
Post No. 11,473
Date uploaded in London – 25 November 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
Third Part of Arappalichura Satakam with London swaminathan commentary
3. நன்மக்கட் பேறு
தங்குலம் விளங்கிடப் பெரியோர்கள் செய்துவரு
தருமங்கள் செய்து வரலும்,
தன்மமிகு தானங்கள் செய்தலும், கனயோக
சாதகன் எனப்படுதலும்,
மங்குதல் இலாததன் தந்தைதாய் குருமொழி
மறாதுவழி பாடு செயலும்,
வழிவழி வரும்தமது தேவதா பத்திபுரி
மார்க்கமும், தீர்க்கா யுளும்,
இங்கித குணங்களும், வித்தையும், புத்தியும்,
ஈகையும், சன்மார்க் கமும்
இவையெலாம் உடையவன் புதல்வனாம்; அவனையே
ஈன்றவன் புண்ய வானாம்;
அங்கச விரோதியே! சோதியே! நீதிசேர்
அரசன்எம தருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) அங்கச விரோதியே – மன்மதனை அழித்தவனே!,
சோதியே – ஒளியே!, நீதிசேர் அரசன் – முறை தவறா அரசனான,
எமது ……… தேவனே!,
தம் குலம் விளங்கிடப் பெரியோர்கள் செய்துவரு
தருமங்கள் செய்து வரலும் – தம் மரபு புகழ்பெற அறிஞர்கள் புரிகின்ற
அறங்களை விடாது புரிதலும், தன்மம் மிகு தானங்கள் செய்தலும் –
பொருளீட்டும் வலிமையற்றோர்க்குச் செய்யும் தருமமும், நல்லோர்க்கு
உதவும் தானமும் ஆகிய இவற்றைச் செய்வதும்,
கனயோக சாதகன் எனப்படுதலும் – பெரும்புகழுக்கேதுவான இலக்கணமுடையோன் என்பதும்,
மங்குதல் இலாத தன் தந்தைதாய் குருமொழி மறாது வழிபாடு செயலும் –
குன்றாத தன் பெற்றோர்களின் மொழியையும் ஆசிரியர் மொழியையும்
தட்டாமற் பணிபுரிதலும்,
வழிவழி வரும் தமது தேவதா பத்திபுரி
மார்க்கமும் – பரம்பரையாகச் செய்துவரும் தங்கள் தெய்வ வழிபாட்டு
நெறியில் நிற்றலும்,
தீர்க்க ஆயுளும் – நீண்டவாழ்நாளும், இங்கித
குணங்களும் – நற்பண்புகளும், வித்தையும் – கல்வியும், புத்தியும் –
அறிவும், ஈகையும் – கொடையும், சன்மார்க்கமும் – நல்லொழுக்கமும்,
(ஆகிய) இவையெலாம் உடையவன்
புதல்வன் ஆம் – இவற்றை யெல்லாம்
உடையவன் நன்மகனாவான், அவனை ஈன்றவனே புண்யவான் ஆம் –
அவனைப் பெற்றவனே நல்வினை யுடையவன் ஆவான்.
.
(க-து.) நன்மகன் இங்குக் கூறிய பண்புகளெலாம் உடையோனாவான்.
XXXX
லண்டன் சுவாமிநாதன் வியாக்கியானம்- விளக்கவுரை
நல்ல மகனைப் பெற என்ன தவம் செய்தனையோ என்று பொது மக்கள் வியக்க வேண்டும் . இதை வள்ளுவனும்
என்நோற்றான் கொல் எனுஞ் சொல் — என்று (குறள் 70) பாடுகிறார்.
பெரியோரின் வாழ்க்கையைப் படிக்கையில் இவர் இன்னாரின் தவப் புதல்வர் என்று படிக்கிறோம்
இதே கருத்தை பெரியாழ்வார் திவ்வியப்பிரபந்தத்திலும், திருத்தக்க தேவர் சீவக சிந்தாமணியிலும், கம்பன், ராமாயணத்திலும் கூறுவது ஒப்பிட்டுப் பார்த்து ரசிக்க வேண்டிய பகுதிகளாம்:-
என்ன நோன்பு நோற்றாள் கொலோ
இவனைப் பெற்ற வயிறுடையாள்
என்னும் வார்த்தை எய்துவித்த இருடீகேசா
–பெரியாழ்வார் 2.2-6
எத்துணைத் தவம் செய்தான் கொல்
என்று எழுந்துலகம் ஏத்த — சீவக.2567
வல்லை மைந்தவம் மன்னையும் என்னையும்
எல்லையில் புகழ் எய்துவித்தாய் என்றான்
–கம்ப, சடாயுகாண் படலம் 41
XXXX
யார் நல்ல மகன் ?
