

Post No. 11,482
Date uploaded in London – 28 November 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
This is the sixth verse from Arappalichura Satakam with London Swaminathan’s commentary
6. நன்மாணாக்கரியல் Definition of a Good Student
வைதாலும் ஓர்கொடுமை செய்தாலு மோசீறி
மாறாதிகழ்ந் தாலுமோ
மனதுசற் றாகிலும் கோணாது, நாணாது,
மாதாபி தாவெனக்குப்
பொய்யாமல் நீ யென்று கனிவொடும் பணிவிடை
புரிந்து, பொரு ளுடலாவியும்
புனித! உன்றன தெனத் தத்தஞ்செய் திரவுபகல்
போற்றி, மல ரடியில் வீழ்ந்து,
மெய்யாக வேபரவி உபதேச மதுபெற
விரும்புவோர் சற்சீ டராம்
வினைவேர் அறும்படி அவர்க்கருள்செய் திடுவதே
மிக்கதே சிகரதுகடன்
ஐயா! புரம்பொடி படச்செய்த செம்மலே!
அண்ணல்எம தருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) ஐயா! புரம்பொடிபடச் செய்த செம்மலே – தலைவனே!
முப்புரங்களை நீறுபடச் செய்த பெரியோனே!, அண்ணல் – தலைவனாகிய
எமது ……….. தேவனே!, ‘வைதாலும், ஓர் கொடுமை செய்தாலும், மாறாது
சீறி இகழ்ந்தாலும் – திட்டினும் ஏதேனும் கொடுமை யிழைக்கினும், மாறாமற்
சினந்து இழிவுபடுத்தினும், மனது சற்றாகிலும் கோணாது நாணாது – சிறிதும்
மனங்கோணாமலும் வெட்கப்படாமலும், பொய்யாமல் எனக்கு மாதா பிதா
நீயென்று – உண்மையாக எனக்கு அன்னையும் தந்தையும் நீயேயென்று கூறி,
கனிவொடும் பணிவிடை புரிந்து – (ஆசிரியனுக்கு) மனங்கனிந்து வழிபாடு
செய்து, புனித பொருள் உடல் ஆவியும் உன்றனது என – தூயவனே! என்
பொருளும் உடலும் உயிரும் உன்னுடையவை என்று கூறி, தத்தம்
செய்து – கொடுத்து, இரவு பகல் போற்றி – இரவும் பகலும் விடாமல்
வணங்கி, மலரடியில் மெய்யாகவே வீழ்ந்து பரவி – (ஆசிரியன்)
மலர்போன்ற திருவடிகளில் உண்மையாகவே வீழ்ந்து புகழ்ந்து கூறி,
உபதேசமது பெற விரும்புவோர் சற் சீடர்ஆம் – அறிவுபெற விழைவோர்
நல்ல மாணாக்கராவர், அவர்க்கு வினைவேர் அறும்படி அருள்
செய்திடுவதே மிக்க தேசிகரது கடன் – அவர்களுக்கு வினையின் வேர்
கெடும்படி அருள் செய்வது சிறந்த ஆசிரியரது கடமையாகும்.

ஒரு நல்ல மாணவன் யார் என்பதை விளக்கும் பாடல் இது. ஆன்மீக ஒளியை அடைய விரும்பும் குரு -சிஷ்யர்களுக்கு மட்டும் இது என்று நினைத்து விடக்கூடாது. பொதுவாகவே குரு குல வாசத்தில் இந்த விதிகள்தான் பின்பற்றப்பட்டன. இதற்கு இரண்டு மூன்று எடுத்துக்காட்டுகள் இந்து மத இதிஹாச புராணங்களில் உள. ஏகலைவன் என்பவன் அரசற்கு மட்டுமே உரித்தான ஆயுதப் பயிற்சிகளை மறைவாக நின்று பயின்றான். இதை அறிந்த துரோணர், இப்படிக் கற்றதானால் நீ குருதட்சிணை கொடுதாக வேண்டும் என்றவுடன் அவன், கட்டை விரலையே தட்சிணையாகக் கொடுத்தான். அதனால் அவனை சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் நாம் நினைவுகூறுகிறோம்.அந்த அளவுக்கு குரு பக்தி இருந்தது.
