
Post No. 11,472
Date uploaded in London – 25 November 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
சீதையை ராவணனைக் கட்டிக்கொள்ளும்படி அரக்கிகள் (ராக்ஷசிகள்) மிரட்டுகின்றனர். சீதா தேவி பயந்தபோதும் அவர்களுக்கு இணங்கவில்லை. தான் 11 புகழ்பெற்ற பத்தினிகளைப் பின்பற்றப்போவதாக அறிவிக்கிறாள் . அந்த 11 பேரில் தமயந்தி, சாவித்திரி போன்ற பதிவ்ரதைகள் பட்ட கஷ்டத்தை எல்லா இந்து மகளிரும் அறிவர். அதே போல சீதா தேவியும் காட்டில் 14 ஆண்டுக்கு கஷ்டப்பட்டதோடு பட்டாபிஷேகம் முடிந்த பின்னரும் கஷ்டப்பட்டாள் இதைப் படிக்கும் இந்துப் பெண்களுக்கு எதையும் தாங்கும் இதயம் வந்துவிடும் . சீதைக்குப் பின்னர் வந்த திரவுபதியும் கண்ணகியும் போராடி வெற்றி பெற்றதற்கு சீதையும் அவரால் போற்றப்பட்ட 11 பெண்களும் முன்னுதாரணம் என்றால் அது மிகையாகாது.
சீதா தேவி போற்றும் 11 பெண்கள் யார் தெரியுமா?
சூரியனுடைய மனைவி சுவர்ச்சலா
இந்திரனின் மனைவி சசி தேவி
வசிஷ்டரின் மனைவி அருந்ததி
அகஸ்தியரின் மனைவி லோபாமுத்ரா
சத்தியவானின் மனைவி ஸாவித்ரி
நளனின் மனைவி தமயந்தி
சந்திரனின் மனைவி ரோஹிணி
சியவனரின் மனைவி சுகன்யா
செளதாசரின் மனைவி மதயந்தி
கபிலமுனியின் மனைவி ஸ்ரீமதி
சகரரின் மனைவி கேசினி
இன்றுவரை வேத கால நாகரீகம் அழியவில்லை என்பதற்கு சான்று?
இப்போதும் இந்து மதப் பெண்கள் இந்தப் பெயர்களைச் சூட்டிக்கொள்வதிலிருந்து வெள்ளிடைமலையாக விளங்குகிறது .இவர்களில் தமயந்தி, சாவித்திரி போன்றோர் பட்ட கஷ்டங்கள், சீதையின் 14 ஆண்டு வனவாசத்தை எளிதாக்கிவிடுகிறது. மகாபாரதத்துக்கு முந்தையது ராமாயணம் என்பதால் திரவுபதி பெயர் இடம்பெறவில்லை. திரவுபதியும் 13 ஆண்டுக்காலம் காட்டில் கஷ்டப்பட்டாள் .
தமிழ்நாட்டில், கண்ணகியின் துயரத்தை அறியாதோர் எவருமிலர். கணவன் கோவலன் வேறொரு பெண்ணுடன் வாழ்ந்துவிட்டுத் திரும்பியபோதும் மனம் கோணாது ,அவனை ஏற்று, தன்னுடைய கால் சிலம்பைக் கொடுத்துப் புது வாழ்வு துவங்குவோம் வாருங்கள் என்கிறாள். அவளும் அக்கினி சாட்சியாக பிராமணர் முன், கல்யாணம் செய்த்தை இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் கூறுவதாலும் வசிஷ்ட மஹரிஷியின் மனைவியான அருந்ததிக்கு நிகரான கற்புடையவள் என்னு இளங்கோ பாராட்டுவதாலும் , கண்ணகியே புராணத்தில் வரும் சிபிச் சக்ரவர்த்தியின் பெருமையைப் பாராட்டுவதாலும் அவளுக்கும் மேற்கூறிய பெண்களின் கதையும் சீதா தேவி, அஹல்யா, திரவுபதி, தாரா, மண்டோதரி துயரங்களும் தெரிந்திருக்கும்.
XXX

இதோ வால்மீகியின் சொற்களின் வாயிலாகச் சீதா தேவியை செவிமடுப்போம்.