குலத்தின் பெருமையை நிலைநாட்ட வேண்டும் ; தோன்றிற் புகழோடு தோன்றவேண்டும்; தான தருமங்கள் செய்யவேண்டும் சான்றோன் என்று மற்றவர் மெச்சவேண்டும்; அப்போது ஈன்றபொழுதும் பெரிது உவப்பாள் தாயார் (குறள் 69).
மாதா பிதா குரு தெய்வம் ஆகியவற்றைப் போற்ற வேண்டும். தந்தையானவர் தவம் செய்து பெற்று இருக்க வேண்டும். மகனானவன் எழுபிறப்பும் தீயவை தீண்டா பண்புடை மகனாக (குறள் 62) வாழவேண்டும்
வள்ளுவன் அழகாக பத்து குறட்பாக்களில் சொன்னதை அம்பலவாணரும் நமக்கு நினைவு படுத்துகிறார்.
XXX
சூரிய குல மன்னர்களின் குணங்கள்- காளிதாசன்
ராமனைப் பெற்றுக் கொடுத்த சூரிய குலத்தில் எல்லோருடைய மகன்களுக்கும் இருந்த பண்புகளை உலக மஹா கவி காளிதாசன் விளக்குகிறான்
ஆஜன்ம சுத்தானாம், ஆ பலோதய கர்மணாம், ஆசமுத்ர க்ஷிதீசானாம், ஆநாக ரத வர்த்மனாம்
ரகு குல மன்னர்கள் பற்றி நான்கு விஷயங்களை ரகு வம்ச முதல் சர்க்கத்திலேயே காளிதாசன் (ஸ்லோகம் எண்:5) சொல்லி விடுகிறான்:
1.பிறவியிலேயே பரிசுத்தமானவர்கள் (( ஆஜன்ம சுத்தானாம்)).
2.பயன் கிடைக்கும் வரை முயற்சியை உடையவர்கள் (( ஆ பலோதய கர்மணாம்)) — (எடுத்த காரியம் யாவினும் வெற்றி)
3. இரு பக்கமும் சமுத்திரத்தின் கரைகள் வரை ஆட்சி புரிபவர்கள் (( ஆசமுத்ர க்ஷிதீசானாம்)). பரந்த சாம்ராஜ்யம்!
4.அவர்களுடைய தேர்கள் சுவர்க்கத்தின் வாசல் வரை செல்லத் தக்கன (( ஆநாக ரத வர்த்மனாம்)) !!
இனி காளிதாசன் ரகு வம்ச காவியத்தில் முதல் சர்க்கத்தில் என்ன சொல்கிறான் என்பதைப் பார்ப்போம்:–
தெய்வ நம்பிக்கை உடையோர்; தேவ பூஜை செய்தனர்
தானம் கேட்டு வந்தவரின் மனம் வருந்தாத அளவுக்கு தானம் கொடுத்தனர்.
குற்றத்திற்கு ஏற்ற தண்டனை வழங்கினர்.
பிறருக்குக் கொடுப்பதற்காக பொருள் ஈட்டினர்.
காலத்திற்கு ஏற்ற அறிவு பெற்றனர்; அதாவது காலத்திற்கு ஏற்ப புதுப்புது விஷயங்களைக் கற்றனர்.
குறைவாகப் பேசினர்; எதற்காக? அதிகம் பேசினால் வாய் தவறி சத்தியம் பிறண்டு விடுமோ என்று பயந்து சத்தியத்தைக் காக்க மிதமாகப் பேசினர்.
புகழிற்காக மற்ற மன்னர்களை வென்றனர். நாடு பிடிக்க அல்ல; மக்களைக் கொன்று குவிக்க அல்ல.
