் ஏறாமல் பார்த்துக்கொள். அப்படி வாழ்ந்தால்தான் பெண்கள் இல்லத்தரசி என்ற பெயர் எடுப்பர். இதற்கு மாறாக நடப்பவர்கள் குலத்தைக் கெடுக்கவந்த கோடாரி என்று பெயர் எடுப்பர்.” (சாகுந்தலம், காட்சி 4)
இதையெல்லாம் சொல்லி முடித்த பின், வயதில் மூத்த ஞானத்தில் முதிர்ந்த மகரிஷி கண்வர், தன் மனைவி இருக்கும் திசையைப் பார்த்து, “அன்பே நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்கிறார். அவள் உடனே, “ஒரு மணப் பெண்ணுக்கு இது அருமையான புத்திமதி. அன்பு மகளே, எப்போதும் இதை நினைவில் வைத்துக்கொள்” என்கிறார்.
xxxxx
சுபாஷிதக்ஞேன ஜனேன ஸாகம்
ஸம்பாஷணம் சுப்ரபு ஸேவனம் ச
ஆலிங்கனம் துங்க பயோதராணாம்
ப்ரத்யக்ஷ ஸெளக்யம் த்ரயமேவ லோகே
உலகில் எல்லோரும் விரும்பும் சுகம் மூன்று வகையானவை
மூன்று சுகங்களே கண்கூடாகப் பயனளிப்பவை
1.அறிஞர்களுடன் பேசி அடையும் மகிழ்ச்சி.
2.அள்ளிக் கொடுக்கும் முதலாளி கீழே வேலை செய்வது
3.அழகு வாய்ந்த நிமிர்ந்து உயர்ந்த மார்பகம் உள்ள பெண்களைத் தழுவுவது
Xxxx
கணவனே கண்கண்ட தெய்வம்
பதிர் ஹி தைவதம் ஸ்த்ரீணாம் பதிர் பந்துப் பதிர் கதிஹி
நான்யம் கதிம் அஹம் பச்யே ப்ரமதாயா யதா பதிஹி
அநு சாசன பர்வம், மஹாபாரதம்
பெண்களுக்குக் கணவனே கண்கண்ட தெய்வம்; கணவன் ஒருவனே உறவினன் ;கணவன் ஒருவனே நற்கதி , அடைக்கலம் ; வேறு ஒருவரும் இல்லை இதுவே என் கண்ணோட்டம் .
சங்க இலக்கியப் பாடலிலும் கணவனைப் போற்றும் பாடல்கள் உள .
குறுந்தொகை 49
அணிற்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்து
மணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்ப
இம்மை மாறி மறுமை யாயினும்
நீயா கியரென் கணவனை
யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே. 5
– அம்மூவனார்.
அணிலின் பல்லை ஒத்த முள்ளையுடைய தாது முதிர்ந்த முள்ளிச் செடியையும் நீலமணியினது நிறத்தை ஒத்த கரிய நீரையுமுடைய கடற்கரையை உடைய தலைவ இப்பிறப்பு நீங்கப்பெற்று நமக்கு வேறு பிறப்பு உண்டாயினும் என்னுடைய தலைவன் இப்பொழுது என்பால் அன்பு செய்தொழுகும் நீயே ஆகுக! நின்னுடைய மனத்திற்கு ஒத்த காதலி இப்பொழுது நின் நெஞ்சு கலந்தொழுகும் யானே ஆகுக!
Xxx
வால்மீகி காட்டும் பெண்
नगरस्थो वनस्थो वा पापो वा यदि वा शुभः।
यासां स्त्रीणां प्रियो भर्ता तासां लोका महोदयाः।।2.117.22।।
நகரஸ்தோ வனஸ்தோவா பாபு வா யதி வா சுபஹ
யாஸாம் ஸ்திரீனாம் ப்ரியோ பர்த்தா தாஸாம் லோகா மஹோதயாஹா
यासाम् எந்தப் , स्त्रीणाम् பெண்கள் , नगरस्थः in the city,நகரத்திலிருந்தாலும் वनस्थो वा காட்டிலிருந்தாலும் , पापो वा பாவியானாலும் , यदि वा அல்லது , शुभः புண்யவானானா லும் , भर्ता கணவனிடத்தில் , प्रियः அன்புடன் இருக்கிறார்களோ , तासाम् அவர்களுக்கு , महोदयाः மிக உயர்வான , लोकः உலகம் (கிடைக்கும்).