न मानुषी राक्षसस्य भार्या भवितुमर्हति।
कामं खादत मां सर्वा न करिष्यामि वो वचः।।5.24.8।।
ந மானுஷி ராக்ஷஸஸ்ய பார்யா பவிதும் அர்ஹதி
காமம் காதத மாம் ஸர்வா ந கரிஷ்யாமி வோ வசஹ
–சுந்தர காண்டம், வால்மீகி ராமாயணம் , சர்க்கம் 24
( ராவணனை ஏற்றுக்கொள் என்ற ) உங்கள் யோஜனையை நான் ஏற்கமாட்டேன் ; ஒரு மனிதப் பிறவி ராக்ஷஸனின் மனைவியாக முடியாது. என்னை நீங்கள் விழுங்கிச் சாப்பிட்டுவிடுங்கள்.
दीनो वा राज्यहीनो वा यो मे भर्ता स मे गुरुः।
तं नित्यमनुरक्तास्मि यथा सूर्यं सुवर्चला।।5.24.9।।
தீனோ வா ராஜ்யஹீனோ வா யோ மே பர்த்தா ஸ மே குருஹு
தம் நித்யம் அனுரக்தாஸ்மி யதா ஸூர்யம் ஸுவர்ச்சலா
ஆண்டியானாலும் அரசன் ஆனாலும் யார் என் கணவனோ அவனே எனக்கு குரு ; சூரிய தேவனை எப்படி சுவர்ச்சலா தேவி தொடர்ந்து பின்பற்றிச் செல்கிறாளோ அப்படியே நானும் பின்பற்றுவேன் .
यथा शची महाभागा शक्रं समुपतिष्ठति।
अरुन्धती वसिष्ठं च रोहिणी शशिनं यथा।।5.24.10।।
யதா சசி மஹா பாகா சக்ரம் ஸமுபதிஷ்டதி
அருந்ததீ வசிஷ்டம் ச ரோஹிணீ சசினம் யதா
लोपामुद्रा यथागस्त्यं सुकन्या च्यवनं यथा।
सावित्री सत्यवन्तं च कपिलं श्रीमती यथा।।5.24.11।।
லோபாமுத்ரா யதாகஸ்த்யம் ஸு கன்யா ச்யவனம் யதா
ஸாவித்ரீ ஸத்யவந்தம் ச கபிலம் ஸ்ரீமதீ யதா
सौदासं मदयन्तीव केशिनी सगरं यथा।
नैषधं दमयन्तीव भैमी पतिमनुव्रता।।5.24.12।।
செளதாஸம் மதயந்தீவகேசினீ ஸகரம் யதா
நைஷதம் தமயந்தீவபைமீ பதிமனுவ்ரதா
இந்த 11 பேரின் பெயர்களை மேலே கொடுத்துவிட்டேன் ; சக்ர என்பது இந்திரனின் பெயர். நைஷத என்பது நிடத நாட்டு மன்னன் நளன் ; பைமி என்பது பீமனின் மகளான தமயந்திக்கு வரும் அடைமொழி; ஏனைய 11 பேரும் அவர்களுடைய கணவன்மார் பெயர்களும் மேலே கண்டவாறு..
तथाऽहमिक्ष्वाकुवरं रामं पतिमनुव्रता।
ததா அஹம் இக்ஷ்வாகு வரம் ராமம் பதிம் அனுவ்ரதா
அவ்வாறே நானும் என் கணவனும் இட்சுவாகு குலத்தில் சிறந்தவருமான ராமனைச் சார்ந்தே நிற்பேன்.
எளிமையான ஸம்ஸ்க்ருதம் ; அற்புதமான கருத்து. இதை ராக்ஷசிகளிடம் சீதை சொன்னபோது மரத்தின் மீது அமர்ந்துள்ள ராமதூதன் ஆஞ்சனேயன் கேட்டுக்கொண்டு இருந்தான். அருமையான காட்சி.
–SUBHAM–
tags-
சுவர்ச்சலா, சுந்தர காண்டம், சீதை ,வணங்கும் ,11 பெண்கள் , தமயந்தி,சத்தியவான், மனைவி, ஸாவித்ரி