
Post No. 11,481
Date uploaded in London – – 28 November 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ராமாயண வழிகாட்டி
ச.நாகராஜன்
வால்மீகி ராமாயணத்தில் மாமுனிவர் வால்மீகி நதிகளை நன்கு சித்தரித்துக் கொண்டாடி அவற்றின் புனிதத்தை நமக்குக் காட்டுகிறார் எனில் தமிழில் கம்பன் நதிகளைச் சித்தரித்து அவற்றின் புனிதத்தையும் பெருமையையும் கொண்டாடும் விதமோ தனி தான்! அதன் மூலமாக நதிகளின் பெருமையைக் கண்டு பிரமிப்பை அடைகிறோம்!
அற்புதமான கவிதை மழைகளைக் கொட்டுகிறான் கம்பன் நதிகள் விஷயத்தில்.
அவற்றில் ஒரு சிலவற்றை இங்கு காணலாம்:

1. சரயு
கம்ப ராமாயணத்தின் ஆரம்பமே ஆற்றுப் படலத்தில் தான் ஆரம்பிக்கிறது.
பால காண்டத்தின் முதல் படலம் : ஆற்றுப் படலம்.
இதில் அழகான 20 செய்யுள்கள் உள்ளன.
ராமாயணத்தின் முதல் பாடலிலேயே ‘ஆற்று அணி கூறுவாம்’ என்கிறான் கம்பன்.
ஆசலம் புரி ஐம் பொறி வாளியும்
காசு அலம்பு முலையவர் கண் எனும்
பூசல் அம்பும் நெறியின் புறம் செலாக்
கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்
நிலத்தின் தன்மையே நல்லொழுக்கத்திற்கும் தீயொழுக்கத்திற்கும் காரணம் என்பது ஆன்றோர் கொள்கை.
மிகவும் குற்றத்தைச் செய்கின்ற ஆடவர்களுடைய ஐந்து இந்திரியங்களும் பாணங்கள் ஆகும். கழுத்திலே அணிந்திருக்கின்ற இரத்தின ஹாரங்கள் ஒன்றோடொன்று மோதி ஒலிப்பதற்கு ஏதுவான மார்பகங்களைக் கொண்ட கண் என்கின்ற போர்த்தொழிலைச் செய்யும் அம்பும் நல்நெறியை விட்டுத் தீநெறியில் செல்லாமல் இருக்கின்ற கோசல நல் நாட்டை அலங்கரிக்கின்ற (சரயு) நதியின் வர்ணனையைக் கூறுவோம்.
இப்படி நன்னெறி நாட்டிலே பாயும் ஆற்றிலே ஆரம்பிக்கிறது ராமாயணம்.
சரயு நதி என்பது தாயின் முலை போன்றது என்று அற்புதமான ஒரு கருத்தை முன் வைக்கிறான் கம்பன். (பாடல் 12 – ஆற்றுப் படலம்)
இரவி தன் குலத்து எண் இல் பல் வேந்தர் தம்
புரவு நல் ஒழுக்கின் படி பூண்டது,
சரயு என்பது தாய் முலை அன்னது, இல்
உரவு நீள் நிலத்து. ஓங்கும் உயிர்க்கு எலாம்
கைலாய மலையில் மானஸ மடுவில் தோன்றிய சரயு நதி தாயின் முலைப் பால் குழந்தைக்கு உணவாகி வளர்த்தல் போல அனைத்து உலகத்தாரும் உணவுப் பொருளை உருவாக்கி வளரக் காரணமாகிறது புனிதமான சரயு நதி என்கிறான் கம்பன்.
சூரிய குலத்தில் பிறந்த பல வேந்தர்களுடைய எண்ணுதற்கும் முடியாத பல காலமாகப் பாதுகாத்து வந்த நல்லொழுக்கத்தின் தன்மையை மேற்கொண்டதாகி, மழை வெள்ளத்தால் தோன்றிப் பெருகி வரும் சரயு நதியானது உலவும் தன்மையை உடைய நீரை உடைய கடலினால் சூழப்பட்ட இந்த நிலவுலகில் உள்ள உயிர்களுக்கு எல்லாம் குழந்தைக்குத் தாய் முலை போலப் பயன் படும் தன்மை உள்ளது.
சரயு முல்லையை குறிஞ்சி ஆக்குகிறது. மருதத்தை முல்லை ஆக்குகிறது. நெய்தல் நிலத்தை மருதம் ஆக்குகிறது. ‘செல்லுறு கதியில் செல்லும் வினை என அந்த நதி சென்றதன்றே!’
அடுத்து வேள்விப் படலத்தில் ஐந்தாவது பாடலைப் பார்ப்போம்:
‘மானச மடுவில் தோன்றி வருதலால் ‘சரயு’ என்றே
மேல் முறை அமரர் போற்றும் விழு நதி அதனினோடும்
ஆன கோமதி வந்து எய்தும் அரவம் அது’ என்ன, அப்பால்
போன பின், பவங்கள் தீர்க்கும் புனித மா நதியை உற்றார்.
தாடகை வதம் முடிந்து விட்ட நிலையில் விஸ்வாமித்திர மஹரிஷியோடு ராம லட்சுமணர் நடந்து செல்லுகையில் ஒரு பேரரவம் கேட்கிறது.
இது என்ன ஒலி என்று ராமன் கேட்க விஸ்வாமித்திரர் கூறுகிறார்:
மானஸ மடுவில் தோன்றி வருவதால் சரயு என்ற பெயரைப் பெற்றது.
சரயு என்றால் பொய்கையிலிருந்து ஓடி வருகின்றது என்று பொருள் படும்.