xxxx
நற்றிணை 10
தலைவியைத் தலைவனுடன் அனுப்பிவைக்கும் தோழி தலைவனுக்கு ஒழுக்கநெறி என்று சில கூறுகிறாள்.
பூத்துக் கிடக்கும் செம்மையான ஊரின் தலைவனே,
இப்போது அண்ணாந்து உயர்ந்திருக்கும் இவளது அழகிய முலை மகப்பேற்றுக்குப் பின்னர் தளர்ந்து தொங்கினாலும், பொன்னிறம் கொண்ட இவள் மேனி கருத்து மணிநிறம் கொண்டு நரைத்துப்போன கூந்தலை இவள் முடித்திருந்தாலும், இவளைப் பிரியாமல் இருப்பாயாக.
அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும்,
பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த
நல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்,
நீத்தல் ஓம்புமதி பூக் கேழ் ஊர!
xxxx
கற்பு என்பது பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் பொது என்று பாரதியார் பாடினார் . பிறன் மனை நோக்காத பேராண்மை என்பதை காளிதாசன் முதல் வள்ளுவன் வரை பாடிப் ரவியுள்ளனர் ; மன்னர்கள் மட்டும் பலதார மணம் செய்யலாம் என்பதை சங்க இலக்கியத்திலும் இதிஹாச புராணங்களிலும் காண்கிறோம்; கரிகாலன், ஆய் அண்டிரன் போன்ற சங்க கால மன்னர்கள் பல மனைவியருடன் வாழ்ந்ததை சங்க செய்யுட்கள் காட்டுகின்றன. ராமன் ஒருவன் மட்டுமே இந்த இப்பிறப்பில் சிந்தையாலும் இரு மாதரைத் தொடேன் என்கிறான். ஸீதையும் ராமனின் எல்லை மீறிய கடுமையைத் தாங்கி அவனைத் தெய்வமாகவே போற்றினாள்
தீநோ வா ஹீநோ வா யோ மே பர்த்தா ஸ மே குரு ஹு
தம் நித்யம் அனுரக்தாஸ்மி யதா ஸூர்யம் சுவர்ச்சலா
ராமாயணம் சுந்தரகாண்டம்
दीनो वा राज्यहीनो वा यो मे भर्ता स मे गुरुः।
तं नित्यमनुरक्तास्मि यथा सूर्यं सुवर्चला।।5.24.9।।
—-SUNDARA KANDA, VALMIKI RAMAYANA
என் கணவன் ஏழையானாலும் நாடாளும் மன்னன் ஆனாலும் அவனே என் கணவன் ;என் குரு ; அவனை நான் எப்போதும் பின்பற்றிச் செல்வேன் எப்படி சூரியனைத் தொடர்ந்து சுவர்ச்சலா செல்கிறாளோ அப்படி நானும் செல்வேன். (ராவணனைக் கட்டிக்கொள் என்று சொன்ன அரக்கிகளுக்கு ஸீதை சொன்ன மறுமொழி இது )
xxx
காணி நிலம் வேண்டும் பாடலில் பாரதியும் பத்தினிப் பெண்ணைத்தான் கேட்கிறான்
பாட்டுக் கலந்திடவே – அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் – எங்கள்
கூட்டுக் களியினிலே – கவிதைகள்
கொண்டுதர வேணும் – அந்தக்
காட்டு வெளியினிலே – அம்மா! நின்றன்
காவலுற வேணும், – என்றன்
பாட்டுத் திறத்தாலே – இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.
—subham—-
tags- மனைவி , அறப்பளீச்சுர சதகம்,