மஹாபாரதத்தில் குரு பக்திக்கு மேலும் சில உதாரணங்கள் கிடைக்கும்;குருவே ! உங்களுக்கு என்ன தட்சிணை வேண்டும்? என்று கேட்டவுடன் என்னை அவமானப்படுத்திய பஞ்சாப் மன்னன் துருபதனை இழுத்துக்கொண்டுவா என்று துரோணர் சொன்னவுடன் அவனைத் தேர்க்காலில் கட்டி இழுத்துவந்தான் அர்ஜுனன்.
xxx
குரு குலக் கல்வியில், ஆசிரியர் வகுப்பறைக்குள் வந்தவுடன், மாணவர்கள் எழுந்து நின்று மரியாதை செய்வார்கள். அவர் இருக்கையில் உட் கார்ந்த பின்னர், மாணவர்களும் அமர்ந்துகொண்டு, குருர் பிரம்மா — என்ற மந்திரத்தைச் சொல்லி, ஆசிரியரே மும்மூர்த்திகளுக்குச் சமமானவர் என்று வாழ்த்துவர் (நேற்றைய பதிவில் இந்த மந்திரத்தைக் கொடுத்துள்ளேன் )
பின்னர் வேத/ உபநிஷத மந்திரமான ஸஹ நாவவது – மந்திரத்தைச்ச்சொல்லுவார்கள் . அதன் பொருள் பின் வருமாறு
ஓம் சஹ நாவவது
சஹ நவ் புனக்து
சஹ வீர்யம் கரவாவஹை
தேஜஸ்வினாவதீதமஸ்து
மா வித்விஷாவஹை
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
ॐ सह नाववतु ।
सह नौ भुनक्तु ।
सह वीर्यं करवावहै ।
तेजस्वि नावधीतमस्तु मा विद्विषावहै ।
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
Om Saha Naav[au]-Avatu | ஓம்! ஆசிரியரும் மாணவருமாகிய நாம் இருவரும் இணைந்து செயல்படுவோம்
Saha Nau Bhunaktu |நாம் கூட்டாக இணைந்து இதில் சிறப்பு அடைவோம்
Saha Viiryam Karavaavahai | கூட்டாக மிகுந்த உற்சாகத்துடன் இதைச் செய்வோம்
Tejasvi Naav[au]-Adhiitam-Astu |நாம் கற்பது பிரகாசிக்கட்டும் ;(ஒளி பெற்று விளங்கட்டும் )
Maa Vidvissaavahai- நம் இருவர் இடையே வெறுப்போ, பகைமையோ தோன்றாமல் இருக்கட்டும்
Om Shaantih Shaantih Shaantih || உள்ளத்தில் சாந்தி நிலவட்டும், சுற்றுப்புற த்திலும் அமைதி நிலவட்டும் ;உலகெங்கும் அமைதி நிலவட்டும்.

xxx
‘நோகாது உண்பவர் கல்வியை நோற்பவர்’: சுவையான கதை!
Article written by London swaminathan
Post No. 1780; Date 6th April 2015
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார் – நீதி நெறி விளக்கம்
ஒரு செயலில் முனைப்பாக இருப்பவர் உடலுக்கு வரும் வருத்தம், நோய் நொடிகளைப் பொருட்படுத்த மாட்டார். பசித்தாலும் கவலைப்படமாட்டார். தூங்க மாட்டார். யாரேனும் கெடுதல் செய்தாலும் அதையும் மனதிற் கொள்ளார். காலம் பற்றியும் கவலைப்படமாட்டார். தனக்கு வரும் அவமதிப்பையும் எடுத்துக்கொள்ளார்.
கற்றவனுக்கு அடையாளம் என்ன?
ஒரு சுவையான கதை கேளுங்கள். ஒரு படிக்காத இளைஞனை நன்றாகப் படித்த பெண்ணுக்குக் கல்யாணம் செய்து வைத்தனர். நாளாக ஆக இருவருக்கும் சரிப்பட்டு வரவில்லை. அவளும் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் ‘வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல’ இவனை குத்திக் காட்டினாள். இவன் ஒரு முடிவுக்கு வந்தான். நன்கு கல்வி கற்ற பின்னரே வீட்டுக்கு வருவேன் என்று சொல்லி விட்டுப் புறப்பட்டான்.
நல்ல மாணவர்கள் பசி நோக்கார்
அந்தக் காலத்தில் காசி என்ற தலமே கற்றோர் நிறைந்த ஊர். ஆகையால் பெரிய அறிவாளிகள் எல்லாம் காசிக்குச் சென்று கற்று வருவர். இவனும் காசிக்குப் போனான். அங்கே ஒரு வயதான ஆசிரியரைக் கண்டான். தனது சோகக் கதையைச் சொல்லி தனக்கு கல்வி புகட்டும்படி மன்றாடினான். அவரும் இவனை சிஷ்யனாக ஏற்றார்.