இளமையில் கல்வி கற்றனர்; “இளமையில் கல்” என்ற ஆத்திச்சூடி வசனம் அவர்களுடைய குறிக்கோள்
யௌவனப் பருவத்தில் (வாலிப வயதில்) இன்பம் துய்த்தனர்.
திருமணம் செய்து கொண்டனர்; எதற்காக—வம்ச விருத்திக்காக!! (செக்ஸுக்காக அல்ல)
வயோதிகப் பருவத்தில் காட்டிற்குப் போய் தவம் செய்து யோகத்தினால் உயிரை விட்டனர்.
XXXXXX

எனக்கு சிறு வயதிலேயே புதுக்கோட்டை ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகள் ஒரு மந்திரம் சொல்லிக் கொடுத்தார். அவர் உலகப் புகழ்பெற்ற சஹஸ்ர சண்டி ஹோமம் செய்து சென்னை, புதுக்கோட்டை முதலிய இடங்களில் கோவில் கட்டுவதற்கு முன்னர் எப்போது மதுரைக்கு வந்தாலும் எனது தந்தை தினமணி வெ.சந்தானத்தைச் சந்தித்து என் தாயார் திருமதி ராஜலெட்சுமியின் கைகளால் மூன்றே கவளம் மட்டும் உணவை வாங்கிச் சாப்பிட்டுச் செல்வார். அப்போது எங்கள் சகோதரர்கள் அனைவரையும் உட்காரவைத்து கீழ்கண்ட மந்திரத்தை உபதேசித்தார் :
ஸ்ரீ மாதா ஆயுர் தேஹி தனம் தேஹி வித்யாம் தேஹி
மஹேஸ்வரி ஸமஸ்த அகிலம் தேஹீ
தேஹீ மே புவனேஸ்வரீ
இதில் அம்பலவாணர் சொன்ன ஆயுள், தானத்துக்குத் தேவையான தனம் (பணம்), நீண்ட ஆயுள் வேண்டப்படுகிறது உலகே என் வசமாக வேண்டும் என்பது ஸமஸ்த அகிலம் தேஹீ என்பதில் வந்து விடுகிறது
எல்லோரும் இதை தமிழிலு ம் வேண்டலாம்
அபிராமி பட்டர் அழகாக 16 பேறுகளையும் அடுக்கி வேண்டுகிறார் :
கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையுங் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!
ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே!
XXXX
மற்றவர்கள் உங்களுக்கு வணக்கம் செலுத்தினால், நமஸ்கரித்தால் , கீழ்கண்ட பாடலைச் சொல்லி வாழ்த்துங்கள்
தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.
இவை எதுவும் புதிதல்ல; வேத காலம் முதல் ஸம்ஸ்ருதத்தில் இருந்ததை நம்மவர்கள் அழகாக தமிழ்ப் படுத்தியுள்ளனர் .
பிராமணர்கள் மற்றவர்களை ஆசீர்வதிக்கும் போது கீழ்கண்ட வேத மந்திரத்தைச் சொல்லி தலையில் மஞ்சள் அக்ஷதையைப் போடுவார்கள்
ஸ்ரீவர்ச்சஸ்யமாயுஷ்ய மாரோக்யமாவிதாத் பவமானம் மஹீயதே
தனம் தான்யம் பசும் பஹு புத்ரலாபம் சதஸம்வத்ஸரம் தீர்கமாயு:
மஹாலக்ஷ்மியே, ஆற்றல், வளமான வாழ்க்கை, நல்ல உடல் நிலை இவற்றை எனக்குத் தந்தபடி எப்போதும் காற்று வீசட்டும். செல்வம், உணவுப் பொருட்கள், மிருகங்கள், பிள்ளைச் செல்வங்கள், நூறாண்டுகள் நீண்ட ஆயுள் எல்லாம் எனக்குக் கிடைக்கட்டும்.
XXX subham xxxxx
Tags.மகன் ,அறப்பளீச்சுர சதகம், மக்கட் பேறு, லண்டன் சுவாமிநாதன், விளக்க உரை, புதுக்கோட்டை, சாந்தானந்த சுவாமிகள்