‘மேன்மையான தேவர்களும் சிறப்பித்துச் சொல்லும் நதி சரயு,
அந்த நதியோடு கோமதி என்னும் நதி வந்து கலக்கின்ற போது எழுகின்ற ஓசை இது’ என்று விஸ்வாமித்திரர் கூறுகிறார்.
அடுத்து அவர் கௌசிகி நதி பற்றிக் கூறுகிறார்.
அதை அடுத்துப் பார்ப்போம்.
தொடரும்
***
புத்தக அறிமுகம் 125
முன்னேறவும், முன்னேற்றவும் சில கதைகள், சம்பவங்கள், கருத்துக்கள்!
பொருளடக்கம்
என்னுரை
அத்தியாயங்கள்
1. ஒரு டம்ளர் பால்!
2. ரொனால்டோவின் நன்றி!
3. கடவுளிடம் கேட்கக் கூடாத கேள்வி!
4. உலகையே அதிர வைத்த ஒரு விவசாயி!
5. கருகிய காலன் கரிகாலன் தான்; ஆனால் ஓடி உலக சாதனை படைத்தான் அவன்!
6. ஹெலன் கெல்லர் : ஒரு அபூர்வமான பெண்மணி!
7. தசரத் மஞ்சி – மலையை நகர்த்திய மா மனிதன்!
8. விருக்ஷ தேவி துளஸி கௌடாவிற்கு பத்ம ஸ்ரீ பட்டம்!
9. ஒரு புதிய பென்சில்!
10. இரண்டு கூழாங்கற்கள்!
11. ஐந்து அத்தியாயங்களில் ஒரு சுயசரிதை!
12. உங்களின் பாராசூட்டை பாக் செய்வது யார்?
13. ஜீனியஸாக ஆக ரைகாவ் எஃபெக்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்!
14. நெப்போலியனின் அருங்குணம் நேரம் தவறாமை!
15.நெப்போலியனின் வயது
16. இறைவனிடம் அன்பு
17. முடா! முரா! முரி!
18. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் படைப்பாற்றல் திறன் வளர்ந்தது எப்படி?
19. இருந்தும் இறந்தவர் யார், யார்? – 1
20. இருந்தும் இறந்தவர் யார், யார்? – 2
21. முதுகுச் சுமையில் யார்?
22. சொல்லுக்குள் ஜோதி காணுங்கள்!
23. அருமையாக இந்த நாள் கழிந்ததா?!
24. தங்கம் அல்ல, மனிதர்களே தேவை!
25. மூளை ஆற்றலைக் கூட்டச் சில வழிகள்!
26. மேதை ஆக ஏழு படிகள்!
27. கெடுதலிலும் நல்லதையே பார் :இறைவனின் திட்டம் என்ன என்று தெரியாது!
28. வெற்றி பெற்ற மேதைகள் கடைப்பிடிக்கும் 10 விஷயங்கள்!
29. எளிமையான வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை!
30. வால்டேர் வளர்த்த கழுகு!
31. சின்னச் சின்ன டிப்ஸ்! பெரிய பலன்கள்!!
என்னுரை
இன்று இருக்கும் நிலையிலிருந்து இன்னும் மேல் நிலைக்கு முன்னேற விரும்பாதார் தான் யார்? தனது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் ஆகியோரை முன்னேற்ற விரும்பாதார் தான் யார்?
முன்னேற வேண்டும்; முன்னேற்றவும் வேண்டும் – இந்த நவீன யுகத்தின் வேகமான வாழ்க்கையில் சீக்கிரமாகவும் இதைச் செய்து சாதிக்க வேண்டும்.
இவற்றிற்குச் சில அரிய பண்புகள் தேவை. இவற்றை வாழ்ந்து காட்டி சாதனைகள் படைத்தவர்கள் பலர்.
இன்னல்களைக் கண்டு அவர்கள் அஞ்சவில்லை; இருக்கின்ற சூழ்நிலையைப் பற்றி அவர்கள் தர்க்கிக்கவில்லை; சமுதாயத்தைக் குறை கூறவில்லை. தங்களது இலட்சியத்தை வகுத்துக் கொண்டு முன்னேறினார்கள். மற்றவர்கள் அதிசயித்த போது அவர்களையும் முன்னேற்றினார்கள். முன்னேற உத்வேக உணர்வை ஊட்டினார்கள்.
இப்படிப்பட்ட சாதனையாளர்கள் சிலரை இந்த நூல் சுட்டிக் காட்டுகிறது. உண்மைச் சம்பவங்கள், அழகிய கதைகள் ஆகியவற்றுடன் நல்ல பல கருத்துக்களையும் இந்த நூல் தருகிறது.
இந்தக் கட்டுரைகள் ஹெல்த்கேர், பாக்யாஆகிய இதழ்களிலும் www.tamilandvedas.com ப்ளாக்கிலும் வெளியானவை.
இவற்றை வெளியிட்டு எனக்கு ஊக்கமளித்த பாக்யா ஆசிரியர் டைரக்டர் திரு கே. பாக்யராஜ், ஹெல்த்கேர் ஆசிரியர் ஆர்.சி.ராஜா, தமிழ் அண்ட் வேதாஸ் ப்ளாக் வெளியிடும் லண்டன் திரு ச. சுவாமிநாதன் ஆகியோருக்கு எனது உளமார்ந்த நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.
கட்டுரைகள் வெளியான போது அதைப் பாராட்டிய அன்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி.
இந்த நூலை நல்ல முறையில் வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது உளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.
சான்பிரான்ஸிஸ்கோ ச. நாகராஜன்
29-8-2022
·
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்
தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852