இரண்டு மூன்று ஆண்டுகள் ஓடின. நல்ல சீடனாகவே இருந்து எல்லாவற்றையும் ஆர்வத்தோடு கற்றான். குரு, ஒரு நாள் தனது மனைவியை அழைத்து, நாளை முதல் இவனுக்குப் பரிமாறும் உணவில் ஒரு உத்தரணி (ஸ்பூன்) அளவுக்கு வேப்ப எண்ணையைக் கலந்து பரிமாறு என்றார். ஆனால் அவன் அதைக் கண்டுபிடித்துவிட்டால் அந்த நாளைன்றே என்னிடம் சொல்லிவிடு என்றார்.
குருவின் மனைவிக்கு ஏன் என்று புரியவில்லை. இருந்தாலும் கணவன் இட்ட கட்டளையை மீறாத பத்தினி அவள். அந்த சிஷ்யனும் முகம் கோணாது சாப்பிட்டு வந்தான். குருவின் மனைவிக்குக் கூட கொஞ்சம் பரிதாபம் மனதில் ஏற்பட்டது. வேப்ப எண்ணையைக் கலக்காமல் விட்டுவிடலாமா என்று எண்ணிணாள். ஆயினும் அவளுக்கு அந்தத் துணிவு வரவில்லை.
மெய் வருத்தம் பாரார்
இவ்வாறு வேப்ப எண்ணை கலந்த சாப்பாடு மூன்று மாதம் பரிமாறப்பட்டது. ஒரு நாளைக்கு சிஷ்யன், குருவின் மனைவியைப் பார்த்து, “அம்மையே, உங்களுடைய சாப்பாடு எப்போதும் அமிர்தமயமாகவே இருக்கும். கடந்த சில நாட்களாகக் கொஞ்சம் வேறுபாடு தெரிகிறது. ஏதோ வேப்பெண்ணை வாசனை அடிக்கிறது” என்றான். குருவின் மனைவியும் சமாளித்துக் கொண்டு, “அப்படியா? என்ன காரணம் என்று கண்டுபிடிக்கிறேன்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.
ரகசியமாக கணவனிடம் விஷயத்தைச் சொன்னாள், “உங்கள் சீடனுக்குத் தெரிந்துவிட்டது. அவன் வேப்பெண்ணை வாசனையைக் கண்டுபிடித்துவிட்டான்” என்றாள். குரு சிரித்துக் கொண்டே, சிஷ்யனைக் கூப்பிட்டார்.
“சிஷ்யா! நீ நல்ல மாணவன். மூன்று ஆண்டுகளாக எல்லாவற்றையும் உண்மையான ஆர்வத்தோடு பயின்றாய். நீ எல்லாவற்றையும் கற்றுமுடித்த அறிகுறிகள் தென்படுகின்றன. நாளை காலை நீ உன் சொந்த ஊருக்குத் திரும்பலாம். உனக்கு என்னுடைய பரிபூரண ஆசீர்வாதம்” என்றார். சீடனுக்கு மிகவும் சந்தோஷம். மறுநாள் காலையில் தக்க குரு தட்சிணை கொடுத்து, நமஸ்கரித்துவிட்டுப் புறப்பட்டான்.
குருவின் மனைவி வியப்புடன் கேட்டாள், “நாதா! வேப்பெண்ணைக்கும் படிப்புக்கும் என்ன சம்பந்தம்? எனக்கு விளங்கவில்லையே!”
குரு சொன்னார், “அன்பே, நோகாது உண்பவர் கல்வியை நோற்பவர் என்ற ஆன்றோர் வாக்கை நீ கேட்டது இல்லையா? ஒருவனுக்கு கல்வியில் நாட்டம் உள்ளவரை வேறு எதிலும் சுவை இருக்காது. சொல்லப்போனால் சுவையே தெரியாது. அவனுக்கு கல்வியில் முழு கவனம் இருக்கும் வரை அவனுக்கு ருசியே தெரியவில்லை. அந்த நாட்டம் குறைந்தவுடன் அவனுக்கு ருசி தெரிந்துவிட்டது. ஆகையால்தான் அவனை ஊருக்கு அனுப்பிவைத்தேன். அவன் இனிமேல் பிழைத்துக் கொள்வான்” என்றார்.
xxx
ஆதிசங்கரர் இயற்றிய குரு பாதுகா அஷ்டகம் ,மேற்கண்ட பாடலில் உள்ள கருத்துக்களையே சொல்கிறது.
மாணவர் ஆற்றுப்படை
பின்னத்தூர் நாராயண சாமி ஐயர் 1900ம் ஆண்டில் எழுதிய 335 வரிகளைக் கொண்ட மாணாக்கர் ஆற்றுப்படை நூலையும் நான் பிரிட்டிஷ் லைப்ரரியிலிருந்து எடுத்து இதே பிளாக்கில் வெளியிட்டேன் . ஒரு நல்ல மாணவன் எப்படி வெற்றி பெற்றான் என்று கூறும் நூல் அது..
—Subham—